Wednesday, March 27, 2024

Parrot in Divya prabandam

திவ்யபிரபந்தத்தில் கிளிகள் பற்றி ஸ்ரீஆண்டாள்/ ஆழ்வார்கள் அலற்றியது. 🙏
எல்லே! *இளங்கிளியே* இன்னம் உறங்குதியோ, இன்னடிசிலோடு பாலமுதூட்டி*  எடுத்த என் *கோலக்கிளியை** 
உன்னொடு தோழமை கொள்வன், *பைங்கிளி* வண்ணன் சிரீதரன் என்பதோர்*  பாசத்து  அகப் பட்டிருந்தேன்* , *கூட்டில் இருந்து கிளி* எப்போதும் கோவிந்தா! கோவிந்தா! என்று அழைக்கும்* , 

 *செவ்வாய்க்கிளி* நான்மறை பாடு*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.

பண்டு இவன் ஆயன் நங்காய்!  படிறன் புகுந்து*
என் மகள்தன் தொண்டை அம் செங் கனி வாய்*  நுகர்ந்தானை உகந்து
அவன்பின் கெண்டை ஒண் கண் மிளிர*  *கிளிபோல்* மிழற்றி நடந்து

முற்றிலும் *பைங் கிளியும்**  பந்தும் ஊசலும் பேசுகின்ற*    
சிற்றில் மென் பூவையும்  விட்டு அகன்ற செழுங் கோதைதன்னை

மான்போலும் மென் நோக்கின் செய்ய வாயார் மரகதம்போல் *மடக்கிளியைக்* கைமேல் கொண்டு
தேன்போலும் மென் மழலை பயிற்றும் நாங்கூர்த் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே.

பந்தோடு கழல் மருவாள் *பைங்கிளியும்* பால் ஊட்டாள் பாவை பேணாள்* 
வந்தானோ திருவரங்கன் வாரானோ?' என்று என்றே வளையும் சோரும்*

இனம்மேவு வரிவளைக்கை ஏந்தும் கோவை*  ஏய்வாய மரகதம்போல் *கிளியின்இன் சொல்** 
அனம்மேவு நடைமடவார் பயிலும் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே. 

உய்வான் உனகழலே தொழுது எழுவேன்*  *கிளிமடவார்* - 
செவ்வாய் மொழி பயிலும் சிறுபுலியூர்ச் சலசயனத்து* 

சொல்லாய் *பைங்கிளியே* ,
சுடர்ஆழி வலன்உயர்த்த,*
மல்லார்தோள்  வட வேங்கடவனைவர,*
சொல்லாய் *பைங்கிளியே* 

சொல் எடுத்துத் *தன் கிளியைச்* சொல்லே என்று* துணை முலைமேல் துளி சோர சோர்கின்றாளே!     

மெல் விரல்கள் சிவப்பு எய்தத் தடவி ஆங்கே* *மென் கிளிபோல்* மிக மிழற்றும் என் பேதையே.

நுமதுவாயோ அதுஅன்றி வல்வினையேனும் *கிளியும்* எள்கும்-
ஆயோ?* அடும் தொண்டையோ, அறையோ இது அறிவு அரிதே. 

தீரா உடம்பொடு பேதுறுவேன் கண்டுஇரங்கி* 
ஏரார் *கிளிக்கிளவி* எம்அனைதான் வந்து என்னைச்*
சீரார் செழும்புழுதிக் காப்பிட்டு

தளிர் நிறத்தால் குறைவில்லாத்  தனிச் சிறையில் விளப்பு உற்ற,* 
 *கிளிமொழியாள்* காரணமாக் கிளர் அரக்கன் நகர் எரித்த,* 

ஒருவண்ணம் சென்று புக்கு எனக்கு ஒன்று உரை *ஒண்கிளியே** 
செரு ஒண் பூம் பொழில் சூழ்  செக்கர் வேலைத் திருவண்வண்டூர்

மழறு தேன் மொழியார்கள் நின் அருள் சூடுவார் மனம் வாடி நிற்க*  எம்- 
குழறு பூவையொடும்*  *கிளியோடும்* குழகேலே*.  

பூவை *பைங்கிளிகள்* பந்து தூதை பூம் புட்டில்கள்,* 
யாவையும் திருமால் திருநாமங்களே கூவி எழும்,

கையமர் சக்கரத்து என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு* 
மெய்யமர் காதல் சொல்லி *கிளிகாள்* ! விரைந்து ஓடிவந்தே?

இடைஇல்லையான் *வளர்த்தகிளிகாள்**  பூவைகள்காள்! குயில்காள்! மயில்காள்*
உடையநம்மாமையும் சங்கும் நெஞ்சும்  ஒன்றும் ஒழியஒட்டாது கொண்டான்*அடையும் வைகுந்தமும் பாற்கடலும்   அஞ்சனவெற்பும் அவைநணிய* 
கடையறப்பாசங்கள் விட்டபின்னை அன்றி அவன்அவை காண்கொடானே.  

நன்குஎண்ணி நான்வளர்த்த  *சிறுகிளிப்பைதலே** 
இன்குரல் நீ மிழற்றேல்  என்ஆர்உயிர்க் காகுத்தன்*
நின்செய்ய வாய்ஒக்கும் வாயன் கண்ணன்கை காலினன்* 
நின்பசும்சாம நிறத்தன் கூட்டுண்டு நீங்கினான். 

ஒழிவுஇன்றித் திருமூழிக்களத்துஉறையும்*  ஒண்சுடரை 
ஒழிவுஇல்லா அணிமழலைக்  *கிளிமொழியாள்* அலற்றியசொல்* 
வழுஇல்லா வண்குருகூர்ச்  சடகோபன் வாய்ந்துஉரைத்த*  
அழிவுஇல்லா ஆயிரத்து இப்பத்தும் நோய் அறுக்குமே.

எளிதாயினவாறுஎன்று  என்கண்கள் களிப்பக்* 
களிதாகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்*
 *கிளிதாவிய* சோலைகள்சூழ்  திருப்பேரான்* 
தெளிதாகிய சேண்விசும்பு தருவானே.

शुकवाक्म्रृतम् श्रवणसुकम्- श्रीमद् भागवतम्
 ( கிளிமொழியால் சொல்லப்பட்ட செவிக்கினிய கண்ணமுது ஸ்ரீமத் பாகவதம்). அடியேன் தாஸன். ஸர்வம் ஸ்ரீதேசிகார்ப்பணம். 🙏🙏🙏🙏

No comments:

Post a Comment