Wednesday, July 7, 2021

Daya satakam sloka 3 in tamil

தயா சதகம்

ச்லோகம் 3

*कृतिनःकमलावास कारुण्यैकान्तिनो भजे|
धत्ते यत्सूक्तिरूपेण त्रिवेदी सर्वयोग्यताम् ||*

_க்ருதிந: கமலாவாஸ காருண்யை காந்திநோபஜே
தத்தேயத் ஸுக்தி ரூபேண த்ரிவேதீ ஸர்வயோக்யதாம்_

ஸ்ரீ ஆர். கேசவ அய்யங்கார் ஸ்வாமியின் திருவருட்சதக மாலை

திருப்பர னடிக்கவி யெனத்தமை விடுத்தாங்
கொருப்படு திடத்தொரு கடைப்பிடி நடைக்கண்
உருப்பெறு மறைத்தலை தலைத்தலை யுயக்கொள்
உரித்தருள் தமிழ்க்கட வுளர்க்கெனை யளித்தேன். 3

 (ஸ்ரீநிவாஸனுடைய தயையொன்றையே தஞ்சமாகப் பற்றியவரும், தங்கள் செய்ய தமிழ் மாலைகளாகிய பிரபந்தங்கள் மூலமாய் வேதங்கள் அனைத்தையும் அனைவருக்கும் யோக்யமாகும்படி செய்வித்த தமிழ்க் கடவுளருமான ஆழ்வார்களை இடைவிடாமல் பிரியமாகத் தொழுகிறேன்.)

மும்மறை தன்னையும் மனிதர் அனைவரும்
செம்மையாய்க் கற்றிடத் தமிழில் வடித்து
செங்கமலி நாதன் திருவருள் கதியென
இங்குவாழ்ந் துயர்ந்த ஆழ்வரைப் பணிவனே!

அன்பில் ஸ்ரீநிவாசன் ஸ்வாமி தமிழ் செய்தது.

வேதங்கள் இந்த ஆழ்வார்களின் ப்ரபந்தங்களின் வடிவை எடுத்துக்கொண்டு எல்லோர்க்கும் பொதுவாயிற்று. இந்தப் பிரபந்தங்களால் தத்வஞானமும் மோக்ஷமும் எல்லோர்க்கும் எளிதாயிற்று. இதனிலும் மிக்க கருணை உண்டோ?
இவ்வாழ்வார்களை அவதரிக்கச் செய்து இவர்களைக்கொண்டு வேதங்களையே தமிழாகச் செய்வித்தது ஸ்ரீநிவாஸனுடைய தயை. அந்த தயையே வடிவானவர்கள் ஆழ்வார்கள். அவர்களையே நாம் தஞ்சமாக நாடுகிறோம். ஆழ்வார்கள் என்றால் பகவானுடைய குளிர்ந்த குணஸமுத்திரத்தில் தாங்களும் ஆழ்ந்து அவர்களின் ப்ரபந்தங்களை ஸேவிப்பவரையும் ஆழும்படி செய்கிறவர்கள், பகவானையும் தங்களுடைய குளிர்ந்தமனதில் ஆழச் செய்கிறவர்கள். தெளியாத மறைநிலங்களை இவர்கள் ஸூக்திகளை ஓதுவதால் தெளிகின்றோம் என்றும் கூறப்பட்டது.

ஆக்கூர் அனந்தாசாரியார் ஸ்வாமி உரை

முன்ஶ்லோகத்தில் குருபரம்பரையை பொதுவிலே வணங்கி பின் தனித்தனியே வணங்கக்கருதி, நாலாயிரம் திவ்யப்ரபந்தப் பாட்டுக்களால் தயாதேவியின் பெருமையை விளக்கிக்காட்டின உபகாராதிஶயத்தை நினைத்து ஆழ்வார்களை வணங்குகிறார். அல்லது குருபரம்பரையை மூன்று வகுப்பாகப் பிரித்து, பிற்காலத்திய ஆசார்ய பரம்பரையை விகாஹே என்ற ஶ்லோகத்தால் வணங்கி அவர்க்கு முற்காலத்தவரான ஆழ்வார்களை வணங்குகிறார் க்ருதிந: என்று தொடங்கி. 'க்ருதிந்' என்னும் சொல்லுக்கு வித்துவான் என்றும், க்ருதக்ருத்யன் அதாவது செய்யவேண்டிய கார்யத்தை செய்து முடித்தவன் என்றும், க்ருதார்த்தன் அதாவது பயன் கைபுகுந்தவன் என்றும் மூன்று பொருட்கள் உண்டு அம்மூன்றையும் ஆழ்வார்களிடத்தில் அநுஸந்தித்துப் புகழ்கிறார்.
ஏகாந்தீ, பரமைகாந்தீ என்று இரண்டு பதங்கள் உண்டு. ஏகாந்தீயாவது தன் மநோபீஷ்டங்கள் அனைத்துக்கும் ஒரே தைவத்தை உபாயமாகப் பற்றுகிறவன்.
பரமைகாந்தீ என்றால் பகவானே உபாயம் அவனே உபேயம் - பயன் என்றிருப்பவன். இங்கு ஏகாந்தீ என்று பரமைகாந்தீயே பொருள்படும். செய்யுளில் இடம் சுருக்கமாதலால் பரம யென்றது விடப்பட்டது. அல்லது பகவானை உபேயமாகக் கருதி, தயையை உபாயமாகப் பற்றுதலால் ஏகாந்தியாவர் என்று சொன்னாலும் விரோதமில்லை. இத்தால் ஶரணாகதி ஶாஸ்த்ரத்தை தாங்கள் அனுஷ்டித்து உலகத்தில் பரவச்செய்தவர் ஆழ்வார்கள் என்று ஸூசிக்கப்பட்டது. பகவா னுடைய தயையையே தஞ்சமாகக் கொண்டவன் ஶரணாகதன் என்பது ப்ரஸித்தமன்றோ? உத்தரார்த்தத்தால் ப்ரபந்தமூலமாய் உலகத்துக்குச் செய்த உபகாரத்தை அருளிச் செய்கிறார். வேதங்கள் நான்காயினும் த்ரிவேதீ என்று மூன்று வேதங்களை மாத்திரம் எடுத்தது, ருக்-யஜுஸ்-ஸாம அதர்வ என்ற நான்கில் அதர்வண வேதம் பெரும்பாலும் இம்மையில் பெறவேண்டிய நன்மைக்காக அஸ்த்ராஸ்த்ராதிகளையே கூறுவதால், மற்ற மூன்றுமே முக்கியமான அறிவு தரும் கல்வியாகும் என்று கருதி, த்ரயீ என்றும் த்ரிவேதீ என்றும் மூன்று வேதங்களையே கொண்டாடுவது வழக்கம்.

விசாலமான மனப்பான்மை கொண்ட இம்மஹாகவிக்கு வேதங்களின்மேல் ஸகலஜாதியருக்கும் உபயோகப்படுகிற பெருமை இல்லை என்ற குறை இருந்ததென்றும் இந்த த்ராவிடப்ரபந்தங்கள் அக்குறையை நீக்கிவைத்தன வென்ற அபிப்ராயம் 'ஸர்வயோக்யதாம்' என்றதால் வெளியாகுகிறது. वेदवेद्ये परेपुंसि जाते दशरथात्मजे. वेदप्राचेत साक्षात् रामायणात्मना" = பரமாத்மா ராமனாக அவதரித்த போது அவனது மகிமையை எடுத்துக்கூற வேதம் இராமாயண ரூபமாக அவதரித்தது. அதுபோல, அந்த பகவானே திருவேங்கடமுடையானாக அவதரித்தபோது வேதங்கள் அவ்வர்ச்சா மூர்த்தியின் மகிமையை வெளிப்படுத்த திராவிடப்ரபந்தரூபமாய் அவதரித்தது. பகவான் ஸர்வயோக்யனாய் அவதரித்த போது வேதங்களும் ஸர்வயோக்யமாய் இருப்பது அவஶ்யமன்றோ? என்று திருவுள்ளம்.

No comments:

Post a Comment