Thursday, November 30, 2023

Trayambakam yajamahe meaning

யஜூர் வேதத்தில் ருத்ரம் சமகம் என்ற பகுதியில் ருத்ரத்தின் நடுவில் அமைந்துள்ளது நமசிவாய மந்திரம். 

அதற்குச் சற்றுப் பின்னால் சிவனின் பெருமையைக் கூறுகையில் 'ம்ருத்யுஞ் ஜய மந்திரம்' என்று போற்றப் படும் ஒரு சிறிய மந்திரம் வருகிறது. 

ரிக் வேதத்திலும் இந்த மந்திரம் இருக்கிறது . 

இதைவழங்கியவர் மார்க்கண்டேய மகரிஷி. 

'ம்ருத்யு' என்றால் மரணம் (இறப்பு)
அதை ஜயிக்கக்கூடிய மந்திரம் என்பதால்—-மரணத்தை வெல்லும் இம் மந்திரத்துக்கு ''மஹா மிருத்யுஞ் ஜய மந்திரம்'' என்று பெயர். 

இதில்தான் வெள்ளரிப் பழம் வருகிறது. 

ஓம்  த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்

மந்திரத்தின் பொருள்:- 

ஓம் முக்கண்ணுடையவரே! எல்லா வளமும், எல்லா நலமும் பெருகும்படிச் செய்பவரே! 

நாங்கள் உம்மை யாகத்தினால் பூசிக்கிறோம். வெள்ளரிப் பழம் போல, என்னை இறப்பின் பிடியில் இருந்து விடுவித்து, எனக்கு இறவாமையை அருளும்.

ஸுகந்திம் = இயற்கையான நறுமணம் உடையவரும்

புஷ்டிவர்த்தனம் = கருணையால் அடியார்களை ஊட்டி வளர்ப்பவரும் ஆகிய

த்ரயம்பகம் = முக்கண்ணனை

யஜாமஹே = பூஜித்து வழிபடுகிறோம்.

உர்வாருகம் இவ = வெள்ளரிப் பழம் காம்பிலிருந்து விடுபடுவது போல

ம்ருத்யோ: = சாவினுடைய

பந்தனாத் = பிடியிலிருந்து

முக்ஷீய = உமது அருளால் விடு படுவோமாக!

மா அம்ருதாத் = முக்தி வழியில் இருந்து விலகாமல் இருப்போமாக

அ.வெ.ர. கிருஷ்ணசாமி ரெட்டியார் அழகிய தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ள தமிழ் வடிவம் 

இயற்கை நறுமணம் உடைய தேவரே

ஈடில்லாக் கருணையால் அடியாரை வாழ்விக்கும்

வியத்தகு முக்கண் உடைய எம்பெரும

வினயமாய்ப் போற்றி அஞ்சலி செய்தோம்

வெள்ளரிப் பழம் காம்பினின்று விடுவதொப்ப

மேவிய உமதருளால் மரணத்திலிருந்து விடுபடவும்

தெள்ளிய சன்மார்க்க நெறியில் இருந்து யாம்

திசை மாறாதென்றும் வாழ்ந்திடுவோமாக

வேதம் படித்த சைவர்கள், விபூதி பூசும் போது இந்த மந்திரத்தைச் சொல்லிகொண்டே விபூதி இட்டுக் கொள்வார்கள். 

யாருக்காவது, ஆயுள் அதிகரிக்கவோ, மரண பயம் நீங்கவோ, நோய்கள் நீங்கவோ வேண்டுமானால் மிருத்யுஞ் ஜய ஹோமமும் நடத்துவது வழக்கம். 

இந்தச் சிறிய மந்திரத்தை அனைவரும் சொல்லலாம். 

 வெள்ளரிப் பழத்தை ஏன் இதில் சொன்னார்கள் 

மற்ற பழங்கள் பழுத்தவுடன் அது கீழே விழும். 

பழம் விழுந்தால் அது தரும் அதிர்ச்சியை நாம் அறிவோம். 

கீழே விழுந்தாலும் சரி ஒருவரின் தலையில் விழுந்தாலும் சரி, அதில் பக்க விளைவுகள் உண்டு. 

ஆனால் வெள்ளரிப்பழம் மட்டும் பழுத்தவுடன் பழம் இருந்த இடத்திலேயே இருக்கும். 

ஒரு அங்குலம் கூட நகராது, 

அதன் காம்பு மட்டும் தனது தொடர்பை அழகாகத் துண்டித்துக் கொள்ளும்.

 பழுத்த பழத்துக்கு அவ்வளவு மரியாதை. 

காம்பே ஒரு 'கும்பிடு போட்டு விட்டு' சற்றே விலகிவிடும்.

சிவபெருமான் காரணமின்றியே, அவர் மீது பக்தி இல்லாவிடினும், அருள் செய்து - 

இதற்கு வடமொழியில் 'அவ்யாஜ கருணா' அல்லது 'நிர்ஹேதுக க்ருபா' என்று பெயர்-, 

நறுமணத்தையும், ஊட்டத்தையும் அளிக்கிறார்.

 அவர் மீது நமது பக்தி கூடக் கூட, அவற்றை அதிகரிக்கச் செய்பவர் என்பதையே 'வர்தனம்' என்ற சொல் உணர்த்துகின்றது. 

நறுமணம் என்பது மனமகிழ்ச்சி, போன்ற உள்ளம் சார்ந்த வளங்களையும், 

'புஷ்டி' என்பது  உடலுடன் தொடர்புடைய நோயின்மை, சுகம் என்ற நலன்களையும் சுட்டுகின்றன. 

வடமொழியில் 'யஜனம்' என்றால் யாகம் செய்தல் என்று பொருள். 

காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் 1957-59 ஆம் ஆண்டுகளில் சென்னையில் நடத்திய உபந்யாசம் ஒன்றில் வெள்ளரிப் பழ விஷயத்தை சுருக்கமாகத் தொட்டுக் காட்டினார்

No comments:

Post a Comment