Courtesy:Smt.Dr.Saroja Ramanujam
யாத்வாப்யுதயம் - அத்தியாயம் 4 தொடர்ச்சி
தேசிகர் கருடன் வந்ததைப் பற்றி கூறுகையில் வேதங்களே பசுக்களாகி ஆரண்யத்தின் பல பகுதிகளிலே கண்ணன் செல்லும் வழியை முகர்ந்து பார்த்துக்கொண்டு சென்றன. அவைகளைப பின் தொடர்ந்து கருடன் கண்ணன் இருக்கும் இடம் வந்தடைந்தார் என்கிறார்.
கருடன் வேத மூர்த்தி. வேதாத்மா விஹகேச்வரோ என்றபடி. ஆரண்யகம் என்றால் உபநிஷத். அவைகளால் காட்டப்படும் மார்க்கம் பகவானை அடையும் மார்க்கம். அவனே வேதவேத்யன், வேதங்களால் அறியப்படுபவன். வேதங்களே ஆகிய பசுக்கள் அவனை அடையும் மார்க்கத்தைக் காட்டின.
பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த பகவானின் கிரீடம் விரோசனன் மகனான பலியினால் அபகரிக்கப்பட்டது. கருடனால் மீண்டும் கொணரப்பட்டு கன்னன்சிர்சில் அமர்ந்து சேரவேண்டிய இடத்தைச் சேர்ந்து என்கிறார்.
பிறகு யக்ஞபத்தினி உபாக்யானம் சுருக்கமாகக் காணப்படுகிறது. ஒரு சமயம் பசியால் வருந்தின தோழர்களை அருகில் யாகம் செய்கின்ற அந்தணர்களை அணுகி அன்னம் கேட்கும்படி கூற அதைக்கேட்ட அவர்கள் மறுக்கையில் அவர்களுடைய பத்தினிகளை அணுகும்படி கூறினார். அவர்கள் கண்ணன் ஆராதனமே யாகத்தினின்றும் சிறந்தது என்று கருதி சிறந்த உணவைக் கொணர்ந்தனர். அதை அக்னியில் சமர்ப்பிக்கப்பட்ட ஆஹுதி என உண்டு களித்தான் .
அடுத்து தேசிகர் கண்ணனுக்கும் கன்றுகளுக்கும் பரஸ்பர ஆனந்த அனுபவத்தை வர்ணிக்கிறார். கன்றுகள் அவன் கைபட்டவுடன் சுகம் கண்டு கண் மூடுகின்றன. மேலே தடவுகையில் அரை உறக்கத்தில் ஆழ்கின்றன. அவனியன்றி வேறெங்கும் செலுத்தாத கண்களை உடையவையாய் குனிந்த உருவுடன் இருந்த கன்றுகளை கண்ணன் தன்னை பக்தியினால் வணங்கி அனுபவிக்கும் மகான்களாகக் கண்டான்.
மரகதம் போன்ற கண்ணனின் மேனி ஒளியாலே புள்ளற்ற தரைகளும் பசுமையாகக் காட்சி அளித்தனவாம். அதில் கன்றுகள் மேய்க்கச் சென்று பிறகு புல் தரைகளை அணுகின.
புதிதாக கன்று ஈன்று பால் பெருக நின்ற கறவைகளை கன்றுகள் அணுகாமல் காட்டில் துள்ளித் திரிந்ததனால் களைத்திருக்க அவைகளை கண்ணன் தானே ஊட்டுவித்தான்.
கண்ணன் காட்டிலிருந்து திரும்பிய போது உதயசூரியனைக் கண்ட தாமரைகளைப் போல் கோபியரின் முகமலர்ச்சியைத் தோற்றுவித்தான்,. அவன் குழலூதி வரும்போது அவர்களுக்கு உலகமே மயில் தோகையினால் மூடியதைப் போன்ற மயக்கம் உண்டாயிற்று.
கண்ணனை சிறுமியரும் யுவதிகளும் அவரவர் வயதிற்கேற்ப ரசித்தனர். ஏனென்றால் அவன் ஸர்வார்ஹரஸாத்மன், எல்லோராலும் அனுபவிக்கத்தகுந்த பேரானந்த மூர்த்தி அல்லவா?' ரஸோ வை ஸ: ' என்று வேதம் கூறுகிறதே.
பலராமனையும் கிருஷ்ணனையும் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமாகத் தோன்றினர். பெற்றோருக்குக் குழந்தைகளாகவும், யுவதிகளுக்கு யௌவனம் நிறைந்தவராகவும்,அவதார வரலாற்றை அறிந்த பெரியோர்களுக்கு புராணபுருஷர்களாகவும் அறியப்பட்டனர்.
பிறகு தேசிகர் இளம் வயதில் கண்ணன் ஏழு எருதுகளை வென்று நப்பின்னையை மணந்ததைக் கூறுகிறார். பாகவதத்தில் இந்த சம்பவம் ருக்மிணி கல்யாணத்தின் பின்னரே சொல்லப்பட்டுள்ளது. அவள் நீளா தேவியின் அவதாரமாகக் கருதப்படுகிறது.
அடுத்து தேனுகாசுரன் பிரலம்பாசுரன் இவர்களின் வதம் பற்றி சுருக்கமாகக் கூறிவிட்டு காளிய மர்தனம் விவரிக்கப்படுகிறது. அதைப் பின்னர் காண்போம்.
No comments:
Post a Comment