ஐம்புலன்கள்
பக்தன் : கிருஷ்ணா, ஐம்புலன்களை கட்டுப்படுத்துவது எப்படி ?
கிருஷ்ணா : முதலில் உன் முன்னால் காளிய நாகத்தை நிறுத்துகிறேன். 1000 தலைகள் கொண்டது. அவற்றை அடக்கி விடு. அதன் பின் உன் உணர்வுகளை எளிதாக அடக்கிடலாம். என்ன சொல்கிறாய்?
பக்தன் திருதிருவென்று விழித்தான்.
பக்தன் : கிருஷ்ணா, ஐம்புலன்களை அடக்கத்தானே வழி கேட்டேன். அதற்காக இவ்வளவு பெரிய தண்டனையா ?
கிருஷ்ணா : ஐம்புலன்களை அடக்குவது அவ்வளவு எளிதா? அவ்வளவு சாதாரணமாக கேட்டு விட்டாயே. காளிய நாகத்தை அடக்குவதை காட்டிலும் கடினம்.
பக்தன் : கிருஷ்ணா, ஏதோ தெரியாமல் கேட்டு விட்டேன். நீயே வழி கூறேன்.
கிருஷ்ணா : பிரிந்தாவனத்தில் காளிய நாகம் வந்த போது கோபர்கள் என்ன செய்தார்களோ அதையே நீயும் செய்யும் படி சொல்கிறேன். அவர்கள் அந்த நாகத்தை என்னிடம் விட்டு விட்டார்கள். நானே அதை அடக்கினேன். அது போல்தான் உன் ஐம்புலன்களை என்னிடம் விட்டு விடு. நான் காளிய நாகத்தை அடக்குவதை போல் உன் புலன்களை அடக்கி விடுவேன்.
பக்தன் : கிருஷ்ணா, புரியும் படி சொல். எனக்கு எதுவும் விளங்கவில்லை.
கிருஷ்ணா : சொல்கிறேன். எனக்கு இன்னொரு பெயர் இருக்கிறது. ஹ்ரிஷிகேஷன். புலன்களை அடக்குபவன். நீ உன் புலன்களை அடக்க நினைத்தால் அது உன்னை அடக்கி விடும். அவற்றை எனக்காக அர்ப்பணித்து விடு. நான் பார்த்து கொள்கிறேன்.
பக்தன் : எப்படி அர்பணிப்பது ?
கிருஷ்ணா : மிக எளிது. உன் கண்களால் என்னுடைய அழகினை ரசி. காதுகளால் என் கதைகளை கேள். நாவால் என் நாமத்தை உச்சரி. என் பிரசாதத்தை சாப்பிடு. உன் மனதையும் உடலையும் எனக்கு சேவை செய்வதில் செயல்படு. மூக்கால் துளசி மற்றும் எனக்கு அர்ப்பணிக்கும் பூக்களை நுகர். இப்படி ஐம்புலன்களை எவ்வளகெவ்வளவு என்னிடம் நீ செலுத்துகிறாயோ அவ்வளகெவ்வளவு நீ மாயையிலிருந்து வெளியே வருவாய். ஞானம் பெறுவாய். என்னை அடைவாய்.
No comments:
Post a Comment