**ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ... ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ...* 🙏🙏🙏
*தஸாவதாரம்*
*ஸ்ரீகிருஷ்ணாவதாரம்*
*பகுதி 48*
*யோகீந்த்ராணாம் த்வதங்கேஷ்வதிக ஸுமதுரம்*
*முக்திபாஜாம் நிவாஸோ*
*பக்தாநாம் காமவர்ஷத் யுதருகிஸலயம்* *நாததே பாதமூலம் |*
*நித்யம் சித்தஸ்திதம் மே பவநபுரபதே க்ருஷ்ண* *காருண்யஸிந்தோ ஹ்ருத்வா நிஶ்ஶேஷதாபாந் ப்ரதிஶது ஹ்ருத்வா நிஶ்ஶேஷதாபாந் ப்ரதிஶது* *பரமாநந்த ஸந்தோஹலக்ஷ்மீம்||*
*ஸ்ரீ நாராயணீயம்*
நாதா! குருவாயூரப்பா! உமது அங்கங்களுள், உம்முடைய திருவடிகளே யோகிகளுக்கு மனோகரமானதாய் விளங்குகின்றது. மோக்ஷத்தை அடைந்தவர்களுக்கு இருப்பிடமாய் உள்ளது. பக்தர்களுக்கு வேண்டிய அனைத்தையும் அளிக்கும் கற்பக விருட்சத்தின் தளிர் போன்று அவை இருக்கின்றன. அவை எப்போதும் என் உள்ளத்தில் இருக்க வேண்டும். கருணைக் கடலே! கிருஷ்ணா! அந்தப் திருவடிகளானது என் எல்லாத் தாபங்களையும் போக்கி, பேரின்ப வெள்ளமாகிற மோக்ஷத்தை அளிக்க வேண்டும்.
*குருவாயூர், கேரளா.*
கடவுளின் தேசமாகிய கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் குருவாயூர் எனும் இடத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கிருஷ்ணர் கோவில் இதுவாகும். பூலோக வைகுண்டமாகவும் பூமியில் இறைவன் இருக்கும் இடமாகவும் கருதப்படும் அற்புத திருத்தலம் இது. கோயிலின் மூலவரான குருவாயூரப்பனின் உருவமானது காலத்தைக் கணிக்க முடியாத வரலாற்றைக் கொண்டுள்ளது. பல யுகங்களுக்கு முன் குழந்தைப் பேறில்லாமல் வருந்திய பிரஸ்னி, சுதபா தம்பதியினர் பிரம்மாவிடம் வேண்டினர். பிரம்மா தான் பூஜித்து வந்த ஸ்ரீகிருஷ்ண விக்ரஹத்தை மன்னர் சுதாபஸ் மற்றும் அவரது மனைவி பிரஸ்னியிடம் வழங்கி முறையான விரதத்துடன் பூஜித்தால் உங்களுக்கு புத்ர பாக்யம் கிட்டுமென்றார். அதை வைத்து வழிபட்ட அவர்களின் பக்தியைக் கண்டு மகிழ்ந்த விஷ்ணு பகவான் நானே உங்களுடைய குடும்பத்தில் மூன்று பிறவிகளில் மகனாக அவதரிப்பேன் என்ற வரத்தினை அளித்தார்.
பகவான் வரம் கொடுத்தவாறே அவர்களின் அடுத்தடுத்த பிறவிகளில் விஷ்ணு பகவான் அவர்களுக்கு மகனாக பிறந்தார். அந்த வகையில் முதலில் பிரஸ்னிகர்பன், இரண்டாவது அதிதி கஸ்யபருக்கு வாமனனாகவும், ராமர் மூன்றாவதாக தேவகி வசுதேவருக்கு கிருஷ்ணர் என அவதாரம் எடுத்தார். இந்த எல்லா பிறப்புகளிலும் அந்த தம்பதியினர் குருவாயூரப்பனின் சிலையை வைத்து வணங்கினர். கிருஷ்ணர் பிறந்த பிறகு அந்த தம்பதியினருக்கு வாசுதேவர் மற்றும் தேவகி என்ற புகழ் கிடைத்தது. அவர்கள் வணங்கிய சிலையைக் கிருஷ்ணர் பெற்றுக் கொண்டு அதனை துவாரகையில் வைத்து வழிபட்டு வந்தார்.
துவாபரயுக அவதார காலத்தின் இறுதி நாள்களில் வைகுண்டம் செல்வதற்கு முன்பாக தனது நண்பர் உத்தவரிடம் இன்னும் ஏழு நாட்களில் துவாரகை நகரம் கடலில் மூழ்கிவிடும் என்றும், எனவே விஷ்ணுவின் இந்த சிலையைப் பாதுகாப்பான ஒரு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் கூறினார். அவ்வாறு கிருஷ்ணர் கூறியப் படியே துவாரகை நகரமானது கடலின் பேரலையின் பாதிப்பிற்கு உள்ளானது அதனால் உத்தவர் குரு (வியாழக் கடவுள்) மற்றும் வாயு (காற்று கடவுள்) ஆகியோரின் உதவியுடன் சிலையை எடுத்துச் சென்றார்.
மீண்டும் சிருஷ்டி தொடங்கியபின் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் சிவ பெருமான் நிறுவி விஷ்ணுவை வழிபட்டதால் புனிதமான இடமாக கருதப்பட்டது. அதனால் அவர்கள் இந்த இடத்தில் அந்த சிலையை நிறுவினர். அதன்பின்பு அங்கு கோயில் உருவானது. குருவும் வாயுவும் அந்த சிலையைக் கொண்டு வந்து நிறுவியதால் அந்த இடத்திற்குக் குருவாயூர் என்று பெயர் பெற்றது. சகல நோய்களையும் போக்கும் நாரயண புஷ்கரணி ஏற்படுத்தப் பட்டது. வரலாற்றில் இந்த குருவாயூர் கோயிலைப் பற்றிய குறிப்புகள் முதன்முதலில் தமிழ் இலக்கியங்களில் 14 ஆம் நூற்றாண்டிலும் 16 ஆம் நூற்றாண்டிலும் காணப்படுகின்றன. பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இல்லாவிட்டாலும் வைணவர்களின் புனிதத் தலமாக விளங்குகிறது. மேலும் மெல்பத்தூர் பட்டத்திரியின் 'நாராயணியமும்', பூந்தானத்தின் ஞானப்பானயும் இந்த கோயிலை மிகவும் பிரபலமாக்கியது.
பாமரரான பூந்தானத்திற்கு பட்டத்திரி மீது அளவு கடந்த பக்தியும் மரியாதையும் உண்டு. அவரிடம் தனக்கு பகவானின் திருமுகமும் மயிற்பீலியும் புல்லாங்குழலுமே தெரிகிறது, தான் ஸ்ரீகிருஷ்ணரை முழு உருவில் தரிசிக்க வேண்னுமென்றார். ""முழு உருவையும் தரிசிக்க வேண்டுமானால் உனக்கு அதிகம் பழக்கமான உருவில் குருவாயூரப்பனை தியானம் செய்யேன்! எருமை மாட்டு வடிவில் கூடக் கண்ணனை நீ தியானம் செய்யலாம்". அலட்சியமாக இப்படிச் சொல்லிவிட்டு பட்டதிரி சென்றார். தன்னைக் கிண்டல் செய்யும் விதத்தில் தான் பட்டதிரி அப்படிச் சொன்னார் என்ற உண்மை பூந்தானத்திற்கு உறைக்கவில்லை. அவர் பட்டதிரியின் வாக்கை வேதவாக்காக ஏற்றார். அன்று தொட்டுக் கண்ணனை எருமை மாட்டு வடிவில் தியானம் செய்யலானார்.
கண்ணனுக்கு அளவற்ற ஆனந்தம். அவன் எடுத்த பத்து அவதாரங்களில் மீனாகவும், ஆமையாகவும், பன்றியாகவுமெல்லாம் உருக் கொண்டானே தவிர எருமை மாடாக உருக் கொள்ள சந்தர்ப்பமே நேரவில்லையே! எருமை மாடும் அவன் சிருஷ்டியில் ஒன்று தானே! இதோ! ஓர் அபூர்வ வாய்ப்பு… தவற விடக் கூடாது என்று, இதை!
பூந்தானத்தின் மனத்தில், சேற்றைப் பூசிக் கொண்டும் கொம்புகளை அசைத்துக் கொண்டும் வாலைச் சுழற்றிக் கொண்டும் கம்பீரமான எருமை மாடாகக் காட்சி தரலானான் கண்ணபிரான். ருக்மிணியும் சத்யபாமாவும் வேறுவழியின்றி அவசர அவசரமாக பெண் எருமைகளானார்கள்!
சேற்றிலும் சகதியிலும் கண்ணன் தன் சகதர்மிணிகளோடு ஆனந்தமாக விளையாடுவதை மனக் கண்ணால் கண்ட பூந்தானம் மெய்மறந்தார். எருமை வடிவில் கண்ணனை தரிசித்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார். ஒருநாள்
உற்சவ மூர்த்தி நடைதாண்டி வெளியே வரமுடியவில்லை, வர இயலாமல் எது தடுக்கிறது? காரணம் தெரியாமல் பல்லக்குத் தூக்கியவர்கள் தவித்தபோது பூந்தானம் உரத்துக் குரல் கொடுத்தார். கொஞ்சம் சாய்த்துப் பல்லக்கை எடுங்கள். எருமை மாட்டின் வாலாலோ, உடலாலோ எந்தப் பிரச்னையுமில்லை. கொம்புதான் முட்டுகிறது. அதனால் தான் உற்சவ விக்ரகம் வெளியே வர இயலாதிருக்கிறது. சாய்த்து எடுத்தால் வெளியே கொண்டுவந்து விடலாம்!
""இதென்ன பைத்தியக்காரத் தனமான பேச்சு! மயில் பீலியும் புல்லாங்குழலும் காதில் குண்டலங்களும் தலையில் மணி மகுடமுமாய் என்னப்பன் குருவாயூரப்பன் பல்லக்கில் எழிலோவியமாகக் காட்சி தருகிறான்! பூந்தானம் எருமை மாட்டை வர்ணிக்கிறாரே!"
பட்டதிரி நகைத்தபோது மூல விக்ரகத்துக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்த அர்ச்சகர் ஓடோடி வந்தார். உற்சவ விக்கிரகத்தைப் பார்த்துப் படபடவெனக் கன்னத்தில் போட்டுக் கொண்டார். பிறகு சொல்லலானார்.
""அன்பர்களே! நான் அர்ச்சனை செய்துகொண்டே இருந்தபோது குருவாயூரப்பனின் மூல விக்ரகம் திடீரென ஒரு மகிஷமாக (எருமை) மாறியது. தன் எருமைக் குரலில் ""என் பக்தன் பூந்தானம் என்னை, நாராயண பட்டதிரி சொன்ன அறிவுரைப்படி, எருமை வடிவில் தியானம் செய்கிறான். அதனால் தான் உனக்கு இந்தக் காட்சி கிட்டியிருக்கிறது. உற்சவ மூர்த்தியைச் சுமந்து செல்பவர்களிடம் இதைத் தெரிவி என எனக்கு உத்தரவிட்டார்! பூந்தானம் சாதாரண பக்தரல்ல. அவர் கடவுளைக் கண்ட மகான்!"
அர்ச்சகர் பூந்தானத்தின் கால்களில் கண்ணீர் பெருக விழுந்து வணங்கினார். இதொன்றையும் கவனியாத பூந்தானம், ஒரே ஒரு கொம்புதான் மேலே இடிக்கிறது. இன்னொரு கொம்பு இடிக்கவில்லை. விரைவில் உற்சவ மூர்த்தியை வெளியே கொண்டு வாருங்கள்!" என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்! அவர் சொன்னபடியே சாய்த்து எடுத்துவந்தவுடன் பல்லக்கு எளிதாக வெளியே வந்துவிட்டது.மறுகணம் தான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. எல்லோரும் கேட்கும் வகையில் உற்சவ விக்கிரகத்திலிருந்து "ம்மா!' என்ற எருமை மாட்டின் கம்பீரக் குரல் எழுந்து அந்தப் பிரதேசமெங்கும் எதிரொலித்தது!
எருமை மாட்டு வடிவில் கண்ணனைக் காணாவிட்டாலும் அந்த சப்தத்தைக் கேட்ட பட்டதிரி மெய்சிலிர்த்தார்.
கண்களில் கண்ணீருடன் உற்சவ மூர்த்தியை வணங்கியவர், தான் சொன்னதை மனப்பூர்வமாக ஏற்று எருமை வடிவில் கண்ணனைக் கண்ட மகான் பூந்தானத்தின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.
""படிப்பால் என்ன பயன்! பக்தியல்லவா முக்கியம்! ஏராளமான விஷயங்களைத் தெரிந்துகொண்டதற்காக பகவான் காட்சி கிடைத்துவிடுமா என்ன! உள்ளார்ந்த பக்திக்கல்லவோ என் கண்ணன் உருகுவான்! பஞ்சாங்கத்தில் என்றைக்கு மழைவரும் என்று போட்டிருக்கும். ஆனால், பஞ்சாங்கத்தைப் பிழிந்தால் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வராதே! நான் படிப்பறிவுள்ள பஞ்சாங்கம் மட்டும்தான். பூந்தானமே! நீரல்வோ கண்ணனை நீராட்டிய பக்தி மழை!"
பட்டதிரியின் உருக்கமான பேச்சை பூந்தானம் கவனித்தாய்த் தெரியவில்லை. ""ஆகா! என் குருவாயூரப்பன் என்ன அழகாக வாலை அசைக்கிறார்! என மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தார்.
இந்த கோயிலின் மைய சந்நதியானது கி.பி 1638 இல் கட்டப்பட்டது. அதன் பிறகு இந்த துணைக் கண்டத்தின் புகழ்பெற்ற புனித பயண இடமாக மாறியது. கிபி 1716 இல் டச்சுக்காரர்கள் கோயிலைக் கொள்ளையடித்து தீ வைத்தனர். அதன் பிறகு மீண்டும் தற்போதுள்ள கோயில் அமைக்கப்பட்டது. குருவாயூர் கோயில் ஒரு பாரம்பரியமான கேரள வகை கோயில் கட்டிடக்கலை ஆகும். நுழைவு வாயிலிலிருந்து மூலவ ஆண்டவரைக் காணலாம். கேரளாவின் மலையாளப் புத்தாண்டு விஷு நன்னாளில் சூரியனின் கதிர்கள் குருவாயூரப்பனின் க
திருவடிளை அலங்கரிக்கும். கோயிலுக்கு இரண்டு நுழைவாயில்கள் உள்ளன ஒன்று கிழக்கிலிருந்தும் மற்றொன்று மேற்குப் பக்கத்திலிருந்தும் இருக்கும்.
குருவாயூரப்பனின் உருவமானது நான்கு திருக்கைகளைக் கொண்டுள்ளது. அவை அனைத்து கேரளக் கோயில்கள் போலவே சங்கு (Conch), சக்கரம் (Discus), கதை (mace) மற்றும் பத்ம (Lotus) ஆகியவற்றைத் தன் நான்கு கைகளில் சுமந்து அழகாய் காட்சி அளிக்கிறது. இந்த சிலையானது பல குணப்படுத்தும் அற்புதமான மருத்துவ பண்புகளைக் கொண்ட பட்டால அஞ்சனாமா என்ற மிக சக்திவாய்ந்த கல்லால் ஆனது என்று கூறப்படுகிறது. குருவாயூரப்பனைக் குழந்தையாக பாவித்தே மக்கள் இங்கு வழிபடுகின்றனர். இந்த கோயிலில் உள்ள மற்ற தெய்வங்கள் கணபதி, அய்யப்பன் மற்றும் பகவதி ஆவர். குருவாயூர் கோயிலானது விஷ்ணுவின் தங்குமிடமான மண்ணுலகின் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுகிறது.
*ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏
*வானமாமலை ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏
நாளையும் ஸ்ரீகிருஷ்ணாவதாரம் தொடரும் ....
🙏 *சர்வம் கிருஷ்ணார்ப்பனம்* 🙏*
No comments:
Post a Comment