Tuesday, August 3, 2021

Panguni Uttaram

பங்குனி உத்தரம் - நங்கநல்லூர் J K SIVAN --
சனிக்கிழமை 28.3.2021 இரவு 7.50 மணி முதல் நாளை ஞாயிறு 28.3.2021 மாலை 5.40 வரை உத்தரம் நக்ஷத்ரம்.ஒவ்வொரு வருஷமும் பங்குனி வரும். ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் உத்தரம் நக்ஷத்ரம் வரும், அதேபோல் பௌர்ணமியும் வரும் . இருந்தாலும் பங்குனி மாதம் பௌர்ணமியும் உத்தரமும் சேர்ந்து அமைந்த நாள் ஒரு விசேஷமான நாளாக கொண்டாடப்படுகிறது. அது தான் பங்குனி உத்தரம். அதன் பின்னால் நிறைய கல்யாண கதைகள் இருக்கிறதே தெரியுமா? ஒரு முக்கியமான கல்யாண கதை மட்டும் சொல்கிறேன்.
ஒரு காலத்தில் அசுரர்கள் தவ வலிமையால் தேவர்களை அடக்கி துன்புறுத்த, தேவராஜன் முறையீட்டை செவி மடுத்து அசுரர்களை அடக்க ஷண்முகன் தேவசேனாபதியாக புறப்படுகிறான். பங்குனி உத்தரம் அன்று பெற்றோரான பரமேஸ்வரன் பார்வதி தேவியும் வணங்கி முருகன் அசுரர்களை எதிர்நோக்கி புறப்பட்ட நாள்.
முருகன் தேரில் பயணிக்க தேரை சாரதியாக இயக்கியவன் வாயு தேவன். தேவகணங்கள் படை திரண்டனர். முருகனின் படையை மேலே செல்ல முடியாமல் ஒரு மலை வளர்ந்து நடுவே தடுத்தது. முருகனுக்கு அந்த மலையைப் பற்றி விளக்கியவர் நாரதர்.
''ஷண்முகா, இது தான் க்ரவுஞ்சன் எனும் ராக்ஷஸன். ஒரு தீய சக்தி. அகஸ்திய ரிஷி சாபத்தால் மலையானவன். இந்த மலைக்கு பாதுகாப்பாக இருப்பது தான் மாயாபுரி. அதற்கு ராஜாவாக இருப்பவன் சூரபத்மனின் சகோதரன் யானைமுகம் கொண்ட தாரகன் எனும் அசுரன்.''
''நாரதரே, அப்படியென்றால் முதலில் நாம் தாரகனைத்தான் சந்திக்கவேண்டி இருக்கும்'' என்றார் வீரபாகு தேவர். அவர் தான் ஷண்முகனின் வலது கை .
''வீரபாகு, நான் அறிந்தவரை, தாரகன் மிக்க சக்தி வாய்ந்தவன். அவனுக்கு புத்தி சொல்லி திருந்தி பிழைக்க சந்தர்ப்பம் கொடுப்போம். அவன் திருந்த மனமில்லாதவனாக இருப்பின் உன் தலைமையில் நான் அனுப்பும் தேவ சேனை அவனோடு மோதட்டும். புறப்படு, '' என்கிறார் சுப்பிரமணியர்.
பாதி சேனையை வீரபாகு தலைமையில் அனுப்ப தேவ சேனாபதி முருகனின் கட்டளைப் படி வீரபாகுவின் சேனை மாயாபுரிக்குள் நுழைந்தது. ஒற்றர்கள் நகர காவலர்கள் மூலம் விஷயம் அறிந்த தாரகாசுரன்
''அவ்வளவு தைரியமா தேவர்களுக்கு என்னோடு மோத '' என்று கடும் கோபத்துடன் போர்க்களம் புறப்பட்டான். கடும்போர் நடந்து, தேவர்கள் படையிலும் தாரகன் சேனையிலும் எண்ணற்ற வீரர்கள் மாண்டனர்.
தாரகாசுரனை எதிர்த்த ஷண்முகனின் படையில் ஒரு வீரனான வீரகேசரியை அசுரன் தனது கதாயுதத்தால் மார்பில் அடித்து சாய்த்தான். இதனால் வீரபாகு வெகுண்டு தாரகாசுரனோடு மோதினார். தவ வலிமை வாய்ந்த தாரகன் திரிசூலத்தால் வீரபாகுவின் மார்பில் குத்திச் சாய்த்தான். மூர்ச்சையாகி விழுந்த வீரபாகுவை அலட்சியமாக நோக்கி தாரகாசுரன் நகைக்க, ஷண்முகன் சேனை திணறியது. நிலை குலைந்தது. முருகனின் படைகள் நாலாபுறமும் சிதறி ஓடின.
மயக்கம் தெளிந்த வீரபாகு, முன்னிலும் வேகமாக பலத்தோடு தாரகனைத் தாக்கினார். வீரபாகுவை எதிர்க்க முடியாமல் தாரகாசுரன் மாய வேஷங்கள் எடுத்து கடைசியில் ஒரு எலியாக மாறி க்ரவுஞ்ச மலைக்குள் நுழைந்து ஒளிந்தான். வீரபாகுவும் அவனை தொடர்ந்த மற்ற வீரர்களும் விடாது மலைக்குள் நுழைய, மலை அசைய ஆரம்பித்தது. தாரகாசுரனின் அசுரப்படைகள் இதை எதிர்பார்க்காத ஷண்முகனின் படையை சேதப்படுத்தியது.
''நாரதா வீரபாகு போரில் எப்படி சமாளிக்கிறார் என்று பார்த்து வா என ஷண்முகன் அனுப்ப, நாரதர் தாரகனின் தந்திரங்களை எடுத்துச் சொல்கிறார்.
கோபம் கொண்ட ஷண்முகன் நேரடியாக போர்க் களத்திற்கு கிளம்புகிறார். தாரகன் முருகனின் சக்தி அறியாதவன்.
''யார் இவன் சிறுவன், இவன் தலைமையிலா தேவர்கள் என்னோடு மோதுகிறார்கள். இவனோடு சேர்ந்து பாவம் உயிரிழக்க வந்துள்ளனர் '' என்று கேலி செய்தான்.
''தாரகா, உன் முடிவு இன்று என் கையால். முடிந்தால் உன் உயிரை முதலில் நீ காப்பாற்றிக் கொள் '' என்று பதிலளித்த சுப்ரமணியன் தாரகனையும் அவன் அசுரப்படையையும் நேரடியாக தாக்கினார். முருகனின் சீற்றம் அறிந்த தாரகன் நிலைமையை உணர்ந்து மீண்டும் எலியாக மாறி கிரவுஞ்ச மலை குகைகளில் ஒளிந்து கொண்டான். அவனது மறைமுக மாயா லீலைகளை எளிதில் எதிர்கொண்டார் சுப்பிரமணியர். கடைசியில் தாரகனை அழிக்க முதலில் கிரவுஞ்ச மலையை தனது வேலாயுதத்தால் பல கூறுகளாகப் பிளந்து, தாரகன் ஒளிய இடமின்றி வெளிப்பட அவனையும் வேலாயுதம் கொன்றது. மலையைக் கிள்ளி எலியைப் பிடிப்பது என்பது இந்த சம்பவத்தை நினைவு படுத்தும்.
தாரகன் அழிந்தான் என்று சேதி தேவலோகம் சென்று இந்திரன் மகிழ்ந்தான். தனது மகள் தெய்வானையைசுப்பிரமணியனுக்கு மணமுடித்தான். தேவசேனாபதி தெய்வயானையை மணந்தார். சுப்பிரமணியனின் கல்யாணம் ஆன நாள் பங்குனி உத்திரம். இதற்கு மேல் என்ன விசேஷம் தேவை.
பங்குனி உத்தரத்தில் நடந்த இன்னும் சில விசேஷங்களை ஞாபகப் படுத்தட்டுமா?
பார்வதி தேவி, கடும் தவமிருந்து பரமேஸ்வரனை மணந்த நாள். இந்த நாளில் தான் மன்மதன் தனது மலரம்பால் சிவனின் தியானத்தை கலைக்க அவர் நெற்றிக்கண் திறந்து மன்மதன் சாம்பலான நாள். ரதிதேவி சிவனை வணங்கி உயிர்ப்பிச்சை கேட்க, மன்மதன் எவருக்கும் கண்ணில் தெரியாத அநங்கனாக உயிர்பெற்ற நாள் .காமாக்ஷி ஏகாம்பரேஸ்வரரை தவமிருந்து அவரை மணந்த நாள். மதுரையில் கோலாகலமாக சுந்தரேஸ்வரர் மீனாட்சி திருக்கல்யாணம் பக்தர்கள் மனம் கழிக்க நடைபெறும்.ஸ்ரீ ராமர் சீதையை மணந்த நாள். ஸ்ரீரங்கத்தில் ஆண்டாள் ரங்கனை சேர்ந்த நாள். ஸ்வாமியே சரணம் ஐயப்பா . ஐயப்பன் தோன்றிய நாள். மார்க்கண்டேயன் எமதர்மனின் பாசக்கயிரில் சிக்காமல் கால சம்ஹார மூர்த்தி சிவனால் உயிர் தப்பிய நாள்.
ஆகவே ஹிந்துக்கள் வாழும் பிரதேசங்களில் மிக ஸ்ரேஷ்டமான பங்குனி உத்தரம் விழா வைபவம் சைவ வைணவ ஆலயங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படும். தவிர முருகனின் அறுபடை வீடுகளில் விசேஷ அலங்காரம், பூஜை, கல்யாண உத்சவம் கோலாகலமாக நடைபெறும். சுப்பிரமணியனை வேண்டி வணங்கும் சிறப்பு விரத நாள். என்பது சைவக் கடவுளாகிய முருகனுக்குரிய சிறப்பு விரத தினமாகக் கொண்டாடப்படுகிறது.
பங்குனி உத்தரத்தின் சிறப்பு: பங்குனி தமிழ் வருஷங்களில் 12வது மாதம். நக்ஷத்திரங்களில் 12 வது உத்தரம். 12 கரமுடையவன் சுப்ரமணியன்.
இளைஞர்களும், கன்னிகளும் இத்தினத்தில் சிவனையும், முருகனையும் திருமணக் கோலத்தில் வணங்கி வழிபட்டால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என ஸ்ட்ராங் நம்பிக்கை.

No comments:

Post a Comment