**ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ... ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ...* 🙏🙏🙏
*தஸாவதாரம்*
*ஸ்ரீகிருஷ்ணாவதாரம்*
*பகுதி 50*
*உன்னித்து மற்றொரு தெய்வம் தொழா ளவனையல்லால்,*
*நும்மிச்சை சொல்லிநும் தோள்குலைக்கப்படும் அன்னைமீர்,*
*மன்னப்படும் மறை வாணனை வண்துவராபதி*
*மன்னனை, ஏத்துமின் ஏத்துதலும் தொழுதாடுமே.*
*விளக்கம்*
உன்னித்து
-
ஒரு பொருளாக
மற்றொரு தெய்வம்
-
வேறொரு தெய்வத்தை
தொழாள்
-
(இப்பெண்பிள்ளை) தொழுவது கிடையாது
அவனை அல்லால்
-
எம்பெருமானைத் தவிர்த்து
நும் இச்சை
-
உங்களுடைய ஆசைப்படியே
சொல்லி நும்
-
( தகாத சொற்களைச்) சொல்லி உங்களுடைய
தோள் குலைக்கப்படும்
அன்னை மீர்
-
தோள் அசையநிற்கிற தாய்மார்களே!,
மன்னப்படும்
-
நித்யமாக விளங்குகின்றவனும்
வண் துவராபதி மன்னனை
-
அழகிய துவாரகாபுரி ( மன்னார்குடி )க்கு அதிபதியுமான எம்பெருமானை
ஏத்துமின்
-
துதியுங்கள்:
ஏத்துதலும்
-
துதித்தவுடனே
தொழுது
-
(இப்பெண்பிள்ளை உணர்ந்து, அவனைத்) தொழுது
ஆடும்
-
களித்துக் கூத்தாடுவாள்.
*திருவாய்மொழி 04.06.10 நம்மாழ்வார்*
*ஸ்ரீவித்யா ராஜகோபாலசுவாமி, மன்னார்குடி.*
பரமனைப் பாடிய பண்ணிரு ஆழ்வார்களும் பாடியருளாத திவ்யதேசம் அந்தக் குறையை ஸ்ரீ மணவாள மாமுனிகள் நிவர்த்தி செய்து சமர்ப்பித்தது மேற்கண்ட பாசுரம்.
ராஜாதி ராஜ சதுர்வேதி மங்கலம்,
குலோத்துங்க சோழ விண்ணகரம்,
ராஜேந்திர சோழ விண்ணகரம்,
மன்னார்கோயில்,
சென்பகாரண்யா க்ஷேத்திரம்,
சுத்தவல்லி வளநாடு,
வண்டுவராபதி,
வசுதேவபுரி,
தக்ஷின துவாரகை என்றெல்லாம் அழைக்கப்படும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் சிறப்பு வாய்ந்த தலமாக கருதப்படுகிறது. 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் உறையும் ராஜகோபால சுவாமி, கிருஷ்ணரின் வடிவமாக அறியப்படுகிறது. குருவாயூரைப் போலவே, மன்னார்குடி ராஜகோபால சுவாமி ஆலயத்தையும் 'தட்சிண துவாரகை' என்று அழைக்கிறார்கள்.
இங்கு அருள்பாலிக்கும் மூலவரின் திருநாமம் ஸ்ரீவாசுதேவப் பெருமாள் என்பதாகும். உற்சவரின் திருநாமம் ராஜகோபால சுவாமி. தாயாரின் பெயர், செங்கமலத் தாயார். இது தவிர செண்பக லட்சுமி, ஹேமாம்புஜ நாயகி, ரக்தாப்ஜ நாயகி, படிதாண்டாப் பத்தினி ஆகிய திருநாமங்களிலும் தாயார் அழைக்கப்படுகிறார். உற்சவரின் பெயரான ராஜகோபால சுவாமி என்ற பெயரிலேயே ஆலயம் விளங்குகிறது.
இத்தல இறைவனின் திருவுருவம் 12 அடி உயரம் கொண்டது. ஆலயத்தின் வளாகமானது, 16 கோபுரங்களுடன் 7 தூண்கள், 24 சன்னிதிகள், ஏழு மண்டபங்கள் மற்றும் ஒன்பது புனித தீர்த்தங்கள் கொண்டு திகழ்கிறது. இத்தல உற்சவர் சிலை வெண்கலத்தால் ஆனது. இது சோழர் காலத்தைச் சேர்ந்த தாகும். இந்த ஆலயத்தில் காணப்படும் ஒரு குளம் 1,158 அடி நீளமும், 837 அடி அகலமும் கொண்டுள்ளது. இத்தலத்தில் நடந்த
32 லீலைகளில் கோபியருடன் ஜலக்ரீடை ஆடியதும் ஒன்று. அப்பொழுது கோபியர் பூசியிருந்த மஞ்சள், நதி நீரில் கலந்ததால்தான் ஹரித்ரா (மஞ்சள்) நதியென்ற பெயர் வந்ததாம். ஹரித்ரா நதி தவிர துர்வாச தீர்த்தம், திருப்பாற்கடல், கோபிகா தீர்த்தம், சங்கு தீர்த்தம், சக்கர தீர்த்தம் ஆகிய தீர்த்தங்களும் உள்ளன.
திருமால், கிருஷ்ணாவதாரம் எடுத்தபோது, தென்பகுதியில் குடந்தைக்கு தென்கிழக்கே செண்பகவனம் ஒன்று இருந்தது. அங்கே 1008 முனிவர்கள் தவமியற்றி வந்தனர். அவர்களுள் தலைச்சிறந்தவராக வாஹி முனி என்னும் முனிவர் இருந்தார். அவருக்கு கோபிலர், கோபிரளயர் என்னும் இரண்டு புதல்வர்கள் இருந்தனர். இவ்விருவரும் கண்ணனின் லீலைகளைக் கேட்டு, அவரைப் பார்க்க துவாரகை நோக்கி புறப்பட்டனர். அப்போது வழியில் அவர்களை சந்தித்த நாரதர், கிருஷ்ணாவதாரம் முடிந்து விட்டதாக கூறினார். அதைக்கேட்ட முனிவர்கள் வருத்தம் அடைந்தனர். அவர்களை ஆறுதல்படுத்தி தேற்றிய நாரதர், இருவரையும் கண்ணனைக் காண தவம் இருக்கும்படி அறிவுறுத்தினார். அதன்படி முனிவர்கள் இருவரும் கடுமையான தவத்தில் ஆழ்ந்தனர். அவர்களுக்கு இறைவன், 'கிருஷ்ணராக' காட்சி தந்தார். அவரிடம் தங்களின் லீலைகளை காட்டி அருளும்படி முனிவர்கள் வேண்டினார்கள். அதன்படி கிருஷ்ணர் தன்னுடைய 32 லீலைகளைக் காட்டி அருளினார். கிருஷ்ணரின் பெற்றோர் வாசுதேவர், தேவகி. இவ்விருவரையும் கம்சன் சிறையில் அடைத்தபோது பெருமாள் அவர்கள் முன்பு தோன்றி, தானே அவர்களுக்கு பிள்ளையாக பிறக்கப்போவதாக கூறினார். இதுவே அவரது முதல் லீலை. பின்னர் முனிவர்களின் வேண்டுதலுக்காக, இந்தத் தலத்தில் எழுந்தருளினார் வாசுதேவர் அவரே மூலவர்.
கடைசி லீலையாக கோகுலத்தில் பசுக்கள் மேய்க்கும் இடையனாக காட்சி தந்தார் உற்சவர் ராஜகோபால சுவாமி, இந்த ஆலயத்தில் இடையன் கோலத்தில் பாலகனாக காட்சி தருகிறார். ஒரு வேஷ்டி அணிந்து, அதையே தலைப்பாகையாக சுருட்டி வைத்துள்ளார். வலது கையில் வெண்ணெய் மற்றும் சாட்டை வைத்து காட்சி தருகிறார். இடுப்பில் சலங்கை, சாவிக்கொத்து, கையில் வளையல், காலில் தண்டை, கொலுசு ஆகிய குழந்தைகள் அணியும் அணிகலன்களை அணிந்திருக்கிறார். ஒருசமயம் கிருஷ்ணன், யமுனையில் நீராடிக்கொண்டிருந்த கோபியருக்கு இடையே ஒரு போட்டி வைத்தார். கோபியர் நீராடிவிட்டு தங்களது ஆடை,
ஆபரணங்களை சரியாக அணிந்து கொள்ள வேண்டும் என்பதே போட்டி! போட்டி துவங்கியதும், கிருஷ்ணர், ஒரு காதில் குண்டலத்தையும் ஒரு காதில் கோபியின் தாடங்கத்தை (காதணி)
எடுத்து அணிந்து கொண்டார். கோபியர்களோ அதைக் கவனிக்காமல் தேடிக் கொண்டே இருந்தனர். இறுதியில் கண்ணனின் காதில் அது இருக்கும்
அழகைப் பார்த்து நகைத்து, ஆனந்தம் கொண்டனர். இதன் அடிப்படையில் இங்கு ராஜகோபாலர் வலது காதில் குண்டலமும், இடது காதில் தாடங்கமும் அணிந்திருக்கிறார்.
அவரோடு ஒரு பசுவும், இரண்டு கன்றுகளும் உள்ளன. தாயார் சன்னிதி அருகே, பெருமாள் சன்னிதி எதிரே, பெண் வடிவ கருடாழ்வார் இருக்கிறார். இத்தல இறைவனுக்கு, மதுரை கள்ளழகர் கோவில் போல, தினமும் மாலையில் மட்டும் தோசை நைவேத்தியம் படைக்கப்படுகிறது. இங்கு வெண்ணைதாழி உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது.
நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த பெரியோர்கள் இங்கு வாழ்ந்தமையால் 'ராஜாதி ராஜ சதுர்வேதி மங்கலம்' என்றும், செண்பக மரங்கள் அடர்ந்த காடுகள் நிறைந்து காணப்பட்டதால் 'சென்பகாரண்யா ஷேத்திரம்' எனவும், முதலாம் குலோத்துங்க சோழன் இக்கோவிலை அமைத்த காரணத்தால் 'குலோத்துங்க சோழ விண்ணகரம்' என்றும், ஸ்ரீ ராஜகோபாலன் கோவில் கொண்டிருப்பதால் 'ராஜமன்னார்குடி' என்றும், மன்னர்கள் கோபாலனுக்கு கோவில் கட்டியதால் 'மன்னார்கோவில்' என்றும் இவ்வூர் அழைக்கப்படுகிறது.
இந்தக் கோவில் குலோத்துங்கச் சோழனால், சுண்ணாம்புக் கலவை மற்றும் செங்கல் கொண்டு கி.பி. 1070-1125-ல் கட்டப்பட்டது என்று சொல்லப்படுகிறது.
பிறகு 16. நூற்றாண்டின் முடிவில் நாயக்கர்களின் ஆட்சிக் காலத்தில் இக்கோயில் மீண்டும் சிறப்போடு விளங்கியது. அச்சுதப்ப நாயக்கர்
என்பவரால் கருட த்வஜ ஸ்தம்பம் கட்டப் பட்டது. பின்னர் கி.பி. 1633 - 1673 ம் ஆண்டுகளில் விஜயராகவ நாயக்கரின் ஆட்சிக் காலத்தில்
வெளியே இருக்கும் பெரிய இராஜகோபுரம், ஆயிரங்கால் மண்டபம் போன்றவைக் கட்டப்பட்டது.ஸ்ரீ இராஜகோபாலசுவாமியையே தனது
குல தெய்வமாக கருதிய விஜயராகவ நாயக்கர் 'மன்னாரு தாசன்' என்றே அழைக்கப்பட்டார். நாட்டியம், நாடகம் போன்ற கலைகளில்
ஆர்வமுடைய விஜயராகவ நாயக்கர், தான் தெலுங்கில் இயற்றிய படைப்புகளை ஸ்ரீ இராஜகோபாலசுவாமிக்கே சமர்ப்பித்தார். அது மட்டுமின்றி
அவர் இயற்றிய பல நாடகங்களும் இந்த கோயிலின் ஆயிரம்கால் மண்டபத்திலேயே அரங்கேற்றப் பட்டது.
விஜயராகவ நாயக்கரின் ஆட்சிக் காலத்தில் இக்கோயிலுக்கு பல கோபுரங்களும், மண்டபங்களும், குளங்களும் கட்டியதால், இன்றும்
இக்கோயிலில் இராப்பத்து, பகல்பத்து உற்சவத்தின்போது ஸ்ரீ இராஜகோபாலசுவாமிக்கு விஜயராகவ நாயக்கரின் அலங்காரம் செய்து, அவரது
பெயரை கூவி கட்டியம் கூறுகின்றனர்.
இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் பங்குனித் திருவிழா வெகு விமரிசையாக கொண்டா டப்பட்டு வருகிறது. ஆலயத்தின் 18 நாள் உற்சவமாக பங்குனி உத்திர விழாவும், 12 நாள் உற்சவமான விடை யாற்றி விழாவும் சிறப்பு வாய்ந்தவை. இதில் விடையாற்றி உற்சவம், கிருஷ்ண தீர்த்த தெப்ப உற்சவத்துடன் நிறைவு பெறும். இந்த ஆலயத்தின் ஆண்டு தோறும் ஆடிப்பூரம் அன்று செங்கமலத் தாயார் தேரில் எழுந்தருள்வார். இந்த தேரோட்டத் திற்காக 1892-ம் ஆண்டு தேர் உருவாக் கப்பட்டது. பின்னர் கடந்த 2014-ம் ஆண்டு ரூ.26½ லட்சத்தில் புதிய தேர் செய்யப்பட்டது. மன்னார்குடியில் ஓரிரவு தங்கினால் ஒரு கோடியாண்டுகள் தவமியற்றியதற்கு சமம் என்கிறார்கள்.
*ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏
*வானமாமலை ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏
நாளையும் ஸ்ரீகிருஷ்ணாவதாரம் தொடரும் ....
🙏 *சர்வம் கிருஷ்ணார்ப்பனம்* 🙏*
No comments:
Post a Comment