"எங்களிடத்திலுள்ள நல்ல நடத்தைகளை நீ பின்பற்று"
ஒரு குடும்பத்தில் பத்தினி ஒழுங்கு தப்பி நடந்தால் அதன் பாப பலன் அவளைத் தாக்காது; அவளை நல்வழிபடுத்தத் தவறிய புருஷனைத்தான் சேரும்.
தேச காரியத்திலே ஒரு பிரஜை தப்பு பண்ணினால், அதற்கான பாபம் அவனைத் திருத்தி வைக்காத ராஜாவைத்தான் சேரும். அந்த ராஜாவே பண்ணும்படியான பாபம், அவனை நல்வழிப்படுத்தத் தவறிய ராஜப் புரோஹிகிதரைச் சேரும். நீதி சாஸ்திரத்தில் இப்படியாக ஒரு பர்த்தாவுக்கும், ராஜாங்கம் நடத்துகிறவனுக்கும், ஆசார்யனுக்கும் ரொம்பப் பெரிய பொறுப்பைத் தந்திருக்கிறது.
ராஜா ராஷ்ட்ர க்ருதம் பாபம் ராஜபாபம் புரோஹிதம் |
பர்த்தாரம் ஸ்த்ரீக்ருதம் பாபம் சிஷ்ய பாபம் குரும் வ்ரஜேத் ||
ஒரு பர்த்தா என்றால் மனைவியையும், ராஜாவானவன் குடிமக்களையும், குரு என்கிறவன் சிஷ்யனையும் அதட்டி அதிகாரம் பண்ணிக் கொண்டிருப்பதற்காக ஏற்பட்டவர்கள் அல்ல. இவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் ஆதீனத்தில் உள்ளவர்களை நல்வழிப்படுத்தக் கடமைப்பட்டவர்கள் ஆவார்கள். அந்த கடமையை நிறைவேற்றத் தவறினால் தங்கள் ஆதீனத்தில் இருக்கிறவர்களின் பாபத்தைத் தாங்களே வாங்கிக்கொள்ள வேண்டியவர்கள் ஆவார்கள்.
"சிஷ்ய பாபம் குரும் வ்ரஜேத்" என்று தெரிந்து கொண்டிருந்த பழையகால குரு எப்படியிருந்திருப்பார்? சிஷ்யனை நல்வழிப்படுத்துவதற்கான ஆத்ம சக்தி பெற்றவராகத் தம்மைப் பண்ணிக் கொண்டிருப்பார். அதாவது தாமே முன்னுதாரணமாக (example ஆக) அந்த நல்வழியில் நடந்து காட்டிக் கொண்டிருப்பார். "எங்களிடத்திலுள்ள நல்ல நடத்தைகளை (அஸ்மாகம் ஸுசரிதானி) நீ பின்பற்று" என்று தைத்திரீய உபநிஷத்தில் குரு சிஷ்யனிடம் சொன்னது இதைத்தான்.
அப்படிப்பட்டவரிடத்தில் ஒரு ஜீவனை பால்யத்திலேயே கொண்டு சேர்த்து விடவேண்டும்.
அந்தக் காலத்தில் ஒவ்வொரு பிதாவுக்கும் வேத சாஸ்திரங்கள் நன்றாகத் தெரிந்துதான் இருந்தது. இருந்தாலும் அவரவரும் தம் பிள்ளைகளுக்குத் தாங்களே கற்றுக் கொடுக்காமல் இன்னொரு குருவிடம் கொண்டுபோய் விட்டார்கள்.
ஏன்?
அப்பா- பிள்ளை என்றால் ரொம்பவும் ஸ்வாதீனம் கொடுத்துப் போய்விடும். அப்பாவும் செல்லம் கொடுத்து விடுவார். பிள்ளையும் ஸ்வாதீனத்தினால் அவருக்கு ரொம்பவும் அடங்கி நடக்காமல் ஸ்வாதந்திரியமாக இருக்கப் பார்ப்பான். அடக்கம் (விநயம்) என்பதான வித்யையின் ஆதாரப் பண்பே இல்லாவிட்டால் இவன் என்ன படித்துதான் என்ன பிரயோஜனம்?
உபநிஷத்துக்களைப் பார்த்தால் இது தெரியும். பாரத்வாஜர் மஹா பெரியவர். ஆனாலும் அவருடைய புத்ரரான ஸுகேசர் என்பவர் ஸமித்தும் கையுமாக குருவைத் தேடித் தேடிப்போய் பிப்பலாதரை அடைந்தார் என்று "பிரச்னோபநிஷத்" ஆரம்பிக்கிறது. (ஸமித்து என்றால் சுள்ளி. எளிதில் பிரீதி அடைந்துவிடும் அந்தக்கால குருமாருக்கு இதுதான் பெரிய காணிக்கை. அவருடைய யக்ஞ அநுஷ்டானத்துக்கு சுள்ளி தானே முக்கியம்?).
இப்படி இன்னம் பல பேரையும் சொல்லியிருக்கிறது.
ச்வேதகேது என்ற பிரம்மச்சாரியைப் பற்றி சாந்தோக்ய உபநிஷத்தில் சொல்லியிருக்கிறது. இவன் தகப்பனாரிடமே வித்யாப்யாஸம் பண்ணிவிட்டு ராஜ சபைக்குப் போகிறான். அங்கே ராஜாவாயிருந்த ஸத்வித்வானான ப்ரவாஹணர் இவனைக் கேள்விகள் கேட்கிறார். இவனுக்கு ஒரு கேள்விக்குக் கூட பதில் சொல்லத் தெரியவில்லை. பிதாவிடமே வித்யாப்யாஸம் பண்ணினால் பிரயோஜனமில்லை என்று இங்கே indirect ஆக (மறைமுகமாக) சொல்லுகிற மாதிரி இருக்கிறது.
-- ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
(தெய்வத்தின் குரல் - இரண்டாம் பகுதி)
No comments:
Post a Comment