"அஹம் அஸ்ய அவரோ ப்ராதா குணை:
தாஸ்யம் உபாகத:"
சீதாதேவியை ராவணன் அபகரித்துச் சென்ற நிலையில், அவளைத் தேடிக் கொண்டு வந்த ராமனும் லட்சுமணனும் ரிஷ்யமுக மலையை அடைந்தார்கள். அந்த மலையில்தான் தன் அண்ணன் வாலிக்குப் பயந்து ஒளிந்திருந்தான் சுக்ரீவன். அவனோடு அனுமான், ஜாம்பவான் உள்ளிட்ட நான்கு மந்திரிகள் அங்கே இருந்தார்கள்.
ராமனும் லட்சுமணனும் ரிஷ்யமுக மலையை நோக்கி வருவதைத் தூரத்தில் இருந்து கண்ட சுக்ரீவன் திகைத்துப் போனான். அனுமானை அழைத்து, "அதோ இரண்டு வீரர்கள் வருகிறார்கள் பார்! அவர்கள் பார்ப்பதற்குப் புஜபலப் பராக்கிரமசாலிகளாகத் தெரிகிறார்கள். எனினும் அரச குமாரர்கள் போல் தோன்றும் இவர்கள் ராஜ அலங்காரத்தில் இல்லாமல் மரவுரி அணிந்திருக்கிறார்கள். தபஸ்விகளைப் போல் மரவுரி அணிந்திருந்தாலும், கையில் கமண்டலம் வைத்திருக்கவில்லை! வில் அம்புகளை ஏந்தி இருக்கிறார்கள்! இவர்கள் ராஜ குமாரர்களா? முனிவர்களா? போர் வீரர்களா? ஒன்றும் புரியவில்லையே!" என்று சொன்னான் சுக்ரீவன். அனுமான் சுக்ரீவனைப் பார்த்து, "அஞ்ச வேண்டாம்! யாராக இருந்தாலும் அவர்கள் நம்மிடம் வந்தால் நாம் பார்த்துக் கொள்ளலாமே!" என்று சாந்தமாக விடையளித்தார். ஆனால் அவர்கள் மலையை நோக்கி வர வர, சுக்ரீவனின் அச்சம் அதிகரித்தது.
ஏற்கனவே வாலியை எண்ணி அஞ்சிக் கொண்டிருந்த சுக்ரீவன், "அனுமனே! எனக்கு ஓர் ஐயம் எழுகிறது. என் அண்ணன் வாலி இந்த ரிஷ்யமுக மலைக்கு வரக்கூடாது என்று அவனை மதங்க முனிவர் சபித்து விட்டார். அதனால் வாலி நேரடியாக வராமல் இந்த முரண்பாடான தோற்றத்தோடு கூடிய இந்த இருவரையும் என்னைக் கொல்வதற்காக அனுப்பி இருக்கிறான் போலும்!" என்று அச்சத்துடன் சொன்னான். அவனைத் தேற்றிய அனுமான், "நீங்கள் சற்றுப் பொறுங்கள்! அவர்கள் யார் என்பதை நான் போய் அறிந்து வருகிறேன்!" என்று சுக்ரீவனிடம் சொல்லி விட்டு, ராம லட்சுமணர்களை நோக்கி வந்தார்.
ராமனையும் லட்சுமணனையும் வணங்கி அவர்களைப் பணிவுடன் வரவேற்ற அனுமான், "தாங்கள் யார்? தங்கள் வருகைக்கான காரணத்தை நான் அறியலாமா?" என்று கேட்டார். நவ வியாகரண பண்டிதரான அனுமனின் பேச்சினால் மிகவும் கவரப்பட்ட ராமன், 'சொல்லின் செல்வன்' என்று அனுமனைப் பாராட்டினான். லட்சுமணனைப் பார்த்து, "நாம் யார் என்பதை இவரிடம் தெரிவிப்பாயாக!" என்று சொன்னான் ராமன். லட்சுமணன் முதலில் அனுமனுக்கு ராமனை அறிமுகம் செய்து வைத்தான். அதன்பின், "நீங்கள் யார்?" என்று லட்சுமணனைப் பார்த்து அனுமான் கேட்க,
"அஹம் அஸ்ய அவரோ ப்ராதா குணை: தாஸ்யம் உபாகத:"
என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான் லட்சுமணன். "லட்சுமணனாகிய நான் ராமனின் தம்பி. ராமனின் குணங்களால் கவரப்பட்டு அவருக்குத் தொண்டனாக ஆனவன்!" என்பது இதன் பொருளாகும். லட்சுமணன் இவ்வாறு தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டதன் பின்னணியில் ஒரு சூட்சுமம் உள்ளது.
அது என்ன?
இங்கே லட்சுமணன் தானாக அனுமனிடம் பேசவில்லை. ராமன் தன் சார்பில் லட்சுமணனைப் பேசச் சொல்லியிருக்கிறான் என்பதை நாம் பார்த்தோம் அல்லவா? இப்போது "நீங்கள் யார்?" என்று லட்சுமணனைப் பார்த்து அனுமான் கேட்ட போது, லட்சுமணனுக்குத் தர்ம சங்கடமான நிலை ஏற்பட்டு விட்டதாம்! அது யாதெனில், "நான் யார் என்று அனுமான் கேட்கிறாரே! இப்போது நான் யார் என்பது பற்றிய ராமனின் அபிப்பிராயத்தை ராமனின் சார்பில் சொல்வதா? அல்லது நான் யார் என்பது பற்றிய எனது கருத்தைச் சொல்வதா?" என்று சிந்திக்கத் தொடங்கினான் லட்சுமணன்.
சிறிது நேரம் சிந்தித்து விட்டு, இரண்டையுமே சொல்லி விடுவோம் என்று கருதி, முதலில் ராமனின் பார்வையில், "அஹம் அஸ்ய அவரோ ப்ராதா", "நான் ராமனுக்குத் தம்பி! இது ராமனின் கருத்தாகும்!" என்றும், அதன்பின் தனது கருத்தைத் தெரிவிக்கும் விதமாக, "குணை: தாஸ்யம் உபாகத:", "அவர் என்னைத் தம்பியாக நினைத்தாலும், நான் உண்மையில் அவருக்குத் தொண்டனாகத் தான் என்னைக் கருதுகிறேன். அவரது குணங்களால் கவரப்பட்டு, அந்த குணங்களுக்குத் தோற்று அவருக்குத் தொண்டனாக நான் இருக்கிறேன். என்றென்றும் அவருக்குத் தொண்டனாக இருப்பதையே நான் விரும்புகிறேன்!" என்றும் லட்சுமணன் பதில் சொன்னான்.
குணை: தாஸ்யம் உபாகத: - அவர் குணங்களால் ஈர்க்கப்பட்டு அவருக்குத் தொண்டனானேன் என்று லட்சுமணன் சொன்னது போல், தனது குணங்களாலே நம் அனைவரின் மனங்களையும் ஈர்த்து, கவர்ந்து செல்பவராகத் திருமால் திகழ்வதால், அவர் 'ப்ரபு:' என்றழைக்கப்படுகிறார். ப்ரபு என்றால் மனங்களை ஈர்ப்பவர் என்று பொருள்.
(பராசர பட்டர், 'ப்ரபு:' என்ற சொல்லுக்குப் பூமியில் அவதரித்தாலும் மேன்மை குன்றாதவர் என்று பொருள் உரைத்துள்ளார். 'ப்ரபு:' என்பதற்கு,
நம் மனங்களை ஈர்ப்பவர் என்று பொருள் உரைத்துள்ளார். எனவே ஒரே திருப்பெயர் இரண்டு இடங்களில் வந்தாலும்,
இடத்துக்குத் தக்கபடி பொருளிலே மாற்றம் உண்டு.
"ப்ரபவே நமஹ" என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குப் பிறரை ஈர்க்கவல்ல நற்குணங்கள் உண்டாகும்படி திருமால் அருள்புரிவார்.
ஸ்ரீவைஷ்ணவிஸம் முக நூலில் பதிவு செய்தவர் திருமதி நளினி கோபாலன் அவர்கள்.
No comments:
Post a Comment