Wednesday, November 24, 2021

Mandaata - Spiritual story

மாந்தாதா
 வைவஸ்வத மனுவின் ஒரு புதல்வன் இக்ஷ்வாகு. அவனுக்கு நூறு பிள்ளைகள். அவர்களுள் மூத்தவன் விகுக்ஷி. விகுக்ஷியின் பிள்ளை புரஞ்ஜயன். அவனே ககுத்ஸ்தன் என்ற பெயர் பெற்று பிற்காலத்தில் பிரசித்தனானான். தேவாஸுர யுத்தத்தில் அவன் இந்த்ரனுக்கு ஸஹாயம் செய்தான். போரில் இந்த்ரனே காளை உருவம் எடுத்து, சுகுத்ஸ்தன் அதன் முதுகின் மீது அமர்ந்து அஸுரர்களை வென்றான். அத்னால் அவனுக்கு சுகுத்ஸ்தன் (காளை முதுகில் வீற்றிருந்தவன்) என்ற பெயர் ப்ரஸித்தமாயிற்று. (அவன் வம்சத்தில் தோன்றியதால் ராமபிரானுக்கு காகுத்ஸ்தன் என்று ஒரு பெயர்.)
 ககுத்ஸ்தன் வம்சத்தில் யுவனாச்வன் என்ற அரசன் தோன்றினான். அவனுக்கு நூறு பார்யைகள் இருந்தும் பிள்ளைப்பேறு இல்லை. ஆகையால் அவன் ஒரு புத்ர காமேஷ்டி யாகம் செய்தான். யாகசாலையில் அவன் பத்னிக்காக அபிமந்த்ரித்து வைத்திருந்த கலச ஜலத்தை தெரியாமல் அவன் தாகம் தீர்த்துக்கொள்ள பருகிவிட்டான். அதன் விளைவாக அவன் வயிற்றைப் பிளந்து கொண்டு ராஜலக்ஷணங்களுடன் கூடின ஓர் குழந்தை தோன்றியது. அக்குழந்தைக்கு பால் புகட்ட யாரும் முன்வரவில்லை. யாகத்தில் ஆராதிக்கப்பட்ட இந்த்ரன் கருணை கொண்டு, அம்ருத ப்ரவாஹம் கொண்ட தனது விரலை குழந்தையின் வாயில் வைத்தான். குழந்தை விரலிலிருந்து பெருகிய அம்ருதத்தை தாய்ப்பால் என்று நினைத்துப் பருகியது. அதன் காரணமாக இந்த்ரன் அக் குழந்தையை மாந்தாதா (என்னிடமிருந்து பால் பருகியவன்) என்று பெயரிட்டான். அவன் பூமண்டலம் முழுவதும் ஏகாதிபத்யம் செலுத்தி வந்தான்.
 மாந்தாதாவிற்கு மூன்று பிள்ளைகளும் ஐம்பது பெண்களும் பிறந்தனர். நிற்க. ஸௌபரி என்ற ஒரு முனிவர் ஒர் நாள் நீரில் இரண்டு மீன்கள், ஆணும் பெண்ணுமாய் காமலீலையில் ஈடுபட்டிருப்பதைப் பார்த்து இல்லறத்தில் ஆசை கொண்டார். ஆகையால், ஸௌபரி மாந்தாதா சக்ரவர்த்தியை அணுகி, அவருடைய ஐம்பது புத்ரிகளுக்குள் ஒருவளை தனக்கு மனைவியாக அளிக்க வேண்டினார். அதற்கு, அவன் 'ஓர் ஸ்வயம்வரம் ஏற்பாடு செய்கிறேன். அதில் எவள் உம்மை விரும்பினாலும் அவளை உமக்கு அளிக்கிறேன்' என்று கூறினான். முதுமையும் விகாரமும் கொண்ட தன்னை மன்னன் புறக்கணிக்கிறான் என்று எண்ணி, முனிவர் தம் தபோ மஹிமையினால் தன்னை ஒரு ஸுந்தர, யௌவன புருஷனாக மாற்றிக் கொண்டார். ஸ்வயம்வரத்தில் இந்த அழகிய வாலிபனைக் கண்டதும் மாந்தாதாவின் ஐம்பது புத்ரிகளும் அவரையே மணக்க விரும்பினர். மாந்தாதா எல்லோரையும் முனிவருக்கே மணம் செய்து கொடுத்தான்.
 ஸௌபரி தனது தபோபலத்தால் எல்லா போகவஸ்துக்களையும் வரவழைத்து, பல வருஷ காலங்கள் தனது ஐம்பது மனைவிகளுடன் சிற்றின்பத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவரது காம வேட்கை தணிந்தபாடு இல்லை. மாறாக, அது நாளுக்கு நாள் தீயில் இட்ட நெய்யைப் போன்று கொழுந்து விட்டு எரிந்தது. இதனை உணர்ந்த முனிவர் தீவிர யோசனை செய்தார். "சிற்றின்பத்தில் ஈடுபட்டிருந்த மீன்களைக் கண்டு, என் தவ வாழ்க்கையைப் பாழடித்து விட்டேன். காம வாழ்க்கையால் என் தபோபலம் எல்லாம் வ்ரயமாகி வருகிறதே!". இவ்வாறு நினைத்து, அவருக்கு வைராக்யம் தோன்றியது. மறுபடியும் தீவிரமான தவத்தை மேற்கொண்டு, மோக்ஷமார்க்கத்தைத் தேடி, முடிவில் முக்தியடைந்தார்.
ஸ்ரீவைஷ்ணவிஸம் முகநூலில் பதிவு செய்தவர் திரு விஜயராகவன் நரசிம்ஹன் அவர்கள்.

No comments:

Post a Comment