Monday, November 27, 2023

Remove I then God will reside in you - Story

*ஆண்டவன் தங்கும் இடம் எது?*

கிருஷ்ணன் அஸ்தினாபுரிக்கு வருகிறான்...
 வீதியெங்கும் அலங்கார  வளைவுகள்...
 பூரணகும்பம் கொண்டு வரவேற்பு...
 
 பீஷ்மர், துரோணர் வரவேற்க கண்ணன் தேரை விட்டு இறங்கி வருகிறான்...
 
 கண்ணுக்கு எட்டிய வரையில் பெரிய பெரிய மாளிகைகள்!!
 
 கண்ணன் கேட்கிறான்: "பச்சை வர்ணம் பூசப்பட்டு பிரளய காலத்தில் ஆலிலை மிதந்தது போல நிற்கிறதே..! அது யாருடைய வீடு?''
 
 "அச்சுதா அது என்னுடைய வீடு" துரோணர் சொல்கிறார்.
 
 கண்ணன்: "சிகப்புக் காவிநிறம் பூசப்பட்டு செம்மாந்த கோலத்தோடு கம்பீரமாய் நிற்கிறதே! அது யாருடைய வீடு?"
 
 கிருபர்:  ''மாதவா! அது என்னுடைய வீடு.''
 
 கண்ணன்: "மஞ்சள் வர்ணம் பூசப்பட்டு மாமேரு குன்று போல் நிற்பது யாருடைய வீடு?"
 
 பீஷ்மர்: "வாசுதேவா அது என்னுடைய வீடு"
 
 கண்ணன்: "நீல வர்ணம் பூசப்பட்டு தன்னேரில்லாக் கருங்கடல் போல பரிமளிப்பது யாருடைய வீடு?"
 
 அஸ்வத்தாமன்:  "ரிஷிகேசா.. அது என்னுடைய வீடு''
 
 கண்ணன்: "சிறிதாக வெள்ளை நிறத்தோடு சத்வ குணமாகப் பாற்கடலைப் போலவும், கயிலையைப் போலவும் பரம சாத்வீகம் பொருந்தி நிற்கிறதே...! அது யாருடைய வீடு?"
 
 *விதுரர்: "கண்ணா.. அது உன்னுடைய வீடு!"*
 
 கண்ணன்:  "என்னுடைய வீடா? இந்த அஸ்தினாபுரத்தில் எனக்கென்று அரையடி மண்கூட இல்லை என்று எண்ணியிருந்தேன்... இத்தனை பெரிய வீடு எனக்கு இருக்கிறபோது நான் பிறர் வீட்டில் தங்குவதா?''
 
 பீஷ்மர், கிருபர் யாவரும் அவரவர் வீட்டுக்கு கண்ணனை அழைத்தனர்.
 
 ''நான் என் வீட்டிற்கு போகிறேன்.'' - என்று சொல்லிவிட்டு விதுரர் வீட்டிற்குள் நுழைந்தான் கண்ணன்.
 
 எல்லாமே இறைவனுடையது என்கிற அர்ப்பண உணர்வுடையவரையே கடவுள் விரும்புகிறார்...
 
 *'யான்' "என்னுடையது என்னும் செருக்கை அறுப்பவனின் உள்ளத்தில்தான் ஆண்டவன் இருப்பான்!"*

படித்ததில் பிடித்தது 
பகிரவும்

No comments:

Post a Comment