மஹானின் கிரஹத்தில் வெள்ளைத் தாமரை
ரகுராம் காலனியில் தனக்காக ஒரு வீடு வேண்டும் என்று பக்தர் ராஜகோபாலிடம் கேட்டுப் பெற்றுக்கொண்ட சமயம். 'மஹா பெரியவா கிரஹம்' என்ற பெயருடன் கம்பீரமாகக் காட்சியளிக்கும் இந்த இல்லம், சங்கர மடத்தின் கிளையோ என்று எல்லோரும் நினைக்கச் செய்யும்.
அப்போது ராஜகோபால் சேலத்தில் உள்ள காப்பி போர்டில் டெப்போ மேனேஜராக இருந்தார். கடுமையான வேலை, அந்த நிறுவனக் கிளையை நிர்வகிப்பது சாதாரணமான வேலையே இல்லை. நேர்மை, நியாயம் போன்றவற்றுடன் கடுமையான உழைப்புக்கும் பெயர் பெற்ற ராஜகோபால் அப்பதவியில் அமர்த்தப்பட்ட உடன் அவர் மஹானின் அருட்கடாட்சத்தால் சேலத்தில் உருவான பெரியவா கிரஹத்தையும் கவனமாகப் பார்த்துக் கொள்ளவேண்டிய வாய்ப்பு கிட்டியது.காலையில் பத்து மணிக்குள் பூஜையை முடித்துவிட்டு அலுவலகம் சென்றால் திரும்ப இரவு பதினோரு மணி ஆகிவிடும்.
அவருக்கு மணியான இரண்டு குழந்தைகள். மூத்தவன் மதுசூதனன். இளையவள் மதுஷாலினி. இருவரும் தந்தையை சந்திக்க முடிவதே காலை நேரங்களில் தான்.
"ஏம்பா, நீ இந்த ஊர்லேதான் வேலை செய்றீயா?" என்று அவர்கள் கேட்காத குறை!
அவர்கள் என்ன படிக்கிறார்கள் என்று கூட தந்தைக்குத் தெரியாது. தொடர்ந்து கடுமையாக உழைத்த ராஜகோபாலின் உடல்நிலை பாதித்தது. எப்போதும் நெஞ்சில் ஏதோ பாரம் அழுத்துவது போன்ற தொல்லை.
மூச்சு விடுவதில் சற்று சிரமம். படுத்துக் கொண்டு இருந்தால் நன்றாக இருக்கும்போல் தோன்றியது. வேகமாக நடக்கவும் முடியாது. அவர் ஓட்டுகின்ற மோட்டார் சைக்கிளை உதைத்து ஸ்டார்ட் செய்யவும் பல நேரங்களில் தடுமாறினார். மருத்துவர்களிடம் சென்றபோது, அவர்கள் கொடுத்த மருந்து வியாதியை 'ஏன்' என்று கூட கேட்கவில்லை.
நோயின் கவலை ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு கவலையும் அவர் மனிதில் ஏறிக் கொண்டது.
பெரியவா கிரஹத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. தனக்கென ஒரு இடத்தை கேட்டுப் பெற்றுக் கொண்ட மஹான், ஏன் பக்தர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை? பரமபக்தரான ராஜகோபாலுக்கு இந்தக் கவலை போதாதா? அவருக்கு அப்போது ஆறுதல் சொல்லக்கூடிய ஒரே நபர் – அவரது துணைவியார் கீதா.
நோயின் காரணம் தெரியாத காரணத்தினால் சரியாக மருந்துகளை அவரால் சாப்பிட முடியவில்லை. படுக்கையில் தொடர்ந்து படுக்க வேண்டியதாயிற்று. மனதிற்குள் மஹான் தனக்கு வழிகாட்டுவார் என்ற நம்பிக்கையை மட்டும் இழக்கவே இல்லை.
ஒருநாள் இரவு நோயின் கடுமை சற்று குறைந்து ராஜகோபால் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சமயம். அவரது மனைவிக்கு ஓர் அபூர்வக் கனவு தோன்றியது. காஞ்சி மஹான் அவரை ஆசீர்வதித்தபடியே சொல்கிறார்:
"வெள்ளைத் தாமரையை கஷாயம் வைத்துக் கொடு, போதும்".
நேரில் சொல்ல முடியாத பல பக்தர்களுக்கு மஹான் இப்படிக் கனவில் தோன்றி அருள்வாக்கு சொல்வார் என்று அவர் கேள்விப்பட்டிருக்கிறார்.
மறுநாள் காலையில் தாம் கண்ட கனவை கணவருடன் பகிர்ந்து கொண்டார். இருவரும் மகிழ்ச்சியடைந்தாலும் வெள்ளைத் தாமரைக்கு எங்கே போவதென்ற புதிய கவலை அவர்களைப் பற்றிக் கொண்டது. அதில் கஷாயம் வைத்துக் குடித்தால் நிச்சயம் குணமாகிவிடும் என்று மஹா பெரியவா சொல்லியிருக்கிறாரே. ஆனால் இப்போது வெள்ளைத் தாமரைக்கு எங்கே போவது?
இவர்கள் மனதில் எழுந்த கவலை மஹானுக்குத் தெரியாதா? அதற்கு அவர் வழி செய்யாமலா இருப்பார்?
பெரியவா கிரஹத்திற்கு தொடர்ந்து வில்வ இலைகள், துளசி மாலைகள் என்று பூஜைப் பொருட்களைக் கொண்டு வந்து கொடுப்பவர் முசுகுந்தன் என்னும் பக்தர்.
இவர்கள் வெள்ளைத் தாமரையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது முசுகுந்தன் கையில் ஒரு வெள்ளைத் தாமரையுடன் அவர்கள் எதிரில் வந்து நிற்கிறார்.
மஹானின் கருணையால் இது நடந்தது என்று சொல்லித்தான் ஆகவேண்டும்! தம்பதியினர் அப்போது அடைந்த மகிழ்ச்சிக்கு அவர்களின் கண்ணில் பெருக்கெடுத்து ஓடிய நீரே சாட்சி.
கஷாயம் தயாரானது. அதைக்குடித்த ராஜகோபாலின் உடல் உபாதையும் குணமாகியது. இன்று வரை அவருக்கு அந்தத் தொல்லையே இல்லை என்பதுதான் இங்கு முக்கியமாகச் சொல்லவேண்டிய விஷயம்.
மஹானின் கிரஹத்தில் வெள்ளைத் தாமரை புகுந்த தினத்திலிருந்து பக்தர்களின் கூட்டமும் அதிகரித்தது. அனுஷ நட்சத்திர நாட்களில் வரும் எண்ணிலடங்கா பக்தர்கள் வயிறார உண்டு, மகிழ்ந்து போவது கண்கொள்ளாக் காட்சி.
மஹான் தமது பக்தர்களை பிரத்யேகக் கவனத்துடன் அருட்பார்வை செலுத்திப் பாதுகாக்கிறார் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் வேண்டுமா ?
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர🙏🙏🙏
No comments:
Post a Comment