Wednesday, July 28, 2021

Adhyatama ramayanam Aranya kandam part 5 in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

அத்யாத்ம ராமாயணம்- ஆரண்ய காண்டம் -அத்தியாயம் 5
அத்தியாயம் 5
பஞ்சவடியின் அருகே உள்ள ஜனஸ்தானம் என்ற அடர்ந்த காட்டிலே இஷ்டப்படி உருவம் தரிக்கும் திறமையுள்ள ராட்சசி சஞ்சரித்துக் கொண்டு இருந்தாள். அவள் ஒருநாள் ராமனுடைய அடிச்சுவட்டைக் கண்டு ஆச்சரியம் அடைந்து அதை பின்பற்றியவளாய் ராமனுடைய ஆஸ்ரமத்திற்கு வந்தாள்.
அங்கு சீதையுடன் மன்மதனைப் போல் அமர்ந்திருந்த ராமனைப் பார்த்து அவன் யாரென்றும் மரவுரி ஜடை தரித்திருப்பதின் காரணத்தையும் கேட்டாள். மேலும் தன்னை ராட்சச ராஜனாகிய ராவணனின் சகோதரி என்றும், ஜனஸ்தானத்தில் கரனுடன் வசித்துக் கொண்டு முனிவர்களைக் கொன்று தின்று வருவதாகவும் தெரிவித்தாள். (எப்பேர்ப்பட்ட அறிமுகம்!)
ராமன் தன்னைப் பற்றி தெரிவித்து விட்டு அழகியே என விளித்து (கிண்டல்) அவளுக்கு என்னவேண்டும் என்று கேட்க அதற்கு அவள் ராமனைக் கண்டு மோகித்ததாகக் கூறி தன்னுடன் வரும்படி கூப்பிட்டாள். அப்போது ராமன் சீதையைக் கண்டு சிரித்தவாறே தனக்கு ஒரு மனைவி இருப்பதால் அவளை ஏற்றுக்கொள்ள இயலாது என்று கூறி லக்ஷ்மணன் தனியாக இருப்பதால் அவனே அவளுக்கேற்ற புருஷன் என்று கூற அவள் லக்ஷ்மணனை நாடினாள்.
அதற்கு லக்ஷ்மணன் தான் ராமனின் சேவகன் என்றும் தன்னை மணந்துகொண்டால் அவளும் வேலைக்காரியாகவே இருக்க நேரிடும் என்று கூறி ராமனே எல்லோருக்கும் தலைவன் ஆதலால் அவனிடமே செல்லும்படி கூறினான்.
இவ்வாறு தன்னை ராமன் அலைக்கழிப்பதில் கோபம் கொண்டு அவள் சீதையை விழுங்கி விடுவதாகக் கூறி சீதையிடம் ஓடினாள். உடனே ராமன் உத்தரவால் லக்ஷ்மணன் அவள் காதையும் மூக்கையும் அறுக்க அவள் கதறி அழுது கொண்டு கரனிடம் ஓடி ராமலக்ஷ்மணர்களை கொள்ளாவிடில் தான் உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாகக் கூறினாள்.
கரன் பதினாலாயிரம் வீரர்களுடன் எதிர்த்து வருவதை அறிந்து ராமன் லக்ஷ்மணனிடம் சீதையை அழைத்துக்கொண்டு ஒரு குகையில் மறைந்து கொள்ளக் கூறி ஒருவனாகவே அரை முஹூர்த்த நாழிகையில் அனைவரையும் கொன்றார். வெற்றி வீரனாகத் திரும்பிய ராமனை சீதை அன்புடன் ஆலிங்கனம் செய்து கொண்டாள்.அதுவே அவர் சரீரத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்தாகியது.
உடனே சூர்ப்பனகை ராவணனிடம் சென்று முறையிட்டு அவனிடம் சீதையைப் பற்றி வர்ணித்து அவன் மனதில் காமத்தை உண்டு பண்ணினாள். அவளை ராவணனிடம் கொண்டு வர தான் முயன்றதாகவும் அப்போது லக்ஷ்மணன் தன்னை அங்கஹீனம் செய்ததாகவும் கூறி தன் நிலையைக் கண்டு எதிர்த்த கரனையும் அவன் சைன்யத்தையும் ராமன் ஒருவனாகவே நாசம் செய்ததையும் கூறினாள்.
இங்கு ராவணனின் மனோநிலை வால்மீகி ராமாயணத்தில் இருந்து வேறுபட்டதாக உள்ளது. ராமன் மனிதனல்ல பரமாத்மாவே என்று உணர்ந்து பிரம்மதேவரின் வேண்டுகோளின்படி தன்னை வதம் செய்வதற்கே அவதரித்துள்ளான் என்று சந்தேகித்து அவனை எதிர்த்து மடிந்தால் வைகுண்டம் செல்லலாம் இல்லையேல் தான் வெகுகாலம் அரக்கர் அரசனாக இருக்கலாம் என்று எண்ணினான்.
விரோத புத்த்யா ஏவ ஹரிம் ப்ரயாமி
த்ருதம் ந பக்த்யா பகவான் ப்ரஸீதேத்
"நான் விரோத புத்தியுடன் ராமனிடம் செல்வேன். பக்தியினால் சீக்கிரம் அனுக்ரஹம் செய்யமாட்டார் ." என்று நினைத்து ரதத்திலேறி மாரீசன் இருக்குமிடம் வந்தான்.

No comments:

Post a Comment