*Source: ஸ்ரீ குருகிருபா விலாஸம்*
*தொகுத்தவர்*
*ஸ்ரீ ஞானானந்த பாரதீ ஸ்வாமிகள் (முன்னாள் ஸ்ரீ ஆர். கிருஷ்ணஸ்வாமி அய்யர், திருநெல்வேலி)*
*1.பீடாரோஹணம்*
ஸ்ரீ சிருங்ககிரி க்ஷேத்திரத்தில் ஸ்ரீமத் சங்கரபகவத் பாதாசார்யாரவர்களால் ஏற்படுத்தியிருக்கும் தக்ஷிணாம்னாய வியாக்யான ஸிம்ஹாஸனத்தில் 34 வது பட்டத்திலமர்ந்து ஸ்ரீ ஜகத்குரு பீடாதிபத்யத்தை வஹித்து விளங்கி வந்த ஸ்ரீ சந்திர சேகர பாரதீ ஸ்வாமிகள் அவர்கள் நந்தன வருஷம் ஆச்வயுஜ மாஸம் கிருஷ்ண ஏகாதசியும் மகாநக்ஷத்திரமும் கூடிய ஞாயிற்றுக் கிழமை (1892 அக்டோபர் 16) காலையில் அவதரித்தார்கள். அவர்களுக்கு ஜந்மபூமியே சிருங்ககிரிதான். அவர்கள் தகப்பனார் கோபால சாஸ்திரிகள். தாயார் லக்ஷ்மியம்மாள். பிதாமஹரான ஸுப்பா சாஸ்திரிகள் பால்யத்திலேயே நன்கு வித்யாப்யாஸம் செய்து விரக்தராக ஹிமாசலப்பிராந்த்யம் புறப்பட்டுப் போயிருந்த தாகவும் அவரை அக்காலம் பீடாதிபத்யம் வஹித்து வந்த ஸ்ரீ நரஸிம்ஹ பாரதீ ஸ்வாமிகள் திருப்பி வரவழைத்து விசேஷமாக அநுக்ரஹித்து ஸ்ரீ மடத்திலேயே ஆஸ்தான வித்வானாக வைத்துக்கொண்டதாகவும் தெரிகிறது.
அவருடைய ஒரே புத்திரரான கோபால சாஸ்திரிகளும் நல்ல பாண்டித்யத்துடன் விளங்கிக்கொண்டு கிருஹஸ்த தர்மத்தை அனுஷ்டித்து வருகையில் பதிநான்கு குழந்தைகள் ஜனித்ததில் தைவ கதியால் பதிமூன்று குழந்தைகள் தவறி, ஆசார்ய பீடத்திற்கு ஏற்படவிருக்கும் நரஸிம்ஹன் என்கிற இந்த புத்திரர் மாத்திரம் ஆயுர்யோகத்துடனிருந்தார். ஏதோ பாபத்தினால் தனக்கு குழந்தைகள் தக்கவில்லையென்று உணர்ந்த பெற்றோர்கள் இக்குழந்தையாவது ஜீவித்து இருக்க வேண்டுமானால் தங்களை விட்டுப் பிரிந்திருப்பதே நலமென்று நினைத்து அப்பொழுது ஸ்ரீமடம் ஸர்வாதிகாரியாயிருந்த ஸ்ரீகண்ட சாஸ்திரிகளிடம் தெரிவித்ததன் பேரில், அவர் இப்பையனைத் தன் ஸம்ரக்ஷணையிலேயே வைத்துக்கொண்டு அநேகமாய் தன்
வீட்டிலேயே இருக்கும்படி செய்தார். சிருங்கேரியில் கன்னடமும் இங்கிலீஷும் கற்றுக் கொடுக்கிற பள்ளிக்கூடத்தில் இப்பாலகரைச் சேர்த்துவிட்டதில் தன்னுடைய புத்தி சக்தியினாலும் நன்னடத்தையாலும் உபாத்தியாயர்களுக்கு விசேஷ அபிமான பாத்திரராக இருந்துவந்தார்.
பூர்வ ஜந்ம புண்யத்தினால் இவருடைய பன்னிரண்டாவது வயதில் பூர்வாசார்யாரான ஸ்ரீ ஸச்சிதானந்த சிவாபிநவ ந்ருஸிம்ஹ பாரதீ ஸ்வாமிகளுடைய கடாக்ஷம் ஏற்பட்டது. இப்பாலகருடைய யோக்கியதையையும் பின் அடையக்கூடிய உன்னத ஸ்தானத்தையும் அவர்கள் நன்கு உணர்ந்தபடியால் இங்கிலீஷ் பள்ளிக்கூடத்தை விட்டுவிட்டு இவரை ஸ்ரீ மடத்தைச் சேர்ந்த ஸத்வித்யா ஸஞ்ஜீவினீ பாடசாலையில் சேரும்படி செய்தார்கள். பின்னால் இவருடைய ஸ்வச்சமான புத்தியைப் பற்றிப் பலவிதத்தில் தெரிந்து கொண்டு தர்க்க சாஸ்திரத்தில் விசேஷப் பயிற்சி ஏற்படும்படி வேண்டிய
ஏற்பாடு செய்தார்கள். ஸ்ரீமத் ஆசார்யாரவர்கள் காலடியில் ஸ்ரீமத் சங்கர பகவத்பாதாசார்யாரின் ஆலயத்தை பிரதிஷ்டை செய்து திரும்பி வரும் வழியில் பெங்களூரில் பாரதீய கீர்வாண ப்ரௌட வித்யா வர்த்தினீ என்ற பாடசாலை ஏற்படுத்தினார்கள். அப்படியே சிருங்கேரிக்கு வந்து சேர்ந்ததும் நரஸிம்ஹ சாஸ்திரிகளுடைய சாந்த ஸ்வபாவத்தையும், வித்யையை க்ரஹிப்பதில் உள்ள ஆர்வத்தையும், நித்ய கர்மானுஷ்டானத்தில் உள்ள சிரத்தையையும், குருவிடமும் தேவதையிடமும் உள்ள விசேஷமான பக்தியையும் நேரிற் கண்டு ஸந்தோஷமடைந்து,
*संसारनामकसरिन्नाथोत्तरणे तवास्ति यदि वाञ्छा । बालक शृणु मद्वचनं श्रुतिमस्तकसंमतं हितोदकम् ||*
*प्रविधाय सशिखवपनं छित्त्वा यज्ञार्थमादृतं सूत्रम् । स्वीकृतपारमहंस्यः स्थिरतरसाधनचतुष्टयोपेतः ॥*
*श्रद्धाभक्तियुतात्मा प्रविचारय तत्त्वमात्मनः सुचिरम् ।* *सद्गुरुमुखाम्बुजातसवदागमशीर्षवाक्यपीयूषैः ।।*
என்ற மூன்று சுலோகங்களால் விசேஷமாக அநுக்ரஹித்து வேதாந்த சாஸ்திரத்திற்கு மிகவும் உபயோகமான பூர்வமீமாம்ஸா
சாஸ்திரத்தைக் கற்றுக்கொள்வதற்காக அந்த பெங்களூர் பாடசாலைக்கே நரஸிம்ஹ சாஸ்திரிகளை அனுப்பி வேண்டிய ஸௌகர்யங்களைச் செய்து கொடுத்தார்கள். ஸ்ரீமத் ஆசார்யா ரவர்கள் இவர்களுக்கு ஸர்வ சாஸ்திரங்களிலும் பாண்டித்யம் ஏற்படுத்த வேண்டுமென்று ஸ்ரீ சாரதாம்பாளின் ஸன்னிதியில்,
*सर्वज्ञं श्रीनृसिंहं कुरु शिवदयिते सत्वरं मद्विनम्रम् ॥*
என்று நான்கு சுலோகங்களால் பிரார்த்தித்திருப்பதினாலும் மற்றும் பல காரணங்களாலும் தனக்குப் பின் இவர்களையே பீடத்தில் நியமனம் செய்வார்களென்று தோன்றும்படியிருந்தது.
*To be continued..*
No comments:
Post a Comment