Tuesday, November 9, 2021

Annadhana Sivan - Periyavaa

*ஸ்ரீ அன்னதான சிவன்*

காஞ்சி மகாபெரியவரின் அன்பைப் பெற்றவர்கள் பலர். அவர்களில் ஒருவர் கும்பகோணம் அருகிலுள்ள தேப்பெருமாநல்லூர் சிவன். ஏழையாக இருந்தாலும் மக்களின் பசி தீர்க்க வேண்டும் என்று கருதி அன்னதானம் செய்த பரோபகாரி அவர். ஏழையான ஒருவரால் எப்படி அன்னதானம் செய்ய முடிந்தது என்ற கேள்வி எழுகிறதல்லவா! இதோ பதில்.

இவரது இளமைப்பருவத்தில், தஞ்சாவூர் மாவட்டத்தில் வசித்த கயத்தூர் சீனிவாச ஐயர் என்னும் மிராசுதார் பல கோவில் திருவிழாக்களில் அன்னதானம் செய்வதைப் பார்த்தார். பசித்தவருக்கு உணவளிப்பதே கடவுளுக்கும், மனிதனுக்கும் செய்யக்கூடிய முதல் பணி என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. சிலகாலம் அவருக்கு பணிவிடை செய்தார். 

பிறகு தன்னிடமிருந்த ஒரு வீட்டையும், நிலத்தையும் விற்று கிடைத்த பணத்தில், லட்சுமி நரசிம்மர் கோவில் ஒன்றில் நடந்த திருவிழாவின் போது அன்னதானம் செய்தார். 1897ல் கும்பகோணத்தில் நடந்த மகாமகத்தின் போது, சங்கரமடமே கண்டிராத அளவுக்கு மிகப்பெரிய அன்னதானத்தை நடத்தினார். அதைக்கண்ட பல செல்வந்தர்கள் தாமாகவே முன்வந்து அவருக்கு பொருள் அளித்தனர். அதைக்கொண்டு பல கோவில் விழாக்களிலும் அன்னமளித்தார். 1916ல் கும்பகோணம் சங்கர மடத்தில் நடந்த நவராத்திரி விழாவில் "லட்சம் பிராமண போஜனம்' நடத்திக்காட்டினார்.

1909ல் நடந்த மகாமகத்தின் போது காஞ்சிப்பெரியவரை முதன்முதலாக தரிசிக்கும் பாக்கியம் அவருக்கு கிடைத்தது. அப்போது பெரியவருக்கு வயது 15 தான். அன்று முதல் பெரியவர் மீது சிவனுக்கு பெரும் பக்தி ஏற்பட்டது. பக்தியுடன் பாசமும் சேர்ந்து கொண்டது.
1921ல் பெரியவருக்கு வயது 27. அப்போது தஞ்சாவூர் பகுதியில் அவர் யாத்திரை மேற்கொண்டிருந்தார். ஒரு சமயம் சுவாமிகள் பலநாட்கள் பிச்சை ஏற்றுக்கொள்ளாமல் உபவாசம் இருப்பதாகவும், அதனால் அவரது உடல் மெலிந்து விட்டதாகவும் சிவனுக்கு தகவல் கிடைத்தது. உணர்ச்சிவசப்பட்ட சிவன் சுவாமிக்கு ஒரு கடிதமே எழுதி விட்டார்.

"சுவாமி! தாங்கள் நீண்டகாலம் திடகாத்திரமாக இருந்து மக்களுக்கு அருள் புரிய வேண்டும். சிறிதளவேனும் எளிய உணவாக அன்ன பிட்சையை ஏற்க வேண்டும். உடல்நலம் குன்றினால் வெந்நீரில் ஸ்நானம் செய்ய வேண்டும். ஆற்றிலோ, கடலிலோ நீராடச் சென்றால், முன்னால் ஒருவரிடம் நீளமான குச்சியைக் கொடுத்து ஆழம் அறிந்து இறங்க வேண்டும். இரவில் வெகு நேரம் விழிக்காதீர்கள், நித்ய பூஜையை விரைவாக முடித்துக் கொண்டு சற்று ஓய்வெடுங்கள். தனியாக எங்கும் செல்லாதீர்கள். இந்த கடிதத்தின்படி தான் தாங்கள் நடந்து கொள்கிறீர்களா என்று அறிய ஆவலாக இருக்கிறேன். மடத்து அதிகாரிகள் மூலம் எனக்கு ஒரு கடிதம் அனுப்ப தங்கள் திருவடி பணிந்து வேண்டுகிறேன்,'' என்பது கடிதத்தின் சாரம்.

இப்படி ஒரு கடிதம் எழுத சிவனைத் தவிர யாருக்கு துணிச்சல் வரும்?

இதை மடத்து நிர்வாகி சுவாமிகளிடம் வாசித்துக் காட்டினார். ஒரு சமயம் சுவாமியை சந்தித்த சிவனிடம் "முடிந்த வரையில் இப்படி நடந்து கொள்கிறேன்' என்று சுவாமியும் தெரிவித்தார். சிவனின் வயோதிக காலத்தில் அவரது விருப்பப்படி திருப்புவனத்தில் தங்கியிருக்க 
ஏற்பாடு செய்தார். 

சிவன் மறைந்த செய்தி கிடைத்ததும், "சிவன் ஒரு துறவி இல்லை. ஞானமார்க்கத்தில் எந்த வித சாதனையும் செய்ததில்லை. ஆனாலும் இந்த ஜென்மத்தில் செய்த புண்ணிய பலனால் அவர் மோட்சம் அடைந்து விட்டார். இனி அவருக்கு பிறப்பில்லை,'' என்றார்.

சிவனைப் போல நம்மில் எத்தனை பேருக்கு மனம் வரும்! இன்று ஐ.டி.கம்பெனிகளிலும், வியாபாரத்திலும் கோடி கோடியாக சம்பாதிப்பவர்கள் எத்தனையோ பேர்! அவர்கள் தங்கள் தேவை போக மீதியை தானம் செய்ய வேண்டும். அதுவும் அன்னதானம் செய்யவேண்டும் ஸ்ரீகாஞ்சி நகர் காருண்ய மூர்த்தியின் அருள்பெற இதை விட எளிய வழி என்ன இருக்கிறது!

ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர.

*kn*

No comments:

Post a Comment