**ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ... ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ...* 🙏🙏🙏
*தஸாவதாரம்*
*ஸ்ரீகிருஷ்ணாவதாரம்*
*பகுதி 51*
*காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு அவன்*
*நீள்முடி யைந்திலும் நின்று நடம்செய்து*
*மீள அவனுக்கு அருள்செய்த வித்தகன்*
*தோள்வலி வீரமே பாடிப்பற தூமணி வண்ணனைப் பாடிப்பற.*
*பெரியாழ்வார் திருமொழி 03.09.06*
*விளக்கம்*
காளியன் பொய்கை
-
காளியன் கிடந்த பொய்கையானது
கலங்க
-
கலங்கும்படி
பாய்ந்திட்டு
-
(அதில்) குதித்து
அவன்
-
அக்காளியனுடைய
நீள் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து
-
ஆகாசத்தளவும் நீண்ட ஐந்து படங்களின் மேலும் நின்று கூத்தாடி,
மீள
-
அவன் இளைத்துச் சரணம் புகுந்த பிறகு.
அவனுக்கு
-
அக்காளியனுக்கு
அருள்செய்து
-
(ப்ராணன் நிற்கும்படி) க்ருபை செய்தருளின்
வித்தகன்
-
மாயனான கண்ணபிரானுடைய
தோள் வலி வீரம்
-
புஜபலத்தையும் வீரத்தையும் பாடிப் பற;
தூ மணி
-
தூய நீலமணி போன்ற
வண்ணனை
-
நிறத்தையுடையவனை பாடுக.
*அந்தி நேரத்தில் சொந்தமுடன் கிட்டே வந்து...* *விந்தைகள் பலவும் செய்து விளையாடினான்..* *பந்தளவாகிலும் வெண்ணை* – *தந்தால் விடுவேனென்று முந்துகிலைத் தொட்டிழுத்துப் போராடினான்...* *அந்த வாஸுதேவன் இவன்தான் அந்த.. வாசு... தேவன்.. இவன்தான்....*
*தாயே! யசோதா! – உந்தன் ஆயர் குலத்துதித்த* *மாயன் கோபாலக்ருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி!*
கிருஷ்ணனின் சரிதத்தை இடைவிடாது மனம் பற்றியபடி கிடந்தது. துவாரகைக்கும், கோகுலத்திற்குமாக மனம் தவழ்ந்தபடி இருந்தது. இடைவிடாத பக்திப் பரவசத்தில் ஊறித்திளைத்த அவர், அந்த சரிதத்தை அழகிய பாடல்களாகவும், இசையாகவும் வெளிக்கொணர பேராவல் கொண்டார். இசை அவருக்கு உயிராக இருந்தது. ஆனாலும், குருமூலமாக இசைப்பயில ஆர்வமாக அலைந்தார். ஏனோ, ஒருவராலும் இவரின் இசைப்பசியைத் தீர்க்க முடியவில்லை. ஏக்கம் மேலிட, கோயிலினுள் காளிங்கநர்த்தனரின் முன்பு அமர்ந்தார். 'கண்ணா அந்த பாண்டவர்களுக்கே குருவாக அமர்ந்தாயே, இந்த அடியேனுக்கு குருவாக மாட்டாயா? இசைஞானம் எனக்களித்தால் உன்னை அதிலேயே ஆராதனை செய்து இன்பம் காண்பேனப்பா...' என்று கண்களில் தாரையாக கண்ணீர் சொரிந்தார். கோயிலில் துளசிச் செடியருகில் சலங்கை சப்தம் 'ஜல்... ஜல்...' என்று கேட்டது. அங்கு கண்ணன் புல்லாங்குழலை வாசித்தபடியே நின்றிருந்தான். வெங்கடகவி தன்னை மறந்து பிரமித்துக் கிடந்தார். குழலின் இசையால் அவருக்குள் நாதவெள்ளத்தைச் செலுத்தி னான், கண்ணன். இசை அவரை நிறைத்தது. உள்ளுக்குள் தளும்பிய இசை அமுதம் அவரறியாது அவரது நாவிலிருந்து பாடலெனும் அருவியாகக் கொட்டியது.
இன்றும் இன்னிசைக் கச்சேரிகளில் ஒரு தனியிடத்தைப் பிடித்துள்ளது இதன் சிறப்பு.
இயற்கை எழில் மிகுந்த ஊத்துக்காடு மலர்கள் நிறைந்த சோலைவனமாகத் திகழந்தமையினால் ஆவூர் தெய்வத்திற்கு இந்த ஊத்துக்காட்டில் இருந்துதான் நந்தினி, பட்டி பசுக்கள் பூக்களை பறித்துச் செல்வதை தங்களது வழக்கமாகக் கொண்டிருந்தன.
இதுபோல தினமும் இப்பசுக்கள் மலர்களைக் கொய்த வண்ணம் இருக்க, ஸ்ரீ நாரத முனிவரோ இப்பசுக்களுக்கு தெய்வீகக் கதைகளைச் சொன்ன வண்ணம் உள்ளார். இது தினப்படி நடக்கும் ஒரு செயலாகிப் போனது இப்பசுக்களுக்கு.
இப்படியே புராணக் கதைகளை ஸ்ரீ நாரத முனிவர் சொல்லிக் கொண்டிருக்கையில், ஒரு நாள் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் காளிங்கன் என்ற பாம்பினை, அதனுடன் சண்டையிட்டுப் போராடி, அப்பாம்பின் ஆணவத்தை அடக்கி, அதன் தலை மீதேறி பேரழகு நர்த்தனம் ஆடி, அந்த பாம்பிற்கு அருள் பாலித்த கிருஷ்ணனின் கதையைச் சொல்லி முடித்தார் ஸ்ரீ நாரத முனிவர். மேலும், இந்த பெரும் லீலையை கண்ணன் மேற்கொள்ளும்போது பெருமான் ஐந்து வயது குழந்தைதான் என்ற விவரத்தையும் சொன்னார்
தேவலோகப் பசுவான காமதேனுவின் புதல்விகளான நந்தினி, பட்டி என்ற பசுக்களுக்கு தன் காளிங்க நர்த்தனத்தை இங்கு ஆடிக் காட்டினாராம் கண்ணன்.
நாரத முனிவரின் வேண்டுகோளை ஏற்று, கிருஷ்ணன் காளிங்கநர்த்தனனாக இத்தலத்தில் காட்சியளிப்பதாகவும் தலபுராணம் கூறுகிறது.
இந்த காளிங்க நர்த்தன கண்ணன் விக்ரகம், ஆலயத்தின் பின்புறமுள்ள காளியன் மடுவிலிருந்து கண்டெடுக்கப் பட்டதாகும்.
காளியன் என்ற ஐந்து தலை பாம்பின் தலையை மிதித்துக்கொண்டிருப்பது போல் தோன்றும் பகவானின் திருவடி, தலை மீது ஒட்டாமல், ஒரு காகித இடைவெளி இருப்பது சிற்பக் கலையின் அற்புதம். பகவானின் திருக்கால்களில் காளிங்கனால் ஏற்பட்ட புண் வடுக்கள், பிறகு சிலையின் ஆதாரம்? இடது கைவிரலால் அந்தப் பாம்பின் வாலைப் பிடித்துக் கொண்டிருக்கிறாரே, அதுதான்! இந்த கண்ணன் விக்ரகம் இருபுறமும் ருக்மிணி, சத்யபாமா சகிதம், நந்தினி, பட்டி பசுக்களுக்கு அருள்புரியும் வண்ணம் அமைந்துள்ளது.
தனிச் சந்நதியில் மகாலட்சுமித் தாயாரின் தரிசனம் பரவசமூட்டுகிறது.
இத்தலத்தில் அருளும் பஞ்சமுக ஆஞ்சநேயர், மிகுந்த வரப்பிரசாதியாக பக்தர்களால் வணங்கப்படுகிறார்.
பழமையான ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உருவான இத்திருக்கோவிலில் வேத நாராயண பெருமாள் பிரதான மூர்த்தியாக எழுந்தருளி பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கோவில் மிகச் சிறியதாக இருந்தது. பின்பு காளிங்க நர்த்தன கண்ணன் வந்த பிறகு நலம் கொண்ட சோழனால் கோவில் விரிவாக்க பணிகள் நடைபெற்று கோவில் விஸ்தாரமாக்கப்பட்டது. ஆக இந்த சந்நிதியை விரிவாக்கிய பெருமை நலம் கொண்ட சோழனையே சாரும்.
விக்கிரக அழகு ஊத்துக்காடு கோவிலில் காளிங்கனின் சிரத்தின் மீது இடது காலை ஊன்றி, வலது கையில் அபயஹஸ்தத்துடன் தரிசனம் கொடுக்கும் கண்ணனின் திருவுருவத்தைக் காணப் புண்ணியம் செய்திருக்க வேண்டும். மொழுமொழுவென்ற கால்களும் பளபளவென்ற கன்னங்களும், கையை நீட்டியிருக்கும் லாவகமும், தூக்கிக் கட்டிய கொண்டையும், சுருண்டு சுருண்டு நெற்றி வரைத் தொங்கும் மோதிரச் சுருட்டையான கேசமும், பாதங்களின் பிஞ்சு விரல்களும் மாயப் புன்னகையுமான நர்த்தனமாடுகிற கண்ணனின் வடிவத்தைப் பார்த்தவுடன் சிற்பியால் செய்யப்படாத விக்கிரகம் என்றே தெரிகின்றது.
காமதேனு பசுவின் குழந்தைகளான நந்தினியும் பட்டியும் இப்பகுதியில் கண்ணனைத் தேடித் திரிந்ததால் இத்தலம் கோவிந்தகுடி என்றும், பட்டீஸ்வரம் என்றும் அழைக்கப்பட்டது.
காமதேனுவின் சுவாசமாக இத்தலம் விளங்கியதால் தேனுசுவாசபுரம் என்று வடமொழியிலும், மூச்சுக்காடு என்று தமிழிலும் வழங்கப்பட்டு பின் ஊத்துக்காடு என திரிந்தது.
கண்ணனுக்கு மாதாமாதம் ரோஹிணி நட்சத்திரத்தன்று குழந்தை பேறு இல்லாத தம்பதிகளுக்கு சிறப்பான முறையில் ஆராதனை அர்ச்சனைகள் நடைபெறுகிறது. பல ஆயிரம் பேர்களுக்கு அதிசயிக்கும் விதத்தில் புத்திர பாக்கிய குறையை நீக்கியுள்ளார். சங்கீதம், நாட்டியம் பயில்பவர்களும் இத்தலத்தில் இந்த கண்ணனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து ஆலயத்திலேயே அரங்கேற்றம் செய்வதும் உண்டு.
*தொடர்புகொள்ள*
ஜெயராம் பட்டாச்சார்,
கோவில் அர்ச்சகர்
2/210 ஸ்ரீ கிருஷ்ணா விலாசம், அக்ரஹாரம்
ஊத்துக்காடு. ஆவூர் (வழி)-612701
தொலைபேசி: +91 - 4374-268549
கைபேசி: +91 - 9442699355
மின்னஞ்சல்: oothukkadu@gmail.com
*ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏
*வானமாமலை ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏
நாளையும் ஸ்ரீகிருஷ்ணாவதாரம் தொடரும் ....
🙏 *சர்வம் கிருஷ்ணார்ப்பனம்* 🙏*
No comments:
Post a Comment