Tuesday, November 9, 2021

Kurai onrum illai part 97 in tamil

குறையொன்றுமில்லை இரண்டாம் பாகம் ( தொடர்ச்சி ) பகுதி 97
முக்கூர் லஷ்மி நரஸிம்ஹாசாரியார்
மதுசூதன சரஸ்வதி என்கிற ஆசார்யர் மிக அழகாகத் சொன்னார். " உபநிஷத்தில் பிரும்மத்தை தேடுகிறீரே.. சாந்தோக்ய உபநிஷத், கேனோபநிஷத், கடோபநிஷத், மாணாடூக்யோபநிஷத்... இப்படி தேடித் தேடி பார்க்கிறீரே.. இதிலே பூத்தியை குழப்புகிற விஷயம் நிறைய இருக்கிறது..." என்று அவ்வாறு தேடுகிறவரைக் கூப்பிட்டுச் சொன்னார்
' உபநிஷத்தில் புத்தியைப் போட்டு ஏன் குழப்புகிறீர்.. ? அந்த உபநிஷத்தில் எந்த தேவதை சொல்லப்படுகிறதோ, அந்த தேவதை நமக்கு சுலபமாக இங்கே கிடைக்கிறதே..'
எங்கே கிடைக்கிறது?
அந்த யசோதை வீட்டில் உரலில் கட்டுண்டு நிற்கிறதே..! உபநிஷத்தில் இருக்கும் பிரும்மம் ஒரு எளிய பெண்ணின் குறுங்கயிற்றினால் கட்டுண்டு கிடக்கிறது. அவன் தன்னைத்தானே கட்டுண்டு பண்ணிய பெருமாயம் அந்நிகழ்ச்சி !
அம்மாவுக்கு சிரமத்தை கொடுக்கக் கூடாது என்று தானே கட்டுண்டு கிடக்கிறதாம் குழந்தை. அதை கட்டிய கயிறை முடிச்சுப் போடும் நேரத்தில் ஓர் அங்குலம் குறைகிறதாம். குறை கயிற்றை தேடி வரச் செல்கிறாள். போகும்போது குழந்தையைப் பார்த்து' நான் போய் வருவதற்க்குள் இங்கேயிருந்து எங்கேயாவது போனாயானால் தெரியும் ' என்று மிரட்டிவிட்டு போனாள் .
அந்த பட்டுக் குழந்தையும் தாயின் வார்த்தைக்கு கட்டுப் பட்டு நின்றதாம். அப்படி அசையாமல் நிற்பதைப் பார்த்து யசோதை சந்தோஷப்பட்டாளாம் !
அந்த குழந்தையை கட்டாமல் விட்டால்தான் என்ன.. என நினைத்தாளாம். ஆனால் ஊராரிடத்திலே சண்டை கொண்டு வருகிறதே என நினைத்து கட்ட , மறுபடியும் ஓர் அங்குலம் குறைந்ததாம் ! இது தொடர்ந்து நடக்க கயிறு தேட நாலு திக்கிலும் ஓடி களைத்துப் போனாள் யசோதை.
குழந்தை பார்த்தது.. ' அம்மாவை இப்படி சிரமப்பட்டு படுத்துகிறோமே என எண்ணியே கட்டுண்டு அடங்கியது '
பக்தியாகிற கயிற்றுக்குத்தான் எம்பெருமான் கட்டுண்டு நிற்கிறான் என்பதை உணர்த்தும் நிகழ்ச்சி.
குழந்தையை கட்டிப் போட்டுக் மாட்டுச் சாணத்தை அள்ளிப் போட்டு, வைக்கலை எடுத்துப் போட்டு, கன்றுக் குட்டியை கட்டிப் போட்டு வேலைகள் செய்கிறாள்.. அம்மா செய்யும் காரியத்தை எல்லாம் பார்த்து விட்டு , குழந்தை இரு கைகளாலும் தலையிலே அடித்துக் கொள்கிறதாம் !!
( வளரும் )
ஸ்ரீவைஷ்ணவிஸம் முக நூலில் பதிவு செய்தவர் திருமதி நளினி கோபாலன் அவர்கள்.

No comments:

Post a Comment