Wednesday, September 1, 2021

Krishna Avatart part32

ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ... ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ... 🙏🙏🙏
     
           தஸாவதாரம்

          ஸ்ரீகிருஷ்ணாவதாரம்

 பகுதி 32

பிறந்த வாறும் வளர்ந்த வாறும் பெரிய பாரதம் கைசெய்து, ஐவர்க்குத்

 திறங்கள் சாட்டி யிட்டுச் செய்து போன மாயங்களும்,

 நிறந்த னூடுபுக் கெனதாவியை நின்றுநின்று உருக்கி யுண்கின்ற,இச்

 சிறந்த வான்சுட ரே! உன்னை யென்றுகொல் சேர்வதுவே.

 திருவாய்மொழி 05.10.01 நம்மாழ்வார்

பிறந்த ஆறும்
-
சாதரண மனிதர்களைப்போலே தானும் வந்து பிறந்தபடியும்

வளர்ந்த ஆறும்
-
தன்னை மறைத்துக்கொண்டு வளர்ந்தபடியும்

பெரிய பாரதம்
-
மஹாபாரத யுத்தத்தில்

கை செய்து
-
சேனைகளை அணிவகுத்து

ஐவர்க்கு
-
பஞ்சபாண்டவர்களுக்கு

திறங்கள் காட்டி யிட்டு
-
வெற்றி வழிகளைக் காட்டிக்கொடுத்து

செய்துபோன மாயங்களும்
-
ஆக இப்படிப்பட்ட காரியங்களைச் செய்து முடித்துத் தன் நாமமே சென்று சேர்ந்த மாயங்களும்

நிறந்தன் நாடு புக்கு
-
மர்மமான இதயத்தினுள்ளே புகுந்து

எனது ஆவியை
-
என் ஆத்மாவை

நின்று நின்று
-
இடைவிடாதே நின்று

உருக்கி உண்கின்ற
-
சிதிலமாக்கி அழியா நின்றன;

இ சிறந்தவான் சுடரே
-
இப்படிப்பட்ட சிறப்புப் பொருந்திய அழகு பொருந்தியரூபனே!

உன்னை சேர்வது என்று கொள்
-
உன்னை நான் சேரப் பெறுவது என்றைக்கோ?      

அஸ்வமேத யாகம் முடிவுற்றது.வந்திருந்த மகரிஷிகளும்,மன்னர்களும், மக்களும் கிருஷ்ணரை பணிந்து வணங்கினர்.கண்ணன் அனைவருக்கும் நல்லறக் கருத்துகளைக் கூறி ஆசி வழங்கினார். பின் கண்ணன் துவாரகைக்குத் திரும்பிச் செல்ல விரும்பினார். தேவர்களும், பிரம்ம ரிஷிகளும் யோகிகளும் பல்துறை வல்லுநர்களும் இனிக் கண்ணனை துவாரகையில் கண்டு தரிசிப்போம் எனக் கருதினர். கண்ணனை பிரிய மனமில்லாத பாண்டவர்கள் வருத்தம் மேலிட, தலை மேல் கை வைத்து வணங்கிக் கண்ணிர் மல்க ஒன்றும் பேசாது மௌனமாய் இருந்தனர் கண்ணனும் மனம் நெகிழ்ந்தார். வியாசர், திருதிராட்டிரன், விதுரர்,காந்தாரி, திரௌபதி ஆகியோரிடம் விடை பெற்றுக் கொண்டு தேரில் புறப்பட்டார் கண்ணன். அஸ்தினாபுரம் சென்ற பாண்டவர்கள் கண்ணனை நெஞ்சில் இருத்தி அவரது நினைவாகவே வாழ்ந்து வந்தனர்.

மஹாபாரதப் போர் முடிந்து முப்பத்தாறு ஆண்டுகள் ஆயின. குரு வம்சம் அழிந்ததைப் போலக் கண்ணனின் விருஷ்ணி (யாதவ) வம்சமும் அழியும் காலம் வந்தது. அதனை அறிவிப்பது போலத் துர்நிமித்தங்கள் பல தோன்றின. புழுதிக் காற்று உலகையே மூடிவிட்டது போல தோற்றம் அளித்தது, விண்ணிலிருந்து நட்சத்திரங்கள் கரிக்கட்டையாய் விழுந்தன, சூரியன் ஒளி குன்றியவனாய்த் தெரிந்தான், எங்கும் குழப்பமும் அச்சமுமாய் இருந்தது. ஆடம்பரமும் தற்பெருமையும் கொண்ட யாதவர்களின் வீழ்ச்சி நெருங்கி விட்டது. ஒரு சமயம் விஸ்வாமித்திரரும், கண்வ முனிவரும், நாரதரும் துவாரகைக்கு வந்தனர். விருந்தினராக வந்த அந்த முனிவர்களைப் பக்தி பூர்வமாக வரவேற்று உபசரித்திருக்க வேண்டும். ஆனால் ஆணவம் தலைக்கேறிய யாதவர்கள் அலட்சியமாக அம்முனிவர்களிடம் நடந்துக் கொண்டனர். கேலியும், கிண்டலுமாய் அவர்களிடம் பேசினர். சாம்பன் என்ற சிறுவனுக்கு அழகிய பெண் வேடமிட்டு, அம்முனிவர்களிடம் அழைத்துச் சென்று 'இவளுக்கு ஆண் குழந்தை பிறக்குமா? பெண் குழந்தை பிறக்குமா?' எனக் கேட்டு நகைத்தனர்.

கந்தல் துணிகளையும் உலக்கையையும் சேர்த்து மூட்டையாக வயிற்றில் கட்டிக் கர்ப்பிணிப் பெண்ணாக காட்சி அளித்த அவனைக் கண்ட அவர்கள் சினம் கொண்டனர். 'இவன் ஒரு உலக்கையைப் பெற்றெடுப்பான். அந்த உலக்கையால் யாதவ குலம் முழுதும் நாசம் அடையும்' எனச் சாபம் இட்டனர்.முனிவர்களின் சாபத்தைக் கேட்ட யாதவர்கள் பயந்து ஓடோடிச் சென்று பலராமனிடமும், கண்ணனிடமும் நடந்ததை கூறினர்.

இரும்புத்துண்டையும் மரத்துண்டையும் நன்றாகத் தூள் தூளாக்கிக் கடலில் போடுமாறு பலராமன் அவர்களுக்கு ஆலோசனைக் கூறினார். யாதவ இளைஞர்களும் அப்படியேச் செய்தனர். தங்களுக்கு நேர இருந்த ஆபத்து நீங்கியதாக நினைத்தனர். ஆனால் கண்ணனின் மனநிலை வேறாக இருந்தது. முன்னொரு சமயம் மக்களை பறி கொடுத்த காந்தாரி தமக்கு இட்ட சாபத்தை நினைத்தார். 'நீ நினைத்திருந்தால் குருகுல நாசத்தைத் தடுத்திருக்கலாம். ஆனால் நீ அவ்வாறு செய்யவில்லை. எனவே குருவம்சம் அழிந்தது போல உன் விருஷ்ணி வம்சமும் அழியட்டும்' என்று அவள் இட்ட சாபத்தை எண்ணி தமது யது வம்சமும் அழியும் காலம் வந்துவிட்டதை உணர்ந்தார். கண்ணன் வர இருக்கும் ஆபத்தை மாற்ற விரும்பவில்லை. காலத்தின் இயல்பு அது. விருஷ்ணிகளின் ஒழுக்கக்கேடு வரம்பு மீறிச் சென்றது. ஆணவமும், ஆடம்பரமும் அளவு கடந்து சென்றன. பலராமனையும், கண்ணனையும் தவிர மற்ற எல்லாரையும் அவர்கள் அவமானப் படுத்தினர். ஐம்புல இன்பங்களில் எல்லை மீறிச் சென்றனர். குறிப்பாகக் சிற்றின்பத்தில் பெரிதும் ஈடுபட்டனர். கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் துரோகம் செய்தனர்.
கண்ணன் தன்னுடைய தேரோட்டி தாருகன் மூலம் அர்ஜுனன்னுக்கு தகவல் அனுப்பினார். பெண்களையும் குழந்தைகளையும் துவாரகையிலிருந்து அஸ்தினாபுரத்திற்கு அழைத்துச் செல்லும்படி.

சாபம் பலிக்கும் காலம் வந்து விட்டது.கடலுக்குள் போடப்பட்ட இரும்புத்துண்டை ஒரு மீன் விழுங்கியது, அந்த மீனை பிடித்த மீனவன் ஒரு வேடனிடம் அதை விற்றான். வேடன் அந்த இரும்பை தன் வில்லுக்கு கூர் முனையாக்கினான். மரத் தூள்கள் கரையோரத்தில் ஒதுங்கி நாணல்களாக வளர்ந்திருந்தன. குடித்து விட்டுக் கேளிக்கைகளில் ஈடுபட்ட விருஷ்ணிகள் அக்குடிவெறியில் ஒருவரோடு ஒருவர் சர்ச்சையில் ஈடுபட்டனர். ஒருவரை ஒருவர் அடிக்கத் தொடங்கினர். கடற்கரையில் வளர்ந்திருந்த நாணல்கள் அனைத்தும் முனிவர்கள் இட்ட சாபத்தால் உலக்கைகளாக மாறியிருந்தன. விருஷ்ணிகள்  ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். தந்தையென்றும், மகன் என்றும்  பாராது கடுமையாக அடித்துக் கொண்டு மாண்டனர்.

காலத்தின் போக்கை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார் கண்ணன். மண்ணுலகில் தன் வேலை முடிந்து விட்டது என எண்ணினார். பலராமன் தன் தெய்வீக உடலை ஒழித்து விட்டுப் பரத்தில் ஐக்கியமானார். கண்ணனும் தன்னை மாய்க்கக் கருதினார். இப்போது தமது உத்தம உலகை அடையும் நேரம் வந்துவிட்டது என உணர்ந்தார். கண்ணன் ஐம்புலன்களையும் அடக்கி யோக நித்திரையில் ஆழ்ந்தார். அதனை உணராது ஏதோ விலங்கு என எண்ணி ஜரன் என்னும் வீரன் அம்பை எய்தினான். கூரிய முனையை உடைய அந்த அம்பு கண்ணனின் இகலோக வாழ்வை முடிவுக்குக் கொண்டு வந்தது. முனிவர்கள் தொழ ஜோதி உலகு எங்கும் பரவி ஆகாயம் நோக்கிச் செல்ல தம் உலகை அடைந்தார் கண்ணன். அவரை அங்கு இந்திரனும், அஸ்வினி தேவர்களும், ருத்ரர்களும், வசுக்களும், சித்தர்களும், முனிவர்களும் தாழ்ந்து பணிந்து வரவேற்றனர்.

தாருகன் அஸ்தினாபுரம் சென்று விருஷ்ணிகள் மாண்ட செய்தியை தெரிவித்தான். உலக்கையால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு இறந்தனர் என்ற செய்தி அறிந்து அஸ்தினாபுரம் திடுக்கிட்டது. கண்ணனைக் காணலாம் என்று வந்த அர்ச்சுனன் ஏமாற்றம் அடைந்தான்.அவன் அங்கு வரும் முன் பரமாத்மா தனது உலகமான வைகுண்டத்தை அடைந்து விட்டார்.
கண்ணன் இல்லாத துவாரகையையும், கணவனை இழந்து துடிக்கும் பெண்களையும் கண்ட அர்ச்சுனன் மயங்கி வீழ்ந்தான். பார்த்தனைப் பார்த்த ருக்மணியும் சத்யபாமாவும் 'ஓ' வென கதறி அழுதனர். அவர்கள் அனைவருக்கும் ஆறுதல் கூறிய அர்ச்சுனன் அவர்கள் அனைவரையும் பாதுகாக்கும் பொறுப்பைத் தான் ஏற்றுக் கொண்டான்.
அர்ச்சுனனும் உடன் சென்ற பெண்களும் செல்லச் செல்ல  நகரங்களும் கிராமங்களும் கடலால் மூழ்கின.

அர்ச்சுனன் அத்தனை பெண்களையும், குழந்தைகளையும் அழைத்துச் செல்வதைக் கண்ட திருடர்களுக்கு பேராசை உண்டாயிற்று. அவர்கள் ஆயிரக் கணக்கில் அவர்களை வழிமறித்து தாக்கினர். திருடர்களின் துணிச்சலைக் கண்டு அர்ச்சுனன் நகைத்தான். 'உயிரின் மீது உங்களுக்கு ஆசை இருக்குமாயின் ஓடி விடுங்கள். இல்லையேல் எனது அம்பினால் கொன்றுவிடுவேன்;' என எச்சரிக்கை செய்தான். ஆனால் திருடர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை.பெண்களின் கற்பைச் சூறையாடினர். சினம் கொண்ட அர்ச்சுனன் காண்டீபம் என்னும் வில்லை எடுத்து நாண் ஏற்றி அம்பு தொடுக்க விறைந்தான். ஆனால் காண்டீபம் செயலிழந்துவிட்டிருந்தது. கற்ற மந்திரங்களும் நினைவுக்கு வரவில்லை, கற்ற கல்வியும் கேள்வியும் மறந்தன. 'வில்லுக்கு விஜயன்' என்ற பெயர் போய்விட்டதோ என கலங்கினான்.

அங்கு வந்த வியாசர் அர்ச்சுனனுக்கு ஆறுதல் சொன்னார்..பின்.."அர்ச்சுனா..இறந்து போனவர்களைப் பற்றி கவலைப்படாதே.தெய்வ அம்சம் கொண்ட அவர்கள் கடமை முடிந்தது.அதனால் அவர்கள் ஆயுளும் முடிந்தது.இப்படி நடக்க வேண்டும் என்ற சாபம் அவர்களுக்கு இருந்தது.எல்லோரையும் ரட்சிக்கும் கண்ணன் நினைத்திருந்தால் இந்த அழிவைத் தடுத்து நிறுத்தி இருக்க முடியும்.ஆனால் அவரே இந்த முடிவை அங்கீகரித்து விட்டதாகவே நினை.உன் வாழ்க்கையில் எல்லா நேரங்களிலும் உனக்கு வழிகாட்டிய பரமாத்மாவும் தமது கடமை முடிந்தது எனக் கருதித் தமது உலகை அடைந்து விட்டார்., நீயும் உன் சகோதரர்களும் ஆற்ற வேண்டிய அருஞ்செயலைத் தெய்வ சம்மதத்துடன் செய்து முடித்து விட்டீர்கள். பூமித்தாயின் பாரம் உங்களால் குறைந்தது.கடமையை நிறைவேற்றிய உங்கள் காலமும் முடிவடையும் நேரம் வந்து விட்டது.இந் நில உலக வாழ்க்கையைத் துறந்து நல்ல கதியை அடைய உன் சகோதரருடன் புறப்படுவாயாக.."என்றார். பகவான் பிறந்த போதும் இனிப்புக் கொடுக்க ஆளில்லை, இப்போது பரம்பதத்திற்கு செல்லும் போதும் ஜெய விஜயி பவ என பல்லாண்டு பாட யாருமில்லை. ஸ்ரீகிருஷ்ண லீலைகளை மட்டும் இப்பூலோகத்தில் விட்டுச் சென்றார். பகவானின் சரித்திரத்தைப் பார்த்தாலும், நினைத்தாலும், கேட்டாலும் நாம் இந்த கலிக் கொடுமை மிகுந்த உலகத்தில் பிறக்க வேண்டாம். நம் பிறவி நோய் அறுபடும். நாளைமுதல் ஸ்ரீகிருஷ்ணரின் கோவில்களைப் பார்க்கலாம்.

 ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏

 வானமாமலை  ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏

நாளையும்  ஸ்ரீகிருஷ்ணாவதாரம்   தொடரும் ....

🙏 சர்வம் கிருஷ்ணார்ப்பனம் 🙏*

No comments:

Post a Comment