Thursday, July 20, 2023

Appar , thirunavukkarasar

*அப்பர் என்னும் அற்புத மகான்*

அப்பரடிகள், பழமொழிகளைக் கொண்டு அறநெறிகளை விளக்குபவர்.

👇👇👇

இறைவன் கருணையை நினைந்து, நெஞ்சு நெகிழப் பாடுபவர். உயிர் அருவப்பொருள்; அதற்கு ஒர் உருவத்தைத் தந்து, உலகிடை அனுப்பித் துய்ப்பன துய்த்து, மகிழ்வன மகிழ்ந்து - குறைநீங்கி நிறைநலம் பெறச் செய்யும் கருணையே கருணை. இதனை,

என்பிருத்தி நரம்புதோல் புகப்பெய் திட்டுஎன்னையோ குருவ மாக்கி

என்று பாடுகிறார். இந்த உருவமாக்கிய பணிக்கு ஈடாக எதனைக் கூறமுடியும்? இந்த உருவத்தினை முதலாகக் கொண்டுதானே மனிதன் வளர்கிறான்! வரலாறு படைக்கிறான்? உலகில் வேறு எந்த அறிவியல் படைப்பையும் விட இந்த மானுட யாக்கையின் படைப்பு அதி நுட்பமானது; அறிவியல் தன்மையுடையது; இந்த உடல்-உயிர்க்கூட்டின் பயன் உயிரை இன்புறுத்தலேயாம். இறைவன் திருவுள்ளம் இன்புறுத்தலேயாம். ஆயினும் உயிர் பெற்றுள்ள சிற்றறிவு அடங்கவா செய்கிறது? அது தன்னிச்சையிலேயே ஆட்டம் போடுகிறது; அறிவுப் பொருளைத் திருத்திச் சீராக்குதல் எளிய காரியமன்று. அறிவற்ற சடப்பொருள் எளிதில் பக்குவப்படும். அறிவு நாடகமாடும்; நடிக்கும்; உணர்ந்தது போல் காட்டிப் பின் தன்னெறியே மேற்கொள்ளும்; இன்பத்தைத் துன்பமாகக் கருதும்; துன்பத்தை இன்பமாகக் கருதும்; அடக்கினாலும் சில நாள் அடங்கும்; வாய்ப்பு வந்துழி மிஞ்சும். இத்தனை இக்கட்டான நிலையில் உயிருக்கு அறிவு கொளுத்தியே - அதனை அறியச் செய்தே பக்குவப் படுத்தவும் வேண்டியிருக்கிறது; அதை அடிமைப்படுத்தவும் முடியாது. இன்பத்திற்கு எதிர் துன்பமே. துன்பத்திற்குக் காரணம் அறியாமையும் அறியாமையினால் செய்த செயல்களின் விளைவுகளுமாம். நோய் நீங்குகிறவரை உணவு சுவைக்காததைப் போல, வினைநீக்கம் பெறும்வரையில் நிறை நல் இன்பத்தையும் துய்க்கமுடியாது. ஆதலால்,

முன்பிருந்த வினை தீர்த்திட்டு

என்கிறார்.

தீமை நீங்கினால் போதாது; நன்மை விளங்கிட வேண்டும். இதனை வள்ளுவமும்,

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇநன்றின்பால் உய்ப்பது அறிவு

என்று கூறியது. அருணகிரியாரும்,

பொய்யை நிந்திக்கிலேன் உண்மை சாதிக்கிலேன்

என்று கூறினார்.

தேவைக்குக் காரணமாகிய அறியாமை நீங்கியவுடன் அறிவு ஆங்கு விளங்க வேண்டும். இறைவன் உயிரிடத்து விளங்கிய முன்னை வினை வாசனை நீங்கிய பிறகு அந்த உயிரின் உள்ளத்தையும் கோயிலாகக் கொண்டு குடியிருந்தருளுகின்றான். உயிர் அறியாமையில் கிடக்கும்பொழுது உடலினுள் இருந்து உயிரும், மாற்றாரும் அறியமுடியா வண்ணம் நின்று அருள் செய்யும் இறைவன் வினை நீக்கத்திற்குப் பிறகு, பலரும் காணும் திருக்கோயிலென்ன உயிரிடத்து முழு விளக்கமுற வீற்றிருக்கின்றான். இறைவன் உள்ளத்து இடங்கொண்டமையின் காரணமாக அன்பாகிய ஊற்றுக்கண் திறக்கிறது, உயிரிடத்து ஆற்றல் மிக்க அன்பைத் தூண்டுகிறது. இந்த நிலையில் அன்பும் சிவமும் ஒன்றென்ற குரல் எழும்புகிறது, அன்பினாலாவது இன்பமே. அன்பினாலல்லது வன்பினால் ஆவது எப்பொழுதும் இன்பமன்று. அஃது ஒரு சேறு. அன்பினால் இன்புறுத்துகிறார். அன்பு பெருகி இன்பத்தில் திளைக்கும் பொழுது மேலேது? கீழேது? உயிர், இன்புறுத்தும் பொருளிடத்தில் அடிமையாகிறது. இது அறிவியல் அடிமை; உண்மையின் பாற்பட்ட அடிமை. இத்தகைய இறைவன் திருவருளை நினைந்து வாழ முடியாமல் பிற தெய்வங்களை வணங்குவதும், பிறநெறிகளைச் சார்வதும் வேடிக்கையாக இருக்கின்றன. அப்பரடிகளே தம் வரலாற்றினை நினைந்து வியந்து பாடுகிறார். முயல், நிலத்தில் திரிவது, அதனால் அதைப் பிடிப்பது சுலபம். எளிதில் பிடிக்கக்கூடிய முயலைப்பிடிக்காமல் விட்டு விட்டு, எளிதில் பிடித்தற்கியலாத காக்கையைப் பிடிக்க, காக்கையின் பின்னே ஒடித் திரியும் செயலை நினைவுபடுத்துகிறார். காக்கையோ வானில் பறக்கிறது. மனிதனுக்கோ பறக்கும் சக்தியில்லை. எங்ஙனம் பிடிக்க முடியும்?

கையிலிருக்கும் முயலை விட்டுவிட்டுக் காக்கையைப் பிடிக்கப் போவதாகவும் பொருள் கொள்ளலாம். முயல் சிவநெறி. நாம் பிறந்த நெறி, எளிதில் அமைந்த இனிய நெறி; இன்றமிழ் நெறி; ஆரத்துய்த்து மகிழத் துணை செய்யும் தூய நெறி; எளிய நெறி; இந்நெறியில் பிறந்திருந்தும் இந்நெறி நின்று வாழாது பிற நெறிகளைத் தேடியலைவதும், தாயிற் சிறந்த தயாவுடைய நம் சிவன் தாளினைத் தொழாது வேறு தெய்வங்களைத் தேடியலைவதும் காக்கையின் பின் ஒடுவதை யொக்கும். இந்த இனிய பாடலைப் பாடிப் பயிலுக.

என்பிருத்தி நரம்புதோல் புகப்பெய்திட்
டென்னையோ ருருவ மாக்கி
இன்பிருத்தி முன்பிருந்த வினைதீர்த்திட்
டென்னுள்ளம் கோயி லாக்கி
அன்பிருத்தி யடியேனைக் கூழாட்கொண்
டருள் செய்த வாருரர்தம்
முன்பிருக்கும் விதியின்றி முயல்விட்டுக்
காக்கைப்பின் போன வாறே.


சேக்கிழார் கூற்றின்படி பார்த்தால், தேய்ந்த உடலும் தேயாத உள்ளமுமாய் இறைவனைத் தேடிய முதல் மனிதர் அப்பர்தான்.  சிவபெருமான், இந்தக் கிழவரை மட்டுமே ஊனுந் தோலும் உருக, ஊர் ஊராய் அலையவைத்துக் காட்சிதந்தார். சிவபெருமானால் அதிகம் அலைக்கழிக்கப்பட்டவர்களுள் அப்பர் முதல்வர். இறைவனிடம்  பொருள் கேட்காத ஒரே புனிதர் அப்பர்தான்.  புல்லையும் பூண்டையும் போலவே தங்கத்தையும் புழுதியாய் மதித்துத் துரட்டியால் தள்ளிய தூயவர்.

தேவார மூவரில் ஒருவர் ஆணையிட்டு வாழ்ந்தார் (சம்பந்தர்). ஒருவர் அடிமையாகிப் போனார் (சுந்தரர்). அப்பர் ஒருவரே ஆணையிடவும் செய்தார்; அடிமையாகவும் இருந்தார். அதற்குக் காரணம் இறைவனிடம் அவர் கொண்ட அன்பின் நெகிழ்வு. சம்பந்தருக்கு சிவபெருமானிடம் தந்தையென்ற உரிமை இருந்தது. சுந்தரருக்கு தலைவரென்ற கடமை இருந்தது. அப்பருக்கோ இதுபோன்ற தளைகளில்லை. அதனால்தான் அவரால் தேவைப்பட்டபோது ஆணையிடமுடிந்தது. தேடிச் சரணடைந்து அடிமையாகவும் முடிந்தது. தூய அன்பின் வயப்பட்டதால் இறைவன் அவருக்கு நண்பனாகவும் தெரிந்தார்; தந்தையாகவும் இருந்தார். அது அவருடைய பேறு. அதனால்தான் அப்பன் நீ, அம்மை நீ, அன்புடைய மாமனும் மாமியும் நீ என்று அனைத்துவகை உலக உறவுகளிலும் இறைவனைக் கட்டிப்போட்டுக் களிப்படைய அப்பரால் முடிந்தது. அந்த வகையிலும் உறவுச் சங்கிலிகளில் உலக முதல்வனைப் பிணைத்த முதல் பெருமையும் அவருக்கே.


தஞ்சாவூர்- மன்னார்குடி சாலையில் சுமார் 19 கி.மீ. தொலைவில் பனையக்கோட்டை கிராமத்தில் உள்ள அப்பர் மடத்தில், சிவலிங்கத்திலிருந்து சிவபெருமான் சிங்க உருவெடுத்து, வணங்கிய நிலையில் உள்ள அப்பர் பெருமானை விழுங்குவதைப் போன்ற ஓவியம் உள்ளது.

அப்பர், தன் இறுதிப் பதிகமான திருப்புகலூர் பதிகத்தில், "....சாவா மூவாச் சிங்கமே உன்னடிக்கே போதுகின்றேன் திருப்புகலூர் மேவிய புண்ணியனே" என்று பாடியுள்ளார். 

லிங்க பாணத்தில் எழும் சிங்கம் அப்பரின் தலையைக் கவ்வி விழுங்குவது போன்று காணப்படுகிறது. அப்பர் வரலாற்றில் காணப்படும் அரிய படமாக இவ்வூரின் அப்பர் மடத்தின் ஓவியம் உள்ளது குறிப்பிடத்தக்கது.


அப்பரின் சிரிப்பு

அப்பர் ஒரே ஒரு வேலையைத் தான், தன் முழு நேர வேலையாகக் கொண்டிருந்தார். அது தான் – இறைவனை அறிவது.

வால் அறிவனை அறிந்து விட்டால் மற்ற அறிவெல்லாம் வந்து விடாதா என்ன?

காட்டிலே, மேட்டிலே, கழனியிலே, கோவிலிலே என அங்கிங்கெனாதபடி கடவுளைத் தேடியவர் அவரைக் கண்டே விட்டார்.

எவ்வளவு உழைப்பு; எத்தனை காலம்!

கடவுளின் இருப்பிடத்தை அறிந்தவுடன் அவருக்கு சிரிப்புத் தான் வந்தது. அதை அப்படியே தமிழில் பாடலாகப் பதிவு செய்து விட்டார்.

பாடல் இது தான்:-

கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கழித்துப் போக்கித்             தெள்ளியேன் ஆகி நின்று தேடினேன் நாடிக் கண்டேன்                          உள்குவார் உள்கிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று                    வெள்கினேன் வெள்கி நானும் விலா இறச் சிரித்திட்டேனே!

கள்ளத் தொண்டில் நெடுங்காலத்தை அங்கும் இங்குமாய் அதிலும் இதிலுமாய்ப் போக்கினார் அப்பர். கள்ளத் தன்மை போய் தெளிவுற்றவன் ஆனார். அந்த நல்ல நிலையில் அவர் நாடியதைக் கண்டே விட்டார்.

நினைப்பவர்களில் உள்ளே இருந்து அவர்கள் நினைப்பதை எல்லாம் (உடனுக்குடன்) நீ அறிவாய் என்பதை கண்டு கொண்டேன் என்கிறார் அப்பர். இதை நினைத்தவுடன் அவருக்குச் சிரிப்பு தான் வந்தது. ஹஹ்ஹஹ்ஹாவென்று விலாப் புடைக்கச் சிரித்தாராம்.

உள்ளே இருப்பவனை வெளியில் தேடியதற்கு ஒரு சிரிப்பு; உள்ளே இருந்து ஒவ்வொரு கணமும் எண்ணுவதை அறிந்தவனை கள்ள மனத்துடன் யாரும் இதை அறிய மாட்டார்கள் என்று அனைத்தையும் செய்ததற்கு ஒரு சிரிப்பு…..

பாடலைப் படித்து சற்று சிந்தனையுடன் ஆழ்ந்து யோசித்தால் நாம் எதெற்கெல்லாம் சிரிக்க வேண்டும் என்று யோசித்தால் அதற்கே முதல் சிரிப்பு சிரிப்போம்.

நம் சிரிப்பின் வகை நூறையும் தாண்டி விடும்.

கஸ்தூரி மான் ஒன்று கஸ்தூரி வாசனை தன்னிடமிருந்தே வருகிறது என்பதை அறியாது வாசனையைத் தேடி ஒரு அடி முன்னே வைக்கும். அதன் உடலில் இருக்கும் வாசனையும் ஒரு அடி முன்னேறும். இப்படி அடி அடியாய்ப் பாய்ச்சல் பாய்ச்சலாய் அது கஸ்தூரியைத் தேடுமாம் – வாழ்நாள் முழுதும்!

அப்படி கஸ்தூரி மான் போல நெடுங்காலம் உத்தமனைத் தேடிய அப்பர், இறுதியில் இறைவன் அருளால் உள்ளேயே கண்டு கொண்டார் உத்தமனை! அப்போது தான் ஹஹ்ஹஹ்ஹா என்ற விலா எலும்பு ஒடியும்படியான சிரிப்பு வந்தது!

உடம்பு என்னும் மனை அகத்து     உள்ளமே தகளி ஆக

மடம்படும் உணர் நெய் அட்டி   உயிர் எனும் திரி மயக்கி

இடம் படு ஞானத்தீயால்    எரிகொள இருந்து நோக்கில்

கடம்பு அமர் காளை தந்தை    கழல் அடி காணல் ஆமே

இதை விடத் தெளிவாக இறையைக் காணும் வழியை உரைக்க முடியுமா?

"உள்குவார் உள்ளத்தானை உணர்வு எனும் பெருமையான                          உள்கினேன் நானும் காண்பான் உருகினேன்"

என்று நமக்காகத் தம் அனுபவத்தை அப்பர் இப்படி பதிவு செய்கிறார்.

எந்நாளும் தொண்டு புரிந்தே வாழ்ந்த அப்பர் தாச மார்க்கம் வழியில் வாழ்ந்தவர். எப்போதும் ஒரு உழவாரப்படை எனப்படும் 'புல் செதுக்கி' ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டு கோவில் பிரகாரங்களைச் சுத்தம் செய்து கொண்டிருப்பார். அவரின் கடைசி காலத்தில் இறைவன் அவரைச் சோதனை செய்ததுண்டு. அவரின் மனோ திடத்தைச் சோதனை செய்வதற்காக புல் பூண்டுக்குப் பதிலாக வைரம், வைடூரியம் போன்ற நவ ரத்தினங்களை இறைவன் வரச் செய்தார். அப்பர் அதைக் கண்டாலும் பூண்டைப் போலவே அவைகளையும் செதுக்கியால் களைந்து எறிந்தார். அதாவது, இறைவன் அருட் பார்வை தவிர பொன் பொருள் எதுவும் ஒரு பொருட்டு அல்ல என்பதை நன்கு உணர்ந்தவராக இருந்ததால் அவரால் அப்படிச் செய்ய முடிந்தது. அப்படி வாழ்ந்த அப்பர் உண்மையிலேயே ஒரு தூய கர்ம யோகியே. அவர் 81 வயது வரை வாழ்ந்தார்.



அப்பர் எனும் ஆளுமை

பன்னிரு திருமுறைகளைப் படைத்துத் தந்த அருளாளர்களுள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்னும் நால்வரும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். அவர்களது வாழ்வும் வாக்கும் இருபத்தியோராம் நூற்றாண்டிற்கும் வழிகாட்டும் தகைமையன; பொருத்தப்பாடு (Relevance) உடையன.

ஒப்பியல் நோக்கில் ஒரு சுவையான தகவல்: நால்வர் பெருமக்களும் இம் மண்ணுலகில் நல்ல வண்ணம் – வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த காலம் – முறையே 16, 81, 18, 32 ஆண்டுகள் ஆகும். திருஞானசம்பந்தர் வாழ்ந்த காலமான 16-ஐ இரண்டால் பெருக்கினால் வரும் 32, மாணிக்கவாசகர் வாழ்ந்த காலம் ஆகும். அது போல, திருநாவுக்கரசர் வாழ்ந்த காலமான 81-ஐத் திருப்பிப் போட்டால் வரும் 18, சுந்தரர் பெருமான் வாழ்ந்த காலம் ஆகும். ஆனால் ஒன்று: எண்களுள் எதை இரண்டால் பெருக்குவது, எதைத் திருப்பிப் போடுவது என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டுவது இன்றியமையாதது ஆகும்.

ஆளுமை வளர்ச்சி நோக்கில் அப்பர் சுவாமிகளின் வாழ்வும் வாக்கும் 

'ஆளுமை வளர்ச்சி' (Personality Development) என்பது இன்று உலகளாவிய நிலையில் விவாதிக்கப் பெற்று வரும் ஒரு பொருள். அதன் அடிப்படையில் அப்பர் பெருமானின் வாழ்வும் வாக்கும் நுண்ணிதின் ஆராயத்தக்கன.

'கூற்றாயின வாறு விலக்ககிலீர்' (திருவதிகை வீரட்டாணம்) எனத் தொடங்கும் அப்பர் சுவாமிகளின் முதல் திருப்பதிகத்திலேயே அவரது ஆளுமைப் பண்பு வெளிப்பட்டிருக்கக் காணலாம். 'என் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேன்' என்ற அடிகள் சூலை நோயின் கொடுமையை உணர்த்த வல்லன. அதனைப் பொறுத்துக் கொண்டு இறைப்- பணியாற்றியது என்பது அப்பர் பெருமானின் நெஞ்சுரத்தைப் புலப்படுத்துவது.

நால்வர் பெருமக்களுள் நீண்ட காலம் வாழும் வாய்ப்புப் பெற்றவர் அப்பர். அவர் தமது 81 ஆண்டுக் கால நெடிய வாழ்வில் சந்தித்த கசப்பான அனுபவங்கள் பற்பலவாகும். புறச்சமயம் சென்றது, சைவ சமயத்திற்கு மீண்டது, 'பல்லவ மன்னனனால் அவர் எதிர்கொண்ட நெருக்கடிகள், சோதனைகள் மிகப் பல. தடைக் கற்களாக வந்து தொல்லை தந்த எல்லாவற்றையும் தாங்கியும் தாண்டியும் சாதனை படைத்தது அப்பர் சுவாமிகளின் வாழ்வு. எனவே, 'அப்பர் எனும் ஆளுமை' என்ற நோக்கில் எதிர்கால ஆய்வுலகம் நுண்ணாய்வு மேற்கொள்வதற்கு நிறைய இடம் உள்ளது.

இருபத்தியோராம் நூற்றாண்டிற்கு அப்பர் வழங்கும் செய்தி

இன்று உலகளாவிய நிலையில் பொதுப்பணி ஆற்றி வரும் அரிமா சங்கம் (Lion's Club), சுழற்சங்கம் (Rotary Club), செஞ்சிலுவைச் சங்கம் (Red Cross Society) போன்றவற்றிற்கு எல்லாம் முன்னோடியாக விளங்குவது 'என் கடன் பணி செய்து கிடப்பதே!' என்னும் அப்பர் பெருமானின் ஓர் அடியே ஆகும். இதில் இடம் பெற்றிருக்கும் 'கிடப்பது' என்னும் சொல்லாட்சி பொருள் பொதிந்தது; ஆழமானது.

என் கடன் பணி செய்து 'நடப்பது' என்றோ, 'நிற்பது' என்றோ, 'ஒழுகுவது' என்றோ, 'இருப்பது' என்றோ, 'வாழ்வது' என்றோ சொல்லினைப் போடாமல், 'கிடப்பது' என்ற சொல்லினை அப்பர் பெருமான் கையாண்டிருப்பது அருமையில் அருமை. எந்த விதமான கைம்மாறும் கருதாமல், கடமையை மட்டுமே ஆற்றி வரும் தொண்டு வாழ்வின் மேன்மையினை, உயர்வினை இதனினும் இரத்தினச் சுருக்கமாக எவராலும் சுட்டிவிட இயலாது.

இடுக்கண் வருங்கால் நகுவது, துன்பத்திற்குத் துன்பம் தருவது, இன்னாமையை இயல்பு என்பதோடு இன்பம் எனவும் கொள்வது ஆகியவை ஆளுமை வளர்ச்சியில் மிக முக்கியமான பண்புகள். 'மாசில் வீணையும் மாலை மதியமும்' (தனித் திருக்குறுந்தொகை), 'நாமார்க்கும் குடியல்லோம்' (மறுமாற்றத் திருத்தாண்டகம்) முதலான அப்பர் சுவாமிகளின் பாடல்கள் இவ்வகையில் மனங்கொளத்தக்கவை. குறிப்பாகவும் கூர்மையாகவும் கூறுவது என்றால், "நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம், நடலை அல்லோம், நரகத்தில் இடர்ப்படோம், ஏமாப்போம், பிணியறியோம், இன்பமே எந்நாளும், துன்பம் இல்லை!" என்னும் அப்பர் பெருமானின் கூற்று, ஆளுமைப் பண்பின் மணிமகுடம் ஆகும்.

'மனிதப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே!', 'வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி; மதித்திடுமின்!' முதலான பாடல்கள் அப்பர் பெருமானின் உடன்பாட்டுச் சிந்தனையைப் (Positive Thinking) பறைசாற்றுவன. 

அப்பர் சுவாமிகளின் ஆளுமைப் பண்புகளுள் தலையாயது அவரது அஞ்சாமைப் பண்பு. 'அஞ்சுவது யாதொன்றும் இல்லை, அஞ்ச வருவதும் இல்லை' என்ற திருவதிகை வீரட்டாணப் பதிகம் இவ் வகையில் குறிப்பிடத் தக்கது.

சாதி, சமய வேறுபாடுகளுக்கும், கண்மூடிப் பழக்க வழக்கங்களுக்கும் எதிராக வலிமையாகக் குரல் கொடுத்தவர் அப்பர். 'சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்', 'கங்கை யாடில்என், காவிரி யாடில் என்?' (பாவ நாசத் திருக்குறுந்தொகை) என்பன அவர் தொடுக்கும் கூரிய கேள்விக் கணைகள்.

'ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே?' (தனித் திருத்தாண்டகம்) என்னும் பாடல் வெளிப்படுத்தும் அப்பர் சுவாமிகளின் இறைக் கொள்கை அவரது ஆளுமைப் பண்பின் அடிப்படையில் அமைந்த ஒன்று. இதனை அடியொற்றிக் கவிஞர் கண்ணதாசனும் தமது திரைப் பாடல் ஒன்றைப் புனைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

'நாம் இருக்கும் நாடு நமது என்பதை அறிந்தோம்… பாரினில் எவர்க்கும் அஞ்சோம்; பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்' என இருபதாம் நூற்றாண்டுப் பெருங்கவிஞர் பாரதியார் பாடுவதற்கும் அடியெடுத்துத் தந்தது 'நாமார்க்கும் குடியல்லோம்' என்னும் அப்பர் சுவாமிகளின் வாக்கே. 'ஏழில் இருபது' என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரையில் இது குறித்து விரிவாக எழுதியுள்ளார் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.

அப்பர் பெருமானின் நீண்ட, நெடிய வாழ்வில் இருந்து இன்றைய இளைய தலைமுறையினர் கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்வியல் பாடங்கள் பற்பலவாகும். அவற்றை வெறும் வார்த்தைகளாகப் பயிலாமல், பின்பற்ற வேண்டிய உயரிய விழுமியங்களாகக் கொண்டு, வாழ முற்படும் இளையோர் தம் வாழ்வில் வாகை சூடுவதோடு, தடம் பதிப்பவராகவும் முத்திரை பதிப்பவராகவும் அவர்கள் உயர்வர் என்பது உண்மையிலும் உண்மை உறுதியிலும் உறுதி.

- தொகுப்பு


*🙏🏻🙏🏻🙏🏻*
*சிவன் கழலே சிந்தையாம்*
*கடையேன்*
*குமரேசன் இராஜசிம்மன்*

No comments:

Post a Comment