அத்யாத்ம ராமாயணம்- பாலகாண்டம்
அத்தியாயம் 7
அயோத்தியை நோக்கி திருமண கோஷ்டி செல்வதற்கு புறப்படுகையில் துர் நிமித்தங்கள் தோன்ற தசரதர் கவலையுற்றதைக் கண்டு வசிஷ்டர் சில நல்ல சகுனங்களும் தோன்றுவதால் கவலையுற வேண்டாம் என்று ஆறுதலளித்தார்.
அப்போது பெரும் காற்றுடன் ஒரு ஓளி தோன்ற பரசுராமரைக் கண்டனர். அவரைக் கண்ட தசரதர் பயந்து அவர் காலில் விழுந்து தன் புத்திரர்களைக் காக்குமாறு வேண்ட அதை அலட்சியம் செய்த அவர் ராமனைப் பார்த்துக் கூறினார்.
"நீ ராமன் என்னும் என் பெயரை வைத்துக் கொண்டு ஒரு பழைய இற்றுப்போன வில்லை ஒடித்து பெரிய வீரன் என்று பெயர் பெற்றாய். இந்த என் கையில் உள்ள விஷ்னு தனுஸ்ஸை நாணேற்றுவாயாகில் நீ சிறந்த வீரன் என்று ஒப்புக் கொண்டு உன்னோடு யுத்தம் புரிவேன் . இல்லையேல் உங்கள் அனைவரையும் கொன்று விடுவேன் ."
இதைக் கேட்ட ராமன் உடனே அந்த வில்லை வாங்கி நாணேற்றி அதற்கு இலக்கு பரசுராமரின் மூவுலக சஞ்சார ஆற்றலா அல்லது அவருடைய தவப்பயனா என்று கேட்க உடனே பரசுராமர் தன்னுடைய இறந்த கால நினைவுகள் வரப் பெற்றார்.
முன்னொருகாலத்தில் அவர் தவம் செய்த போது பகவான் நாராயணர் அவர் முன் தோன்றி அவருக்கு க்ஷத்ரியர்களை அழிக்கவும் அவருடைய பிதாவைக் கொன்றவனைப் பழிவாங்கவும் சக்தியை அளித்ததும் அவ்வாறு வென்ற பூமியை காஸ்யபருக்குக் கொடுத்ததும் , மேலும் பகவான் தான் தசரதருக்கு புத்திரனாக அவதரித்து அவருடைய சக்தியைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகச் சொன்னதும் நினைவுக்கு வர பரசுராமர் ராமனைத் துதிக்கலானார்.
அவர் கூறியது,
" நான் உங்களை யாரென்று உணர்ந்தேன், இன்று என் ஜன்மம் சாபல்யமாயிற்று. பரப்ரம்மமாகிய தங்கள் மாயையே , தண்ணீரில் நுரை போலவும், நெருப்பில் புகை போலவும் இந்த உலகத்தைத் தோற்றுவிக்கிறது. மாயையால் மயக்குண்ட மக்கள் தங்களை அறிவதில்லை.
ஆத்மாவுக்கு பிறப்பில்லை என்று அறியாமல் சம்சாரத்தில் சிக்குண்டவர்களுக்கு தங்கள் பக்தர்களுடைய சங்கமே சம்சார துக்கத்தைப் போக்குகிறது., அதன் மூலம் ஏற்படும் பக்தியினால் மாயை விலகுகிறது. தங்கள் அருளால் கிடைத்த சத்குருவின் மூலம் ஞானம் ஏற்பட்டு பிறவித்தளையில் இருந்து விடுபடுகின்றனர். அதனால் பக்தியில்லாமல் முக்தியில்லை.
ஆகையால் எப்பிறவியிலும் தங்கள் பாதக்கமலங்களில் பக்தியும் பக்தர்கள் சங்கமும் எனக்குக் கிடைக்க அருள் புரிய வேண்டுகிறேன். பக்தியும் ஞானமும் உள்ளவர் இந்த உலகத்தையும் தங்கள் குலத்தையும் பரிசுத்தமாக்குவர்.
.ராமசந்திரா , உலக நாயகனே, உங்கள் கருணையால் மக்கள் மனதில் பக்தியை உண்டாக்கி அவர்களை ஆட்கொள்கிறீர். உமக்கு நமஸ்காரம். என் தவத்தின் பயனை எல்லாம் உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன்."
இவ்விதம் கூறிய பரசுராமர் இதைப் படிப்பவர்களுக்கு பக்தி ஏற்பட்டு அந்திமஸ்மரணத்துடன் நல்ல கதியடைவர் என்று கூறி ராமனின் அனுமதியுடன் மஹேந்த்ர பர்வதம் சென்றார். பிறகு ராமன் அயோத்தியடைந்து சீதையுடன் நலமாக வாழ பரதனின் மாமனான யுதாஜித் அங்கு வந்து பரதசத்ருக்னர்களை கேகய நாட்டிற்கு அழைத்துச்சென்றார்.
இவ்விதம் பாலகாண்டத்தைகூறி முடித்த சிவபெருமான் ராமன் மாயைக்குட்படாத போதிலும் சாமான்ய மானிடனைப் போலவே சீதையுடன் யாவரும் மகிழ வாழ்ந்தார் என்று கூறினார்.
No comments:
Post a Comment