வாக்கின் மஹிமை.
அந்த ஒரு வார்த்தை மிக அற்புதமாக ராமனின் தனிப்பட்ட குணத்தை வெளிப்படுத்தும் மகா வாக்கியமாக உள்ளது.
"ராமோ த்விர்நா பி பாஷதே!"
-ராமனிடம் இரண்டாவது பேச்சுக்கு இடமில்லை. இரண்டு விதமாக ராமன் பேசமாட்டான்
ராமாயணத்தில் ராமச்சந்திரமூர்த்தி பதிநான்கு ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டும். பரதன் அரசாளவேண்டும் என்ற கைகேயி,
"இது தசரதரின் கூற்று. அவர் எனக்களித்த வாக்கு!" என்று ராமனிடம் கூறுகிறாள்.
ராமன் உடனே அதற்கு சம்மதிக்கிறான்.
வருந்தும் தசரதரை ராமன் சமாதானப்படுத்துகிறான். அப்போது கைகேயி, "நீ சொன்ன வார்த்தையைக் காப்பாற்றாவிட்டால் தசரதருக்கு ஆபத்து. நீ அரண்யத்திற்குச் செல்ல வேண்டும்" என்று மீண்டும் அழுத்தமாகக் கூறுகிறாள்.
ராமன், "நான் வார்த்தை மீறுபவன் அல்லன்! ஒரு முறை ஒரு சொல்லை ஒப்புக் கொண்டால் கட்டாயம் அந்த சொல்லைக் காப்பாற்றுவேன். சொன்ன சொல்லில் நிற்பேன்" என்று ஸ்பஷ்டமாக பதிலளிக்கிறான்.
அந்த ஒரு வார்த்தை மிக அற்புதமாக ராமனின் தனிப்பட்ட குணத்தை வெளிப்படுத்தும் மகா வாக்கியமாக உள்ளது
ராமோ த்விர்நா பி பாஷதே!"
இரட்டை நாக்கு உள்ளவன் என்று சிலரை சமுதாயத்தில் கூறுவார்கள் அல்லவா? அது போன்றவனல்ல ராமன்.
ராமனுடையது ஒரு சொல். ஒரு வில். ஒரு இல்.
இதனைக் கொண்டு உத்தமமானவன் ஒரு சொல்லுக்கு கட்டுப்பட்டால் எந்த சூழலிலும் அதிலிருந்து விலக மாட்டான்
இது வாக்கின் மகிமை. கொடுத்த சொல்லுக்கு கட்டுப்படுவதை சத்திய விரதம் என்பார்கள்.
தசரதரும் அப்படிப்பட்டவரே
அதனால்தான் அவர் என்றோ கைகேயிக்கு அளித்த வாக்கை காப்பாற்றுவதற்காக மௌனம் வகிக்கிறார். அவருக்கு விருப்பமில்லாவிட்டாலும் அவள் கூறியவற்றுக்கு சம்மதிக்கும்படி ஆயிற்று. சத்தியத்துக்கு கட்டுப்பட்டிருக்கும் குணத்தினால் அவர் சம்மதித்தார்.
இது உத்தமமான இக்ஷ்வாகு வம்ச அரசர்களின் தர்மம்.
அதிலும் சாட்சாத் நாராயணன், தர்ம ஸ்வரூபமான ராமச்சந்திர மூர்த்தி அந்த குணத்தை மேலும் போற்றி வளர்த்தார்.
அதனால்தான்,
"ராமோ த்விர்நா பி பாஷதே!" என்ற வாக்கியம் அத்தனை அழகாக ஒலிக்கிறது
இது தற்காலத்தில் ஒவ்வொரு மனிதனும் நினைவில் இருத்தி கடைபிடிக்க வேண்டிய நியமம். கட்டுப்பாடே சத்தியம்.
கமிட்மென்ட் என்பார்கள் இதனை. கொடுத்த வாக்குறுதியைக் காத்தல். இது ஒரு உயர்ந்த விரதம்.
ஓரொருமுறை பிரதிகூலமான சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஏற்படக்கூடும். அது போன்ற நேரங்களிலும் வழுக்கி விழாமல் நிலைநிற்க வேண்டும்.
ஏனென்றால் லட்சியம் பெரிதாக இருக்கும் போது தாற்காலிக கஷ்டங்களை சகித்துக் கொண்டு உண்மைக்கு கட்டுப்பட்டால் உத்தமமான சாசுவத பலன் கிடைக்கும்.
அதனால் எத்தகைய சூழலிலும் சத்தியத்திலிருந்து வழுவாமல் அதில் நிற்பது என்பது சாமானிய செயலல்ல
வேதத்தில் பரமேஸ்வரனைத் துதித்து "கிரித்ரா" என்றொரு சொல் உள்ளது.
"கிரித்ரா" என்பதற்கு "வேதங்களில் இருப்பவன்" என்று ஒரு பொருள் உள்ளது.
அதற்கு முன்னும் பின்னும் "கிரிஸா!", கிரீஸா!" என்ற நாமங்கள் பரமேஸ்வரனை பற்றிப் வேதத்தில் காணப்படுகின்றன.
இவற்றுக்கும் "வேதத்தில் நிலை பெற்றிருப்பவர்" என்றுதான் பொருள்.
பின் "கிரித்ரா" என்று எதற்காக கூறினார்கள் என்றால், பாஷ்யகாரர்கள் அற்புதமான ஒரு பொருள் கூறியுள்ளார்கள்.
முதலில் "கிரிஸா" என்று கூறியபோது "வேத வாக்கியங்களில் இருப்பவன்" என்று பொருள் கூறியவர்கள்,
"கிரித்ரா" என்பதற்கு "வாக்குக்குக் கட்டுப்பட்டவன்" என்று பொருள் கூறுகிறார்கள்.
சிவனானாலும், ராமனானாலும் தர்ம சொரூபங்கள் ஆதலால் அவ்வாறு அழைக்கப்படுகிறார்கள் என்பது இதன் மூலம் புரிகிறது.
பரமேஸ்வரனை, "சொன்ன பேச்சுக்கு கட்டுப்பட்டு நடப்பவனே!" என்று போற்றி வேதமாதா வணங்குகிறாள்.
இதன் பொருள் என்னவென்றால், "எப்படிப்பட்டவன் ஆனாலும் தவறை உணர்ந்து பச்சாபத்தோடு என்னை சரணடைந்தால் அவர்களுக்கு அருள் புரிவேன்!" என்று சிவன் வாக்களித்துள்ளான்.
"கொடுத்த வாக்கு கட்டப்பட்டிருக்கும் சிவன் என்னை காப்பாற்ற வேண்டும்!" என்று பிரார்த்தனை செய்கிறான் பக்தன்.
சொல்லுக்கு கட்டுப்பட்டு இருப்பது இறைவனின் தெய்வீக குணம் . மனிதன் கூட அது போன்ற குணத்தை கொண்டிருந்தால் அவன் இறைவனைப் போன்றவனாக உயரலாம்.
ஹர்ஷ சரிதம் என்ற காவியத்தில், "உத்தமமானவர்கள் இருவிதமாகப் பேச மாட்டார்கள்" என்று ஒரு கூற்று வருகிறது.
இன்று ஒரு பேச்சு, நாளை ஒரு பேச்சு, இங்கொன்றும் அங்கொன்றுமாக பேசுவது என்று இருக்க மாட்டார்கள். ஒரே பேச்சுக்கு கட்டுப்பட்டு இருப்பார்கள்.
இது "ருஜுத்வம்" எனப்படுகிறது.
எது மனதில் உள்ளதோ அதுவே வார்த்தையில் இருக்க வேண்டும். இரண்டும் ஒன்றாக இருக்க வேண்டும்.
அவ்வாறன்றி மாற்றிப் பேசும் போது ருஜுத்வம் போய்விடும். கபடம் பிரவேசித்து விடும்.
கபடமற்ற சொற்கள் மிகவும் உத்தமமானவை என்பதை ஹர்ஷசரிதம் விவரிக்கிறது.
வாக்குறுதிகள் கொடுப்பது, கொடுத்த வாக்கை காப்பாற்றுவது என்பவை சிறிய விஷயங்களல்ல
வாக்கு என்பது ஏதோ வாயால் பேசி விட்டோம் என்று எண்ணாமல் வாக்கு "அக்னி" என்று அறியவேண்டும்.
அக்னி போன்ற வாக்கினை அக்னி போல் காக்க வேண்டும்.
அக்னியை ஜாக்கிரதையாகக் கையாண்டால் அது நமக்கு உணவு சமைத்துக் கொடுக்கும். ஜாக்கிரதையாக பயன்படுத்தாவிட்டால் அக்னி வீட்டை எரித்து விடும்.
"வாக்கு கூட அக்னியே! அது சத்தியம், ஹிதம், மிதம் – ஆக இருக்கையில் கட்டாயம் நம்மைப் பாதுகாக்கும்!" என்று நமக்கு விளக்கிக் கூறிய ரிஷிகளுக்கு வந்தனம்
No comments:
Post a Comment