Saturday, January 7, 2023

Mahabharata part 182 in tamil

மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-182
விராட பர்வம்
..
பீஷ்மர் ஆலோசனை
...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! மன்னா {ஜனமேஜயா}, கீசகனும் அவனது தம்பிகளும் கொல்லப்பட்டதைப் பயங்கரமான சாதனையாக நினைத்த மக்கள் ஆச்சரியத்தில் நிறைந்தனர். மேலும், நகரம் மற்றும் மாகாணங்களில், மன்னனின் வல்லவன் {பீமன்} மற்றும் கீசகன் ஆகிய இரு வலிமைமிக்க வீரர்களின் வீரத்தைக் குறித்துப் பொதுவாக வதந்திகள் பரவியிருந்தன. "எனினும், தீய கீசகன், மனிதர்களை எப்போதும் ஒடுக்குபவனே! பிற மனிதர்களின் மனைவிகளை அவமதிப்பவனே! அதற்காகவே அந்தத் தீய பாவகர ஆன்மா {கீசகன்} கந்தர்வர்களால் கொல்லப்பட்டான்". இப்படியே, ஓ! மன்னா {ஜனமேஜயா}, பகைவர் கூட்டத்தைக் கொல்பவனான ஒப்பற்ற கீசகனைக் குறித்து மாகாணத்துக்கு மாகாணம் மக்கள் பேசிக் கொள்ளத் தொடங்கினர்.


அதே வேளையில், திருதராஷ்டிரன் மகனால் {துரியோதனனால்} நியமிக்கப்பட்டிருந்த ஒற்றர்கள், பல்வேறு கிராமங்களையும், நகரங்களையும், நாடுகளையும், தங்களுக்குக் கட்டளையிடப்பட்டிருந்த பல இடங்களையும் குறித்தபடி தேடி முடித்து, தாங்கள் அறிந்த ஒரே ஒரு செய்தியில் மனநிறைவு கொண்டு நாகரூபத்திற்குத் {ஹஸ்தினாபுரத்திற்குத்} திரும்பினார்கள்.

 

பிறகு திருதராஷ்டிரன் மகனான குரு குலத்தின் மன்னன் துரியோதனன் தனது அவையில் துரோணர், கர்ணன், கிருபர், உயர் ஆன்ம பீஷ்மர், தனது தம்பிகள், பெரும் வீரர்களான திரிகார்த்தர்கள் ஆகியோரோடு அமர்ந்திருந்த போது, அவனிடம் {துரியோதனனிடம் அவனது ஒற்றர்கள்}, "ஓ! மனிதர்களின் தலைவா {துரியோதனரே}, பெரும் வனத்தில் பாண்டுவின் மகன்களைத் தேடுவதில் நாங்கள் மிகுந்த அக்கறை செலுத்தினோம். மான்கள் மற்றும் பிற விலங்குகள் நிறைந்ததும், மரங்கள் மற்றும் வித்தியாசமான வகைகளிலான கொடிகள் நிறைந்ததுமான ஏகாந்தமான வனாந்தரங்களில் நாங்கள் {அவர்களைத்} தேடினோம்.

 

படர்ந்த காடுகள், தாவரங்கள், அனைத்து வகைக் கொடியினங்கள் ஆகியவை நிறைந்த சூழல் கொண்ட இடங்களில் தேடினோம். ஆனால், அடக்க முடியாத சக்தி கொண்ட பிருதையின் மகன்கள் {குந்தியின் மகன்களான பாண்டவர்கள்} சென்ற பாதையைக் கண்டுபிடிப்பதில் தோல்வியுற்றோம். இந்த இடங்களிலும், மேலும் பல இடங்களிலும் அவர்களது பாதச்சுவடுகளைத் தேடினோம். ஓ! மன்னா {துரியோதனா}, அடைவதற்கரிதான காடுகளிலும், பல்வேறு நாடுகளிலும், மக்கள் நிறைந்த மாகாணங்களிலும், நாற்சந்திகளிலும், நகரங்களிலும் நாங்கள் நெருக்கமாகத் தேடினோம். பாண்டுவின் மகன்களைக் {பாண்டவர்களைக்} குறித்த எந்தத் தடயமும் இன்னும் {எங்களுக்குக்} கிடைக்கவில்லை.

 

உமக்கு மங்களம் உண்டாகட்டும். ஓ! மனிதர்களில் காளையே {துரியோதனரே}, எந்தத் தடயத்தையும் விட்டுவைக்காமல் அவர்கள் {அந்த பாண்டவர்கள்} அழிந்துவிட்டதாகவே தெரிகிறது. ஓ! வீரர்களில் முதன்மையானவரே {துரியோதனரே}, நாங்கள் அவர்களது பாதையிலேயே தொடர்ந்து சென்றாலும், ஓ! மனிதர்களில் சிறந்தவரே {துரியோதனரே}, விரைவில் அவர்களது காற்தடங்களைத் தொலைத்தோம். {எங்களுக்கு அவர்களது கால்தடங்கள் தெரியவில்லை}. இப்போது அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை {நாங்கள்} அறியவில்லை.

ஓ! மனிதர்களின் தலைவா, சில காலம் நாங்கள் அவர்களின் தேரோட்டிகளைத் தொடர்ந்து சென்றோம். முறையாக விசாரித்ததில் நாங்கள் அறிய விரும்பியதை உண்மையில் உறுதி செய்து கொண்டோம். ஓ! எதிரிகளைக் கொல்பவனே, அந்தத் தேரோட்டிகள் தங்கள் மத்தியில் பிருதையின் மகன்கள் {குந்தியின் மகன்களான பாண்டவர்கள்} இல்லாமலேயே துவாராவதியை {துவாரகையை} அடைந்தனர். ஓ! மன்னா {துரியோதனரே}, பாண்டுவின் மகன்களோ {பாண்டவர்களோ}, கற்புள்ள கிருஷ்ணையோ {திரௌபதியோ} யாதவர்களின் நகரத்தில் இல்லை.

 

ஓ! பாரதகுலத்தின் காளையே {துரியோதனரே}, அவர்கள் தற்சமயம் எங்கு வசிக்கிறார்கள் என்பதையோ, அவர்களது பாதையையோ எங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. உமக்கு வந்தனம், அவர்கள் அழிந்து விட்டார்கள். பாண்டு மகன்களின் மனநிலையை நாங்கள் அறிந்தவர்கள். அவர்களது சாதனைகளில் சிலவற்றையும் அறிந்திருக்கிறோம். எனவே, ஓ! மனிதர்களின் தலைவா {துரியோதனா}, பாண்டு மகன்களைத் தேடும் விவகாரத்தில் அடுத்து நாங்கள் செய்ய வேண்டியது என்ன என்று, ஓ! ஏகாதபதி {துரியோதனரே} எங்களுக்கு உத்தரவு அளியும்.

ஓ! வீரரே, உமக்கு நம்பிக்கைத் தரக்கூடிய ஏற்புடைய எங்களது {வேறு} வார்த்தைகளைக் கேளும். மன்னர் மத்ஸ்யரின் {விராடரின்} தளபதியும், திரிகார்த்தர்களை மீண்டும் மீண்டும் வீழ்த்தி, பெரும்பலத்தால் அவர்களைக் கொன்றவனும், தீய ஆன்மாவுமான கீசகன், ஓ! ஏகாதிபதி {துரியோதனரே}, கண்ணுக்குப்புலப்படாத கந்தர்வர்களால் இருள் சூழ்ந்த நேரத்தில், ஓ! மங்காப்புகழ் கொண்டவரே {துரியோதனரே} தனது தம்பிகள் அனைவருடனும் சேர்த்து கொல்லப்பட்டான். நமது எதிரிகளின் {இந்த} நிலைமை பற்றிய மகிழ்ச்சிகரமான செய்தியைக் கேள்விப்பட்டு, ஓ! கௌரவ்யரே {துரியோதனரே}, நாங்கள் மிகுந்த மனநிறைவு கொண்டோம். அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது சொல்வீராக", என்றனர் {ஒற்றர்கள்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தன் ஒற்றர்களின் வார்த்தைகளைக் கேட்ட மன்னன் துரியோதனன், தனக்குள்ளேயே சிறிது நேரம் சிந்தித்த பிறகு, தனது அவையினரிடம், "நிகழ்வுகளின் போக்கைத் தெரிந்து கொள்வது கடினமாக உள்ளது. நம்மால் கண்டறியப்படாமல், அவர்கள் {பாண்டவர்கள்} வாழ வேண்டிய பதிமூன்றாவது வருடத்தின் பெரும்பகுதி கழிந்துவிட்டது. மீதம் இருப்பது {மீதம் இருக்கும் காலம்} மிகவும் குறைவு. எனவே, பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} எங்கிருக்கிறார்களோ அந்த இடத்தைக் கண்டுபிடியுங்கள்.


உண்மை {சத்திய} நோன்புக்குத் தங்களை அர்ப்பணித்திருப்பவர்களான பாண்டுவின் மகன்களால், இந்த வருடத்தில் எஞ்சியிருக்கும் காலத்தையும் கண்டறியப்படாமல் உண்மையில் கழிக்கமுடியுமானால், அவர்கள் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றியவர்கள் ஆவார்கள். பிறகு, மதநீர் பாயும் பலமிக்க யானைகளைப் போலவோ, கடும் நஞ்சு கொண்ட பாம்புகளைப் போலவோ அவர்கள் திரும்பி வருவார்கள். {அப்படி வந்தால்} கோபம் நிறைந்த அவர்கள், குருக்களுக்குக் கொடூரத் தண்டனையை அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. எனவே, காலத்தின் தன்மைகளை நன்கறிந்த பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, வலிநிறைந்த வேடங்களில் இப்போது இருப்பது போலவே நீடிக்கவும், தங்கள் கோபத்தை அடக்கிக் கொண்டு மீண்டும் கானகம் செல்லவும், {நாம் எடுக்க} வேண்டிய முயற்சிகளைக் காலந்தாழ்த்தாமல் எடுப்பதே உங்களுக்குத்தகும். உண்மையில், நாடு அமைதியாகவும், எதிரிகளற்றதாகவும், எந்தக் குறைவும் இல்லாததாகவும், நாட்டிற்காகச் சண்டை நடவாதிருக்கவும், சண்டைக்கான அனைத்துக் காரணங்களையும் களையும்படியான வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்" என்றான் {துரியோதனன்}.


துரியோதனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட கர்ணன் {துரியோதனனிடம்}, "ஓ! பாரதா {துரியோதனா}, திறன்வாய்ந்தவர்களும், இன்னும் அதிகத் தந்திரமிக்கவர்களும், நோக்கத்தைச் சாதிக்கவல்லவர்களுமான வேறு ஒற்றர்களை விரைந்து அனுப்பு. நல்ல வேடந்தரித்து, பெரிய நாடுகளிலும், மக்கள் நிறைந்த மாகாணங்களிலும் திரிந்து, கற்றோர் சபைகளையும், மாகாணங்களில் இருக்கும் காண்பதற்கினிய இடங்களையும் அவர்கள் வேவு பார்க்கட்டும். அரண்மனைகளின் அந்தப்புரங்களிலும், சன்னதிகளிலும், புனித இடங்களிலும், சுரங்கங்களிலும், வித்தியாசமான பிற பகுதிகளிலும், நன்கு வழிகாட்டப்பட்ட ஆவலுடன் பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} தேடப்பட வேண்டும்.


மாற்றுருவில் வாழும் பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, வேலையில் அர்ப்பணிப்புக் கொண்ட, நல்ல வேடந்தரித்த, தேடுவதற்கான நோக்கங்களை நன்கு அறிந்த, நல்ல திறன்வாய்ந்த அதிக எண்ணிக்கையிலான ஒற்றர்களால் தேடப்படட்டும். ஆற்றங்கரைகளிலும், புனித இடங்களிலும், கிராமங்களிலும், நகரங்களிலும், துறவியரின் இடங்களிலும், காண்பதற்கினிய மலைகள் மற்றும் மலைக்குகைகளிலும் {அந்த பாண்டவர்கள்} தேடப்படட்டும்" என்றான் {கர்ணன்}.


கர்ணன் நிறுத்தியதும், துரியோதனனின் இரண்டாவது தம்பியும் {துரியோதனனுக்கு உடன்தம்பியும்}, {துரியோதனனின்} பாவச்செயல்களுக்குக் கைகோர்ப்பவனுமான துச்சாசனன், தனது அண்ணனிடம் {துரியோதனனிடம்}, "ஓ! ஏகாதிபதி, ஓ! மனிதர்களின் தலைவா {துரியோதனரே}, நமது வெகுமதிகளை முன்கூட்டியே பெற்றுக் கொண்டு, நாம் நம்பிக்கை வைத்திருக்கும் ஒற்றர்கள் மட்டும் மீண்டும் தேடச் செல்லட்டும். இதுவும், கர்ணன் சொன்ன வேறு யாவும் நமது முழு ஏற்பைப் பெற்றவையாகும். ஏற்கனவே கொடுக்கப்பட்ட வழிகாட்டுதல்களின் படி {மற்ற} அனைத்து ஒற்றர்களும் இந்தத் தேடலில் ஈடுபடட்டும். அங்கீகரிக்கப்பட்ட விதிகளின் படி, ஒவ்வொரு மாகாணத்திலும் தேடுவதில் இவர்களும், பிறரும் ஈடுபடட்டும்.

எனினும், பாண்டவர்கள் தொடர்ந்து சென்ற பாதையையோ, அவர்கள் தற்போது இருக்கும் வசிப்பிடத்தையோ, {அவர்கள்} மேற்கொண்டிருக்கும் தொழிலையோ கண்டுபிடிக்க முடியாது என்பது எனது நம்பிக்கை. ஒருவேளை, அவர்கள் {அந்த பாண்டவர்கள்} நன்றாக மறைந்திருக்கலாம்; ஒருவேளை, அவர்கள் {அந்த பாண்டவர்கள்} கடலின் மறுபுறத்திற்கே சென்றிருக்கலாம். அல்லது தங்கள் பலத்திலும் வீரத்திலும் கொண்ட கர்வத்தினால், ஒருவேளை அவர்கள் காட்டுவிலங்குகளால் விழுங்கப்பட்டிருக்கலாம்; அல்லது அவர்கள் {அந்த பாண்டவர்கள்} ஏதாவது எதிர்பாரா ஆபத்தை அடைந்து, ஒருவேளை நித்தியமாக அழிந்துபோயிருக்கலாம். எனவே, ஓ! குருகுலத்தின் இளவரசே {துரியோதனரே}, உமது இதயத்தில் இருந்து அனைத்து துயரங்களையும் அகற்றி, உமது சக்திக்கேற்றபடி எப்போதும் போலச் செயல்பட்டு, உம்மால் முடிந்ததைச் சாதியும். {செய்யக் கருதும் காரியத்தைச் செய்யும்}" என்றான் {துச்சாசனன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பெரும்சக்தியும், பெரும் விவேகமும் கொண்ட துரோணர், "பாண்டுவின் மகன்களைப் போன்றோர் அழிவடையவோ, ஏமாற்றமடையவோ மாட்டார்கள். வீரமும், அனைத்து அறிவியல்களில் நிபுணத்துவமும், புத்திக்கூர்மையும், புலனடக்கமும், அறச்சார்பும், பெருந்தன்மையும் கொண்டு, கொள்கை முடிவுகள், அறம் பொருள் ஆகியவற்றை அறிந்தவனும், ஒரு தந்தையைப் போலத் தங்களிடம் பிணைப்புடன் இருப்பவனும், அறத்தைக் கடுமையுடன் பின்பற்றுபவனும்,  உண்மையில் உறுதியுள்ளவனும், பெரும் புத்திக்கூர்மையைக் கொடையாகக் கொண்டவனும், யாரையும் புண்படுத்தாதவனும், தனது தம்பிகளுக்குக் கீழ்ப்படிபவனுமான தங்கள் அண்ணன் {யுதிஷ்டிரன்} அறிய அவனைப் பின் தொடர்பவர்களும், நீதிமானான யுதிஷ்டிரனும் இவ்வகையில் எப்போதும் அழிவடைய மாட்டார்கள்.


கொள்கை அறிவு கொண்ட பிருதையின் மகனால் (குந்தியின் மகன் யுதிஷ்டிரனால்), அர்ப்பணிப்பும், கீழ்ப்படியுந்தன்மையும், பெரும்ஆன்மாவும் கொண்டவர்களான தன் தம்பிகளின் செழுமையை,  பிறகேன் மீட்டெடுக்க முடியாது? இதற்காகவே, இந்தச் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியே அவர்கள் {பாண்டவர்கள்} கவனமாகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களைப் போன்ற மனிதர்கள் எப்போதும் அழிவடையமாட்டார்கள். என் அறிவின் மூலம் இதையே நான் காண்கிறேன். எனவே, சரியாக ஆலோசித்த பிறகு என்ன செய்ய வேண்டுமோ, அதைத் தாமதிக்காமல் விரைவாகச் செய்யுங்கள். தங்கள் ஆன்மாக்களைக் கட்டுக்குள் வைத்திருக்கும் பாண்டுவின் மகன்கள், தங்கள் வாழ்வின் அனைத்துத் தேவைகளையும் எதிர்கொள்ள, {அந்த பாண்டவர்கள்} வசிப்பதற்கு ஏற்ற இடத்தை நாம் இப்போது தீர்மானிக்க வேண்டும்.


வீரர்களும், பாவமற்றவர்களும், தவத்தகுதி படைத்தவர்களுமான பாண்டவர்களைக் (அவர்களது அஜ்ஞாதவாத காலத்திற்குள்ளாகவே) கண்டுபிடிப்பது மிகவும் கடினமாகும். புத்திசாலித்தனமும், அனைத்து அறங்களும், உண்மையில் அர்ப்பணிப்பும், கொள்கை தத்துவங்கள் அறிதலும், சுத்தமும், புனிதமும், அளவிட முடியாத சக்தியும் கொண்ட பிருதையின் மகன் {குந்தியின் மகன் யுதிஷ்டிரன்}, (தன் எதிரிகளைப்) பார்வையாலேயே எரித்துவிடும் திறன்பெற்றவனாவான். இவை யாவையும் அறிந்து, முறையானதைச் செய்யுங்கள். எனவே, அந்தணர்களையும், சாரணர்களையும், தவத்தில் வெற்றி மகுடம் சூட்டப்பட்டவர்களையும், அந்த வீரர்களைக் குறித்து அறிந்த இதே போன்றோரையும் அனுப்பி, மீண்டும் ஒருமுறை அவர்களை நாம் தேடுவோமாக!" என்றார் {துரோணர்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பிறகு, துரோணர் தனது பேச்சை முடித்ததும், வேதங்களை அறிந்தவரும், காலம் மற்றும் இடத்தின் தன்மைகளை அறிந்தவரும், அறநெறிகளின் அனைத்து கடமைகளைக் குறித்த அறிவைக் கொண்டவரும், பாரதர்களின் பெரும்பாட்டனும், சந்தனுவின் மகனுமான பீஷ்மர், அந்த ஆசானின் {துரோணரின்} வார்த்தைகளைப் பாராட்டிவிட்டு, நேர்மையற்றவர்களால் அதிகம் பேசப்படாதவனும், நேர்மையானவர்களால் விரும்பி சந்திக்கப்பட்டுப் புகழப்படுபவனுமான அறம்சார்ந்த யுதிஷ்டிரன் மீது தாம் கொண்ட பிணைப்பை வெளிப்படுத்தும் வண்ணமும், பாரதர்களின் நன்மைக்கு வழிவகுக்கும் வண்ணமும், அறம்சார்ந்த வார்த்தைகளைப் பேசினார். பீஷ்மர் பேசிய வார்த்தைகள் பாகுபாடற்றவையாகவும், ஞானிகளால் வழிபடப்படுபவையாகவும் இருந்தன.


குருக்களின் பெரும்பாட்டன் {பீஷ்மர்}, "மறுபிறப்பாளரும் {பிராமணரும்}, ஒவ்வொரு காரியத்தின் உண்மையை அறிந்தவருமான துரோணர் சொன்ன வார்த்தைகளை நான் ஏற்கிறேன். இதைச் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அனைத்து நற்குறிகள், அறம்சார்ந்த நோன்புகள், வேத கல்வி ஆகியவற்றைப் பெற்று, அறச் சடங்குகளுக்குத் தன்னை அர்ப்பணித்து, பல்வேறு அறிவியல்களை அறிந்து, முதிர்ந்தவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு, சத்திய நோன்பைப் பின்பற்றி, காலத்தின் தன்மை அறிந்து, {அஜ்ஞாத வாசம் குறித்து} தாங்கள் கொடுத்த வாக்குறுதியின் படி நடந்து, நடத்தையில் சத்தத்துடன், க்ஷத்திரிய வகைக்கான கடமைகளை எப்போதும் செய்து, கேசவனுக்கு {கிருஷ்ணனுக்கு} எப்போதும் கீழ்ப்படிந்து, உயர் ஆன்மாவும், பெரும் பலமும் கொண்டு, எப்போதும் ஞானிகளின் சுமைகளைத் தாங்கி வரும் அந்த வீரர்கள் {பாண்டவர்கள்} கெடுபேறால் கவிழ்ந்து போக மாட்டார்கள்.

 

அறத்திற்குக் கீழ்ப்படிந்து மறைந்திருக்கும் வாழ்வை வாழ்ந்து வருபவர்களும், தங்கள் சக்தியின் துணை கொண்டவர்களுமான அந்தப் பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, நிச்சயம் அழிவை அடைய மாட்டார்கள். இதைத்தான் எனது மனது உத்தேசமாகக் கணிக்கிறது. எனவே, ஓ! பாரதா {துரியோதனா}, பாண்டுவின் மகன்களிடம் நாம் நடந்து கொள்ள வேண்டிய நேர்மையான ஆலோசனைக்கு நான் உதவுவேன். ஒற்றர்களைக் கொண்டு அவர்களைக் கண்டுபிடிக்கச் செய்வது விவேகமுள்ளவனின் கொள்கையாக இருக்காது [1]. எனது அறிவின் துணை கொண்டு சிந்தித்துப் பார்த்து பாண்டுவின் மகன்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நான் சொல்வேன். நான் உங்கள் மீது கொண்ட அதிருப்தியால் எதையும் சொல்லவில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

என்னைப் போன்ற மனிதர்கள் நேர்மையற்றவர்களுக்கு இத்தகு ஆலோசனைகளை வழங்கக்கூடாது. (நான் சொல்வது போன்ற) ஆலோசனைகள் நேர்மையானவர்களுக்கே வழங்கப்பட வேண்டும். எனினும், தீமையான ஆலோசனைகளை எத்தகு சூழ்நிலையிலும் வழங்கக்கூடாது {என்பதைக் கருத்தில் கொள்கிறேன்}. ஓ! குழந்தாய் {துரியோதனா}, உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்து, முதிர்ந்தவர்களுக்குக் கீழ்ப்படிந்து, விவேகமுள்ளவனாக இருக்கும் ஒருவன், அறத்தை அடைவதை நோக்கமாகக் கொண்டிருந்தால், ஒரு சபையின் மத்தியில் பேசும்போது, எத்தகைய சந்தர்ப்பத்திலும் அவன் உண்மையையே பேச வேண்டும். எனவே, வனவாசத்தின் பதிமூன்றாம் {13} வருடத்தில் இருக்கும் நீதிமானான யுதிஷ்டிரனின் வசிப்பிடம் குறித்துப் பேசும்போது, நான் இங்கிருக்கும் மக்கள் அனைவரையும்விட வித்தியாசமாக எண்ணுகிறேன் என்றே நான் சொல்ல வேண்டும்.

ஓ! குழந்தாய் {துரியோதனா}, மன்னன் யுதிஷ்டிரன் வசிக்கும் மாகாணத்தையோ, நகரத்தையோ ஆளும் ஆட்சியாளனை எந்தத் தீப்பேறும் அணுகாது. மன்னன் யுதிஷ்டிரன் வசிக்கும் நாடு, தொண்டுள்ளமும், தாராளமும், மனத்தாழ்மையும் {பணிவும்}, அடக்கமும் கொண்ட மக்கள் நிறைந்ததாக இருக்கும். மன்னன் யுதிஷ்டிரன் வசிக்கும் நாட்டில் இருக்கும் மக்கள், ஏற்புடைய {இனிமையான} பேச்சும், ஆசை அடக்கமும், உண்மை நோற்றலும், உற்சாகமும், உடல் நலமும் {ஆரோக்கியமும்}, சுத்தமான நடத்தையும், வேலையில் நிபுணத்துவமும் கொண்டிருப்பார்கள். யுதிஷ்டிரன் இருக்கும் இடத்தில் உள்ள மக்கள் பொறாமைகொண்டவர்களாகவோ, தீங்கிழைப்பவர்களாகவோ, வீணர்களாகவோ, கர்விகளாகவோ இருக்க முடியாது. ஆனால் அவர்கள் {அந்த மக்கள்} அனைவரும் தங்கள் கடமைகளுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள். உண்மையில், யுதிஷ்டிரன் வசிக்கும் இடத்தில் அனைத்துப்புறங்களிலும் வேத மந்திரங்கள் ஓதப்படும், வேள்விகள் செய்யப்படும், {அவ்வேள்வியில்} கடைசி நீர்க்காணிக்கைகள் {நெய் போன்றவை} எப்போதும் முழுமையாக உற்றப்படும் [2]. {அவ்வேள்வியில்} அந்தணர்களுக்குக் கொடுக்கப்படும் பரிசுகள் அபரிமிதமாக இருக்கும்.


அங்கே மேகங்கள் அபரிமிதமான மழையைப் பொழியும் என்பதில் சந்தேகமில்லை. நல்ல அறுவடையின் காரணமாக அந்த நாடு எப்போது அச்சமற்றதாக இருக்கும். அங்கே நெல்லில் தானியம் இல்லாதிருக்காது; பழங்கள் சாறற்றவையா {ரசமற்றவையாக} இருக்காது; மலர் மாலைகள் நறுமணமற்றவையாக இருக்காது; மனிதர்களின் விவாதங்கள் ஏற்புடைய {இனிமையான} சொற்கள் நிறைந்தவையாகவே எப்போதும் இருக்கும். மன்னன் யுதிஷ்டிரன் வசிக்குமிடத்தில் தென்றல் சுகமாக வீசும், மனிதர்களின் கூடுகைகள் நட்புடன் இருக்கும். அச்சத்திற்கான எந்தக் காரணமும் இருக்காது. மெலிந்தோ, பலமற்றதாகவோ எந்தப் பசுவும் இருக்காது. அங்கே பசுக்கள் நிறைந்திருக்கும். பால், தயிர், நெய் ஆகிய அனைத்தும் சுவைமிக்கதாகவும் சத்தானதாகவும் இருக்கும்.

 

மன்னன் யுதிஷ்டிரன் வசிக்குமிடத்தில், அனைத்துவகைப் பயிர்களும் ஊட்டச்சத்து மிக்கதாகவும், சமையலுக்குகந்த நல்ல சுவையுடனும் இருக்கும். மன்னன் யுதிஷ்டிரன் வசிக்குமிடத்தில், {நாக்கு உணரும்} சுவை, {உடல் உணரும்} தொடுதல், {நாசி [மூக்கு] உணரும்} மணம் {வாசனை}, {காது உணரும்} கேள்வித்திறன் ஆகியவை அற்புத தன்மைகளைக் கொண்டிருக்கும். மன்னன் யுதிஷ்டிரன் வசிக்குமிடத்தில், பார்வையும் காட்சிகளும் மகிழ்ச்சி தருவனவையாக இருக்கும். அந்த இடத்தின் மறுபிறப்பாளர்கள் {பிராமணர்கள்} அறம்சார்ந்தவர்களாகவும், தங்களுக்கு உரிய கடமைகளைச் செய்பவர்களாகவும் இருப்பார்கள். உண்மையில், அவர்களது வனவாசத்தின் பதிமூன்றாவது {13} வருடத்தில் இருக்கும் பாண்டுவின் மகன்கள் வசிக்கும் நாட்டில் உள்ள மக்கள் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும், சுத்தமான நடத்தையோடும், எந்த வகைத் துன்பமும் இல்லாதவர்களாக இருப்பார்கள். {அந்த மக்கள்} தேவர்களுக்கும் விருந்தினர்களுக்கும் அர்ப்பணிப்புள்ளவர்களாகவும், தங்கள் முழு ஆன்மாவோடு அவர்களை {தேவர்களையும் விருந்தினர்களையும்} வழிபடுபவர்களாகவும், தாங்கள் விரும்பியவற்றைத் தானம் செய்பவர்களாகவும், பெரும் சக்தி நிறைந்தவர்களாகவும், நித்தியமான அறத்தைப் பின்பற்றுபவர்களாகவும் இருப்பார்கள்.

மன்னன் யுதிஷ்டிரன் வசிக்குமிடத்தில் இருக்கும் மக்கள் தீமையானவை அனைத்தையும் தவிர்த்து, நல்லதை மட்டுமே சாதிக்க விரும்புபவர்களாக இருப்பார்கள். மன்னன் யுதிஷ்டிரன் வசிக்குமிடத்தில் இருப்பவர்கள் எப்போதும் வேள்விகளைச் செய்பவர்களாகவும், சுத்தமான நோன்புகளையும் நோற்பவர்களாகவும், பேச்சில் பொய்மையை வெறுப்பவர்களாகவும் இருந்து, நன்மையான, மங்களகரமான பயனுள்ளவற்றை அடைய எப்போதும் விரும்புபவர்களாக இருப்பார்கள். மன்னன் யுதிஷ்டிரன் வசிக்குமிடத்தில் உள்ள மக்கள் நன்மையைப் பெற நிச்சயம் விரும்புவார்கள். அவர்களது இதயங்கள் எப்போதும் அறத்தை நோக்கி உயர்ந்தே இருக்கும். ஏற்புடைய {இனிய} நோன்புகளைச் செய்து எப்போதும் அறத்தகுதிகளை அடைவதிலேயே, எப்போதும் அவர்கள் {அம்மக்கள்} ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள்.

 

ஓ! குழந்தாய் {துரியோதனா}, சாதாரண மனிதர்களை விட்டுவிடு, புத்திக்கூர்மை, தொண்டுள்ளம், உயர்ந்த மன அமைதி, ஐயமற்ற பொறுமை {மன்னிக்கும் குணம்}, அடக்கம், செழிப்பு, புகழ், பெரும் சக்தி, அனைத்து உயிர்களிடமும் அன்பு ஆகியவற்றைக் கொண்ட பிருதையின் மகனை {யுதிஷ்டிரனை}, (அவன் இப்போது தன்னை மறைத்துக் கொண்டிருப்பதால்) அந்தணர்களால் கூடக் கண்டுபிடிக்க இயலாது. நான் விவரித்த பண்புகள் கொண்ட {மக்கள் வசிக்கும்} பகுதியில்தான் ஞானியான யுதிஷ்டிரன் மாறுவேடத்தில் வசிக்க வேண்டும். அவனின் {யுதிஷ்டிரனின்} சிறந்த வாழ்வு முறையைக் குறித்து மேலும் எதையும் சொல்ல நான் துணிய மாட்டேன். இவை யாவையும் நினைத்துப் பார்த்து, ஓ! குருகுலத்தின் இளவரசே {துரியோதனா}, உண்மையில் என் மீது நீ ஏதாவது நம்பிக்கை கொண்டிருந்தாயானால், எது நன்மையைத் தரும் என்று நீ நினைக்கிறாயோ அதைக் காலந்தாழ்த்தாமல் செய்" என்றார் {பீஷ்மர்}.
தொடரும்..
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள்  

No comments:

Post a Comment