Courtesy:Smt.Dr.Saroja Ramanujam
யாதவாப்யுதயம் -
அத்தியாயம் 1-தொடர்ச்சி
நினைவூட்டுகின்றன. அதை அடுத்து காண்போம்.
கிருஷ்ணனுடைய சரிதத்தை தேசிகர் விபூத ஜீவாது என்று குறிப்பிடுகிறார். விபுத என்ற சொல் தேவர்களையும் ஞானிகளையும் குறிக்கும். தேவர்களின் கோரிக்கைக்கேற்ப எடுத்த அவதாரமாதலால் அவர்களுக்கும் ,சம்சார துக்கத்தை போக்குவதால் ஞானிகளுக்கும் அமுதம் போன்றது என்று பொருள்.
அடுத்த ஸ்லோகம் ,
க்ரீடாதூளிகயா ஸ்வஸ்மின் க்ருபாரூஷிதயா ஸ்வயம்
ஏகோ விச்வமிதம் சித்ரம் விபு: ஸ்ரீமான் அஜீஜனத் (யாதவா. 1.9)
இதன் பொருள்,
திருமால்(விபு:ஸ்ரீமான்) ஒருவனே க்ருபையாகிய வர்ணத்தில் தோய்த்தெடுக்கப்பட்ட லீலையாகிய தூரிகையினால் இந்த உலகமாகிய சித்திரத்தை சர்வ சக்திமானானபடியாலே தன்னிடத்தில் தானே எழுதினான்.
பகவானை விபு, சர்வசக்தி படைத்தவன் , ஸ்ரீமான், திருவுடன் கூடியவன் என்கிறார். ஏக: ஒருவனே என்பது 'ஸதேவ சௌம்ய இதம் அக்ர ஆஸீத்,ஏகமேவ அத்விதீயம் ,' முதன்முதலில் பிரம்மம் ஒன்றே இருந்தது அதைத்தவிர வேறு இல்லை என்ற சாந்தோக்ய உபனிஷத்தின் பிரதிபலிப்பு.
பிரம்மம் என்பது நாராயணன். உலகமாகிய சித்திரத்தை தன்னிடத்தில் தானே எழுதினான். ஏனென்றால் அவனைத் தவிர வேறு இல்லை அல்லவா?.இந்த உலகம் என்பது ஒரு ஓவியம் போன்ற மாயை உருவம் என்பது பொருள்,. அதை எழுதும் தூரிகை எனபது அவனுடைய லீலை . க்ருபையாகிய வர்ணத்தில் தோய்த்து என்றால் அவன் நம்மைக் காக்கவே இந்த லீலை என்று பொருள். சித்ரம் என்ற சொல் விந்தை என்பதையும் குறிக்கும்.
உலகமே அவன் லீலை என்றால் இதில் உள்ள துன்பமும் அவன் செயல்தானே . அப்படியானால் அவன் விளையாட்டுக்காக இந்த துயரம் நிறைந்த உலகத்தைப் படைத்தானா? இல்லை என்கிறார் தேசிகர் இதை அவன் கிருபை என்ற வர்ணத்தில் தோய்த்து எழுதினான் என்றதன் மூலம்.
இங்கு லீலை என்ற சொல் அவன் விளையாடுவதைக் குறிப்பதல்ல. படைப்பு என்பது அவனுக்கு விளையாதுவதைப் போல் எளிது என்பதையே உணர்த்துகிறது. ஏனென்றால் அவன் உலகத்தைப் படைப்பதோடு நின்றுவிடவில்லை. அதைக் காக்கவும் செய்கிறான். துன்பம் என்பது நம் வினைப் பயனாக வருவது. அதிலிருந்து நம்மைக் காத்து விடுவித்தலே அவன் கருணை.
அடுத்து கண்ணன் அவதரித்த யதுகுல வர்ணனை
யாதவாப்யுதயம்
அத்தியாயம் 1 தொடர்ச்சி
யதுகுலம் சந்திரனிடம் இருந்து தொடங்குகிறது. அதாவது ராமர் எப்படி சூர்ய வம்சமோ அதுபோல கிருஷ்ணன் சந்திர வம்சம். 'சந்த்ரமா மனஸோ ஜாத: ,'- புருஷ ஸூக்தம். சந்திரன் ' பரிபாலயிதவ்யேஷு பிரஸாத இவ,' பகவானின் அருள் வடிவம் போல , மனதிலிருந்து தோன்றினான் என்கிறார். ஏனென்றால் அவன் ஜகதாஹ்லாதகரன் , உலகத்திற்கே சந்தோஷத்தை உண்டாக்குபவன்.
அடுத்தது புதன் சந்திரனின் மகன். அவனுடைய மகன் புரூரவஸ். அவன் முறைப்படி யாக யக்ஞாதிகளை செய்த நல்லோரின் உதாரணமாக விளங்கினான். அதனால் சுவர்க்கத்திற்கு சென்று அங்கு ஊர்வசியை மணம் புரியும் பேறு பெற்றான்.அவன் வம்சம் பல கிளைகளாக மென்மேலும் வளர்ந்தது.
அவன் வம்சத்தில் தோன்றியவன் நஹுஷன். இந்திரன் ஒரு சமயம் வ்ருத்ராசுரனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் அடைந்து ஒளிந்திருந்தபோது தேவர்கள் நஹுஷனை இந்திரன் ஆக்கினர். ( நூறு அஸ்வமேத யாகம் செய்தவருக்கு இந்திர பதவி அடையும் தகுதி உண்டாகிறது.)
நஹுஷனின் மகன் யயாதி. அவனுக்கு மூன்று புதல்வர்கள். அவர்களில் யது என்பவனே கிருஷ்ணனின் மூதாதையருள் முக்கியமானவன். அவனுடைய வம்சம் யது வம்சம் என்று பெயர் பெற்றது. யதுவின் சந்ததியில் பிறந்தவர்களுக்கு ஈடு உலகில் எவரும் இல்லை என்று தேசிகர் புகழ்கிறார்.
அவன் கொடையாளிகளில் சிறந்தவனாக விளங்கினான் என்ற தேசிகர் அவனிடம் வந்த யாசகர்கள் மீண்டும் யாசிக்க இடமே இல்லாது மட்டும் அன்றி தாங்களே பின்னால் வருபவருக்கு கொடை அளிக்கும் வல்லமை பெற்றிருந்தனர் என்கிறார்.
மேலும் தண்டிக்கவேண்டியவர்களை தண்டிப்பவனாய், பகைவரை அழிக்கின்றவனாய் ,எல்லா பிரஜைகளுடமும் சமநோக்குடையவனாய் தெற்கு திக் பாலகனான யமனை ஒத்திருந்தான் என்கிறார்.
அவன் வம்சத்தில் தோன்றியவர் வசுதேவர்.இவர் முற்பிறவியில் தேவாசுரருக்குத் தந்தையான கஸ்யப பிரஜாபதியாவார். இவர் பிறக்கும்போது துந்துபி ஆனகம் என்ற தேவலோக வாத்தியங்கள் முழங்கினவாம். ஆகையால் இவருக்கு ஆனக துந்துபி என்ற பெயரும் உண்டு.
அவர் உலகங்களுக்கு விஷ்ணுவைப்போலும் ஒளிகளுக்கு சூரியன் போலும் ரத்தினங்களுக்கு கடல் போலும் நல்லோர்க்கு சிறந்த புகலிடமாக இருந்தார். அதனாலேயே நல்லோர்களைக் காக்கவும் துஷ்டர்களை அழிக்கவும் திருவுள்ளம் கொண்டு பகவான் இவருடைய மகனாக அவதரித்தார்.
முற்பிறவியில் சுரபி, அதிதி என்று கச்யபராகிய இவருக்கு மனைவியாக இருந்தவர்கள் இப்பிறவியில் ரோகிணி, தேவகி என்ற பெயருடன்மனைவிகளானார்கள். அவ்விருவரும் கங்கையும் யமுனையும் கலந்ததுபோல் வசுதேவரிடம் ஒன்றான அன்புடன் இருந்தனர்.
வசுதேவர் அரசகுலத்தில் பிறந்தாலும் உலக இன்பத்தில் ஆசையற்றவராகவும் முக்தி மார்க்கத்தையே விரும்புபவராகவும் இருந்தார்.
தேவகி கம்சனின் சகோதரி . அவள் திருமணத்தின் போது அவளுடைய எட்டாவது குழந்தையால் தனக்கு மரணம் சம்பவிக்கும் என்ற அசரீரி வாக்கைக் கேட்ட கம்சன் அவர்களை சிறையில் அடைத்தான். முன் பிறவியில் காலநேமி என்னும் அசுரனாக இருந்து விஷ்ணுவால் கொல்லப்பட்ட அவன் அவரிடமும் அவர் பக்தர்களிடமும் தீராப்பகை கொண்டிருந்தான்.
இந்த தருணத்தில் பகவானின் அவதாரத்திற்கு காரணமான சம்பவம் தேவலோகத்தில் நிகழ்ந்தது. அதை அடுத்து காணலாம்.
யாதவாப்யுதயம் -அத்தியாயம் 1 தொடர்ச்சி
பூதேவி தேவர்களிடம் சென்று பூமியில் ராட்சத மலைகளைப் போல் உள்ள அதர்மம் மிக்க அரசர்களால் ஏற்பட்ட பூபாரத்தை நிவர்த்திக்க உபாயம் தேடும்படி பிரார்த்தித்தாள். அதைக் கேட்ட தேவர்கள் ப்ரம்மாவை முன்னிட்டுக்கொண்டு நாராயணனை நாடிச்சென்று அவரைப பின்வருமாறு துதிக்கலானார்கள்.
1.த்ரிவேதி மத்ய தீப்தன்- மூன்று வேதங்களின் நடுவே பிரகாசிப்பவர். ஏனென்றால் அவர் வேத வேத்யன் , வேதங்களால் அறியப்படுபவர்.
2.த்ரி தாமன்.-பரமபதமாகிய வைகுண்டம், பாற்கடல், சூர்ய மண்டலம் என்ற மூன்று இருப்பிடம் கொண்டவர். உபநிஷத் பகவானை சூர்யமண்டல் மத்ய வர்தி, என்று வர்ணிக்கிறது.
3. பஞ்சாயுதன்- சங்கு சக்கரம், கதை, சார்ங்கம்,(வில்)கட்கம் (கத்தி) முதலிய ஐந்து ஆயுதம் தரித்தவர்.
4.பாஹ்யந்தரஹவிர்புக்-உள்ளும் புறமுமான ஹவிர்பாகத்தை ஏற்பவர். உள்ளும் என்றது ஆத்ம நிவேதனம், புறமும் என்றது யாகத்தில் சமர்ப்பிக்கபடும் ஹவிர்பாகம்.
5. அனன்யாதீன மஹிமா-மற்ற தேவர்களின் மகிமை பராதீனம் அதாவது பகவானுக்குட்பட்டது. அனன்யாதீனமஹிமா என்றால் எதற்கும் கட்டுப்படாத சுவாதீனமானது ,
6.தயாதீன விஹாரன்- தயையால் மட்டுமே கட்டுப்படுபவன்.
அடுத்துவரும் ஸ்லோகம் ஒரு அழகான உவமையைக் கொண்டிருக்கிறது.
ஸ பவான் குணரத்னௌகை: தீப்யமான: தயாம்புதி:
தநோதி வ்யூஹவிபவை: தரங்கைரிவ தாண்டவம் (யாதவா.1. 45)
பகவான் ஞானம் பலம் ஐஸ்வர்யம் தேஜஸ் சக்தி வீர்யம் என்ற குணங்களாகிய ரத்தினங்களால் பிரகாசிக்கும், வாசுதேவன் சங்கர்ஷணன் பிரத்யும்னன் அநிருத்தன் என்கிற வியூகங்கள், அவதாரங்களாகிய விபவங்கள் இவைகளை அலைகளாகக் கொண்டு தாண்டவமாடும் கருணைக்கடல்.
நடவத் பூமிகாபேதை: நாத தீவ்யன் ப்ருதக்விதை:
பும்ஸாம் அனன்ய பாவானாம் புஷ்ணாஸி ரசம் அத்புதம்(யாத. 49)
ஒரு நடிகனைப்போல் பலவகை வேஷம் தரித்து அவதாரங்கள் எடுத்துஅவற்றிற்கேற்ப நடிக்கிறார்.அது ஞானியர் மனத்தில் அத்புத ரசத்தை தோற்றுவிக்கின்றது. கிருஷ்ணாவதாரத்தில் அவன் எடுக்காத வேஷம் இல்லை.
பரிசுத்த மனம் படைத்தோருக்கு வேண்டியதைக் கொடுக்கும் சிந்தாமணியாக இருக்கும் பகவான், சம்சாரமாகிய பாலைவனத்தில் திரிந்து களிப்புற்றோருக்கு பக்தி என்னும் நதியாகத் தோன்றி கருணை என்னும் அமுதத்தை வழங்குகிறான்.
சம்சாரக்கடலில் வினைப்பயனாகிய சுழலில் அகப்பட்டுத் தவிப்பவர்க்கு அதைக்கடக்கும் படகாகவும் உள்ளான்.
மழைநீரை அன்றி வேறெதுவும் பருகாத சாதகப் பறவை போன்று பக்தி ஒன்றையே உபாயமாகக்கொண்டு சரணடைந்தால் போதுமானது.
எல்லா விதிகளும் முளைக்கக் காரணமான தண்ணீர் ஒன்றே ஆனாலும் அவை வெவ்வேறு விதமாக முளைப்பது போல பிரமன் முதல் புல் வரை எல்லாம் அவன் லீலை என்னும் நீரினால் அவரவர் வினைப்பயனை ஒட்டி வளர்கின்றன.
சூரியன் துயில்பவரை எழுப்புவது போல் ஜீவர்களை அறியாமை என்னும் உறக்கத்தில் இருந்து எழுப்புபவனாக இருக்கிற பகவானை தூமகேதுவைப் போன்ற கம்சன் முதலிய உலகிற்கு தீமை விளைவிக்கும் இடர்களை நீக்கி இருளைப்போக்கும் சூரியனாக பகவான் அவதரிக்கவேண்டும் என்று தேவர்கள் வேண்டினர்.
அப்போது அவர்களிடையே பகவான் தோன்றினார். மிகவும் அழகான அந்த வர்ணனையை அடுத்து காண்போம்
யாதவாப்யுதயம் -அத்தியாயம் 1- தொடர்ச்சி
சரத் காலத்து வெண்மேகம் போன்ற ஆதிசேஷன் மேல் விளங்கும் கரிய மழை மேகம் போல் கையில் தாமரையுடன் கூடிய ஸ்ரீதேவியுடன் தோன்றினான். அவன் மேனியில் இருந்த அணிகலன்கள் மலர்ந்தபுஷ்பங்கள் போன்று இருந்தன. ஆயினும் அவனுடைய மேனியின் அழகினால் அவை சோபித்தனவே அன்றி அவைகளால்அவன் மேனிக்கு சிறப்பு இல்லை என்கிறார் தேசிகர்.
அழகுக்கு அழகு செய்யும் ஆபரணங்கள் அல்ல அழகினால் அழகு செய்யப்பட்ட ஆபரணங்கள். அவனுடைய கல்யாண குணங்களுக்கு உத்யானம் போன்ற மேனியில் மலர்ந்த புஷ்பங்கள் போல் அவை இருந்தன என்கிறார்.
தனது காந்தியாகிய கடலினின்று தானே தோன்றிய நீல மணி போல் வேதச்வரூபமான கருடனுடன் தேவர்களின் வெற்றியை அறிவிப்பது போல் காணப்பட்டான்.
தேவர்கள் அவனை என்றுமே மறையாத சூரியன் போலவும் குறையாத சந்திரன் போலவும் கரை இல்லாத அமுதக்கடல் போலவும் எண்ணி அபயம் அளிக்கும் கரத்துடனும் நல்வரவு கூறும் புன்முறுவலுடனும் கண்டு தங்கள் கண் பெற்ற பயனை அடைந்ததாகக் கருதினர். எல்லாம் அறிந்தவனாகிலும் அவனிடம் தங்கள் வரவின் காரணத்தை தெரிவிக்கலாயினர்.
அவர்கள் கூறியது,
பெருந்தீ போன்ற உன்னிடத்தில் விட்டில் பூச்சிகள் போலவே எதிர்த்து அழிந்த அசுரர்கள் இப்போது க்ஷத்திரியர்களாகி இந்த பூமியை கலக்குகின்றனர். வேதங்களின் தலையணியாகிய உன் திருவடியிலிருந்து தோன்றிய இந்த பூமியைக் காத்தருளவேண்டும். கருணையே உருவான நீ கப்பலோட்டியாக இருக்கையில் இந்த பூமி அதர்மமாகிய கடலில் மூழ்கலாகாது.
கடலை ஒட்டியாணமாகக் கொண்ட இப்பூமி கடலில் பள்ளி கொண்டுள்ள நீ அந்த ஒட்டியாணத்தில் உள்ள நீல ரத்தினமாக விளங்குகிறாய். கம்சன் முதலிய அம்புகளை நீக்கினால் இந்த பூமி ஆதிசேஷன் சிரசில் உள்ள சூடாமணி என விளங்கும்.
அடுத்து தேவர்களின் சொற்களில் தேசிகருடைய பக்தியின் சிறப்பு காணப்படுகிறது.
ப்ரபோதகஸுபகை: ஸ்மேரை: பிரஸன்னை: சீதலை: ச ந:
கடாக்ஷை: ப்லாவய க்ஷிப்ரம் க்ருபகோதன்வதூர்மிபி: (யாத. 1.84)
அழகாய் மலர்ந்து தெளிந்து குளிர்ந்தனவையாய் கருணையாம் கடலிலிருந்து கிளர்ந்த அலைகளான கடாக்ஷங்களாலே எங்களை விரைவில் நனைத்து அருள வேண்டும்.
இப்படி தேவர்கள் பிரார்த்திக்கையில் பூதேவியும் பகவானை வேண்ட அதற்கு பகவான் மறுமொழி அளித்தான். அவன் வாக்கின் ஒலியை கொண்டாடுவது போல் அது அவனது வலம்புரி சங்கில் எதிரொலித்தது.
அவன் கூறியதாவது,
"அஞ்ச வேண்டாம் . என் ஆக்ஞையை மீறாதவருக்கு என்றும் அழிவில்லை. ( ந ஹி கல்யாணக்ருத் கச்சித் துர்கதிம் தாத கச்சதி- கீ. 6. 40- நல்லோர்க்கு என்றும் கேடு விளைவதில்லை.) என்னுடைய் அவதாரம் பூமியின் பாரத்தை இறக்கி தர்மத்தை ஸ்தாபிக்கும் . அதுவரை காத்திருங்கள். " இவ்வாறு கூறி பகவான் குற்றமற்ற வசுதேவரின் மனைவியான தேவகியினிடம் அவதரிக்கத் தருணம் பார்த்திருந்தான்.இவ்வாறு எல்லாஉலகத்தையும் தன கர்ப்பத்தில் கொண்டவன் தானே தேவகியின் கர்ப்பத்தில் விளங்கலானான்.
.
No comments:
Post a Comment