Friday, April 1, 2022

Mahabharata part 49 in tamil

மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-49
..
ஆதிபர்வம்
..
இந்திரன் அர்ஜுனன் மோதல்
...
வைசம்பாயனர் சொன்னார்,
"தேர் வீரர்களில் முதன்மையான அவர்கள் இருவரும், தங்கள் தேர்களில் ஏறிக் கானகத்தின் எதிர் எதிர்ப் புறங்களில் தங்களை நிறுத்திக் கொண்டு, அந்தக் காண்டவ வனத்தில் வசித்த அனைத்து உயிரினங்களையும் படுகொலை செய்யத் தொடங்கினர்.
காண்டவ வனவாசி உயிரினங்கள் எந்த இடத்திலெல்லாம் தப்ப நினைத்தனவோ அங்கெல்லாம் அந்தப் பெரும் வீரர்கள் விரைந்தனர் (அவை தப்புவதைத் தடுக்க).
 நிச்சயமாக அந்த இரு தேர்களும் ஒன்றாகவே தெரிந்தன. அந்த இருவீரர்களும் கூட ஒருவராகவே தெரிந்தனர்.
அந்தக் கானகம் அவ்வாறு எரிந்து கொண்டிருக்கையில், நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் உயிரினங்கள் பயங்கரமான கதறல்களை எழுப்பி எல்லாத் திசைகளிலும் ஓடின.
சிலவற்றிற்குக் குறிப்பிட்ட உறுப்புகள் எரிந்திருந்தன. சில அதிகமான வெப்பத்தால் பொசுங்கிப் போயின. சில வெளியே வந்தன, சில அச்சத்தால் ஓடின.
சில உயிரினங்கள் தங்கள் குட்டிகளையும், சில பெரும் பாசத்தால் தங்கள் தாய் தந்தையரையும், தமையன்களையும் அரவணைத்துக் கொண்டு, யாரையும் கைவிட முடியாமல், தங்கள் அன்புக்குரியவர்களுடன் சேர்ந்து அமைதியாக இறந்தன.
 பல விலங்குகள் தங்கள் உதடுகளைக் கடித்துக் கொண்டு மேலெழுந்தவாரியாக எழுந்து, விரைவில் நெருப்பாகக் கீழே விழுந்தன.
 சில தரையில் உருண்டு இறக்கைகளும், கண்களும், பாதங்களும் பொசுங்கி எரிந்து இறந்தன. இந்த உயிரினங்கள் அனைத்தும் விரைவாக அழிந்தன.
 அந்தக் கானகத்தின் குளங்களும், ஏரிகளும் நெருப்பால் சுடப்பட்டுக் கொதிக்க ஆரம்பித்தன; அதிலிருந்த மீன்களும் ஆமைகளும் அனைத்தும் அழிந்தன.
அந்தக் கானகவாழ் உயிர்களின் பெரும் படுகொலையைக் கண்ட போது, நெருப்பே பல வடிவங்களை ஏற்றதைப் போல பல விலங்குகளின் உடல்கள் அனைத்தும் எரிந்து போய் நெருப்பாகக் கிடந்தன.
 இறகுகளைக் கொண்டு பறந்து தப்பிக்க நினைத்த பறவைகள், அர்ஜுனனின் கணைகளால் துண்டுகளாக அறுக்கப்பட்டுத் தரையில் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் {நெருப்பு எனும் பூதத்தில்} விழுந்தன.
அர்ஜுனனின் கணைகளால் துளைக்கப்பட்ட பறவைகள் புறங்களனைத்திலிருந்தும் அந்த எரியும் காட்டுக்குள் பேரிரைச்சலுடன் விழுந்தன.
 கணைகளால் தாக்குண்ட அக்கானக வாசிகள் பேரொலியுடன் ஓலமிடவும் கதறவும் தொடங்கின. அங்கே எழுந்த ஓலம் (பழங்காலத்தில்) பாற்கடலைக் கடைந்த போது ஏற்பட்ட பயங்கர ஓலத்தைப் போல இருந்தது.
சுடர் விட்டு எரியும் அந்தப் பெரும் நெருப்பின் சுடர்கள் வானத்தை எட்டின. அப்படி வானத்தை எட்டிய சுடர்களால் தேவர்களும் பெருந்துன்பத்துக்கு உள்ளாகினர்.
அந்தச் சிறப்புவாய்ந்த சொர்க்கவாசிகள் அனைவரும் சேர்ந்து உடலெல்லாம் ஆயிரம் கண் கொண்டவனும், நூறு வேள்விகள் செய்வனும், அசுரர்களைக் கொன்றவனுமான தங்கள் தலைவனிடம் {இந்திரனிடம்} சென்றனர். இந்திரனை அணுகிய அந்தத் தேவர்கள்,
"ஓ மரணமற்றவர்களின் தலைவா, ஏன் அக்னி கீழிருக்கும் உயிரினங்களை எரிக்கிறான்? உலகத்தின் முடிவுக்கான நேரம் வந்துவிட்டதா?" என்று கேட்டனர்".
 "தேவர்களின் இந்த வார்த்தைகளைக் கேட்டும், அக்னியின் செயலைத் தானே கண்ட விருத்திரனைக் கொன்றவன் {இந்திரன்}, காண்ட வனத்தைப் பாதுகாக்கப் புறப்பட்டான்.
 தேவர்களின் தலைவனான வாசவன் {இந்திரன்}, அனைத்து வகையான மேகங்களால் முழு வானத்தையும் மறைத்து, அந்த எரியும் காட்டின் மேல் மழையைப் பொழியத் தொடங்கினான்.
இந்திரனால் ஆணையிடப்பட்ட நிறை அதிகமான அம்மேகங்கள் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் வந்து, போர்த்தேர்களின் கொடிக்கம்பத்தைப் போன்ற கனமுடைய அடர்த்தியான மழையைக் காண்டவ வனத்தின் மீது பொழிந்தன.
ஆனால் அந்த மழையும் பாதி வானத்தில் வந்து கொண்டிருக்கும் போதே, அந்தக் காட்டிலிருக்கும் நெருப்பின் வெப்பத்தால் மிகவும் வற்றிப் போனது. எனவே அந்த மழையின் நீர் கீழே இருக்கும் நெருப்பை அடையவே இல்லை.
  நமுசியைக் கொன்றவன் {இந்திரன்}, அக்னியிடம் கோபம் கொண்டு, பெரும் நிறை கொண்ட மேகங்களை அங்கே சேகரித்துக் கடும் மழையைப் பொழிந்தான்.
 அந்த அடர்த்தியான மழையால், நெருப்பு கட்டுக்குள் அடங்கியது. மேலே மேகங்களுடன் அந்தக் கானகமே புகையாலும், மின்னல் வெட்டாலும், நிறைந்து பார்ப்பதற்குப் பயங்கரமாக இருந்தது"
"பாண்டுவின் மகனான பீபத்சு {அர்ஜுனன்}, அற்புதமான ஆயுதங்களை அழைத்து, இந்திரனால் உண்டாகப்பட்ட மழையைத் தடுத்தான்
உயர் ஆன்ம அர்ஜுனன், சந்திரன் மூடுபனியால் சுற்று வட்டாரத்தை மறைப்பதைப் போலத் தனது ஆயுதங்களால் காண்டவ வனத்தை மறைத்தான்
 அந்தக் கானகத்திற்கு மேலிருந்த வானம் இப்படி அர்ஜுனனின் கணைகளால் மறைக்கப்பட்ட பிறகு, கீழே இருந்த எந்த உயிரினத்தாலும் தப்ப முடியவில்லை.
 அந்தக் கானகம் அப்படி எரிந்து கொண்டிருக்கும்போது, நாகர்கள் தலைவனான தக்ஷகன் அந்த இடத்தில் இல்லை. அவன் அந்த நேரத்தில் குருக்ஷேத்திரக் களத்திற்குச் சென்றிருந்தான்.
ஆனால், தக்ஷகனின் பெரும் பலம் வாய்ந்த மகன் அஸ்வசேனன் {Aswasena} அங்கிருந்தான். அவன் நெருப்பில் இருந்து தப்பிக்கப் பெரும் முயற்சிகளை எடுத்தான்.
ஆனால் அர்ஜுனனின் கணைகளால் அடைக்கப்பட்டதால், எந்த வழியையும் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது ஒரு பாம்பின் மகளாகிய அவனது தாய், அவனை முதலில் விழுங்கி அவனைக் காக்க நினைத்தாள்.
அவனது தாய் முதலில் அவனது தலையை விழுங்கினாள். பிறகு அவனது வாலை விழுங்கினாள். தனது மகனின் வாலை விழுங்கிக் கொண்டிருக்கும்போதே அந்தக் கடற்பாம்பு {அஸ்வசேனனின் தாய்} (பூமியில் இருந்து} ஆகாயத்தில் எழுந்தாள்.
ஆனால் அவள் தப்புவதைக் கண்ட அர்ஜுனன், தனது கூரிய நுணுக்கமான கணையால் அவளது உடலில் இருந்து தலையைக் கொய்தான். இவற்றையெல்லாம் கண்ட வஜ்ரதாரியான இந்திரன், தனது நண்பனின் மகனைக் காக்க எண்ணிக் கடும் காற்றை எழுப்பி, அர்ஜுனனை நினைவு தவறச் செய்தான். கிடைத்த அந்தக் கணநேரத்தில் அஸ்வசேனன் தப்புவதில் வெற்றியடைந்தான்
அச்சந்தடரும் மாயசக்தியின் வெளிப்பாட்டைக் கண்ட அர்ஜுனன், பாம்பால் ஏமாற்றப்பட்டதால் பெரும் கோபம் அடைந்தான். முன்னும் பின்னுமாக உடன் சென்று வான் வழியாகத் தப்பிக்க நினைத்த அனைத்து விலங்குகளையும், இரண்டாகவும், மூன்றாகவும், பல துண்டுகளாகவும் வெட்டிப் போட்டான்.
 கோபம் கொண்ட பீபத்சுவும் {அர்ஜுனனும்}, அக்னியும், வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, வஞ்சகமாகத் தப்பிய அந்தப் பாம்பை, "நீ ஒருபோதும் புகழடையோ, நிலையையோ அடைய மாட்டாய்" என்று சபித்தனர்.
தன்னை ஏமாற்றிய அந்த நிகழ்வை நினைத்த ஜிஷ்ணு {அர்ஜுனன்} மிகுந்த கோபம் கொண்டு கணைகள் எனும் மேகத்தால் வானத்தை மறைத்து, ஆயிரம் கண்கள் உடைய இந்திரனிடம் மோத முற்பட்டான்.
தேவர்கள் தலைவனும் அர்ஜுனனின் கோபத்தைக் கண்டு, அவனுடன் மோத முற்பட்டுத் தனது கடும் ஆயுதங்களை வீசி, வானத்தின் பெரும் பகுதியை மறைத்தான்.
பெரும் முழக்கத்தோடு இருந்த காற்று, பெருங்கடல்களைக் கலக்கி, வேகமான நீர்த்தாரைகளை கொண்ட பெரும் மேகத் திரள்களை மொத்தமாகக் கொண்டு வந்தது.
அந்த மேகத்திரள்கள் இடியையும், பயங்கரமான மின்னற்கீற்றுகளையும் வெளியிட்டன. காரணங்களின் அறிவைக் கொண்ட அர்ஜுனன், அந்த மேகங்களை விலக்க,
வாயவ்யா என்ற அற்புதமான ஆயுதத்தை அதற்கு உரிய மந்திரங்களுடன் செலுத்தினான். அந்த ஆயுதத்தால், இந்திரனுடைய இடியின் சக்தியும், அந்த மேகங்களும் அழிக்கப்பட்டன. வேகமான நீர்த்தாரைகளாலான மழையால் நிறைந்த அந்த மேகங்கள் அனைத்தும் வற்றச் செய்யப்பட்டன. அங்கே விளையாடிக் கொண்டிருந்த மின்னலும் அகற்றப்பட்டது.
 சிறிது நேரத்திலேயே வானம் புழுதி மற்றும் இருள் அற்றுக் காணப்பட்டது. அருமையான குளிர்ந்த தென்றல் அங்கு வீசியது. சூரிய வட்டில் இயல்பு நிலைக்குத் திரும்பியது.
 தெளிந்த நெய்யை உண்பவன் {அக்னி}, தடை செய்ய யாரும் இல்லாததால், பல வடிவங்களை ஏற்று, உயிரினங்களின் உடலில் இருந்து கசிந்த கொழுப்புகளைத் தெறிக்க வைத்து, அவனது அனைத்துச் சுடர்களையும் வெளியிட்டுப் பிழம்பாக எரிந்து, அண்டத்தையே தனது முழக்கத்தால் நிறைத்தான்.
அற்புதமான இறகுகள் கொண்ட கருட குலத்தைச் சேர்ந்த எண்ணிலடங்காப் பறவைகள், அந்தக் காடு கிருஷ்ணனாலும் அர்ஜுனனாலும் தாக்கப்படுவதைக் கண்டு, அந்த வீரர்களைத் தங்கள் இடிபோன்ற இறக்கைகளாலும், அலகுகளாலும், கூரிய நகங்களாலும் அடிக்க விரும்பிப் பெருமையுடன் வானில் இருந்து கீழிறங்கின.
நெருப்பைக் கக்கும் முகம் கொண்ட எண்ணிலடங்கா நாகர்களும் மேலிருந்து கீழிறங்கி அர்ஜுனனை அணுகி, எந்நேரமும் கொடும் விஷத்தைக் கக்கிக் கொண்டிருந்தன.
அவர்கள் அணுகுவதைக் கண்ட அர்ஜுனன் தனது கோபத்தால் உண்டான நெருப்பில் வாட்டப்பட்ட கணைகளைக் கொண்டு அவர்களைத் துண்டுகளாக வெட்டிப் போட்டான். உயிரிழந்த அந்தப் பறவைகளும், பாம்புகளுடன் கீழே எரிந்து கொண்டிருந்த பூதத்தில் {ஐம்பூதத்தில் ஒன்றான நெருப்பில்} விழுந்தன.
அங்கே போர்புரிய விரும்பி எண்ணற்ற அசுரர்களும், கந்தர்வர்களும், யக்ஷர்களும், ராட்சசர்களும், நாகர்களும் அச்சத்தையூட்டும்படி உரக்கக் கதறிக் கொண்டே வந்தனர்.
 அவர்கள் பெரும் கோபத்தால் தங்கள் சக்தியும் வீரமும் தூண்டப்பட்டுத் தமது தொண்டைக்குழியில் இருந்து (வாயிலிருந்து) இரும்புக் குண்டுகளையும், வெடிகுண்டுகளையும் கக்கும் இயந்திரங்களையும், பெரிய கற்களை உந்தித் தள்ளும் கவண்களையும், ஏவுகணைகளையும் எடுத்துக் கொண்டு, கிருஷ்ணனையும் பார்த்தனையும் தாக்க வந்தனர்.
ஆனால், அவர்கள் ஆயுதங்களை மழையெனச் சரியாகப் பொழிந்தாலும், பீபத்சு {அர்ஜுனன்} அவர்களுக்கு நிந்தனை செய்யும் வகையில் பதில் சொல்லி, அவர்களது தலையைத் தனது கூரிய கணைகளால் அடித்தான்.
எதிரிகளைக் கொல்லும், பெரும் சக்தி கொண்ட கிருஷ்ணனும் தைத்தியர்களையும், தானவர்களையும் தனது சக்கரத்தால் படுகொலை செய்தான்.
அளவிலாப் பலம் கொண்ட பல அசுரர்கள், கிருஷ்ணனின் கணைகளால் துளைக்கப்பட்டும், சக்கரத்தின் வலுவால் தாக்கப்பட்டும், தனித்து விடப்பட்டு வழி தவறிக் கிடக்கும் அனாதைக் குழந்தையைப் போல அலைகளின் கடுமையைக் கொண்ட கரையில் அசைவற்றுக் கிடந்தனர்.
 தேவர்கள் தலைவனான சக்ரன் {இந்திரன்}, தனது வெள்ளைக் குதிரையில் ஏறி, அந்த வீரர்களிடம் விரைந்து, பொய்க்காத தனது இடி ஆயுதத்தை {வஜ்ராயுதத்தை} எடுத்துப் பெரும் பலத்துடன் ஏவினான்.
 பிறகு அந்த அசுரர்களைக் கொல்பவன் {இந்திரன்}, தேவர்களிடம், "இந்த இருவரும் கொல்லப்பட்டனர்" என்று சொன்னான்.
கடுமையான வஜ்ர ஆயுதத்தை இந்திரன் ஏவப்போவதைக் கண்ட தேவர்கள் ஆளாளுக்கு அவர்களுடைய ஆயுதங்களை எடுத்துக் கொண்டனர்.
 யமன் மரணத்தைக் கொடுக்கும் கதாயுதத்தையும், குபேரன் முள் பதித்த கதாயுதத்தையும் {பரிகத்தையும்}, வருணன் சுருக்கு {பாசக்} கயிற்றையும், அழகிய ஏவுகனையையும்,
 ஸ்கந்தன் (கார்த்திகேயன்) {முருகன்} தனது சக்தி ஆயுதத்தையும் {வேலையும்} எடுத்துக் கொண்டு மேரு மலையென அசையாது நின்றார்கள். அஸ்வினி தேவர்கள் தங்கள் கரங்களில் பிரகாசமிக்கச் செடிகளுடன் நின்றனர்.
 தாத்ரி {படைப்பாளன்} தனது கையில் வில்லுடனும், ஜெயா தனது கையில் கதையுடனும், பெரும் பலம் கொண்ட துவஷ்திரி கோபம் கொண்டு பெரும் மலையைத் தூக்கிக் கொண்டும்,
 சூரியன் பிரகாசமான கணையுடனும், மிருத்யு போர்க்கோடரியுடனும், ஆர்யமான் கூர்முனை கொண்ட கனத்த தண்டத்துடனும்,
மித்ரன் கத்தி போன்ற கூர்மையுடைய சக்கரத்துடனும் நின்றனர்.
 பூஷன், பகன், சாவித்ரி {ஸவிதா} ஆகியோர்,
கைகளில் விற்களும், வளைந்த பட்டா கத்திகளும் கொண்டு, கோபத்துடன் கிருஷ்ணனிடமும் பார்த்தனிடம் {அர்ஜுனனிடமும்} விரைந்தனர்.
ருத்ரர்களும், வசுக்களும், பலம்வாய்ந்த மருத்துகளும்,
விஸ்வதேவர்களும், சத்யஸ்களும் தங்கள் சக்தியாலேயே பிரகாசமாக இருக்கும் பல தேவர்களும் கைகளில் பல ஆயுதங்களுடன் அந்த உயர்ந்த மனிதர்களான கிருஷ்ணனிடமும் பார்த்தனிடமும் {அர்ஜுனனிடமும்} அவர்களை அடித்து வீழ்த்த விரைந்தனர். விரைவில் ஏதோ நிகழப் போவதை முன்னறிவிக்குமாறு அந்தப் பெரும் மோதல் இருந்தது.
தீச்சகுனங்கள் தோன்றின. பல உயிர்களின் உணர்வுகள் அங்கே கொள்ளை போவது தெரிந்தது. அண்டக் கலைப்புக்கான {பிரளயத்துக்கான} நேரம் வந்ததைப் போலக் காட்சியளித்தது. ஆனால், அச்சமற்ற போரில் தோல்வியுறாத அர்ஜுனனும் கிருஷ்ணனும், மோதத் தயாராக இருக்கும் சக்ரனையும் {இந்திரனையும்} தேவர்களையும் கண்டு, கைகளில் வில்லுடன் அமைதியாகக் காத்திருந்தனர். போரில் திறன் பெற்ற அந்த வீரர்கள், பெரும் கோபம் கொண்டு அந்தத் தேவர்களை நோக்கி முன்னேறி, இடியைப் போன்ற தங்கள் கணைகளைத் தொடுத்தனர்.
தொடர்ச்சியாகக் கிருஷ்ணனாலும் அர்ஜுனனாலும் தாக்கப்பட்ட அந்தத் தேவர்கள், கடைசியாக அச்சமுற்றுப் போர்க்களத்தை விட்டு அகன்று, இந்திரனின் பாதுகாப்பைக் கோரினர். மாதவனிடமும் {கிருஷ்ணனிடமும்} அர்ஜுனனிடமும் தோல்வியுற்ற தேவர்களைக் கண்டு,
 வானில் சாட்சிகளாக நின்று கொண்டிருந்த முனிவர்கள் அச்சரியமடைந்தனர். அவர்களது ஆற்றலை சாட்சியாகத் தொடர்ந்து கண்ட சக்ரன் {இந்திரன்},
அவர்களிடம் பெரும் மனநிறைவு கொண்டு, மீண்டும் தாக்குதல் நடத்த விரைந்தான். பகனைத் தண்டித்தவன் {இந்திரன்} இடது கையாலும் வில்லின் நாண் இழுக்க வல்ல அர்ஜுனனின் வீரத்தை உறுதி செய்ய நினைத்து, கற்களை மிக அடர்த்தியான மழையாகப் பொழிந்தான். பெரும் கோபம் கொண்ட அர்ஜுனன் தனது கணைகளை அடர்த்தியான மழையாகப் பொழிந்து அவற்றை விலக்கினான்.
ஆயிரம் வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்}, தனது கல் மழை தடுக்கப்பட்டதைக் கண்டு, இன்னும் அடர்த்தியாகக் கற்களைப் பொழிந்தான்.
 ஆனால் பகனைத் தண்டித்தவனின் மகன் (அர்ஜுனன்) அந்தக் கல் மழையைத் தனது வேகமான கணைகளால் தடுத்துத் தன் தந்தையை {இந்திரனை} மனநிறைவு கொள்ளச் செய்தான்.
 பாண்டுவின் மகனை அடிக்க நினைத்த சக்ரன் {இந்திரன்}, மந்தர மலையின் சிகரம் ஒன்றைத் தனது கையால் பெயர்த்தெடுத்து, அவன் {அர்ஜுனன்} மீது வீசினான்.
ஆனால், அர்ஜுனன், நெருப்பு வாய்க் கொண்ட தனது வேகமான கணைகளால், அந்த மலைச் சிகரத்தை ஆயிரம் துண்டுகளாகச் சிதறச் செய்தான்.
 வானிலிருந்து விழுந்த அந்த மலைத்துண்டுகளைப் பார்ப்பதற்கு, ஏதோ சூரியனும், சந்திரனும், கோள்களும் தங்கள் இடத்திலிருந்து நகர்ந்து பூமியை நோக்கி விழுந்து கொண்டிருப்பதைப் போலத் தோன்றியது.
அந்தப் பெரும் சிகரத்தின் துண்டுகள் கானகத்தில் விழுந்து, அந்தக் காண்டவ வனத்தில் வசித்த எண்ணிலடங்கா உயிரினங்களை அழித்தது"
"அந்தக் காண்டவ வன வாசிகளான, தானவர்கள், ராட்சசர்கள், நாகர்கள், ஓநாய்கள், கரடிகள் மற்றும் மற்ற காட்டு விலங்குகள், மதம் கொண்ட யானைகள், புலிகள், பிடரி மயிர் கொண்ட சிங்கங்கள், மான்கள், நூற்றுக்கணக்கான எருமைகள், பறவைகள், பல்வேறு மற்ற உயிரினங்கள் அனைத்தும் விழுந்து கொண்டிருக்கும் கற்களால் பயந்து, மிகுந்த துயரத்துக்கு உள்ளாகி திசைகள் அனைத்திலும் தப்பி ஓடத் தொடங்கின.
அவை (திசையெங்கும் பற்றி எரியும்} கானகத்தையும், ஆயுதத்துடன் ஆயத்தமாக நிற்கும் கிருஷ்ணனையும், அர்ஜுனனையும் கண்டன. தெளிவாகக் கேட்கும் பயங்கரமான சத்தங்களால் பயம் கொண்ட அந்த உயிரினங்கள் தங்கள் நகரும் சக்தியை இழந்தன.
 பல இடங்களில் கானகம் பற்றி எரிவதையும், தனது ஆயுதங்களுடன் தங்களைத் தாக்கத் தயாராக நிற்கும் கிருஷ்ணனையும் கண்ட அவை, அச்சத்துடன் கதறின.
அந்தப் பயங்கர ஆரவாரத்தாலும், நெருப்பின் சீற்றத்தாலும், மொத்தச் சுற்றுப்புறமே எச்சரிக்கும் மேகங்களைப் போலப் பேரொலி நிறைந்ததாக இருந்தது.
கரிய நிறம் கொண்ட, பலம் நிறைந்த கேசவன் {கிருஷ்ணன்} அவற்றை அழிக்க, தீ கக்குவதும், தன் சக்தியாலேயே பிரகாசிப்பதுமான தனது பெரிய சக்கரத்தைச் சுழற்றி வீசினான்.
 தானவர்களும் ராட்சசர்களும் அடங்கிய அந்தக் கானகவாசிகள், அந்த ஆயுதத்தால் தாக்கப்பட்டு, நூறு துண்டுகளாக வெட்டப்பட்டு, அக்னியின் வாயில் விழுந்தனர்.
கிருஷ்ணனின் சக்கரத்தால் சிதைக்கப்பட்ட அந்த அசுரர்கள், அவர்களது கொழுப்பிலும் ரத்தத்தில் நனைந்து மாலை நேர மேகங்கள் போல இருந்தனர்.
அந்த விருஷ்ணி குலத்தவன் {கிருஷ்ணன்}, காலனே நேராக வந்து அங்கு நடப்பது போல, பிசாசங்களையும், பறவைகளையும், நாகர்களையும் மற்ற விலங்குகளையும் ஆயிரக்கணக்கில் கொன்று நகர்ந்து கொண்டிருந்தான்.
 எதிரிகளைக் கொல்பவனான கிருஷ்ணனின் கரங்களில் இருந்து தொடர்ந்து வீசப்பட்ட அந்தச் சக்கரம், எண்ணிலடங்கா உயிரினங்களைக் கொன்று மீண்டும் மீண்டும் அவன் கரங்களுக்கே திரும்பிக் கொண்டிருந்தது.)
படைக்கப்பட்ட அனைத்து உயிர்களின் ஆன்மாவான கிருஷ்ணனின் உருவமும் முகமும், அவன் பிசாசங்களையும், நாகர்களையும், ராட்சசர்களையும் கொன்று கொண்டிருக்கும்போது பார்ப்பதற்கு மிகக்கடுமையாக இருந்தது.
அங்கே கூடியிருந்த தேவர்களில் யாரும் கிருஷ்ணனையோ அர்ஜுனனையோ வீழ்த்த முடியவில்லை.
கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனன் ஆகியோரின் பலத்தால் எரிந்து கொண்டிருந்த கானகத்தை இனி காக்க முடியாது என்று கண்ட தேவர்கள், காட்சியில் இருந்து மறைந்தார்கள்.
பிறகு, இந்திரன், தேவர்கள் பின்வாங்கியதைக் கண்டு, மிகுந்த மகிழ்ச்சியடைந்து, கிருஷ்ணனையும், அர்ஜுனனையும் பாராட்டினான்.
தேவர்கள் போரிடுவதைக் கைவிட்டதும், வடிவமற்ற ஒலியானது {அசரீரி}, நூறு வேள்விகளைச் செய்தவனிடம் {இந்திரனிடம்} ஆழமான பேரொலியுடன்,
 "உனது நண்பனான பாம்புகளின் தலைவன் தக்ஷகன் கொல்லப்படவில்லை! காண்டவ வனம் எரியூட்டப்படும் முன்பே அவன் குருக்ஷேத்திரத்திற்குச் சென்று விட்டான்.
ஓ வாசவா {இந்திரா}, வாசுதேவனும் {கிருஷ்ணனும்], அர்ஜுனனும் போர்க்களத்தில் யாராலும் வீழ்த்தப்பட முடியாதவர்கள் என்பதை எனது வார்த்தைகளால் அறிந்து கொள்வாயாக.
 அவர்கள் {கிருஷ்ணனும், அர்ஜுனனும்} சொர்க்கவாசிகளால் கேள்விப்படப்படும் பழங்கால தேவர்களான நரனும் நாராயணனும் ஆவர்.
 அவர்களது சக்தியையும், ஆற்றலையும் குறித்து நீ அறிவாய். போர்க்களத்தில் வெல்லப்பட முடியாத இந்தப் பழங்காலத்துச் சிறந்த முனிவர்கள், உலகத்தில் யாராலும் வெல்லப்பட முடியாதவர்களாவர்.
 அவர்கள் தேவர்களாலும் அசுரர்களாலும், யக்ஷர்களாலும், ராட்சசர்களாலும், கந்தர்வர்களாலும், மனிதர்களாலும், கின்னரர்களாலும், நாகர்களாலும் மதிக்கப்பட வேண்டியவர்கள்.
எனவே, ஓ வாசவா {இந்திரா}, அனைத்துத் தேவர்களுடன் சேர்ந்து நீயும் இந்த இடத்தை விட்டுச் செல்வதுதான் உனக்குத் தகுந்ததாகும். காண்டவத்தின் அழிவு விதியால் நிர்ணயிக்கப்பட்டது!" என்றது {அந்த அசரீரி}
இறவாதவர்களின் தலைவன் {இந்திரன்} அந்த வார்த்தைகளை உண்மை என்று ஏற்றுத் தனது கோபத்தையும், பொறாமையையும் கைவிட்டுச் சொர்க்கத்திற்குத் திரும்பினான்.
 சொர்க்கவாசிகள், சிறப்புமிகுந்த இந்திரன் போரைக் கைவிட்டதைக் கண்டு, தங்கள் படைவீரர்கள் அனைவருடன் அவனைப் பின்தொடர்ந்தனர்.
பிறகு, வீரர்களான வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும், தேவர்கள் பின்வாங்குவதைக் கண்டு சிங்கமுழக்கம் செய்தனர்.
   இந்திரன் காட்சியை விட்டு அகன்றதும், கேசவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டனர். அந்த வீரர்கள், கானகம் எரிவதற்கு அக்னிக்கு அச்சமற்றுத் துணை புரிந்தார்கள்.
காற்று மேகங்களைச் சிதற வைப்பது போல, அர்ஜுனன் தேவர்களைச் சிதற வைத்தான். அந்தக் கானகத்தில் வசித்த எண்ணற்ற உயிர்களைத் தனது கணை மழையால் கொன்றான்.
அர்ஜுனனின் கணைகளால் வெட்டப்பட்ட கணக்கற்ற உயிர்களில் ஒன்று கூட, அந்த எரியும் கானகத்திலிருந்து தப்ப முடிய வில்லை.
போரிடுவதைத் தவிர்த்து, அங்கிருந்த பலம்வாய்ந்த உயிரினங்கள் அர்ஜுனனின் கணை பொய்த்துப் போவதைக் காண முடியவில்லை.
 சில நேரங்களில் ஒரு கணையால் நூற்றுக்கணக்கான உயிர்களையும், சில நேரங்களில் ஓர் உயிரை நூற்றுக்கணக்கான கணைகளாலும் துளைத்துக் கொண்டே அர்ஜுனன் தனது தேரில் நகர்ந்தான். உயிரற்ற அந்த விலங்குகள், காலனால் தாக்கப்பட்டவை போலத் தாமாகவே அக்னியின் (நெருப்பு தேவன்) வாயில் விழுந்தன.
ஆற்றங்கரைக்குச் சென்றாலும், சமமற்ற தரைக்குச் சென்றாலும், சுடுகாட்டுக்குச் சென்றாலும், எங்குச் சென்றாலும் அந்த உயிரினங்கள் வெப்பத்தால் பீடிக்கப்பட்டன.
பல விலங்குகள் வலியால் கதறின. யானைகளும், மான்களும், ஓநாய்களும் துன்பத்தால் கதறின.அவ்வொலிகளைக் கேட்டு கங்கையிலும் கடலிலும் இருந்த மீன்களும், அந்தக் கானகத்தில் வசித்த வித்யாதரர்கள் என்ற பல்வேறு இனங்களும் பேரச்சத்துக்கு உள்ளாகின.
 அவர்களுடன் தனியாகச் சண்டைக்கு நின்ற எந்த உயிரினத்தாலேயும் கரிய நிறம் கொண்ட அர்ஜுனனையும், ஜனார்த்தனனையும் {கிருஷ்ணனையும்} காணக்கூட முடியவில்லை.
ஹரி {கிருஷ்ணன்} தன்னை நோக்கி விரைந்து வந்த ராட்சசர்களையும், தானவர்களையும், நாகர்களையும் தனது சக்கரத்தால் {சக்கராயுத்தால்} கொன்றான்.
 சக்கரத்தின் வேகமான நகர்வால் பெரும் உடல்களில் இருந்த தலைகள் கொய்யப்பட்டு, உயிர் மாய்க்கப்பட்ட அவர்களது உடல்கள் எரியும் நெருப்புக்குள் விழுந்தன.
பெரும் அளவிலான சதை, குருதி, கொழுப்பு ஆகியவற்றால் பெரும் மனநிறைவுக் கொண்ட சுடர்கள், சுருள்புகை இல்லாமல் பெரும் உயரத்திற்கு எழுந்தன.
 பிரகாசமான தாமிரக் கண்களையுடைய ஹுதாசனன் (அக்னிதேவன்), எரியும் நாவுடனும், பெரிய வாயுடனும், நெருப்புப் போன்ற கூந்தலுடனும் இருந்தான். கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனின் உதவியால், தேன் ஊற்றைக் குடிப்பது போல விலங்குகளின் கொழுப்பைக் குடித்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தான். நிறைவடைந்த அக்னி பெரும் இன்பம் அடைந்தான்.
 மதுவைக் கொன்றவன் {மதுசூதனனான கிருஷ்ணன்}, தக்ஷகனின் வசிப்பிடத்திலிருந்து {வீட்டிலிருந்து} மயன் எனும் அசுரன் தப்புவதை திடீரெனக் காண நேர்ந்தது.
 வாயுவை தேரோட்டியாகக் கொண்டவனும், தலையில் சடமுடி தரித்தவனும், நெருப்பே உடலாகக் கொண்டவனுமான அக்னி, அந்த அசுரனைக் கண்டு, மேகங்களைப் போல முழங்கிக் கொண்டு அவனை {மயனை} உட்கொள்ள விரும்பி அவனைப் பின்தொடர்ந்து சென்றான்.
அசுரனைக் {மயாசுரனைக்} கண்ட கிருஷ்ணன், தனது சக்கரத்தை உயர்த்திப் பிடித்தபடி அவனைத் தாக்க ஆயத்தமாக நின்றான். மாயாசுரனை எரித்துவிட எண்ணிய அக்னி, அவனைப் பின்னாலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்போது மயன், "ஓ அர்ஜுனா, என்னிடம் வேகமாக வா, என்னைக் காப்பாற்றுவாயாக" என்றான். இந்த அச்சம் கலந்த குரலைக் கேட்ட அர்ஜுனன், "அஞ்சாதே" என்றான்.
 அர்ஜுனனின் அந்தக் குரல், , மயனுக்கு உயிரைக் கொடுத்தது போல இருந்தது. பிருதையின் {குந்தியின்} கருணை கொண்ட மகன் {அர்ஜுனன்} மயனிடம் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை என்று சொன்னதால், அதற்கு மேலும் தசார்ண குலத்தைச் சேர்ந்தவன் {கிருஷ்ணன்}, நமுசியின் சகோதரனான மயனைக் கொல்ல விரும்பவில்லை. அக்னியும் அவனை எரிக்கவில்லை".
 "நுண்ணறிவைக் கொடையாகக் கொண்டவனான அக்னி, இந்திரனால் பாதுகாக்கப்பட்டக் கானகத்தைக் கிருஷ்ணன் மற்றும் பார்த்தனின் {அர்ஜுனனின்} தயவால் பதினைந்து நாட்களுக்கு எரித்தான். அந்தக் கானகம் எரிந்த போது அக்னி அந்தக் கானகவாசிகளில் ஆறு பேரை மட்டுமே விட்டு வைத்தான். அவர்கள் அஸ்வசேனன் {தக்ஷகனின் மகன்}, மயன், மற்றும் நான்கு சாரங்கப் பறவைகள் ஆகிய அறுவர் ஆவர்" {என்றார் வைசம்பாயனர்}.
..
தொடரும்
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள்

No comments:

Post a Comment