Friday, December 1, 2023

Azhwar & Andal 1

பெரியாழ்வார் யசோதையாக கண்ணனை அனுபவித்தவர். அவர் வளர்ப்பு மகளான ஆண்டாள் அவனை மணாளனாக பாவித்தவள். இவர்கள் இருவருக்கும் இடையே நிகழ்ந்த சம்பாஷணை எவ்விதம் இருக்கும் என்று ஒரு கற்பனை. தந்தையும் மகளும் . நாளையிலிருந்து. பெரியாழ்வார் பாசுரங்களை கோதையின் மூலம் அனுபவிக்கலாம்.
தந்தையும் மகளும்-1

கோதைக்கும் நடந்த சம்பாஷணை உருவில் பெரியாழ்வாரின் பாசுரங்களை ரசிக்கலாம் வாருங்கள்.

கோதை தந்தையிடம் ஒருநாள் கேட்டாள்,
" தந்தையே நீங்கள் எதற்காக பகவானுக்குப் பல்லாண்டு பாடினீர்கள்?" என்று.
அதற்கு அவர் பதில் கூறினார், " எனக்கே தெரியவில்லை குழந்தாய் , அதுவும் அவன் திருவுள்ளமே" என்று.

"அன்று அவனை நேரில் கண்ட பின்பு அவன் அழகில் ஈடுபட்டு மெய்மறந்து யசோதை ஆகிவிட்டேன். அவனுக்கு கண் படப் போகிறதே என்று நினைத்து பல்லாண்டு பாடினேன் "என்றார்.
" இது எப்போது நிகழ்ந்தது ,?"

" பாண்டியன் சபையில் வாதம் புரிந்து வெற்றி கொண்டபின் அரசர் என்னை யானை மீது அமர்த்தி ஊர்வலம் நடத்தினார் . அதுவும் அவன் செயலே.
நான் அவன் கோவிலில் பூமாலை கைங்கர்யம் செய்வதைத் தவிர வேறொன்றும் அறியேன்.

எனது நண்பர் செல்வநம்பி என்னை வாதத்தில் கலந்து கொள்ள வேண்டியபோது இறைவன் என் கனவினில் வந்து "நீ செல், நாமே உன் வாக்கில் அமர்ந்து உன்னை வெற்றிபெறச் செய்வோம்" என்று சொல்ல அதே போல நடந்தது.

நான் என்ன சொன்னேன் என்று எனக்குத் தெரியாது. எல்லாம் அவன் செயல். 
அப்போது நகர் வலம் வந்த என்முன் நாராயணனே கூடல் அழகனாகத் தோன்றினான் . அப்போதுதான் அவன் அழகைப் பார்த்து கண் படப் போகிறதே என்று பயந்த என் வாக்கில் பல்லாண்டு பாசுரங்கள் தோன்றின. என்றார் .

"அவன் ஏன் அங்கு தோன்றினான் என்று எனக்குத் தெரியுமே" என்றாள் கோதை. பரமபக்தரான விஷ்ணுசித்தரின் பெண் அல்லவா?

" அவனுடைய அடியார்க்கு ஒரு பெருமை என்றால் அவன் அதைக்காண வந்ததில் என்ன வியப்பு?"

" ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் தந்தையே " வந்தவன் நாராயணனாக அல்லவா வந்தான் ? அவனுக்கு பல்லாண்டு பாடுகையில் 'மாயப் பொருபடை வாணனை ஆயிரம் தோளும் பொழி குருதி பாயச் சுழற்றிய ஆழி வல்லான் ,' என்று கண்ணனைப் பாடியதன் நோக்கம் என்ன?" என்றாள்.

அதற்கு அவர் பதில் என்ன என்று பிறகு பார்ப்போம்.
தந்தையும் மகளும் -2

No comments:

Post a Comment