மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-306
துரோண பர்வம்
….
தேருக்குள் ஒளிந்து கொண்ட கர்ணன்
..
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "பிறகு கர்ணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மூன்று கணைகளால் பீமனைத் துளைத்து, அவன் மீது எண்ணற்ற அழகிய கணைகளைப் பொழிந்தான்.(1) பாண்டுவின் மகனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான பீமசேனன், இப்படிச் சூதன் மகனால் {கர்ணனால்} தாக்கப்பட்டாலும், வலிக்கு உண்டான எந்த அறிகுறிகளையும் காட்டாமல், (கணைகளால்) துளைக்கப்பட்ட மலையைப் போல அசையாதிருந்தான்.(2) பதிலுக்கு அந்தப் போரில் அவன் {பீமன்}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, எண்ணெய் தேய்க்கப்பட்டதும், பெரும் கூர்மை கொண்டதும், சிறப்பான கடினத்தன்மை கொண்டதுமான ஒரு கர்ணியை {முட்கள் பதிக்கப்பட்ட கணை} கர்ணனின் காதில் ஆழத் துளைத்தான்.(3) (அக்கணையால்) அவன் {பீமன்}, அழகியதும் பெரியதுமான கர்ணனின் காதுகுண்டலங்களைப் பூமியில் வீழ்த்தினான். அது {காது குண்டலம்}, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் பிரகாசம் கொண்ட நட்சத்திரம் ஒன்று ஆகாயத்தில் இருந்து விழுவதைப் போலக் கீழே விழுந்தது.(4)
கோபத்தால் தூண்டப்பட்ட விருகோதரன் {பீமன்}, பிறகு சிரித்துக் கொண்டே, மற்றொரு பல்லத்தால் சூதன் மகனின் {கர்ணனின்} நடுமார்பை ஆழத் துளைத்தான்.(5) மீண்டும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமன், அந்தப் போரில், சற்று முன்பே சட்டையுரித்த கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போலத் தெரிந்தவையான பத்து நாராசங்களை விரைவாக ஏவினான்.(6) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பீமனால் ஏவப்பட்ட அக்கணைகள், கர்ணனின் நெற்றியைத் தாக்கி, எறும்புப் புற்றுக்குள் நுழையும் பாம்புகளைப் போல அதற்குள் {நெற்றிக்குள்} நுழைந்தன.(7) நெற்றில் ஒட்டிக் கொண்ட {தைத்திருந்த} கணைகளால் அந்தச் சூதனின் மகன் {கர்ணன்}, முன்பு கருநெய்தல்மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புருவங்களோடு கூடியவனாக இருந்ததைப் போலவே அழகாகத் தெரிந்தான் [1].(8)
[1] வேறொரு பதிப்பில், "பிறகு, சூதபுத்திரன், நெற்றியில் தைத்திருக்கின்ற பாணங்களாலே முன்பு கருநெய்தல் புஷ்பமாலையைத் தரித்துக் கொண்டு விளங்கியதைப் போல விளங்கினான்" என்றிருக்கிறது.
சுறுசுறுப்பான குந்தியின் மகனால் {பீமனால்} ஆழத்துளைக்கப்பட்ட கர்ணன், தேரின் ஏர்க்காலைப் பிடித்துக் கொண்டு தன் கண்களை மூடினான் {மயங்கினான்}.(9) எனினும், விரைவில் சுயநினைவு மீண்டவனும், எதிரிகளை எரிப்பவனுமான அந்தக் கர்ணன், குருதியில் குளித்த தன் உடலுடன், சினத்தால் வெறிபிடித்தவனானான்.(10) அந்த உறுதிமிக்க வில்லாளியால் {பீமனால்} இப்படிப் பீடிக்கப்பட்டதன் விளைவால் சினத்தால் மதங்கொண்டவனும், பெரும் மூர்க்கம் கொண்டவனுமான கர்ணன், பீமசேனனின் தேரை நோக்கி மூர்க்கமாக விரைந்தான்.(11)
பிறகு, ஓ! மன்னா, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கவனும், கோபம் நிறைந்தவனுமான கர்ணன், சினத்தால் மதங்கொண்டு, கழுகின் இறகுகளால் சிறகமைந்த நூறு கணைகளைப் பீமசேனனின் மீது ஏவினான்.(12) எனினும் அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தன் எதிரியை {கர்ணனை} அலட்சியம் செய்து, அவனது சக்தியை வெறுமையாக்கி, அவன் மீது கடுங்கணைகளின் மழையைப் பொழியத் தொடங்கினான்.(13) அப்போது கர்ணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சினத்தால் தூண்டப்பட்டு, ஓ! எதிரிகளை எரிப்பவரே, கோபத்தின் வடிவமாக இருந்த அந்தப் பாண்டுவின் மகனுடைய {பீமனுடைய} மார்பில் ஒன்பது கணைகளால் தாக்கினான்.(14) கொடூரப் பற்களைக் கொண்ட இரு புலிகளுக்கு ஒப்பாக (கணைகள் தரித்திருந்த) மனிதர்களில் புலிகளான அவ்விருவரும் அப்போரில் வலிமைமிக்க இரு மேகத் திரள்களைப் போலத் தங்கள் கணைமாரியை ஒருவரின் மேல் மற்றவர் பொழிந்தனர்.(15) அவர்கள், தங்கள் உள்ளங்கை ஒலிகளாலும், பல்வேறு வகைகளிலான கணைமாரிகளாலும் ஒருவரையொருவர் அச்சுறுத்த முயன்றனர்.(16) சினத்தால் தூண்டப்பட்ட அவ்விருவரும், அந்தப் போரில் அடுத்தவரின் சாதனைகளுக்கு எதிர்வினையாற்ற முனைந்தனர். அப்போது பகைவீரர்களைக் கொல்பவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான பீமன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, ஒரு க்ஷுரப்ரத்தைக் கொண்டு சூதன் மகனின் வில்லை அறுத்துப் பெருங்கூச்சல் செய்தான் [2]. உடைந்த அவ்வில்லை எறிந்தவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அந்தச் சூதனின் மகன் {கர்ணன்}, இன்னும் பலமான, கடினமான மற்றொரு வில்லை எடுத்துக்கொண்டான்.(17, 18)
[2] வேறொரு பதிப்பில் இதன்பிறகு இன்னும் அதிகம் இருக்கிறது, அது பின்வருமாறு, "மகாரதனான சூதபுத்ரன் அறுக்கப்பட்ட அந்த வில்லையெறிந்துவிட்டுப் பகைவர் கூட்டத்தை அழிப்பதும் மிக்க வேகமுள்ளதுமான வேறு வில்லைக் கையிலெடுத்தான். பிறகு விருகோதரன் கர்ணனுடைய அந்த வில்லையும் அரைநிமிஷத்திற்குள் அறுத்தான். இவ்வாறு விருகோதரன் கர்ணனுடைய மூன்றாவதும், நான்காவதும், ஐந்தாவதும், ஆறாவதும், ஏழாவதும், எட்டாவதும், ஒன்பதாவதும், பத்தாவதும், பதினோறாவதும், பன்னிரெண்டாவதும், பதிமூன்றாவதும், பதினான்காவதும், பதினைந்தாவதும், பதினாறாவதும், பதினேழாவதும், பதினெட்டாவதும் மற்றும் பலவுமான விற்களை அறுத்தான். பிறகு கர்ணன், அரை நிமிஷத்தினுள் வில்லைக் கையிற்கொண்டு எதிர்நின்றான்" என்றிருக்கிறது. இது கங்குலியிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் இல்லை.
குரு, சௌவீர மற்றும் சிந்து வீரர்கள் கொல்லப்படுவதைக் கண்டும், சிதறிக் கிடக்கும் கவசங்கள், கொடிமரங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றால் அந்தப் பூமியானது மறைக்கப்பட்டிருப்பதைக் குறித்துக் கொண்டும், அனைத்துப் பக்கங்களிலும், யானைகள், காலாட்படை வீரர்கள், குதிரைவீரர்கள் மற்றும் தேர்வீரர்களின் உயிரற்ற உடல்களையும் கண்டும் அந்தச் சூத மகனின் {கர்ணனின்} உடலானது கோபத்தால் பிரகாசத்துடன் சுடர்விட்டு எரிந்தது.(19,20) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் உறுதியான வில்லை வளைத்த அந்த ராதையின் மகன் {கர்ணன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமனின் மீது தன் கோபப் பார்வைகளை வீசினான்.(21) சினத்தால் மதங்கொண்ட அந்தச் சூதனின் மகன் {கர்ணன்}, தன் கணைகளை ஏவிய போது, நடுப்பகலில் பளபளக்கும் கதிர்களைக் கொண்ட கூதிர்காலத்துச் சூரியனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(22) தன் கரங்களால் கணையை எடுக்கும்போதும், அதை வில்லின் நாணில் பொருத்தும்போதும், நாண்கயிற்றை இழுக்கும்போதும், அதை {கணையை} விடுக்கும்போதும், அந்தச் செயல்களுக்கு இடையில் எவராலும் எந்த இடைவெளியையும் காண முடியவில்லை. இப்படிக் கர்ணன் வலப்பக்கமாகவும், இடப்பக்கமாகவும் கணைகளை ஏவுவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அவனது வில்லானது ஒரு பயங்கர நெருப்பு வளையத்தைப் போல இடையறாமல் வட்டமாக வளைக்கப்பட்டிருந்தது. கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கூர்முனைகளைக் கொண்டவையுமான கணைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} திசைகளின் அனைத்துப் புள்ளிகளையும் மறைத்து சூரியனின் ஒளியையே இருளச் செய்தன.(23-26)
கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான அந்தக் கணைகளின் எண்ணற்ற கூட்டங்கள் ஆகாயத்தில் காணப்பட்டன. உண்மையில், அதிரதன் மகனின் {கர்ணனின்} வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகள் நாரைகளின் வரிசைகளைப் போல ஆகாயத்தில் அழகாகத் தெரிந்தன.(27-28) அந்த அதிரதன் மகன் ஏவிய கணைகள் அனைத்தும், கழுகின் இறகுகளைக் கொண்டவையாகவும், கல்லில் கூராக்கப்பட்டவையாகவும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையாகவும், சுடர்மிக்க முனைகளைக் கொண்டவையாகவும் இருந்தன. அவனது வில்லின் சக்தியால் உந்தப்பட்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான அந்தக் கணைகள் பீமனின் தேரை நோக்கி இடையறாமல் பாய்ந்து கொண்டிருந்தன.(29-30) உண்மையில், கர்ணனால் ஏவப்பட்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான அந்தக் கணைகள், ஆகாயத்தில் ஆயிரக்கணக்கில் பாய்ந்த போது, அடுத்தடுத்துச் செல்லும் வெட்டுக் கிளிகளின் {விட்டிற்பூச்சிக்} கூட்டங்களைப் போல அழகாகத் தெரிந்தன. அதிரதன் மகனின் {கர்ணனின்} வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகள், ஆகாயத்தில் சென்றபோது, தொடர்ந்து செல்லும் ஒரே நீண்ட கணை ஒன்றைப் போல வானத்தில் தெரிந்தன. மழைத்தாரைகளால் மலையை மறைக்கும் மேகமொன்றைப் போல, சினத்தால் தூண்டப்பட்ட கர்ணன், கணைமாரியால் பீமனை மறைத்தான்.(31-33)
அப்போது பொங்கும் கடலுக்கு ஒப்பான அந்தக் கணைமாரியை அலட்சியம் செய்துவிட்டுக் கர்ணனை எதிர்த்து பீமன் விரைந்ததால், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தங்கள் துருப்புகளுடன் கூடிய உமது மகன்கள், பின்னவனின் {பீமனின்} வலிமை, சக்தி, ஆற்றல் மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றைக் கண்டனர். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பீமன், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கைப்பிடி கொண்ட உறுதிமிக்க வில்லைத் தரித்திருந்தான்.(34-36)
அவன் {பீமன்}, தொடர்ந்து வட்டமாக வளைக்கப்பட்ட இந்திரனின் வில்லைப் போலத் தெரியும்படி அதை {வில்லை} விரைவாக வளைத்தான். அதிலிருந்து தொடர்ச்சியாக வெளிவந்த கணைகள் மொத்த ஆகாயத்தையும் நிறைப்பனவாகத் தெரிந்தன.(37)
பீமனின் வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான அந்த நேரான கணைகள், வானத்தில் ஒரு தொடர்ச்சியான கோடு ஒன்றை உண்டாக்கியதால் அவை தங்க மாலையொன்றைப் போல மிகப் பிரகாசமாகத் தெரிந்தன.(38)
ஆகாயத்தில் பரவியிருந்த (கர்ணனின்) கணைமாரியானது, பீமசேனனின் கணைகளால் தாக்கப்பட்டு, துண்டுகளாகச் சிதறடிக்கப்பட்டுக் கீழே பூமியில் வீழ்ந்தன.(39) அப்போது, தங்கச் சிறகுகள் கொண்டவையும், வேகமாகச் செல்பவையும், ஒன்றோடு ஒன்று மோதி நெருப்புப் பொறிகளை உண்டாக்குபவையும், கர்ணன் மற்றும் பீமசேனன் ஆகிய இருவருடையவையுமான அந்தக் கணை மாரிகளால் வானம் மறைக்கப்பட்டது. அப்போது சூரியன் மறைக்கப்பட்டது, காற்றும் வீசாமல் நின்றது.(40,41) உண்மையில், இப்படி அந்தக் கணைகளால் ஆகாயம் மறைக்கப்பட்ட போது, எதையுமே காணமுடியவில்லை. பிறகு அந்தச் சூதனின் மகன் {கர்ணன்}, உயர் ஆன்மப் பீமனின் சக்தியை அலட்சியம் செய்து, பிற கணைகளைக் கொண்டு பீமனை முழுமையாக மறைத்து, அவனிலும் மேன்மையடைய முயன்றான். பிறகு, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அவ்விருவரால் ஏவப்பட்ட கணைமாரிகள் எதிர் காற்றுகள் இரண்டைப் போல ஒன்றோடொன்று மோதுவதாகத் தெரிந்தன.(42,43) மனிதர்களில் சிங்கங்களான அவ்விருவரின் கணைமாரிகளும் மோதிக் கொண்டதன் விளைவால், ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, வானத்தில் ஒரு காட்டுத் தீ உண்டானதாகத் தெரிந்தது.(44)
அப்போது கர்ணன், பீமனைக் கொல்லவிரும்பி, கூராக்கப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கொல்லனின் கரங்களால் பளபளப்பாக்கப் பட்டவையுமான பல கணைகளைச் சினத்தால் அவன் {பீமன்} மீது ஏவினான். எனினும் பீமன், அக்கணைகள் ஒவ்வொன்றையும் தன் கணைகளால் மூன்று துண்டுகளாக அறுத்து, கர்ணனினும் மேன்மையடைந்து, "நில், நில்!" என்று கூச்சலிட்டான்.(45,46) கோபம் நிறைந்தவனும், வலிமைமிக்கவனுமான பாண்டுவின் மகன் {பீமன்}, அனைத்தையும் எரிக்கும் காட்டுத்தீயைப் போலச் சினத்தால் மீண்டும் கடும் கணைகளை ஏவினான். அவர்களது தோல் கையுறைகளின் மீது வில்லின் நாண்கயிறுகள் தாக்கியதன் விளைவாகப் பேரொலிகள் உண்டாகின.(47,48) அவர்களது உள்ளங்கை ஒலிகளும் பேரொலிகளாகின, அவர்களது சிங்க முழக்கங்கள் பயங்கரமாகின, அவர்களது தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலிகளும், அவர்களது வில்லின் நாணொலிகளும் கடுமையாகின.(49) ஒருவரையொருவர் கொல்ல விரும்பிய கர்ணன் மற்றும் பாண்டுவின் மகன் {பீமன்} ஆகியோரது ஆற்றல்களைக் காணவிரும்பிய போராளிகள் அனைவரும் போரிடுவதை நிறுத்தினர்.(50) தெய்வீக முனிவர்கள், சித்தர்கள், கந்தர்வர்கள் ஆகியோர், "நன்று, நன்று!" என்று சொல்லி பாராட்டினர். வித்யாதரர்களின் இனக்குழுக்கள் அவர்கள் மீது மலர்மாரியைச் சொரிந்தனர்.(51)
அப்போது, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், கடும் ஆற்றலைக் கொண்டவனுமான பீமன், தன் ஆயுதங்களால், எதிரியின் ஆயுதங்களைக் கலங்கடித்துப் பல கணைகளால் சூதனின் மகனை {கர்ணனைத்} துளைத்தான்.(52) பெரும் வலிமையைக் கொண்ட கர்ணனும், பீமசேனனின் கணைகளைக் கலங்கடித்து, அந்தப் போரில் அவன் {பீமன்} மீது ஒன்பது நாராசங்களை ஏவினான்.(53) எனினும் பீமன், அதே அளவிலான பல கணைகளால் அக்கணைகளை ஆகாயத்தில் வெட்டி, அவனிடம் {கர்ணனிடம்}, "நில், நில்" என்றான்.(54)
பிறகு வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த வீரப் பீமன், சினத்தால் தூண்டப்பட்டு, யமன் அல்லது காலனின் தண்டத்திற்கு ஒப்பான கணையொன்றை அதிரதன் மகன் {கர்ணன்} மீது ஏவினான்.(55) எனினும், பெரும் ஆற்றலைக் கொண்ட ராதையின் மகன் {கர்ணன்} சிரித்துக் கொண்டே பாண்டுமகனின் அந்தக்கணை ஆகாயத்தில் வரும்போதே அதை மூன்று கணைகளால் வெட்டினான்.(56) பாண்டுவின் மகன் {பீமன்}, கடுங்கணைகளின் மழையை மீண்டும் பொழிந்தான். எனினும் கர்ணன், பீமனின் அந்தக் கணைகள் அனைத்தையும் அச்சமற்ற வகையில் ஏற்றான்.(57)
சினத்தால் தூண்டப்பட்டவனும், சூதனின் மகனுமான கர்ணன், தன் ஆயுதங்களின் சக்தியாலும், தன் நேரான கணைகளைக் கொண்டும் அம்மோதலில் போரிட்டுக் கொண்டிருந்த பீமனின் அம்பறாத்தூணிகள் இரண்டையும், வில்லின் நாண்கயிற்றையும், அவனது {பீமனது} குதிரைகளின் கடிவாளங்களையும் அறுத்தான். பிறகு அவனது {பீமனது} குதிரைகளையும் கொன்ற கர்ணன், ஐந்து கணைகளைக் கொண்டு பீமனின் தேரோட்டியையும் துளைத்தான்.(58,59) அந்தத் தேரோட்டி வேகமாக யுதாமன்யுவின் தேரை நோக்கி ஓடிச் சென்றான். அப்போது சினத்தால் தூண்டப்பட்டவனும், யுக நெருப்பின் காந்திக்கு ஒப்பானவனுமான ராதையின் மகன் {கர்ணன்}, சிரித்துக் கொண்டே பீமனின் கொடிக்கம்பத்தையும், அவனது கொடியையையும் வீழ்த்தினான்.
தன் வில்லை இழந்தவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான பீமன் தேர்வீரர்கள் பயன்படுத்தும் ஓர் ஈட்டியை எடுத்துக் கொண்டான்.(60,61) கோபத்தால் தூண்டப்பட்ட அவன் {பீமன்}, அதைத் தன் கரங்களில் சுழற்றியபடியே பெரும் பலத்துடன் கர்ணனின் தேர் மீது எறிந்தான். பிறகு, இப்படி அவ்வீட்டி {பீமனால்} வீசப்பட்டதும், அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், விண்கோளைப் போலப் பிரகாசத்துடன் தன்னை நோக்கி வந்ததுமான அதைப் பத்து கணைகளால் அறுத்தான். அதன்பேரில் அவ்வீட்டி, போர்க்கலையின் அனைத்து முறைகளையும் அறிந்தவனும், தன் நண்பர்களுக்காகப் போரிடுபவனும், சூதனின் மகனுமான கர்ணனின் அந்தக் கூரிய கணைகளால் பத்து துண்டுகளாக வெட்டப்பட்டுக் கீழே விழுந்தது.
பிறகு மரணம் அல்லது வெற்றியை அடைய விரும்பிய குந்தியின் மகன் {பீமன்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கேடயம் ஒன்றையும், வாள் ஒன்றையும் எடுத்துக் கொண்டான்.(62-64) எனினும் கர்ணன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சிரித்துக் கொண்டே பீமனின் அந்தப் பிரகாசமான கேடயத்தைக் கடும் கணைகள் பலவற்றால் வெட்டினான். தேரிழந்த பீமன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கேடயத்தையும் இழந்து, சினத்தால் வெறிபிடித்தவனானான்.(65,66) வேகமாக அவன் {பீமன்}, வலிமையான தன் வாளைக் கர்ணனின் தேர் மீது ஏறிந்தான். அந்தப் பெரிய வாளானது, நாண் பொருத்தப்பட்ட சூதன் மகனின் வில்லை அறுத்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வானத்தில் இருந்து விழும் கோபக்காரப் பாம்பைப் போலக் கீழே பூமியில் விழுந்தது.(67)
அந்தப் போரில் சினத்தால் தூண்டப்பட்ட அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, சிரித்துக் கொண்டே, எதிரியை அழிப்பதும், வலுவான நாண்கயிறு கொண்டதும், தான் இழந்ததை {முந்தைய வில்லை} விடக் கடினமானதுமான மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டான். குந்தியின் மகனை {பீமனைக்} கொல்ல விரும்பிய கர்ணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கச் சிறகுகளையும், பெரும் சக்தியையும் கொண்ட ஆயிரக்கணக்கான கணைகளை ஏவத் தொடங்கினான்.(68,69)
கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அக்கணைகளால் தாக்கப்பட்டவனும் வலிமைமிக்கவனுமான பீமன், கர்ணனின் இதயத்தை வேதனையால் நிறைக்கும்படி வானத்தில் எம்பி {கர்ணனின் தேரின் மேல்} குதித்தான்.(70) போரில் வெற்றியை விரும்பிய பீமனின் நடத்தையைக் கண்ட ராதையின் மகன் {கர்ணன்}, தேருக்குள் ஒளிந்து கொண்டு அவனை {பீமனை} ஏமாற்றினான்.(71) கலங்கிய {பயந்த} இதயத்துடன் கர்ணன் தேர்த்தட்டில் தன்னை மறைத்துக் கொண்டதைக் கண்ட பீமன், கர்ணனின் கொடிக்கம்பத்தைப் பிடித்துக் கொண்டு பூமியில் {தரையில் அவனுக்காகக்} காத்திருந்தான் [3].(72) கருடன் ஒரு பாம்பைக் கவர்ந்து செல்வதைப் போலவே கர்ணனை அவனது தேரில் இருந்து கவரச் சென்ற பீமனின் அந்த முயற்சியைக் குருக்கள் {கௌரவர்கள்} மற்றும் சாரணர்கள் அனைவரும் பாராட்டினர். பீமன் தன் தேரை இழந்து, தன் வில்லும் வெட்டப்பட்டிருந்தாலும், (உடைந்த) தன் தேரை விட்டு, தன் வகைக்கான {க்ஷத்திரியக்} கடமைகளை நோற்றுப் போரில் நிலையாக நின்றான்" {என்றான் சஞ்சயன்}.(73,74)
[3] வேறொரு பதிப்பில், "கர்ணனுடைய வில்லினின்று விடுபடுகின்ற அம்புகளாலே பீடிக்கப்படுகின்ற பலசாலியான அந்தப் பீமன் ஆகாயத்தில் கிளம்பிக் கர்ணனுடைய ரதத்தில் பிரவேசித்தான். யுத்தரங்கத்தில் ஜயத்தை விரும்புகிற அந்தப் பீமனுனுடைய செய்கையைக் கண்டு அந்த ராதேயன் கொடிமரமுள்ளவிடத்தில் ஒளிந்து கொண்டு பீமசேனனை வஞ்சித்தான். துன்பத்தையடைந்திருக்கின்ற இந்திரியங்களை உடையவனாகித் தேரின் நடுவில் பதுங்கிக் கொண்டிருக்கின்ற அந்தக் கர்ணனைக் காணாமல், பீமசேனன் அந்தத் தேரின் கொடிமரத்தில் ஏறிப் பின்பு பூமியில் இறங்கி அவனை எதிர்பார்த்து நின்றான்" என்றிருக்கிறது.
சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, "பிறகு ராதையின் மகன் {கர்ணன்}, கோபத்தால் அம்மோதலில் போருக்காகக் காத்திருந்த பாண்டுவின் மகனை {பீமனை} எதிர்த்துச் சென்றான். பிறகு, அறைகூவி அழைத்து ஒருவரையொருவர் அணுகிய அந்த வலிமைமிக்கப் போர்வீரர்கள் இருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} அந்த மனிதர்களில் காளையரான இருவரும், கோடையின் முடிவில் தோன்றும் மேகங்களைப் போல ஒருவரையொருவர் நோக்கி முழங்கினர்.(75,76) மேலும் போரில் ஒருவரையொருவர் பொறுத்துக் கொள்ள முடியாமல், அங்கே அந்தச் சினங்கொண்ட சிங்கங்கள் இருவருக்கும் மத்தியில் தோன்றிய ஆயுதப் பாதையானது {போரானது}, பழங்காலத்தில் தேவர்களுக்கும், தானவர்களுக்கும் இடையில் நடைபெற்றதற்கு ஒப்பாக இருந்தது.
எனினும் ஆயுதக் கையிருப்புத் தீர்ந்து போன குந்தியின் மகன் {பீமன்}, (பின்வாங்க வேண்டிய கட்டாயமேற்பட்டதால்) கர்ணனால் தொடரப்பட்டான். அர்ஜுனனால் கொல்லப்பட்டுப் பெரும் மலைகளைப் போல (அருகில்) கிடக்கும் யானைகளைக் கண்ட ஆயுதங்களற்ற பீமசேனன், கர்ணனின் தேருடைய முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக அவற்றின் {கொல்லப்பட்ட யானைகளின்} மத்தியில் நுழைந்தான்.(79) அந்த யானைத் திரளை அணுகி, தேர் அணுக முடியாத வகையில் அவற்றுக்கு மத்தியில் சென்று தன்னுயிரைக் காத்துக் கொள்ள விரும்பிய பாண்டுவின் மகன் {பீமன்}, ராதையின் மகனைத் {கர்ணனைத்} தாக்குவதிலிருந்து விலகினான் (80). உறைவிடத்தை விரும்பியவனும், பகை நகரங்களை அடக்குபவனுமான அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தனஞ்சயனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்ட ஒரு யானையைக் கந்தமாதன சிகரத்தைத் தூக்கிய ஹனுமனைப் போல உயரத் தூக்கி அங்கேயே காத்திருந்தான்.(81) எனினும் கர்ணன், பீமன் பிடித்திருந்த அந்த யானையைத் தன் கணைகளால் வெட்டினான்.(82) அதன்பேரில் அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, அந்த யானையின் பிணத்துடைய துண்டுகளையும், தேர்ச்சக்கரங்களையும், குதிரைகளையும் கர்ணனின் மீது வீசினான். உண்மையில், சினத்தால் தூண்டப்பட்ட அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, களத்தில் கிடப்பவற்றில் தான் கண்ட அனைத்தையும் எடுத்து கர்ணனின் மீது வீசினான்.(83) எனினும் கர்ணன், இப்படித் தன் மீது வீசப்பட்ட அந்தப் பொருட்கள் ஒவ்வொன்றையும் தன் கூரிய கணைகளால் வெட்டினான்.(84)
பீமனும், இடியின் பலத்தைக் கொண்ட தன் கடும் கைமுட்டிகளை உயர்த்திக் கொண்டு சூதனின் மகனை {கர்ணனைக்} கொல்ல விரும்பினான். எனினும் விரைவில் அர்ஜுனனின் சபதத்தை நினைவுகூர்ந்தான்.(85) எனவே, அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, திறன்கொண்டவனாகவே இருப்பினும், சவ்யசச்சின் {அர்ஜுனன்} ஏற்ற உறுதிமொழியைப் பொய்ப்பிக்காதிருக்க விரும்பி கர்ணனை உயிரை எடுக்காமல் இருந்தான். எனினும், சூதனின் மகன் {கர்ணன்}, துன்புற்றுக் கொண்டிருந்த பீமனைத் தன் கூரிய கணைகளால் மீண்டும் மீண்டும் உணர்வை இழக்கச் செய்தான்.(87) ஆனால், குந்தியின் வார்த்தைகளை நினைவுகூர்ந்த கர்ணன், ஆயுதமற்ற பீமனின் உயிரை எடுக்காமல் இருந்தான். வேகமாக {பீமனை} அணுகிய கர்ணன், தன் வில்லின் நுனியால் அவனை {பீமனைத்} தீண்டினான் {தொட்டான்}.(88) எனினும் வில்லால் தீண்டப்பட்ட போது, சினத்தால் தூண்டப்பட்டு ஒரு பாம்பைப் போலப் பெருமூச்சு விட்ட அவன் {பீமன்}, கர்ணனின் வில்லைப் பறித்து, அதைக் கொண்டே அவனது {கர்ணனின்} தலையைத் தாக்கினான்.(89)
பீமசேனனால் தாக்கப்பட்ட ராதையின் மகன் {கர்ணன்}, கோபத்தால் கண்கள் சிவந்து, சிரித்துக் கொண்டே, "தாடியற்ற அலியே", "அறியாமை கொண்ட மூடா", பெருந்தீனிக்காரா" என்ற இவ்வார்த்தைகளை மீண்டும் மீண்டும் சொன்னான்.(90) மேலும் கர்ணன், "ஆயுதங்களில் திறனில்லாமல் என்னுடன் போரிடாதே. போரில் பின்தங்கியிருக்கும் நீ ஒரு குழந்தையே.(92) ஓ! பாண்டுவின் மகனே {பீமா}, எங்கே உணவும், பானமும் அதிகம் இருக்கிறதோ, ஓ! இழிந்தவனே, அங்கே நீ இருக்க வேண்டுமேயன்றி போரில் ஒருக்காலும் இல்லை.(92) நீ போரில் திறனற்றவனாக இருப்பதால், ஓ! பீமா, கிழங்குகள், மலர்கள் மற்றும் கனிகளை உண்டு, நோன்புகளையும், தவங்களையும், பயின்று காடுகளிலேயே உன் வாழ்வைக் கழிப்பாயாக.(93) போருக்கும், முனி வாழ்வின் தவத்தன்மைக்கு இடையில் பெரும் வேறுபாடு இருக்கிறது. எனவே, ஓ! விருகோதரா {பீமா}, காட்டுக்குச் செல்வாயாக. ஓ! குழந்தாய், போரில் ஈடுபடும் தகுதி உனக்கில்லை. காடுகளில் வாழ்வதற்கான இயல்பான திறனே உனக்கு இருக்கிறது.(94) ஓ! விருகோதரா, வீட்டிலுள்ள சமையற்கலைஞர்கள், பணியாட்கள், அடிமைகள் ஆகியோரை வேகமாகத் தூண்டி, உன் விருந்துக்காகக் கோபத்துடன் அவர்களை நிந்திக்க மட்டுமே நீ தகுந்தவனாவாய்.(95) அல்லது, ஓ! பீமா, ஓ! மூட அறிவு கொண்டவனே, முனிவர்களின் வாழ்வு முறையை ஏற்றுக் கொண்டு, (உன் உணவுக்காக) உன் கனிகளைச் சேகரிப்பாயாக. ஓ! குந்தியின் மகனே {பீமா}, போரில் நீ திறனற்றவனாக இருப்பதால் காடுகளுக்குச் செல்வாயாக.(96) கனிகளையும், கிழங்குகளையும் தேர்ந்தெடுத்தல் {உண்பது}, அல்லது, விருந்தினருக்குப் பணிவிடை செய்தல் ஆகியவற்றில் ஈடுபடுபவனான நீ, ஓ! விருகோதரா {பீமா}, எந்த ஆயுத வழியிலும் {எந்தப் போரிலும்} பங்கெடுப்பதற்குத் திறனற்றவனாவாய் என்றே நான் நினைக்கிறேன்" என்று சொன்னான் {கர்ணன்}.(97)
மேலும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவனது {பீமனின்} இளவயதில் அவனுக்கு {பீமனுக்கு} இழைக்கப்பட்ட தீங்குகள் அனைத்தையும் கடுஞ்சொற்களால் கர்ணன் நினைவுப்படுத்தினான்.(98) மேலும் அவன் {பீமன்} அங்கே பலவீனமாக நிற்கையில், கர்ணன் மீண்டும் அவனை {பீமனை} வில்லால் தீண்டினான். விருஷன் {கர்ணன்} சிரித்துக் கொண்டே மீண்டும் பீமனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(99) "ஓ! ஐயா {பீமா}, நீ பிறரிடம் போரிடலாம், ஆனால் என் போன்றவனிடம் ஒருபோதும் முடியாது. எங்களைப் போன்றோரிடம் போரிட நேருவோர் இதையும், இன்னும் பிறவற்றையும் சந்திக்க வேண்டிவரும்.(100) கிருஷ்ணர்கள் {கருப்பர்களான அர்ஜுனனும், கிருஷ்ணனும்} இருவரும் எங்கிருக்கிறார்களோ அங்கே செல்வாயாக. போரில் அவர்கள் உன்னைக் காப்பார்கள். அல்லது, ஓ! குந்தியின் மகனே {பீமா}, வீட்டுக்குச் செல்வாயாக. உன்னைப் போன்ற ஒரு குழந்தைக்குப் போரில் என்ன வேலை இருக்கிறது?" {என்றான் கர்ணன்}.(101)
கர்ணனின் கடுஞ்சொற்களைக் கேட்டு உரக்கச் சிரித்த பீமசேனன், அனைவரும் கேட்டுக் கொண்டிருக்கும்போதே இவ்வார்த்தைகளை அவனிடம் {கர்ணனிடம்} சொன்னான்.(102) "ஓ! பொல்லாதவனே {கர்ணா}, என்னால் நீ மீண்டும் மீண்டும் வெல்லப்பட்டாய். இத்தகு வீணான தற்புகழ்ச்சியில் உன்னால் எவ்வாறு ஈடுபட முடிகிறது? பழங்காலத்தவர்கள் இவ்வுலகில் பெரும் இந்திரனின் வெற்றியையும் தோல்வியையும் கூடக் கண்டிருக்கின்றனர்.(103) ஓ! இழி பிறப்பு கொண்டவனே, வெறுங்கையால் தடகள {உடல்திறன்} மோதலில் {மல்யுத்தத்தில்} என்னுடன் ஈடுபடுவாயாக. பெரும் உடற்கட்டைக் கொண்ட வலிமைமிக்கக் கீசகனைக் கொன்றவாறே, மன்னர்கள் அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கும்போது நான் உன்னையும் கொல்வேன்" {என்றான் பீமன்}. (104)
பீமனின் நோக்கத்தைப் புரிந்து கொண்டவனும், நுண்ணறிவு கொண்ட மனிதர்களில் முதன்மையானவனுமான கர்ணன், வில்லாளிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அம்மோதலில் இருந்து விலகினான்.(105) உண்மையில், பீமனைத் தேரற்றவனாகச் செய்த கர்ணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, விருஷ்ணிகளில் சிங்கம் (கிருஷ்ணன்) மற்றும் உயர் ஆன்ம பார்த்தன் {அர்ஜுனன்} ஆகியோர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இத்தகு தற்புகழ்ச்சி மொழியில் அவனை {பீமனை} நிந்தித்தான்.(106)
அப்போது அந்தக் குரங்குக் கொடியோன் (அர்ஜுனன்), கேசவனால் {கிருஷ்ணனால்} தூண்டப்பட்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கல்லில் கூராக்கப்பட்ட கணைகள் பலவற்றைச் சூதனின் மகன் {கர்ணன்} மீது ஏவினான். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், பார்த்தனின் {அர்ஜுனனின்} கரங்களால் ஏவப்பட்டவையும், காண்டீவத்தில் இருந்து வெளிப்பட்டவையுமான அக்கணைகள், கிரௌஞ்ச மலைகளுக்குள் செல்லும் நாரைகளைப் போலக் கர்ணனின் உடலுக்குள் நுழைந்தன. காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்டவையும், பல பாம்புகளைப் போலக் கர்ணனின் உடலுக்குள் நுழைந்தவையுமான அக்கணைகளுடன்கூடிய அந்தச் சூதனின் மகனை {கர்ணனைப்} பீமசேனனின் அருகில் இருந்து தனஞ்சயன் {அர்ஜுனன்} விரட்டினான்.(107-109) பீமனால் வில் வெட்டப்பட்டவனும், தனஞ்சயனின் {அர்ஜுனனின்} கணைகளால் பீடிக்கப்பட்டவனுமான கர்ணன், பீமனிடமிருந்து தன் பெரும் தேரில் தப்பி ஓடினான்.(110) பீமசேனனும், ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, சாத்யகியின் தேரில் ஏறிக் கொண்டு, தன் தம்பியும், பாண்டுவின் மகனுமான சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} ஆற்றலை நினைத்து அந்தப் போரில் முன்னேறிச் சென்றான்.(111)
அப்போது கோபத்தால் கண்கள் சிவந்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, கர்ணனைக் குறி பார்த்து, மரணத்தைத்தூண்டும் காலனைப் போன்ற ஒரு கணையை வேகமாக ஏவினான். காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணை, பெரும்பாம்பைத் தேடி ஆகாயத்தில் செல்லும் கருடனைப் போலக் கர்ணனை நோக்கி வேகமாகச் சென்றது. எனினும் வலிமைமிக்கத் தேர்வீரனான துரோண மகன் {அஸ்வத்தாமன்}, தனஞ்சயன் {அர்ஜுனன்} மீது கொண்ட அச்சத்தில் இருந்து கர்ணனைக் காக்க விரும்பி அதை நடுவானிலேயே வெட்டினான். அப்போது கோபத்தால் தூண்டப்பட்ட அர்ஜுனன், அறுபத்து நான்கு {64} கணைகளால் துரோண மகனை {அஸ்வத்தாமனைத்} துளைத்து, அவனிடம், "ஓ! அஸ்வத்தாமரே, ஒருக்கணம் நிற்பீராக. தப்பி ஓடாதீர்" என்றான்.(112-115) எனினும், அந்தத் துரோண மகன் {அஸ்வத்தாமன்}, தனஞ்சயனின் {அர்ஜுனனின்} கணைகளால் பீடிக்கப்பட்டு, மதங்கொண்ட யானைகளும், தேர்க்கூட்டங்களும் நிறைந்த கௌரவப் படைப்பிரிவுக்குள் வேகமாக நுழைந்தான்.
அப்போது அந்த வலிமைமிக்கக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, காண்டீவத்தின் நாணொலியால், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கைப்பிடிகளைக் கொண்ட மற்ற விற்களின் நாணொலிகளை மூழ்கடித்தான். பிறகு வலிமைமிக்கத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, வெகு தொலைவுக்குப் பின்வாங்கிச் சென்றிராத துரோண மகனை {அஸ்வத்தாமனைப்} பின்னாலே தொடர்ந்து சென்று, வழியெங்கும் தன் கணைகளால் அவனை அச்சுறுத்தினான். கங்கங்கள் மற்றும் மயில்களின் இறகுகளாலான சிறகுகளைக் கொண்ட தன் கணைகளால் மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளின் உடல்களைத் துளைத்த அர்ஜுனன், அந்தப் படையையே கலங்கடிக்கத் தொடங்கினான். உண்மையில், ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, இந்திரனின் மகனான பார்த்தன் {அர்ஜுனன்}, குதிரைகள், யானைகள் மற்றும் மனிதர்களால் நிறைந்த அந்தப் படையை அழிக்கத் தொடங்கினான்" {என்றான் சஞ்சயன்}.(116-120)
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சஞ்சயா, சுடர்மிக்க என்புகழ் நாளுக்கு நாள் மங்குகிறது. என் போர்வீரர்களில் மிகப் பலர் வீழ்ந்துவிட்டனர். இவையாவும் காலத்தால் கொண்டுவரப்பட்ட எதிர்வினைகளால் ஏற்படுகின்றன என நான் நினைக்கிறேன்.(1) துரோணராலும், கர்ணனாலும் பாதுகாக்கப்படுவதும், அதன் காரணமாகத் தேவர்களாலும் ஊடுருவப்பட முடியாததுமான என் படைக்குள் சினத்தால் தூண்டப்பட்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} நுழைந்துவிட்டான்.(2) கிருஷ்ணன் மற்றும் பீமன் என்ற சுடர்மிக்க இரு சக்திகளுடனும், சிநிக்களின் காளையுடனும் {சாத்யகியுடனும்} இணைந்ததால், அவனது {அர்ஜுனனின்} ஆற்றல் பெருகியிருக்கிறது.(3) தனஞ்சயனின் {அர்ஜுனனின்} நுழைவைக் கேட்டதில் இருந்து, உலர்ந்த புற்குவியலை எரிக்கும் நெருப்பைப் போலத் துயரம் என் இதயத்தை எரிக்கிறது.
இந்தப் பூமியின் மன்னர்கள் அனைவரும், அவர்களோடு கூடிய சிந்துக்களின் ஆட்சியாளனும் {ஜெயத்ரதனும்} பொல்லாத விதியால் {தீயூழால்} பாதிக்கப்படுவதை நான் காண்கிறேன்.(4) கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுக்கு (அர்ஜுனனுக்குத்) தீங்கிழைத்துவிட்டு, அந்தச் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} அர்ஜுனனின் பார்வையில் படும்போது, தன் உயிரை {அவனால்} எவ்வாறு காத்துக் கொள்ள முடியும்?(5) இந்தச் சூழ்நிலையைப் பார்க்கையில், ஓ! சஞ்சயா, சிந்துக்களின் ஆட்சியாளன் ஏற்கனவே இறந்துவிட்டதாகவே நான் ஊகிக்கிறேன். எனினும், அந்தப் போர் எவ்வாறு நடந்தது என்பதை எனக்குச் சொல்வாயாக. விவரிப்பதில் நீ திறன்கொண்டவனாக இருக்கிறாய், ஓ! சஞ்சயா, தாமரைகள் நிறைந்த தடாகத்துக்குள் பாயும் ஒரு யானையைப் போலத் திடமான தீர்மானத்துடன் தனஞ்சயனுக்காகப் {அர்ஜுனனுக்காக} போராட, அந்தப் பரந்த படைக்குள் மீண்டும் மீண்டும் அதனைக் கலங்கடித்தபடி நுழைந்தவனும், விருஷ்ணி வீரனுமான சாத்யகி எவ்வாறு போரிட்டான் என்பதை எனக்கு உண்மையாகச் சொல்வாயாக" என்றான் {திருதராஷ்டிரன்}.(7,8)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மனிதர்களில் முதன்மையான அந்தப் பீமன், பல வீரர்களுக்கு மத்தியில் கர்ணனின் கணைகளால் பீடிக்கப்பட்டுச் சென்று கொண்டிருப்பதைக் கண்ட அந்தச் சிநிக்களில் முதன்மையான போர்வீரன் {சாத்யகி}, தன் தேரில் அவனைப் {பீமனைப்} பின் தொடர்ந்து சென்றான்.(9) கோடையின் முடிவில் {தோன்றும்} கார்முகில்களைப் போலக் கர்ஜித்துக் கொண்டும், கூதிர்காலத்துக் கதிரவனைப் போலக் கதிரொளி வீசிக் கொண்டும் சென்ற அவன் {சாத்யகி}, தன் உறுதிமிக்க வில்லால் உமது மகனின் {துரியோதனனின்} படையைத் கொல்லத் தொடங்கி, அதை {அந்தப் படையை} மீண்டும் மீண்டும் நடுங்கச் செய்தான்.(10) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} அந்த மதுகுலத்தின் முதன்மையானவன் {சாத்யகி}, வெள்ளி நிறக் குதிரைகளால் இழுக்கப்பட்ட தேரில், முழங்கிக் கொண்டே களத்தில் இப்படிச் சென்று கொண்டிருந்தபோது, உமது போர்வீரர்களில் எவராலும் அவனது {சாத்யகியின்} முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.(11)
அப்போது மன்னர்களில் முதன்மையானவனும், போரில் எப்போதும் பின்வாங்கதவனும், வில் தரித்துத் தங்கக் கவசம் பூண்டவனுமான அலம்புசன் [1], சினத்தால் தூண்டப்பட்டு, மதுகுலத்தின் முதன்மையான போர்வீரனான அந்தச் சாத்யகியின் முன்னேற்றத்தை விரைந்து சென்று தடுத்தான்.(12) பிறகு அவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலானது, ஓ! பாரதே {திருதராஷ்டிரரே}, இது வரை எப்போதும் நடக்காததைப் போல இருந்தது. போரிடுவதை நிறுத்திய எதிரிகளும், உமது வீரர்கள் அனைவரும், போரின் ரத்தினங்களான அவ்விருவரின் மோதலைக் காணும் பார்வையாளர்கள் ஆனார்கள்.(13)
[1] துரோண பர்வம் பகுதி 108ல் கடோத்கசனால் கொல்லப்பட்ட ராட்சசன் அலம்புசன் வேறு, இவன் வேறு, இவன் கௌரவர் தரப்பில் போரிட்ட வேறொரு மன்னனாவான். இந்த இருவரையும் தவிரத் துரோண பர்வம் பகுதி 164ல் ராட்சச இளவரசனான மற்றொரு அலம்புசனும் வருகிறான். இந்த மூவரையும் தவிரத் துரோண பர்வம் பகுதி 174ல் ராட்சசன் ஜடாசுரனின் மகனான அலம்புசன் என்று மற்றொருவனும் வருகிறான். எனவே மகாபாரதத்தில் குறைந்தது நான்கு அலம்புசர்களாவது குறிப்பிடப்படுகின்றனர்.
அப்போது மன்னர்களில் முதன்மையானவனான அந்த அலம்புசன், பத்து கணைகளால் மிகப் பலமாகச் சாத்யகியைத் துளைத்தான். எனினும், அந்தச் சிநி குலத்துக் காளை {சாத்யகி}, அந்தக் கணைகள் யாவும் தன்னை அடையும் முன்பே அவற்றைத் தன் கணைகளால் வெட்டினான்.(14) மீண்டும் அலம்புசன், அழகிய சிறகுகளைக் கொண்டவையும், நெருப்பு போலச் சுடர்விடுபவையும், காதுவரை இழுக்கப்பட்டுத் தன் வில்லில் இருந்து ஏவப்பட்டவையுமான மூன்று கூரிய கணைகளால் சாத்யகியைத் தாக்கினான். இவை சாத்யகியின் கவசத்தைத் துளைத்து, அவனது உடலுக்குள் ஊடுருவின.(15) நெருப்பு அல்லது காற்றின் சக்தியுடன் கூடிய அந்தச் சுடர்மிக்கக் கூரிய கணைகளால் சாத்யகியைத் துளைத்த பிறகு, அந்த அலம்புசன், வெள்ளியைப் போல வெண்மையாக இருந்த சாத்யகியின் குதிரைகளை நான்கு கணைகளால் மிகப்பலமாகத் தாக்கினான்.
அவனால் {அலம்புசனால்} இப்படித் தாக்கப்பட்டவனும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவனும், சக்கரதாரியை (கேசவனை {கிருஷ்ணனைப்}) போன்றவனுமான அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, பெரும் வேகம் கொண்ட நான்கு கணைகளால் அலம்புசனின் நான்கு குதிரைகளைக் கொன்றான்.(17) அலம்புசனது தேரோட்டியின் தலையை வெட்டிய பிறகு, அவன் {சாத்யகி}, யுக நெருப்பைப் போன்ற கடுமையான ஒரு பல்லத்தால், முழு நிலவைப் போல அழகானதும், சிறந்த காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான அலம்புசனின் தலையைப் அவனின் உடலில் இருந்து வெட்டினான்.(18) பல மன்னர்களின் வழித்தோன்றலான {ராஜவம்சத்தில் பிறந்தவனான} அவனை {அலம்புசனைக்} கொன்ற பிறகு, பகைவரின் படைகளைக் கலங்கடிக்கவல்ல வீரனான அந்த யதுக்களின் காளை {சாத்யகி}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எதிரியின் துருப்புகளைத் தடுத்தபடியே அர்ஜுனனை நோக்கிச் சென்றான்.(19)
உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்படி அந்த விருஷ்ணி வீரன் {சாத்யகி}, அர்ஜுனனை அடுத்து எதிரியின் மத்தியில் சென்ற போது, சேர்ந்திருக்கும் மேகத் திரள்களைச் சிதறடிக்கும் சூறாவளியைப் போலத் தன் கணைகளால் குரு படையை மீண்டும் மீண்டும் அழித்தபடியே காணப்பட்டான்.(20) அந்த மனிதர்களில் காளை {சாத்யகி} எங்கெல்லாம் செல்ல விரும்பினானோ அங்கெல்லாம், சிந்து இனத்தைச் சேர்ந்தவையும், நன்கு பயிற்சி அளிக்கப்பட்டவையும், வசப்படுத்தப்பட்டவையும், பசுவின் பால், அல்லது குருக்கத்தி மலர், அல்லது நிலவு, அல்லது பனியைப் போன்ற வெண்மையானவையும், தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான குதிரைகளால் அவன் {சாத்யகி} சுமந்து செல்லப்பட்டான்.(21)
அப்போது, ஓ! ஆஜமீட குலத்தைச் சேர்ந்தவரே {திருதராஷ்டிரரே}, உமது படையின் பிற வீரர்களோடு ஒன்று சேர்ந்த உமது மகன்கள், போர்வீரர்களில் முதன்மையான அந்தத் துச்சாசனனைத் தங்கள் தலைமையாகக் கொண்டு, சாத்யகியை எதிர்த்து வேகமாக விரைந்தனர்.(22) படைப்பிரிவுகளின் தலைவர்களான அவர்கள், அந்தப் போரில் சிநியின் பேரனை {சாத்யகியை} அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டு, அவனைத் தாக்கத் தொடங்கினர். சாத்வதர்களில் முதன்மையான அந்த வீரச் சாத்யகியும், கணை மாரிகளால் அவர்கள் யாவரையும் தடுத்தான்.(23) தன் கடுங்கணைகளால் அவர்கள் அனைவரையும் தடுத்தவனும், எதிரிகளைக் கொல்பவனுமான அந்தச் சிநியின் பேரன், ஓ! ஆஜமீடரே {திருதராஷ்டிரரே}, தன் வில்லைப் பலமாக உயர்த்தி, துச்சாசனனின் குதிரைகளைக் கொன்றான். அப்போது அந்தப் போரில் அர்ஜுனனும், கிருஷ்ணனும், அந்த மனிதர்களில் முதன்மையானவனை {சாத்யகியைக்} கண்டு மகிழ்ச்சியால் நிறைந்தனர்" {என்றான் சஞ்சயன்}.(24)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அப்போது, தங்கக் கொடிமரங்களைக் கொண்டவர்களான திரிகர்த்த நாட்டின் பெரும் வில்லாளிகள், சாதனைக்குத் தகுந்த அனைத்து பெரும் செயல்களையும் சாதித்த போர்வீரனும், தனஞ்சயனின் {அர்ஜுனனின்} வெற்றியை விரும்பி, கடல் போன்று எல்லையற்ற அந்தப் படைக்குள் ஊடுருவி, துச்சாசனனின் தேரை எதிர்த்து விரைந்து வருபவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான சாத்யகியை அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர் .(1, 2)
தேர்களின் பெருங்கூட்டத்தால் அனைத்துப் பக்கங்களிலும் அவனது {சாத்யகியினது} வழியைத் தடுத்த அந்தப் பெரும் வில்லாளிகள், சினத்தால் தூண்டப்பட்டுக் கணைமாரியால் அவனை {சாத்யகியை} மறைத்தனர்.(3)
கரைகளற்ற கடலுக்கு ஒப்பானதும், உள்ளங்கையொலிகளால் நிறைக்கப்பட்டதும், வாள்கள், ஈட்டிகள் மற்றும் கதாயுதங்கள் ஆகியவை நிரம்பியதுமான அந்தப் பாரதப் படைக்கு மத்தியில் ஊடுருவிச் சென்றவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான சாத்யகி, அந்தப் போரில் பிரகாசமாக ஒளிர்ந்தவர்களும், தன் எதிரிகளுமான அந்த ஐம்பது {50} (திரிகர்த்த) இளவரசர்களையும் தனியாகவே வென்றான்.(4,5)
போரில், அந்நிகழ்வின் போது, சிநியின் பேரனுடைய {சத்யகியின்} நடத்தை மிக அற்புதமாக இருந்ததை நாங்கள் கண்டோம். மேற்கில் அவனைக் {சாத்யகியைக்} கண்டவுடனேயே கிழக்கிலும் அவனைக் கண்டோம் என்ற அளவுக்கு அவனது (நகர்வுகளின்) நளினம் மிகச் சிறப்பாக இருந்தது.(6)
நூறு போர்வீர்களைத் தனக்குள் கொண்டவனைப் போல, வடக்கிலும், தெற்கிலும், கிழக்கிலும் மேற்கிலும், இன்னும் பிற துணைத் திசைகளிலும் ஆடிக்கொண்டே திரிபவனாக அந்த வீரன் {சாத்யகி} தெரிந்தான்.(7)
சிங்கத்தின் விளையாட்டு நடையுடன் கூடிய சாத்யகியைக் கண்ட திரிகர்த்த வீரர்கள், அவனது ஆற்றலைத் தாங்கிக் கொள்ள முடியாமல், தங்கள் படையை (தங்கள் நாட்டினரின் படைப்பிரிவுகளை) நோக்கி தப்பி ஓடினர்.(8)
அப்போது சூரசேனர்களில் துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள் யானையை அங்குசத்தால் தாக்கும் பாகனைப் போலத் தங்கள் கணைமாரிகளால் சாத்யகியைத் தாக்கி அவனைத் தடுக்க முயன்றனர்.(9)
நினைத்துப் பார்க்க முடியாத அளவு ஆற்றலைக் கொண்ட வீரனான அந்த உயர் ஆன்ம சாத்யகி, அவர்களுடன் குறுகிய காலம் போராடிய பிறகு, கலிங்கர்களுடன் போரிடத் தொடங்கினான்.(10)
பிறகு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட சாத்யகி, கடக்கப்பட முடியாத அந்தக் கலிங்கப் படைப்பிரிவைக் கடந்து, பிருதையின் {குந்தியிப்} மகனான தனஞ்சயனின் {அர்ஜுனனின்} அருகே சென்றான்.(11) நீரில் நீந்திக் களைத்தவன் நிலத்தை அடைவதைப் போல யுயுதானன் {சாத்யகி}, மனிதர்களில் புலியான தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கண்டு ஆறுதல் அடைந்தான்.(12)
அவன் {சாத்யகி} வருவதைக் கண்ட கேசவன் {கிருஷ்ணன்}, பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்}, "ஓ! பார்த்தா {அர்ஜுனா}, அதோ சிநியின் பேரன் {சாத்யகி} உன்னைத் தேடி வருகிறான்.(13)
ஓ! கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனே {அர்ஜுனா}, அவன் {சாத்யகி} உன் சீடனும், நண்பனுமாவான். அந்த மனிதர்களில் காளை {சாத்யகி}, போர் வீரர்கள் அனைவரையும் துரும்பாகக் கருதி அவர்களை வென்றிருக்கிறான்.(14)
உன் உயிரைப் போல உன் அன்புக்குரியவனான அந்தச் சாத்யகி, ஓ! கிரீடி {அர்ஜுனா}, கௌரவப் போர்வீரர்களுக்குப் பயங்கரக் காயங்களை ஏற்படுத்தியபடியே உன்னிடம் வருகிறான்.(15)
இந்தச் சாத்யகி, ஓ! பல்குனா {அர்ஜுனா}, தன் கணைகளால் துரோணரையும், போஜ குலத்தின் கிருதவர்மனையும் நசுக்கிய பிறகு உன்னிடம் வருகிறான்.(16)
ஓ! பல்குனா {அர்ஜுனா}, ஆயுதங்களில் திறன் கொண்டவனும், துணிச்சல்மிக்கவனுமான இந்தச் சாத்யகி, யுதிஷ்டிரரின் நன்மையைக் கருதி, போர்வீரர்களில் முதன்மையானோர் பலரைக் கொன்றுவிட்டு உன்னிடம் வருகிறான்.(17)
ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, வலிமைமிக்கச் சாத்யகி, (கௌரவத்) துருப்புகளுக்கு மத்தியில் அடைவதற்கு மிக அரிய சாதனைகளைச் செய்துவிட்டு, உன்னைக் காணவிரும்பி இதோ உன்னிடம் வருகிறான்.(18)
ஓ! பார்த்தா {அர்ஜுனா}, போரில் தனித்தேரில் {தனியாக} வந்த சாத்யகி, ஆசானின் {துரோணரின்} தலைமையிலான வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலருடன் போரிட்டுவிட்டு உன்னிடம் வருகிறான்.(19)
ஓ! பார்த்தா, தர்மனின் மகனால் {யுதிஷ்டிரரால்} அனுப்பப்பட்ட இந்தச் சாத்யகி, தன் சொந்த கரங்களின் வலிமையை நம்பி கௌரவப் படையைப் பிளந்து கொண்டு உன்னிடம் வருகிறான்.(20)
ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, எவனுக்கு ஒப்பாகக் கௌரவர்களில் எந்தப் போர்வீரனும் இல்லையோ, போரில் வெல்லப்பட முடியாதவனான அந்தச் சாத்யகி உன்னிடம் வருகிறான்.(21)
இந்தச் சாத்யகி, ஓ! பார்த்தா {அர்ஜுனா}, கணக்கற்ற போர்வீரர்களைக் கொன்றுவிட்டு, பசுக்கூட்டத்தின் மத்தியில் இருந்து வரும் சிங்கத்தைப் போல, கௌரவத் துருப்புகளுக்கு மத்தியில் இருந்து விடுபட்டு உன்னிடம் வருகிறான்(22).
இந்தச் சாத்யகி, ஓ! பார்த்தா{அர்ஜுனா}, ஆயிரக்கணக்கான மன்னர்களின் தாமரை மலர்களைப் போன்ற அழகான முகங்களைப் பூமியில் பரவச் செய்தபடி உன்னிடம் வருகிறான்.(23)
தம்பிகளுடன் கூடிய துரியோதனனைப் போரில் வென்ற சாத்யகி, ஜலசந்தனைக் கொன்றுவிட்டு விரைவாக வருகிறான்.(24) கௌரவர்களைத் துரும்பாகக் கருதிய சாத்யகி, குருதியைச் சேறாகக் கொண்ட இரத்த ஆற்றை உண்டாக்கிவிட்டு உன்னிடம் வருகிறான்" என்றான் {கிருஷ்ணன்}.(25)
மகிழ்ச்சியற்ற அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான். "ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, சாத்யகியின் வருகை எனக்குச் சிறிதும் ஏற்புடையதாக இல்லை.(26)
ஓ! கேசவா {கிருஷ்ணா}, நீதிமானான மன்னர் யுதிஷ்டிரர் எவ்வாறு இருக்கிறார் என்பதை நான் அறியவில்லை. இப்போது அவர் {யுதிஷ்டிரர்} சாத்வதனிடம் {சாத்யகியிடம்} இருந்து பிரிந்திருப்பதால், அவர் {யுதிஷ்டிரர்} உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்று நான் ஐயுறுகிறேன்.(27)
ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, இந்தச் சாத்யகி மன்னரை {யுதிஷ்டிரரைப்} பாதுகாத்திருக்க வேண்டும். ஓ! கிருஷ்ணா, அப்படியிருக்கையில் யுதிஷ்டிரரை விட்டு விட்டு என்னைத் தேடி இவன் ஏன் வருகிறான்?(28)
ஆகவே, மன்னர் {யுதிஷ்டிரர்} துரோணரிடம் கைவிடப்பட்டிருக்கிறார். சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} இன்னும் கொல்லப்படவில்லை. அதோ, பூரிஸ்ரவஸ் சாத்யகியை எதிர்த்துப் போரிடச் செல்கிறான்.(29)
ஜெயத்ரதன் நிமித்தமாக என்மீது கனமான சுமை உள்ளது. மன்னர் {யுதிஷ்டிரர்} எவ்வாறு இருக்கிறார் என்பதை நான் அறியவேண்டும், சாத்யகியையும் நான் பாதுகாக்க வேண்டும்.(30)
மேலும், ஜெயத்ரதனையும் நான் கொல்ல வேண்டும். சூரியனோ கீழே சாய்கிறான். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட சாத்யகியைப் பொறுத்தவரை, அவன் களைத்திருக்கிறான், அவனது ஆயுதங்களும் தீர்ந்துவிட்டன.(31)
ஓ! மாதவா {கிருஷ்ணா}, அவனது குதிரைகளும், அவற்றின் சாரதியும் கூடக் களைத்துப் போயிருக்கின்றனர். மறுபுறம், பூரிஸ்ரவசோ களைப்பற்றவனாக இருக்கிறான். ஓ! கேசவா {கிருஷ்ணா}, அவன் {பூரிஸ்ரவஸ்} தனக்குப் பின்னால் அவனை ஆதரிப்பவர்களையும் கொண்டிருக்கிறான்.(32)
இம்மோதலில் சாத்யகிக்கு வெற்றி அடைவானா? கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனும், சிநிக்களில் காளையும், பெரும் சக்தி கொண்டவனுமான அந்தச் சாத்யகி, பெருங்கடலையே கடந்த பிறகு, பசுவின் குளம்படியை [1] (தன் முன்} அடைந்து அடிபணிந்துவிடுவானா?(33)
[1] பசுவின் கால் குளம்படியால் ஏற்படும் சிறு தடம் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
குருக்களில் முதன்மையானவனும், ஆயுதங்களில் திறம் கொண்டவனுமான அந்தப் பூரிஸ்ரவசுடன் மோதி, சாத்யகி நற்பேறை அடைவானா? ஓ! கேசவா, நீதிமானான மன்னர் யுதிஷ்டிரர் செய்த பிழை என்றே இதை நான் கருதுகிறேன்.(34, 35)
அவர் {யுதிஷ்டிரர்}, ஆசானை {துரோணரைக்} குறித்த அச்சமனைத்தையும் கைவிட்டு (தன் பக்கத்தில் இருந்த) சாத்யகியை அனுப்பியிருக்கிறார். வானுலாவும் பருந்தொன்று இறைச்சித் துண்டை நோக்கி செல்வதைப் போலவே, நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரைப் பிடிக்கவே துரோணர் எப்போதும் முயல்வார். ஆபத்துகள் அனைத்தில் இருந்தும் மன்னர் {யுதிஷ்டிரர்} விடுபட்டிருப்பாரா?" {என்றான் அர்ஜுனன்}.(36)
….
தொடரும்..
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள்
No comments:
Post a Comment