Courtesy:Smt.Dr.Saroja Ramanujam
யாதவாப்யுதாயம் என்பது வேதாந்த தேசிகரால் கவிநயமும் பக்தியும் மிகுந்து காணப்படும் கிருஷ்ணாவதாரம். இது பாகவதத்தை ஒட்டியே காணப்பட்டாலும் அங்கங்கு தேசிகரின் தனித்திறமை மிளிர்கிறது.
தேசிகர் அனைத்து அவதாரங்களையும் அர்ச்சாமூர்த்திகளையும் பற்றி ஸ்தோத்திரங்கள் செய்துள்ளார். ஆனாலும் கோபாலவிம்சதி என்னும் இருபது ஸ்லோகங்கள் மிகவும் சிறப்பாகவும் மனதைக் கொள்ளை கொள்ளும் வகையிலும் இருப்பது கண்ணனிடம் இவர் கொண்ட அன்பை விளக்குகிறது.யாதவாப்யுதயம் இதில் குறிப்பிட்டிருக்கும் பகுதிகளின் விரிவாக்கம் என்றே கொள்ளலாம். கோபால விம்சதியின் முதல் ஸ்லோகமே யாதவாப்யுதயத்தின் முதல் ஸ்லோகமாக இருப்பதே இதற்குச் சான்றாகும்.
யாத்வாப்யுதயத்தின் தனிச்சிறப்பு என்னவென்றால் அத்வைத வேதாந்தத்தின் மிகச்சிறந்த பண்டிதரான அப்பைய தீட்சிதர் இதற்கு விரிவுரை கூறியுள்ளதே . இனி இந்த காவியத்தின் சிறப்பினைக் காண்போம்.
யாத்வாப்யுதயம்
அத்தியாயம் 1- மங்களச்லோகம்
வந்தே பிருந்தாவனசரம் வல்லவீஜனவல்லபம்
ஜெயந்தீசம்பவம் தாம வைஜயந்தீ விபூஷணம்
இந்த ஸ்லோகம் மிகுந்த பொருட்செறிவுடன் கிருஷ்ணரின் மகிமையை பூரணமாக விவரிக்கிறது.
ஜெயந்தீசம்பவம் – க்ருஷ்ணாஷ்டமி அன்று ஜனித்தவரும்
ப்ருந்தாவனசரம்- பிருந்தாவனத்தில் சஞ்சரிக்கிறவரும்
வைஜயந்தீ விபூஷணம் – வனமாலை அணிந்தவனும்
வல்லவீஜனவல்லபம்- கோபியரின் ப்ரியனும் ஆன
தாம – கண்ணன் என்னும் ஜோதியை
வந்தே - வணங்குகிறேன்
இந்த நான்கு அடைமொழிகளும் பக்வானுடைய வாத்சல்யம், சௌசீல்யம் , சௌலப்யம், ஸ்வாமித்வம் ஆகிய குணங்களை விளக்குகின்றன.
அவனுடைய வாத்சல்யம் அல்லது அடியவர்களிடம் அன்பு பசுவுக்கு அதன் கன்றிடம் உள்ளதைப் போன்றது. .இது ப்ருந்தாவனசரம் என்ற சொல்லிலிருந்து விளங்குகிறது. இதை ப்ருந்த+அவன+சரம் என்று பிரித்தால் , ப்ருந்த என்பது அடியார் கூட்டம். அவன என்றால் காப்பது. சரம் என்றால் சஞ்சரிப்பவன். ப்ருந்தானாம் அவனாய சஞ்சரதி, அடியவர்களைக் காக்கவே சஞ்சரிப்பவன் என்று பொருள்.
பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே என்ற கீதை வாக்கியத்தை நினைவூட்டும் சொல்.
அப்பைய தீட்சிதர் இந்த ஸ்லோகத்தின் விளக்கத்தில், யார் தண்டகாரண்யசரனாக ராமாவதாரத்தில் ரிஷிகளைக் காக்க சஞ்சரித்தானோ அவனே இங்கு பசுக்களையும் ஆயர்களையும் காக்க பிருந்தாவனத்தில் சஞ்சரிக்கிறான் என்று கூறுகிறார். நவரசங்களில் அத்புத ரசம் மிளிறும் சொல்.
பரம்பொருள் இங்கு இடையனாக வந்து தன் அன்பை எல்லோருக்கும் பாகுபாடின்றி வழங்கும் அற்புதத்தைக் காண்கிறோம். அவனுடைய வாத்சல்யம் நரசிம்மாவதாரத்தில் நன்கு உணரப்படுகிறது. ஒரு தாயின் வாத்சல்யத்துடன் ப்ரஹ்லாதனுக்கு ஹிரண்ய கசிபுவால் எந்த துன்பமும் நேராமல் காத்தான் அல்லவா? பிராணிகளிடத்தும் அவன் வாத்சல்யம் எத்தகையது என்பதை கிருஷ்ணாவதாரத்தில் பசுக்களிடம் அவன் காட்டிய அன்பிலும், பாரதப்போரில் தானே தன் கையால் குதிரைகளுக்கு உணவு கொடுத்து நீராட்டினதிலும் காண்கிறோம்.
அடுத்தது அவனது சௌசீல்யம். இதன் பொருள் விளக்கம் என்னவென்றால், 'மஹத: மந்தை: ஸஹ நீரந்த்ர ஸம்ச்லேஷ ஸ்வ்பாவ: ' அதாவது உயர்ந்தவர்கள் சாமான்ய மக்களிடம் பேதமின்றிப் பழகுதல். இது வல்லவீஜனவல்லபம் என்ற அடை மொழியால் குறிப்பிடப்படுகிறது.
அப்பய்ய தீட்சிதர் சொல்கிறார். எவன் மகாலக்ஷ்மியுடன் நீங்காத சங்கமத்தில் உள்ளவனோ அவன் எளிய இடையப் பெண்கள் சங்கமத்திலும் இன்புறுகிறான் என்று. வல்ல என்றால் சஞ்சாரம் செய்வது. இடையர்கள் பசுமையான இடங்களைத் தேடிப்போவதால் வல்லவ எனப்படுகிறார்கள்.இது சிருங்கார ரசம் உணர்த்தும் சொல்.
அடுத்து ஜயந்தீசம்பவம் என்ற அடை மொழி. இது சௌலப்யத்தைக் குறிக்கிறது. இடைய்ர் குலத்தில் அவதரித்ததன் மூலம் தன சௌலப்யத்தைக் காட்டுகிறான் பகவான். சௌலப்யம் என்றால் லப்தும் ஸுஸகத்வம் , அதாவது எளிதில் அடையக்கூடியது. மற்ற எந்த அவதாரத்திலும் இல்லாத எளிமை கிருஷ்ணாவதாரத்தில் காணப்படுகிறது.
ஆயர்க்கு எளியோன், பசுக்கள் கன்றுகள் இவைகளுக்கு நண்பன், அடியார்க்கு எளியோன் என்று காட்ட பாண்டவர்க்கு தூது சென்று தேரோட்டியவன். இந்த எளிமையும் பெருமையும் வேறு எங்கும் காணக்கிடைக்கவில்லை.
ஜெயந்தீசம்பவம் என்ற சொல் பொருள் செறிந்தது. தேசிகர் தேவகீசம்பவம் என்று கூறாமல் ஜெயந்தீசம்பவம் என்று ஏன் சொல்கிறார்? அதாவது கிருஷ்ணன் பிறக்கவில்லை, தோன்றினார் என்பதனால். சம்பவாமி யுகே யுகே , ஒவ்வொரு யுகத்திலும் தோன்றுகிறேன், யதாயதாஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத்---ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம், எப்போதெல்லாம் தர்மத்திற்கு ஹானி ஏர்படுகிறதோ அப்போது நான் என்னைத் தோற்றுவிக்கிறேன் என்று சொல்கிறான் அல்லவா?
தேசிகர் யாதவாப்யுத்யத்தில் தேவகியின் கர்ப்பிணிக் கோலத்தை விரிவாக வர்ணிக்கிறார். ஆனால் சூரியன் கிழக்கில் உதிப்பதுபோல் தேவகியிடம் தோன்றினான் என்கிறார். அதாவது சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை. நாம்தான் கிழக்கில் சூரியனைப் பார்க்கிறோம். அது போல பகவான் எங்கும் எப்போதும் இருக்கிறான் ,. நாம் அவனைப் பலவிதமாக்க் காண்கிறோம். தேவகியின் கர்ப்பிணித் தோற்றம் அவன் மாயை. எங்காவது நான்கு கரங்களுடனும் கையில் சங்கு சக்கரமுடனும் ஒரு குழந்தை பிறக்குமா? அதனால்தான் 'தாம் அத்புத பாலகம் ' என்று கூறுகிறார் சுகர்.
ஜயந்தி என்றால் ஜயம் தநோதி என்று பொருள். கண்ணனுக்கு சென்றவிடமெல்லாம் ஜெயம் . வீரரசம் த்வனிக்கிறது.
தாம வைஜயந்தீ விபூஷணம என்ற சொற்கள் ஸ்வாமித்வத்தைக் குறிக்கின்றன. தாம என்றால் ஸ்வயம்ப்ரகாசம். வைஜயந்தி என்ற சொல் வனமாலையை குறித்தாலும் , பூததன்மாத்ர அதிஷ்டான தேவதா என்றும் பொருள். அதாவது பஞ்ச பூதங்களின் ஆதாரமாகிய பரம்பொருள். வனமாலை என்பது பகவானின் மாயையே. அதை அணிந்துகொண்டு பலவாறாகத் தோன்றுகிறான். பரவாசுதேவன் இந்த அடைமொழியால் குறிப்பிடப்படுகிறான்.
யாதவாப்யுதயம்
அத்தியாயம் 1 - தொடர்ச்சி
வேதங்களே அறிய முடியாத பெருமை உள்ளவன் பகவான். இதை தேசிகர் 'ஏகைக குணப்ராந்தே ச்ராந்தா: நிகம வந்தின: 'என்று குறிப்பிடுகிறார். அதாவது வேதங்களாகிய துதிப்பாடகர்கள் பகவானின் ஒருகுணத்தை வர்ணிப்பதிலேயே களைப்படைந்து விடுகின்றனராம்.
அப்படி இருக்கையில் குறைந்த அறிவுள்ளவர்கள் அவன் பெருமையைக் கூறுவது எவ்வாறு இயலும் எனக் கூறி ஆயினும் கிருஷ்ணனின் கதை அம்ருதத்துக்கு ஒப்பானதால் அறிவற்றவர் கூறினாலும் அது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று கூறுகிறார். அதனால் வால்மீகி வியாசர் போன்ற மகாகவிகளுடைய அடிச்சுவட்டில் செல்வதால் தன் முயற்சி ஏற்கப்படுவதாகவே இருக்கும் என்கிறார். இது அவருடைய தன்னடக்கம்.
அடுத்து கவியின் இலக்கணம் என்ன என்று எடுத்துரைக்கிறார், ரசம் பாவம் அலங்காரம் இவையோடு கூடிய ஒரு கவியின் படைப்பானது ஸரஸ்வதியுடன் கூடிய பிரம்மாவின் படைப்பிற்கு ஒப்பானது. ( ரசம் என்பது நவரசங்களைக் குறிக்கும். பாவம் என்பது அதனுடன் கூடிய மனோபாவங்கள். அலங்காரம் என்பது சொல்லலங்காரத்தைக் குறிக்கும்.) அப்படிப்பட்ட காவியம் ஸரஸ்வதியை தேவியை சர்வாபரணபூஷிதையாக தரிசனம் செய்வதற்கொப்பானது.
ஆயினும் இது பகவத் விஷயமாக இயற்றப்பட்ட காவியமாதலால் எங்கேனும் சற்று குறை இருப்பினும் விஷய கௌரவத்தை முன்னிட்டு எவ்வாறு ஒரு சிறந்த நடனமணியானவள் ஓரிடத்தில் தவறினாலும் அதை ரசிகர்கள் பொருட்படுத்தமாட்டார்களோ அதுபோல் குற்றம் களைந்து குணம் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் வ்யாசவேதமாகிய மகாபாரதம் என்ற கடலில் தோன்றிய அமுதமாகிய கிருஷ்ணனின் கதையைக் கூறுகிறேன் என்கிறார்.
இதை சற்று ஆராய்ந்தால் கிடைக்கும் கருத்துக்கள் எவை எனப் பார்த்தால், மகாபாரதத்தின் சுவையே கண்ணனின் செயல்கள்தான். மற்றும் வ்யாசவேதம் என்ற சொல் வேதங்களையே குறிப்பிடுவதாக வைத்துக் கொண்டாலும் அந்த வேதங்களின் சாரமே பகவான்தான். இதைத்தான் ஸ்ரீபாஷ்யத்தின் மங்களச்லோகத்தில் ராமானுஜர் 'ச்ருதி சிரஸி விதீப்தே ப்ரம்மணி ஸ்ரீநிவாசே ' என்று குறிப்பிடுகிறார். அதாவது வேதங்களின் மணிமுடியாக விளங்கும் பகவான் என்று பொருள்.
ஆகையால் கிருஷ்ணனுடைய சரிதமானது வேதங்களின் சாரமாகவும் விளங்குகிறது. மகாபாரதம் என்ற பாலில் இருந்து வியாசர் எடுத்த வெண்ணையே பாகவதம். வியாசர் பாகவதத்தை இயற்றிய காரணமும் அதற்குக் காரணமான சம்பவமும் இதை விளக்குகின்றது.
அதை இப்போது பார்ப்போம்.
பாகவதத்தின் தசம்ஸ்கந்த்ம் கிருஷ்ணாவதாரம். ஒரு சமயம் வியாசர் மகாபாரதத்தையும் மற்ற வேதாந்த நூல்களையும் புராணங்களையும் இயற்றியும் மிகுந்த மனக்கலக்கம் கொண்டவராகக் காணப்பட்டார். அப்போது அங்கு வந்த நாரதர் அவரிடம் தர்மம் வேதாந்தம் இவைகளைப் பற்றி விரிவாக எடுத்துரைத்த போதிலும் பக்தியை ஊட்டும் பகவானின் பெருமையையும் செயல்களையும் கூறும் அவதார மகிமைகளைப் பற்றி கூறாததாலேயே இந்த மனக்குழப்பம் எனக் கூறி பிரம்மாவிடம் இருந்து தான் அறிந்த பாகவதம் முழுவதையும் அவர்க்கு எடுத்துரைத்தார். இதுவே வியாசருக்கு பாகவத புராணத்தை எழுதத் தூண்டியது.
No comments:
Post a Comment