மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-18
..
ஆதிபர்வம்
..
குரு குலத்தில் துரோணரிடம் கல்வி பயின்ற பாண்டவர்கள்,கௌரவர்கள்
..
வைசம்பாயனர் சொன்னார்,
"ஹஸ்தினாபுரத்துக்கு வந்த துரோணர், கிருபரின் இல்லத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். அவரது பலம் பொருந்திய மகன் அஸ்வத்தாமன், கிருபர் எடுக்கும் வகுப்புகளின் இடைவெளிகளில், குந்தியின் மகன்களுக்கு {பாண்டவர்களுக்கு} ஆயுதப் பயிற்சியைப் போதித்தான். இருப்பினும் அஸ்வத்தாமனின் ஆற்றலைக் குறித்து யாரும் அறிந்திலர்.
துரோணர் இப்படியே தனிமையில் தலைமறைவாகக் கிருபரின் இல்லத்தில் வசித்து வரும்போது, ஒரு நாள், அந்த வீர இளவரசர்கள் ஒன்றுசேர்ந்து, ஹஸ்தினாபுரத்தை விட்டு வெளியே வந்தனர்.
நகரத்தைவிட்டு வெளியே வந்து, ஒரு பந்தை வைத்து விளையாடிக் கொண்டும், மகிழ்ச்சியான இதயத்துடன் உலவிக் கொண்டும் இருந்தனர்.
அப்போது ஒரு சம்பவம் நடந்தது. அந்த இளவரசர்கள் வைத்து விளையாடிக் கொண்டிருந்த பந்து, ஒரு கிணற்றுக்குள் விழுந்தது.அந்த இளவரசர்கள் தங்களால் இயன்றவரை பந்தை கிணற்றிலிருந்து மீட்க முயற்சித்தனர்.
ஆனால் அந்த இளவரசர்களின் முயற்சிகளெல்லாம் பலனற்றுப் போயின.
அவர்கள் பந்தை எப்படி மீட்பது என்பதை அறியாமல் வெட்கத்துடன் ஒருவர் கண்களை மற்றவர் பார்த்துக் கவலையோடிருந்தனர்.
சரியாக அத்தருணத்தில் அவர்களின் அருகே, வறுமையால் தளர்ச்சியுற்று, மெலிந்து, அக்னிஹோத்ரம் செய்வதால் மேனி காய்ந்து, தனது அன்றாடச் சடங்குகளையும் வழிபாடுகளையும் முடித்து வந்திருந்த, கறுத்த நிறம் கொண்ட முதுமையான ஒரு பிராமணரைக் கண்டனர்(துரோணர்).
வெற்றியில் நம்பிக்கையிழந்திருந்த அந்த இளவரசர்கள், அந்தச் சிறப்புமிகுந்த பிராமணரைக் கண்டதும், உடனடியாக அவரைச் சூழ்ந்து கொண்டனர்.
நம்பிக்கையிழந்த அந்த இளவரசர்களைக் கண்ட துரோணர் , தனது திறமையை நினைத்துப் பார்த்து புன்னகைத்து அவர்களிடம்,
"உங்கள் க்ஷத்திரிய பலத்திற்கு இது அவமானம். உங்கள் ஆயுத நிபுணத்துவத்திற்கு இது அவமானம்! நீங்கள் பாரதக் குலத்தில் பிறந்தவர்களாயிற்றே! உங்களால் ஏன் அந்தப் பந்தை மீட்க முடியவில்லை?
இன்று எனக்கு இரவு உணவைத் தர நீங்கள் வாக்களித்தால், நான் இந்தப் புற்குச்சிகளினால் பந்தையும், நான் கீழே தூக்கி எறிந்து தொலையப்போகும் இந்த மோதிரத்தையும் வெளியே எடுக்கிறேன்" என்றார்.
இப்படிச் சொன்னவரான எதிரிகளை ஒடுக்கும் துரோணர், தனது மோதிரத்தை எடுத்து அந்தக் காய்ந்த {நீரில்லாத} கிணற்றுக்குள் தூக்கி எறிந்தார். அப்போது, குந்தியின் மகனான யுதிஷ்டிரன் துரோணரிடம்,
"ஓ! பிராமணரே நீர் அற்பப் பொருளைக் கேட்கிறீர். கிருபரின் அனுமதியுடன், எங்களிடம் இருந்து உமது காலத்திற்கும் நீர் கேட்கும் உணவை அடைவீராக" என்றான்.
இதைக்கேட்ட துரோணர் பாரத இளவரசர்களைக் கண்டு புன்னகைத்து, "இந்த எனது கையில் நிறைந்திருக்கும் புற்களை , எனது மந்திரங்களின் மூலம் ஆயுதங்களின் தன்மையை அடையச் செய்யப் போகிறேன். மற்ற எந்த ஆயுதங்களுக்கும் இல்லாத தகுதியை இந்தப் புற்கள் பெறப்போவதைப் பார்ப்பீராக.
நான் இந்தப் புற்குச்சிகளில் ஒன்றைக் கொண்டு பந்தைத் துளைக்கப் போகிறேன். அதன்பின் அந்தக் குச்சியை மற்றொரு குச்சியால் துளைத்து, மூன்றாவது குச்சியால் இரண்டாம் குச்சியைத் துளைப்பேன். இவ்வாறே ஒரு சங்கிலியை உருவாக்கி, பந்தை வெளியே கொண்டு வரப் போகிறேன்" என்றார்".
"துரோணர் தாம் எதைச் சொன்னாரோ அஃதை அப்படியே செய்து காட்டினார். இதனால், அந்த இளவரசர்கள் அனைவரும் ஆச்சரியமடைந்தனர். மகிழ்ச்சியால் அவர்களது விழிகள் அகன்றன.
தாங்கள் கண்ட காட்சியை இயல்புக்குமிக்கதாகக் கருதிய அவர்கள், கல்விமானான அந்தப் பிராமணரிடம், "காலங்கடத்தாமல் மோதிரத்தையும் வெளியே கொண்டு வருவீராக" என்று சொன்னார்கள்.
சிறப்பு மிகுந்த துரோணர், ஒரு வில்லையும் அம்பையும் எடுத்து, அம்பால் மோதிரத்தைத் துளைத்து, அதை உடனே வெளியே எடுத்தார்.
அவர், அம்பால் துளைத்த மோதிரத்தை எடுத்து, ஆச்சரியத்தில் மூழ்கியிருந்த இளவரசர்களிடம் கொடுத்தார். அவரால் மோதிரம் மீட்கப்பட்ட விதத்தைப் பார்த்த இளவரசர்கள்,
"ஓ! பிராமணரே! நாங்கள் உம்மை வணங்குகிறோம். இப்படிப்பட்ட திறமை யாருக்கும் கிடையாது. நீர் யார் என்பதையும், யாருடைய மகன் என்பதையும் அறிய ஆவலாக இருக்கிறோம். நாங்கள் உமக்கு என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்கள்.
இப்படி இளவரசர்களால் கேட்கப்பட்ட துரோணர், "நீங்கள் பீஷ்மரிடம் சென்று என்னைப் பற்றியும் {எனது உருவத்தைப் பற்றியும்}, எனது திறமை பற்றியும் விவரியுங்கள். அந்தப் பெரும் பலம் வாய்ந்தவர் என்னை அடையாளம் தெரிந்து கொள்வார்" என்றார்.
அதற்கு அந்த இளவரசர்கள், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி பீஷ்மரிடம் சென்று அந்த பிராமணருடைய பேச்சின் கருப்பொருளையும், அவரது இயல்புக்குமிக்க நடத்தையையும் விவரித்தனர்.
இளவரசர்களிடம் இருந்து அனைத்தையும் கேட்டறிந்த பீஷ்மர், அந்தப் பிராமணர் துரோணரைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதை அறிந்து, இந்த இளவரசர்களுக்கு அவரே சிறந்த ஆசானாக இருக்க முடியும் என்பதையும் நினைத்து, நேரடியாகச் சென்று வரவேற்று, அவரை அரண்மனைக்கு அழைத்து வந்தார்.
ஆயுதங்களைப் பயன்படுத்துபவர்களில் முதன்மையான அந்த பீஷ்மர், அவர் ஹஸ்தினாபுரத்திற்கு வந்த காரணத்தைச் சாதுர்யமாகக் கேட்டார்.
துரோணர் நடந்தது அனைத்தையும் நடந்தபடியே சொன்னார், "ஐயா, கடந்த காலத்தில் நான் பெரும் முனிவர் அக்னிவேசரிடம் ஆயுதங்களைப் பெறவும், ஆயுத அறிவியலைக் கற்கவும் விரும்பிச் சென்றேன்.
எனது குருவுக்கான சேவைக்காக என்னை அர்ப்பணித்து, அவருடன் பல வருடங்கள், தலையில் முடிந்த கூந்தலுடன் {ஜடா முடியுடன்} பிரம்மச்சாரியாக வாழ்ந்தேன்.
அந்த நேரத்தில், அதே காரணத்திற்காகப் பாஞ்சால இளவரசனான, பலம்வாய்ந்த யக்ஞசேனனும் {துருபதனும்} வந்து, அந்த ஆசிரமத்திலேயே தங்கினான்.
அவன் எனது நன்மையில் எப்போதும் விருப்பம் கொண்டு எனக்கு நண்பனானான். எனக்கு அவனை மிகவும் பிடித்திருந்தது. நாங்கள் இருவரும் பற்பல வருடங்களுக்கு ஒன்றாக வாழ்ந்தோம்.
நாங்கள் சிறு வயது முதல் ஒன்றாகவே கல்வி பயின்று வந்தோம். அந்தக் காலத்தில் அவன் எப்போதும் என்னிடம் இனிமையாகவே பேசுவான்.
அவன் என்னை மனநிறைவு கொள்ளச் செய்வதற்காக, "ஓ! துரோணா, எனது சிறப்புமிக்கத் தந்தைக்கு {பிருஷதருக்கு} நானே விருப்பமான மகனாவேன்.
அந்த மன்னர் என்னைப் பாஞ்சாலர்களின் ஏகாதிபதியாக நியமிக்கும்போது, அந்த நாடு உனதாகும். ஓ! நண்பா, இது சத்தியம். எனது நிலப்பகுதி, செல்வம், மகிழ்ச்சி என அனைத்தும் உனக்காகவே இருக்கும்" என்று சொன்னான். இறுதியாக நாங்கள் பிரிய வேண்டிய காலமும் வந்தது. கல்வி நிறைவு பெற்று, அவன் அவனது நாட்டுக்குத் திரும்ப அடியெடுத்து வைத்தான். அப்போது நான் அவனுக்கு எனது வாழ்த்துகளைச் சொன்னேன். உண்மையில், அவன் சொன்ன வார்த்தைகளையும் நான் எப்போதும் நினைவில் வைத்திருந்தேன்.
சில காலத்திற்குப் பிறகு, எனது தந்தையின் உத்தரவின் பேரிலும், பிள்ளைப்பேறில் எனக்கிருந்த விருப்பம் கொடுத்த மயக்கத்திலும், கடும் நோன்புகள் நோற்பவளும், பெரும் புத்திக்கூர்மையைக் கொடையாகக் கொண்டவளும், எந்நேரமும் அக்னிஹோத்ரமும், மற்ற வேள்விகளும் செய்பவளும், கடும் தவமிருப்பவளும், குறுகிய கூந்தல் கொண்டவளுமான கிருபியை மணந்தேன்.
கிருபி, குறித்த காலத்தில், சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் கூடியவனும், பெரும் வீரனுமான அஸ்வத்தாமன் என்ற மகனை ஈன்றெடுத்தாள்.
என்னைப் பெற்ற போது எனது தந்தை எப்படி மகிழ்ந்தாரோ அப்படியே நான் அஸ்வத்தாமனைப் பெற்ற போது மகிழ்ந்தேன். ஒரு நாள், ஒரு செல்வந்தனின் மகன் பால் குடிப்பதைக் கண்ட அஸ்வத்தாமன் அழ ஆரம்பித்தான். அதைக் கண்ட எனக்குத் திசை குறித்த அறிவு மங்கிப் போனது. திசைகளை மறந்து நின்றேன். சில பசுக்களை வைத்திருப்பவரிடம் ஒரு பசுவைக் கேட்கத் துணியாமல், பல பசுக்களை வைத்திருப்பவரிடம் ஒரு பசுவைப் பெற எண்ணி, நாடு விட்டு நாடு திரிந்தேன்.
ஆனால் நான் ஒரு கறவைப் பசுவையும் அடையாததால் எனது அலைச்சல் பலனற்றதானது. எனது காரியத்தில் தோற்றுப் போய்த் திரும்பி வந்தேன்.
அப்போது எனது மகனின் நண்பர்கள் அவனுக்கு நீரில் அரிசி மாவைக் கலந்து கொடுத்தனர்.
அதைக் குடித்த எனது அப்பாவி மகன், தான் பால் குடித்துவிட்டதாக ஏமாந்து, "நான் பால் குடித்துவிட்டேன், நான் பால் குடித்துவிட்டேன்!" என்று சந்தோஷக் கூத்தாடினான்.
அவனது எளிமையைக் கண்டு புன்னகைக்கும் விளையாட்டுத் தோழர்களுக்கு மத்தியில் மகிழ்ச்சியில் கூத்தாடும் அவனைக் கண்டு நாம் மிகவும் வருந்தினேன்.
"செல்வமீட்ட முயலாமல் வறியவனாக இருக்கும் துரோணனுக்கு ஐயோ. அவன் பிள்ளையோ பாலின் மேல் ஆசையினால் கரைத்த மாவைக் குடித்துவிட்டு, நானும் பால் குடித்தேனென ஆனந்தக் கூத்தாடுகிறான்" என்ற கேலிப்பேச்சுகளைக் கேட்டு நான் அமைதியாக இருந்தேன்.
என்னையே கடிந்து கொண்ட நான், என் மனதுக்குள், "பிராமணர்களால் கைவிடப்பட்டு இகழப்பட்டாலும், செல்வத்தின் மீது கொண்ட விருப்பத்தால், நான் எவருக்கும் அடிமையாக மாட்டேன். அது எப்போதும் பாவகரமானது என்ற ஒரு தீர்மானத்திற்கு வந்து, ஓ! பீஷ்மரே, எனது பழைய நண்பனிடம் சென்றேன். அந்தச் சோமகர்களின் மன்னனிடம் {துருபதனிடம்}, எனது அன்பு மகனையும், மனைவியையும் அழைத்துச் சென்றேன்.
அவன் ஆட்சியில் அமர்த்தப்பட்டான் என்பதையறிந்தேன். அப்போது நான், என்னை நற்பேறு பெற்றவனாக எண்ணி மகிழ்ந்தேன்.
அதே மகிழ்ச்சியுடன், அரியணையில் அமர்ந்திருந்த எனது நண்பனிடம் சென்று, "ஓ! மனிதர்களில் புலியே, என்னை உனது நண்பனாக அறிந்து கொள்வாயாக!" என்று சொல்லி, அவனை ஒரு நண்பன் எப்படி நம்பிக்கையுடன் அணுகுவானோ அப்படி அணுகினேன். ஆனால் துருபதன், என்னைக் காட்டுமிராண்டியாக நினைத்துக் கைவிட்டு, எள்ளி நகையாடினான்.
அவன் என்னிடம், "இப்படித் திடீரென்று என்னை நீர் அணுகுவதால், உமது புத்திக்கூர்மை உயர்ந்த வகையென கிஞ்சிற்றும் எனக்குத் தோன்றவில்லை.
ஓ! மங்கிய அறிவைக் கொண்டவரே, பெரும் மன்னர்களால் உம்மைப் போன்ற இத்தகு அதிர்ஷ்டமற்ற மனிதரிடம் நட்பு கொள்ள முடியாது.
இணையான சூழ்நிலை இருந்தபோது நமக்கிடையில் நட்பு இருந்தது. ஆனால் அனைத்தையும் வலுவிழக்கச் செய்யும் காலம், நட்பையும் வலுவிழக்கச் செய்யும் என்பதை அறிந்து கொள்வீராக.
நட்பானது எந்த மனிதனின் இதயத்திலும் தேயாமல் இருக்காது. காலம் அஃதை அரிக்கும், கோபமோ அஃதை அழித்துவிடும்.
எனவே தேய்ந்து போன அந்த நட்புடன் மீண்டும் ஒட்ட நினைக்காதீர். இனியும் அது போல நினைக்காதீர். ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, உம்முடனான எனது நட்பு ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காக ஆனது.
ஏழைகளால் செல்வந்தர்களுடன் நண்பனாக இருக்க முடியாது; கல்வியற்றவனால் ஒரு கல்விமானோடு நண்பனாக இருக்க முடியாது; ஒரு கோழையால் துணிச்சல் மிக்க வீரர்களுடன் நண்பனாக இருக்க முடியாது.
பிறகு எப்படி நீர் நமது பழைய நட்பைத் தொட நினைக்கிறீர்.
செல்வத்திலும், ஆற்றலிலும் இணையானவர்களாக இருக்கும் இருவருக்கு மத்தியிலேயே நட்போ, பகையோ இருக்க முடியும். ஏழையும், செல்வந்தனும், ஒருவருக்கொருவர் நண்பர்களாகவோ, பகைவர்களாகவோ இருக்க முடியாது.
அசுத்தமான பிறவிகள் சுத்தமான பிறவிகளுக்கு நண்பனாக இருக்க முடியாது. தேர்வீரனாக இல்லாதவன், அப்படி இருப்பவனுக்கு {தேர்வீரனுக்கு} நண்பனாக முடியாது. மன்னனா இல்லாத ஒருவனால் ஒரு மன்னனின் நண்பனாக இருக்க முடியாது.
நான் உமக்கு நாட்டைக் கொடுக்கிறேன் என்று எப்போதாவது சொன்னது போலக் கூட எனக்கு நினைவில்லை. ஆனால், ஓ! பிராமணரே, இப்போது என்னால் ஓர் இரவுக்கான உணவும், தங்கும் இடத்தையும் மட்டுமே உமக்குத் தர முடியும்" என்றான்.
இப்படி அவனால் சொல்லப்பட்ட பிறகு, தாமதமில்லாமல் செய்யக்கூடிய ஒரு காரியத்தை என் மனத்தில் நிச்சயித்துக் கொண்ட நான், எனது மனைவியுடன் அவனருகில் இருந்து வேகமாக வந்துவிட்டேன்.
ஓ! பீஷ்மரே, இப்படித் துருபதனால் அவமதிக்கப்பட்ட நான், மிகுந்த கோபம் கொண்டேன். இப்போது நான் குரு குலத்தவரிடம், புத்திக்கூர்மையுள்ள, எளிதாகக் கற்றுக்கொள்ளக்கூடிய திறன்கொண்ட சீடர்களை விரும்பி எதிர்பார்த்து வந்திருக்கிறேன்.
நான் உமது விருப்பங்களை நிறைவேற்ற ஹஸ்தினாபுரம் வந்திருக்கிறேன். இப்போது, நான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வீராக" என்று கேட்டார் துரோணர்
"பரத்வாஜரின் மகனால் இப்படிச் சொல்லப்பட்ட பீஷ்மர் அவரிடம்,
"உமது வில்லில் நாணைத் தளத்துவீராக. ஓ! பிராமணரே! குரு இளவரசர்களை ஆயுதச் சாதனை செய்யக் கற்பிப்பீராக. குருக்களால் வழிபடப்பட்டு, உமது வசிப்பிடத்தை உமக்கு நிறைவான வகையில் அனைத்து வசதிகளாலும் நிரப்பி இதயத்தில் மகிழ்வீராக.
ஓ! பிராமணரே! குரு குலத்தவர் கொண்டிருக்கும் அனைத்துச் செல்வத்திற்கும், அரசுக்கும், நாட்டுக்கும் நீரே உண்மையான தலைவராவீர். (இன்றிலிருந்து) குரு குலத்தவர் உம்மவரே.
இஃது ஏற்கனவே சாதிக்கப்பட்டுவிட்டதாக உமது இதயத்தில் குறித்துக் கொள்ளும். ஓ! பிராமணரே! எங்கள் நற்பேறின் கனியாக உம்மை இப்போது நாங்கள் பெறுகிறோம். உண்மையில், உமது வருகையால் எங்களுக்குச் செய்திருக்கும் உதவியானது மிகப் பெரியதே " என்றார்.
துரோணர், குரு குலத்தவரின் வசிப்பிடத்திலேயே தங்கி, அங்கேயே புகழுடன் வாழ ஆரம்பித்தார்.
அவர் சிறிது காலத்திற்கு ஓய்வெடுத்த பின், பீஷ்மர் தனது பேரப்பிள்ளைகளான கௌரவர்களை அழைத்து, அவருக்குச் சீடர்களாகக் கொடுத்தார். துரோணருக்குப் பல மதிப்புமிக்கப் பொருட்களையும் பரிசாகக் கொடுத்தார் பீஷ்மர்.
பீஷ்மர் துரோணருக்கு நெல் மற்றும் பலவித செல்வங்கள் நிறைந்ததும், அழகானதும், தூய்மையானதுமான வீடு ஒன்றையும் கொடுத்தார்.
அதன்பின், வில்லாளிகளில் சிறந்த துரோணர் மகிழ்ச்சியுடன், பாண்டு மற்றும் திருதராஷ்டிரனின் மைந்தர்களான அந்தக் கௌரவர்களைத் தனது சீடர்களாக ஏற்றுக் கொண்டார்.
அப்படி அவர்கள் அனைவரையும் சீடர்களாக ஏற்றுக் கொண்ட துரோணர், ஒரு நாள் அவர்களை அழைத்து, தனது காலில் விழுந்து வணங்கச் செய்து, கனத்த இதயத்துடன்,
"நான் எனது இதயத்தில் ஒரு குறிப்பிட்ட காரியத்தை வைத்திருக்கிறேன். ஓ! பாவங்களற்றவர்களே, நீங்கள் ஆயுதங்களில் நிபுணத்துவம் பெற்றதும், அந்தக் காரியத்தை நிறைவேற்றித் தருவதாக எனக்கு உண்மையாக உறுதியளிப்பீர்களாக" என்று சொன்னார்".
"இந்த வார்த்தைகளைக் கேட்ட குரு இளவரசர்கள் அமைதியாக இருந்தனர். ஆனால் அர்ஜுனன்,அந்தக் காரியம் எதுவாக இருந்தாலும் நிறைவேற்றித் தருவதாக உறுதி கூறினான்.
மகிழ்ச்சியடைந்த துரோணர், அர்ஜுனனை மார்புறத் தழுவி, அவன் தலையின் நறுமணத்தை மறுபடி மறுபடி முகர்ந்து, அந்தப் பொழுது முழுவதும் ஆனந்தக் கண்ணீர் விட்டார்.
பெரும் பலம் கொண்டவரான துரோணர், பாண்டுவின் மகன்களுக்குத் தெய்வீக மற்றும் மனித ஆயுதங்களில் பயிற்சி கொடுத்தார்.
அந்த பிராமணர்களில் சிறந்தவரான துரோணரிடம் ஆயுதப் பயிற்சி பெற வேறு பிற நாட்டு இளவரசர்களும் அந்த இடத்தில் குழுமினர்.
விருஷ்ணிகள், அந்தகர்கள், மற்றும் பல்வேறு நிலங்களில் உள்ள இளவரசர்கள், சூத குலத்தவனான ராதையின் மகன் (கர்ணன்) ஆகியோர் அனைவரும் துரோணருக்குச் சீடர்களானார்கள்.
ஆனால் அவர்கள் அனைவரிலும், சூதப் பிள்ளையான கர்ணன், பொறாமையால் அடிக்கடி அர்ஜுனனை எதிர்த்தும், துரியோதனனை ஆதரித்தும் பாண்டவர்களை அவமதித்து வந்தான்.
எனினும், ஆயுத அறிவியலில் தனக்கிருக்கும் அர்ப்பணிப்பாலும், நிபுணத்துவத்தாலும், கரங்களின் பலத்தாலும், விடாமுயற்சியாலும் எப்போதும் குருவின் அருகே இருந்து, அனைவரைக் காட்டிலும் (சக மாணவர்களுடன் ஒப்பிடுகையில்) அர்ஜுனன் மேம்பட்டு இருந்தான்.
குரு எடுக்கும் பாடமானது அனைவருக்கும் ஒன்றாக இருப்பினும், அர்ஜுனன், தனது கரங்களின் நளினத்தாலும், நிபுணத்துவத்தாலும் சக மாணாக்கரில் முதன்மையானவனாகத் திகழ்ந்தான்.
துரோணர் தனது மாணாக்கர்களில் எவரும் இந்திரனின் மகனுக்கு {அர்ஜுனனுக்கு} நிகராக எக்காலத்திலும் வர முடியாது என்ற நம்பிக்கைக்கு வந்தார்.
இப்படியே துரோணர், ஆயுத அறிவியல் குறித்த தனது பாடங்களை இளவரசர்களுக்குப் போதித்தார்.
மாணவர்கள் நீர் நிரப்பும் போது, அனைவருக்கும் நேரம் அதிகமாக வேண்டும் என்று எண்ணி அவர்களுக்குக் குறுகிய வாய்க் கொண்ட பாத்திரத்தைக் {கமண்டலம்} கொடுப்பார் துரோணர்.
ஆனால், தனது மகனான அஸ்வத்தாமனுக்கு மட்டும், வேகமாக நீர் நிரப்பி, விரைவாகத் தன்னிடம் அவன் வர வேண்டும் என்று எண்ணி, அகன்ற வாய்க் கொண்ட பாத்திரத்தைக் {கும்பத்தைக்} கொடுத்து அனுப்புவார்.
அஸ்வத்தாமன் விரைவாக வந்து விட்டால், மற்றவர்கள் வருவதற்குள் கிடைக்கும் இடைவேளையில், ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் மேன்மையான, நுட்பமான முறைகளைத் தனது மகனுக்குக் கற்பித்தார்.
அர்ஜுனன் இதை அறியவந்தான். எனவே, வாருணாயுதத்தைக் {வாருணாஸ்திரத்தைக்} கொண்டு அந்தக் குறுகிய வாய்க் கொண்ட பாத்திரத்தில் வேகமாக நீர் நிரப்பி, தனது குருவின் மைந்தன் செல்லும் அதே நேரத்திற்குக் குருவிடம் அவனும் சென்றான். ஆயுதங்களில் ஞானம் கொண்டவனும், அனைத்து மனிதர்களிலும் முதன்மையானவனும், புத்திசாலியுமான அந்தப் பிருதையின் மைந்தன் {அர்ஜுனன்}, தனது குருவின் மைந்தனை விடச் சிறப்பில் எந்த வகையிலும் தாழ்வடையவில்லை.
அர்ஜுனன், தான் மேற்கொண்ட ஆயுதப் பயிற்சிக்கு ஒப்பாகத் தனது குருவுக்குச் செய்த சேவையால், விரைவிலேயே அவன் குருவுக்குப் பிடித்தமான மாணவனானான்.
துரோணர், தனது மாணவனுக்கு ஆயுதப் பயிற்சியில் இருக்கும் அர்ப்பணிப்பைக் கண்டு, தனது சமையற்காரனை அழைத்து ரகசியமாக,
"அர்ஜுனனுக்கு ஒருபோதும் இருளில் உணவிடாதே. இதை நானே சொன்னேன் என்றும் அவனிடம் சொல்லி விடாதே" என்றார்.
சில நாள் கழித்து, அர்ஜுனன் விளக்கொளியில் உணவு அருந்திக்கொண்டிருக்கும்போது, காற்றால் விளக்கு அணைந்தது.
ஆனால், சக்தி கொண்ட அர்ஜுனன், உணவருந்துவதைத் தொடர்ந்தான். வழக்கமான பழக்கத்தால் அவனது கை, வாய்க்கு செல்வதைக் கண்டான்.
பழக்கவழக்கத்தின் சக்தியை உணர்ந்தவனும், பலம் வாய்ந்த கரங்களைக் கொண்டவனுமான அந்தப் பாண்டு மைந்தன் {அர்ஜுனன்}, இரவில் விற்பயிற்சி செய்வதில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான்.
இரவில் வில்லிலிருந்து புறப்படும் நாணொலியைக் கேட்ட துரோணர், அவனிடம் வந்து அவனை வாரியணைத்துக் கொண்டு,
"நான் உண்மையில் சொல்கிறேன். நான் உனக்குக் கற்பிக்கப் போகும் வித்தையால் உனக்கு நிகரான வில்லாளி ஒருவனும் இவ்வுலகத்தில் இருக்க மாட்டான்" என்றார்".
"அதன்பிறகு துரோணர் அர்ஜுனனுக்குக் குதிரை, யானை, தேர் போன்றவற்றில் அமர்ந்தும், தரையிலும் போர் செய்யும் பயிற்சியைப் போதித்தார்.
பெரும்பலம் கொண்ட துரோணர், அர்ஜுனனுக்குக் கதாயுதம், வாள், வேல், ஈட்டிகள், கணைகள் கொண்டு போரிடும் பயிற்சிகளையும் போதித்தார். அவனுக்குப் பல ஆயுதங்களில் பயிற்சியும், ஒரே நேரத்தில் பல மனிதர்களிடம் போரிடும் பயிற்சியும் கொடுத்தார்.
அவரது நிபுணத்துவத்தைக் கேள்விப்பட்ட பல நாட்டு மன்னர்களும், இளவரசர்களும், ஆயுத அறிவியல் படிக்கும் ஆர்வத்தில், துரோணரிடம் ஆயிரக்கணக்கில் வந்து குழுமினர்.
அப்படி வந்தவர்களில், (கலப்பு வர்ணங்களில் தாழ்ந்த) நிஷாத மன்னன் ஹிரண்யதனுசின் மகனான ஏகலவ்யன் என்ற இளவரசனும் இருந்தான்
எனினும், அறநெறிகளின் விதிகள் அனைத்தையும் அறிந்தவரான துரோணர், (ஒரு காலத்தில்) உயர் பிறப்பாளர்களான தன் சீடர்கள் அனைவரையும் அந்த நிஷாத இளவரசன் {ஏகலவ்யன்} விஞ்சிவிடக் கூடும் என்பதைக் கண்டு, அவனை விற்பயிற்சியில் சீடனாக ஏற்றுக் கொள்ளவில்லை.
ஆனால், அந்த நிஷாத இளவரசன், துரோணரின் பாதத்தைத் தனது தலையால் தொட்டு வணங்கி, வந்த வழியே கானகத்திற்குள் சென்று, அங்கே துரோணரின் களிமண் வடிவத்தைச் செய்து,
அதுவே தனது உண்மையான ஆசானென என்று நினைத்து மரியாதையுடன் வணங்கி, மிகக் கடுமையான ஆயுதப் பயிற்சியை அதன் {அந்தப் பதுமையின்} முன்பு செய்யத் தொடங்கினான்.
தன் ஆசானிடம் அவன் கொண்ட ஒப்பற்ற மதிப்பினாலும், தன் நோக்கத்தில் அவன் கொண்டிருந்த அர்ப்பணிப்பினாலும், நாண்கயிற்றில் கணைகளைப் பொருத்துவது, இலக்கு நோக்குவது, விடுப்பது ஆகிய மூன்று செயல்முறைகளும் அவனுக்கு மிக எளிதானவையாக இருந்தன.
ஒரு நாள் கௌரவ மற்றும் பாண்டவ இளவரசர்கள், துரோணரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு, தங்கள் தேர்களில் ஏறி வேட்டைக்குச் சென்றனர்
, அந்தக் குழுவினருடன் சென்ற ஒரு வேலைக்காரன், சில வழக்கமான பொருட்களுடன், தனது நாயையும் உடன் அழைத்துச் சென்றான்.
கானகத்திற்கு வந்த அவர்கள், தங்கள் வேட்டையைத் தேடி உலவிக் கொண்டிருந்தனர். அதே வேளையில், உடன் வந்த நாயும் தனியாகக் கானகத்தில் உலவி, நிஷாத இளவரசன் (ஏகலவ்யன்) இருக்குமிடத்திற்கு வந்தது.
கருப்பு நிறத் தோலுடையுடனும், உச்சந்தலையில் குடுமியுடனும், அழுக்கேறிய உடலுடனும் கருத்த நிறத்துடனும் இருந்த நிஷாதனைக் கண்ட அந்த நாய், சத்தமாகக் குரைத்தது.
அதனால் அந்த நிஷாத இளவரசன், தனது கரத்தின் லாகவத்தை வெளிக்காட்டுவதற்காக, அந்த நாய் வாயை மூடும் முன்பே அதன் வாய்க்குள் ஏழு கணைகளைச் செலுத்தினான்.
ஏழு கணைகளால் துளைக்கப்பட்ட அந்நாய், பாண்டவர்களிடம் திரும்ப வந்தது. இக்காட்சியைக் கண்ட அந்த வீரர்கள், ஆச்சரியத்தில் மூழ்கினர்.
தங்கள் திறனில் வெட்கமடைந்த அவர்கள், தாங்கள் அறியாத ஒரு மனிதனின் நளினம் கொண்ட கரத்தையும், செவித்திறன் கொண்டு குறியைத் தவறாமல் சரியாக அடிக்கும் திறனையும் புகழ ஆரம்பித்தனர்.
பிறகு, இப்படிப்பட்ட திறமையைக் காட்டியிருப்பவனும், தங்களால் அறியப்படாதவனுமான அந்தக் கானகவாசியைத் தேடிச் சென்றனர். பாண்டவர்கள் விரைவிலேயே தாங்கள் தேடிப் போன இலக்கை அடைந்னர். வில்லிலிருந்து நிறுத்தாமல் தொடர்ச்சியாகக் கணைகளைச் சரமாக அடித்துக் கொண்டிருந்த ஏகலவ்யனைக் கண்டனர்.
முழுவதும் அந்நியமானவனாக இருந்த, அந்தக் கடும் முகம் கொண்டவனிடம் {எகலவ்யனிடம்}, "நீ யார்? யாருடைய மகன் நீ?" என்று கேட்டனர்.
இப்படிக் கேட்கப்பட்ட அம்மனிதன், "வீரர்களே, நான் நிஷாத மன்னன் ஹிரண்யதனுசின் மைந்தன். ஆயுதக் கலையில் நிபுணத்துவம் பெற்றவரான ஆசான் துரோணரின் மாணாக்கனாக என்னை அறிவீராக" என்றான்".
"அதன்பிறகு, அந்த நிஷாதன் தொடர்பான அனைத்தையும் அறிந்து கொண்ட பாண்டவர்கள், நகரத்திற்குத் திரும்பி, துரோணரிடம் சென்று, கானகத்தில் அவர்கள் கண்ட அதிசயமான வில்வித்தைச் சாதனையைப் பற்றி அவரிடம் சொன்னார்கள்.
குறிப்பாக அர்ஜுனன்,அவ்வளவு நேரமும் ஏகலவ்யனைச் சிந்தனை செய்து கொண்டு, பிறகு துரோணரைத் தனிமையில் சந்தித்து, தனது குரு தன் மீது வைத்திருக்கும் அன்பில் நம்பிக்கை கொண்டு,
"நீர் என்னை அன்புடன் உமது மார்போடு அணைத்து, எனக்குச் சமமாக உமது மாணவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்று சொன்னீர்.
இப்போது உமது மாணவனான இந்த நிஷாத மன்னன் மைந்தன் {ஏகலவ்யன்} என்னைவிட மேம்பட்டவனாக இருப்பது எவ்வாறு?" என்று கேட்டான்".
"இவ்வார்த்தைகளைக் கேட்ட துரோணர் சிறிது நேரம் சிந்தித்து ஒரு தீர்மானத்திற்கு வந்து, அர்ஜுனனை அழைத்துக் கொண்டு நிஷாத இளவரசனிடம் {ஏகலவ்யனிடம்} சென்றார்.
அங்கே, உடலெங்கும் அழுக்கேறி, தலையில் குடுமியுடன், கந்தலாடையுடன், கையில் வில்லேந்தித் தொடர்ச்சியாகச் சரம்போலக் கணையடித்துக் கொண்டிருக்கும் ஏகலவ்யனைக் கண்டார்.
ஏகலவ்யன் துரோணரைக் கண்டு, சில எட்டுகள் முன் வந்து, அவரது பாதத்தைத் தொட்டு, நெடுஞ்சாண் கிடையாகத் தரையில் விழுந்தான்.
இப்படித் துரோணரை வணங்கிய ஏகலவ்யன், தன்னை அவரது சீடனாகத் தெரிவித்து, மரியாதையாகக் கரங்குவித்து அவர் முன் நின்றான்.
, துரோணர் அந்த ஏகலவ்யனிடம், "ஓ! வீரனே, நீ எனது சீடனாக இருப்பின், எனக்குரிய கூலியைக் {தட்சணையைக்} கொடுப்பாயாக!" என்றார். இந்த வார்த்தைகளைக் கேட்ட ஏகலவ்யன் பெரும் மனநிறைவுகொண்டு,
"ஓ! குருவே, நான் உமக்கு என்ன தரட்டும்? எனக்குக் கட்டளையிடுவீராக. வேதமறிந்த அனைத்து மனிதர்களைக் காட்டிலும் முதன்மையானவரே {துரோணரே}, எனது குருவுக்கு நான் தரமாட்டேன் என்று சொல்வதற்கு உலகில் எந்தப் பொருளும் இல்லை" என்றான்.
அதற்குத் துரோணர், "ஓ! ஏகலவ்யா, உண்மையில் எனக்குப் பரிசு {தக்ஷிணை} கொடுக்கும் நோக்கம் உனக்கு இருக்குமானால், உனது வலக்கைக் கட்டை விரலைத் தருமாறு உன்னிடம் நான் வேண்டுகிறேன்" என்றார்".
"உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவனும், உறுதியை காக்க விரும்பியவனுமான அந்த ஏகலவ்யன், கூலியாகக் கட்டைவிரலைக் கேட்ட துரோணரின் கொடும் வார்த்தைகளைக் கேட்டும் கூட, மகிழ்ந்த முகத்துடன், இதயம் பாதிக்காமல், ஆரவாரமில்லாமல் தனது கட்டைவிரலை வெட்டியெடுத்துத் துரோணரிடம் கொடுத்தான். அதன்பிறகு, மீதம் இருந்த விரல்களுடன் கணையடித்த அந்த நிஷாத இளவரசன், , தனது கரநளினம்(லாவகம்) கெட்டிருந்ததை அறிந்தான்.
இதனால் அர்ஜுனன், அவனிடம் இருந்த பொறாமை எனும் நோய் அகன்று மகிழ்ச்சியடைந்தான். {"அர்ஜுனனுக்கு எவனும் இணையாக முடியாது" என்ற துரோணரின் வார்த்தைகள் இப்போது உண்மையாகின}
துரோணரின் சீடர்களில் இருவர் கதாயுதத்தைப் பயன்படுத்துவதில் திறன்வாய்ந்தவர்களாக இருந்தனர். அவர்கள் துரியோதனனும், பீமனும் ஆவர். அவர்களிருவரும் ஒருவரிடமொருவர் பொறாமை கொண்டிருந்தனர்.
அஸ்வத்தாமன் ஆயுத அறிவியலின் புதிர்களில் {மந்திர ஆயுதங்களில்} அனைவரையும் விஞ்சி நின்றான். இரட்டையர்கள் (நகுலனும், சகாதேவனும்) வாட்போரில் அனைவரையும் விஞ்சி நின்றார்கள்.
யுதிஷ்டிரன் தேர்ப்போரில் அனைவரையும் விஞ்சி நின்றான். ஆனால் அர்ஜுனன், எல்லாவகையிலும் அனைவரையும் விஞ்சி நின்றான். புத்திக்கூர்மையில், இருப்பனவற்றைச் சரியாகப் பயன்படுத்துவதில், பலத்தில், விடாமுயற்சியில் என அனைத்திலும் அனைவரையும் விஞ்சி நின்றான் அர்ஜுனன். அனைத்து ஆயுதங்களிலும் தேர்ந்த அவன், தேர் வீரர்களில் முதன்மையானவர்களுக்கும் முதன்மையானவனாக இருந்தான். அவனது புகழ் கடல் நுனி வரை உலகெங்கும் பரவியது. அனைவருக்கும் ஒரேமாதிரியான கல்வியாக இருப்பினும், அர்ஜுனன் (நளினமான கரங்களைக் கொண்ட இளவரசனாக) அனைவரையும் மிஞ்சினான். குருவுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பதில், அனைவரிலும் முன்னவனாக இருந்தான். எல்லா இளவரசர்களிலும், அர்ஜுனன் மட்டுமே அதிரதனானான்
(அதிரதன் என்றால் - தன்னந்தனி தேர்வீரனாக இருந்து, ஒரே நேரத்தில் அறுபதாயிரம் எதிரிகளுடன் போர் புரிபவன்.)
பீமசேனனின் பெரும்பலத்தையும், அர்ஜுனன் அனைத்து ஆயுதங்களிலும் தேர்ந்ததையும் கண்ட திருதராஷ்டிரனின் தீய மகன்கள், அவர்களிடம் பொறாமை கொண்டனர்.
அவர்களது பயிற்சி முடிந்ததும், ஒருநாள், துரோணர் தனது சீடர்களின் ஆயுதப் பயன்களைச் சோதித்துப் பார்க்க விரும்பி, அவர்கள் அனைவரையும் ஒருங்கே கூட்டினார்.
அவர்களைத் ஒன்றாகத் திரட்டுவதற்கு முன்னர், அருகில் இருந்த ஒரு மரத்தின் உச்சியில் அவர் ஒரு செயற்கைப் பறவையை நிறுவச் செய்து, அதையே இலக்காக வைத்தார். பிறகு துரோணர் அவர்களிடம்,
"உங்கள் விற்களை விரைவாக எடுத்துக் கொண்டு இங்கே வந்து நின்று, விற்களில் கணையைப் பொருத்தி, அந்த மரத்தில் இருக்கும் பறவைக்குக் குறி வையுங்கள்.
நான் உத்தரவிட்டதும், அந்தப் பறவையின் தலையைக் கொய்யுங்கள். குழந்தைகளே, நான் ஒவ்வொருவருக்கும் ஒரு வாய்ப்பைத் தருவேன், ஒவ்வொருவராக வாருங்கள்" என்றார்".
"அங்கீரஸின் மைந்தர்கள் அனைவரிலும் முதன்மையான துரோணர், முதலில் யுதிஷ்டிரனிடம், "ஓ! வெல்லப்பட முடியாதவனே, உனது கணையால் குறி வைத்து, நான் உத்தரவிட்டதும் அடி" என்றார்.
யுதிஷ்டிரன் தனது ஆசான் விரும்பியபடியே முதலில் வில்லை எடுத்து, பறவையைக் குறிபார்த்தபடி நின்றான். ஆனால்,துரோணர், குறி பார்த்து நிற்கும் அந்தக் குரு இளவரசனிடம்,
"ஓ! இளவரசனே, அந்த மரத்தின் மேல் இருக்கும் பறவையைப் பார்" என்றார். யுதிஷ்டிரன் தனது குருவிடம், "பார்க்கிறேன்" என்றான். அடுத்த நொடியில் துரோணர்,
"ஓ! இளவரசனே, நீ என்ன பார்க்கிறாய்? மரத்தைப் பார்க்கிறாயா, என்னைப் பார்க்கிறாயா? அல்லது உனது சகோதரர்களைப் பார்க்கிறாயா?" என்று கேட்டார்.
அதற்கு யுதிஷ்டிரன், "நான் மரத்தைப் பார்க்கிறேன், என்னைப் பார்க்கிறேன், எனது சகோதரர்களைப் பார்க்கிறேன். அந்தப் பறவையையும் பார்க்கிறேன்" என்றான்.
துரோணர் மறுபடியும் அதே கேள்வியை அவனிடம் கேட்டார், மறுபடியும் அதே பதிலே வந்தது.
துரோணர் யுதிஷ்டிரனிடம் எரிச்சலடைந்து, "நீ தனியாகப் பிரிந்து நிற்பாயாக. அந்தக் குறியை அடிக்கப்போவது நீயல்ல" என்று கடிந்து கொண்டார்.
துரோணர் அதே தேர்வை துரியோதனனுக்கும், திருதராஷ்டிரனின் மற்ற மைந்தர்களுக்கும் ஒருவர் பின் ஒருவராக வைத்தார். மற்ற சீடர்களான பீமன் மற்றும் பல நாடுகளில் இருந்து வந்திருந்த ஏனையோருக்கும் அதே தேர்வையே வைத்தார். ஆனால் யுதிஷ்டிரன் சொன்னது போலவே "மரம், தாங்கள், சக மாணவர்கள், பறவை ஆகியவற்றைக் காண்கிறேன்" என்றே அனைவரும் சொன்னார்கள். குருவால் கடிந்து கொள்ளப்பட்ட அவர்கள் தனியாக நிற்க வைக்கப்பட்டனர்"
"அனைவரும் தோற்றதும், துரோணர் புன்னகையுடன் அர்ஜுனனை அழைத்து, "உன்னால் அக்குறி அடிக்கப்பட வேண்டும்; எனவே, உனது பார்வையை அதில் செலுத்துவாயாக.(1) நான் உத்தரவிட்டதும் நீ உனது கணையை ஏவ வேண்டும். எனவே, ஓ! மகனே, வில் மற்றும் கணையுடன் ஒரு கணம் இங்கே நிற்பாகயாக" என்றார்.(2)
இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்ட அர்ஜுனன், குருவின் விருப்பப்படித் தனது வில்லை வளைத்து அப்பறவைக்குக் குறி வைத்து நின்றான்.
ஒரு நொடிக்குப் பிறகு துரோணர் மற்றவர்களிடம் கேட்டது போல, "ஓ! அர்ஜுனா, அங்கே இருக்கும் பறவையையும், மரத்தையும், என்னையும் பார்க்கிறாயா?" என்று கேட்டார்.
அதற்கு அர்ஜுனன், "நான் அப்பறவையை மட்டுமே காண்கிறேன். உம்மையோ, அம்மரத்தையோ நான் காணவில்லை" என்றான்.
வெல்லப்படமுடியாதவரான துரோணர், அர்ஜுனனிடம் பெரும் மனநிறைவு கொண்டு, அடுத்த நொடியில், பாண்டவர்களின் பலம் வாய்ந்த அந்தத் தேர்வீரனிடம் {அர்ஜுனனிடம்},
"நீ அக்கழுகைக் காண்கிறாயென்றால், அதைப் பற்றி விவரிப்பாயாக" என்று கேட்டார்.
அர்ஜுனன், "நான் அக்கழுகின் தலையை மட்டுமே காண்கிறேன், அதன் உடலைக் காணவில்லை" என்றான்.
அர்ஜுனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட துரோணருக்கு மகிழ்ச்சியால் உடலெங்கும் மயிர்ச் சிலிர்ப்பு ஏற்பட்டது. பிறகு அவர் பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்}, "அடி" என்றார்.
இவ்வார்த்தைகளைக் கேட்ட அர்ஜுனன், உடனே தனது கணையைப் பறக்க விட்டான்.
அந்தக் கூர்மையான கணையாது, வேகமாகச் சென்று, மரத்திலிருந்த கழுகின் தலையை அடித்துத் தரையில் வீழ்த்தியது.
அந்தக் காரியம் முடிந்ததும், துரோணர் ஓடி வந்து அர்ஜுனனைத் தனது மார்புறக் கட்டித் தழுவிக் கொண்டு, துருபதனும் அவனது நண்பர்களும் ஏற்கனவே போரில் வீழ்ந்துவிட்டதாக நினைத்துக் கொண்டார்.
சில காலம் கழித்து, துரோணர் தனது சீடர்களை அழைத்துக் கொண்டு கங்கைக் கரைக்கு, அதன் புனிதமான நீரோட்டத்தில் நீராடச் சென்றார்.
துரோணர் அந்த நீரோட்டத்தில் இறங்கியதும், காலனால் அனுப்பப்பட்டது போன்ற பெரும் பலம் வாய்ந்த ஒரு முதலை அவரது தொடையைப் பற்றியது.
அந்த இக்கட்டிலிருந்து தன்பலத்தாலேயே அவரால் மீளமுடியும் என்றாலும், அவசரத்துடன் துரோணர், சீடர்களைத் தன்னைக் காக்கும்படி கேட்டார். அவர், "ஓ, இந்த விலங்கைக் கொன்று, என்னைக் காப்பாற்றுங்கள்" என்றார்.
அவ்வார்த்தைகளைக் கேட்டதும், மற்ற சீடர்கள் திகைத்துப் போய் அவரவர் இடத்திலேயே நின்றாலும், அர்ஜுனன், தடுக்கப்படமுடியாத தனது ஐந்து கூர்மையான கணைகளால் அந்த விலங்கை நீரிலேயே அடித்து வீழ்த்தினான். அர்ஜுனனின் தயார் நிலையைக் கண்ட துரோணர், அவனை அவரது சீடர்களிலேயே முதன்மையானவனாகக் கருதி அவனிடம் பெரும் மனநிறைவு கொண்டார். அந்த விலங்கு, அர்ஜுனனின் கணைகளால் இரு கூறுகளாகப் பிரிக்கப்பட்டதால்,சிறப்புமிக்கத் துரோணர் ஆவியை விட்டிருந்த அம்முதலையிடமிருந்து விடுபட்டார்.
பிறகு பரத்வாஜரின் மகன் துரோணர் தேர்வீரனான அந்த அர்ஜுனனை அழைத்து,
"ஓ! பெரும் பலம்வாய்ந்தவனே, மிக மேன்மையானதும், தடுக்கப்பட முடியாததுமான இந்தப் பிரம்மாயுதத்தை {பிரம்மாஸ்திரத்தை} ஏவவும், திரும்பப் பெறவும் கூடிய முறைகளுடன் பெற்றுக் கொள்வாயாக.
இருப்பினும், நீ எப்போதும் இதை மனித எதிரியின் மீது பயன்படுத்தக் கூடாது. தாழ்ந்த சக்தி கொண்ட எந்த எதிரியின் மீது இஃது ஏவப்பட்டாலும், இந்த முழு அண்டத்தையே எரித்துவிடும்.
ஓ! குழந்தாய், மூவுலகத்திலும் இதற்கு ஒப்பான ஆயுதம் இல்லை என்று சொல்லப்படுகிறது. எனவே நான் சொல்வதைக் கேட்டு, இதைக் கவனத்துடன் வைத்துக் கொள்வாயாக.
ஓ! வீரா, எப்போதாவது மனிதனல்லாத எதிரி உன்னுடன் போர் புரியும்போது, அவனது மரணத்திற்காக நீ இதைப் பயன்படுத்தலாம்" என்றார்.
தனக்குச் சொல்லப்பட்டதை ஏற்று, உறுதிகூறிய அர்ஜுனன், குவிந்த கரங்களுடன் அந்தப் பெரும் ஆயுதத்தைப் பெற்றுக் கொண்டான். குரு அவனிடம் மறுபடியும்,
"இவ்வுலகத்தில் உன்னை விஞ்சிய வில்லாளி இருக்க மாட்டான். நீ எந்த எதிரியாலும் வெல்லப்பட முடியாதவனாக இருப்பாய். நீ பெரும் சாதனைகளைச் செய்வாய்" என்று சொன்னார் துரோணர்
…
தொடரும்..
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள் 9789374109
No comments:
Post a Comment