Monday, July 26, 2021

End of krishna

*ஶ்ரீமத் பாகவதம்*  57
🙏 ஓம்
*கண்ணன் மறைவு*

அடுக்கடுக்காய்க் கேள்விகள் அர்ஜுனனிடம்.

தலையில் அடித்துக்கொண்டு ஓவென்று கதறி அழுதுகொண்டே தரையில் அமர்ந்தான் அர்ஜுனன்.

அழுதுகொண்டே
நம் உறவினன் என்று நினைத்த அந்த பகவான் கண்ணன் நம்மை ஏமாற்றிவிட்டு இவ்வுலகை விட்டுக் கிளம்பிவிட்டார்.

ஹா
இவ்வளவு நாட்களாக என்னிடம் இருந்த வீரம், தைரியம், தேஜஸ் எல்லாம் அவர் என்னருகில் இருந்தவரை இருந்தது.  அவரோடு எல்லாம் போய்விட்டது.

கண்ணனாலேயே நான் தேவலோகம் வரை சென்று வந்தேன். இந்திரனை வென்று காண்டவ வனத்தை அக்னிக்குத் தந்தேன்.

இயந்திரத்தில் வைக்கப்பட்ட மீனின் மேல் அம்பைக் குறி தவறாது எய்து, ஸ்வயம்வரத்தில் நான் திரௌபதியை ஜெயித்ததே அவன் அருளால்தான்!

"திரௌபதி மானபங்கப்படுத்தப்படும் நிலைக்கு உட்படுத்தப்பட்டபோது, எங்கோ அவன் இருந்தாலும், ஆபத்திலே புடவை சுரந்து, காத்துக் கொடுத்தான். 

நாம் காட்டில் இருக்கும்போது, துரியோதனனால் தூண்டப்பட்ட துர்வாஸர் நம்மை சபிக்க நேரிடும் நிலை வந்தபோது, ஒரு பாத்திரத்தில் இருந்த சிறு கீரைத் துண்டை எடுத்து உண்டு, அனைவருடைய பசியையும் போக்கி, துர்வாஸருடைய கோபத்தையே விரட்டினான். 

எனக்கு பாசுபதாஸ்திரம் தேவைப்பட்டபோது, உடனே பெற்றுக் கொடுத்தான். 

உயர்ந்த இந்திரப்ரஸ்தம் நமக்குக் கிடைத்தது. எல்லா அரசர்களும் கப்பம் செலுத்தினார்கள்.

பீமன் அண்ணா ஜராசந்தனைக் கொன்றதும் கண்ணனால்தான்.

யுத்தத்தின்போது நம்முடனேயே இருந்தானே. குதிரைகளையெல்லாம் குளிப்பாட்டினான்.

வனவாசத்தின் போதும், அக்ஞாத வாசத்தின்போதும் எவ்வளவு இடர்கள்.  அத்தனைக்கும் துணை நின்றானே.

யுத்தம் முடியும்வரை பகவானான அவன் தேர்த்தட்டிலேயே உறங்கினான்.

இவ்வளவுநாள் வில்லுக்கொரு விஜயன் என்று நான் பெயர் வாங்கியதெல்லாம் கண்ணன் என்னருகில் இருந்ததால் தானே..

மாதவனாகிய கண்ணனின் ஒவ்வொரு விளையாட்டுச் செய்கையையும் நினைத்து என் உள்ளம் இப்போதும் உருகுகிறது. அவன் நம்மை கூப்பிட்டபோது, 'பார்த்தனே! அர்ஜுனா! அத்தை பிள்ளையே! நண்பனே! குரு குலத்தில் உதித்தவனே!' என்று பாசத்தோடு அழைத்திருக்கிறான். அவன் பரமேச்வரன்! மனித உடலை எடுத்துக் கொண்டு மண்ணுலகில் அவதரித்திருக்கிறான் என்பதைக் கூடச் சரிவர புரிந்து கொள்ளாத நான், 'நண்பனே! இடையனே! அடேய்!' என்று எத்தனை முறை கூப்பிட்டிருக்கிறேன்? இப்பிழைகளெல்லாம் எனது அறியாமையால் செய்யப்பட்டவை! கண்ணனும் அவற்றைப் புன்னகையுடன் பொறுத்து வந்தான்" என்றான் அர்ஜுனன்.

வஞ்சித்துவிட்டானே..

ஒவ்வொரு நிகழ்வையும் சொல்லிச் சொல்லி பகவான் காத்ததைச் சொல்லி அழுதான் அர்ஜுனன்.

கண்ணன் கிளம்பியதும் வரும் வழியில் சாதாரணமான தீயோர் படையால் தோற்கடிக்கப் பட்டேன்.

அதே தேர், அதே காண்டீபம், அதே குதிரைகள், சண்டையிட்டதும் அதே அர்ஜுனனான நானேதான்.  ஆனால், கண்ணன் இல்லையென்றதும் என் பராக்ரமம் அழிந்துவிட்டதே.

துவாரகையில் அனைவரும் அந்தணர் சாபத்தால் அறிவிழந்து, கள்ளைக் குடித்து, மனம் தடுமாறி,  கோரைப்புற்களால் அடித்துக்கொண்டு இறந்தனர்.
நாலைந்துபேர்தான் எஞ்சியிருக்கின்றனர்.

பலமற்றவர்களை 
பலம் பொருந்தியவர்கள் வெல்வார்கள். பலமுள்ளவர்களோ தங்களுக்குள்ளேயே அடித்துக்கொள்வார்கள்

இவ்விஷயங்களை மைத்ரேயர் ஏற்கனவே விதுரரிடம் சொல்லியிருந்தார். எனினும் விதுரர் துக்ககரமான இச்செய்தியைச் சொல்ல தைரியமற்றுப்போய் சொல்லாமல் விட்டு விட்டார்.

நாரதரும் ஒரு சூசனை செய்துவிட்டுப் போனார்.

அனைவரும் சொல்லொணாத துயரில் மூழ்கினர்.

எவ்வளவு பேசினாலும், விதுரர் உற்சாகமிழந்து காணப்பட்டதையும்,பின்னர் த்ருதராஷ்ட்ரனும்,காந்தாரியும் கிளம்பியதையும்,  நாரதர் சொன்னதையும் தொடர்பு படுத்திப் பார்த்தார் தர்மபுத்ரர்.

இன்னும் வரும்.
🙏 ஓம்
                 --- காத்திருப்போம்

No comments:

Post a Comment