Monday, June 21, 2021

Navamohan krishna temple at Yamuna

நாணி யினியோர் கருமமில்லை
நாலய லாரும் அறிந்தொழிந்தார்
பாணியா தென்னை மருந்து செய்து
பண்டு பண்டாக்க வறுதிராகில்
மாணி யுருவா யுலகளந்த
மாயனைக் காணில் தலைமறியும்
ஆணையால் நீரென்னைக் காக்கவேண்டில்
ஆய்ப்பாடிக் கென்னை யுய்த்திடுமின்
          நாச்சியார் திருமொழி (618)

அனைவரும் என்னைப் பற்றிய விபரங்களை அறிந்த  பின் இனி வெட்கப் பட்டுப் பயனில்லை. இனியும் காலம் கடத்தாமல் என்னை மருந்து கொண்டு என் காதல் நோயை குணப் படுத்தவும், காப்பாற்றவும் நினைத்தீர்களாகில், வாமனனாய்ச் சென்று உலகளந்த பெருமானின் இருப்பிடமான திருஆய்ப்பாடியில் என்னைச் சேர்த்து விடுங்கள். அப்போதுதான் என் நோய் தலை மடங்கும்.

நாணி – வெட்கப்படுதல் – உயிர் வாழும் ஆசையொழிந்ததால் நாணம் அடியோடு விலகிற்று.
பாணித்தல் – கால தாமதம் செய்தல்
பண்டு பண்டாக்க வுறுதிராகில் – முதல் பண்டு தற்போது உள்ள பிரிவு நிலைக்கு முற்பட்ட கலந்து நின்ற நிலையைக் குறிக்கிறது. இரண்டாவது பண்டு என்னும் சொல்  நாயகனைப் பற்றி அறியாத நிலையைக் குறிக்கிறது. இந் நிலை மாறி மாறி வருவதால் மெலிவுற்றாள்.

உலகலந்த மாயனைச் சேவித்தால் ஆற்றாமை அடங்குமாம்.!

திருவாய்ப்பாடி – கோகுலம்.
மூலவர் – நவ மோஹன கிருஷ்ணன். நின்ற திருக்கோலம் . கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் – ருக்மிணி, ஸத்யபாமா பிராட்டியார்கள்
தீர்த்தம் – யமுனா நதி
ஹேம கூட விமானம்.

ஆழ்வார் பாடிய கோவிலும் மூர்த்தியும் தற்போது இல்லை. கோவில் வாசலிலேயே யமுனை ஓடுகிறது. அங்கு இரண்டு கோகுல்,  தற்போதைய கோகுலம், புராணா கோகுலம் என்று நிலவுவதால் இரண்டையும் சேவித்து விடுவது நல்லது.

மங்களா சாஸனம் –
பெரியாழ்வார் – 14,16,132,145,231,235,237,239,263,281
ஆண்டாள் – 474,618,630,636,638
திருமங்கையாழ்வார் – 1021,1392,1435,1993,1994,1995,2673
மொத்தம் – 22 பாசுரங்கள்

No comments:

Post a Comment