அத்யாத்ம ராமாயணம்
பாலகாண்டம் - அத்யாயம் 2
மஹாதேவனால் கூறப்பட்ட ஸ்ரீ ராம ஹ்ருதயத்தைக் கேட்டு பார்வதி தேவி ராம சரித்திரத்தை அவர் வாயிலாகக் கேட்க ஆவலுள்ளதாகக் கூறினாள் . அதற்கு சிவன் ராமனாலேயெ அவருக்கு சொல்லப்பட்ட அத்யாத்ம ராமாயணத்தைக் கூற ஆரம்பித்தார்.
ராவணன் தலைமையில் ராக்ஷசர்கள் பூமியில் துன்பம் விளைவித்த போது பூமித்தாய் ஒரு பசுவின் வடிவு கொண்டு ப்ரம்ம லோகம் சென்று கண்களில் கண்ணீர் பெருக தன் நிலையைத்தெரிவித்தாள் . அப்போது ப்ரம்மா த்யானத்தால் நடந்ததை அறிந்து பூமிதேவியுடனும் தேவர்களுடனும் பாற்கடல் சென்று வேத வாக்குகளால் பகவானைத் துதிக்க ஆயிரம் சூரியன் உதித்தது போல நீல ரத்தின ஒளியுடன்நாராயணன் தோன்றினார்
அவர் தோற்றத்தை அத்யாத்ம ராமாயணம் இவ்வாறு வர்ணிக்கிறது.
கருடன் மேல் கருணை ததும்பும் தாமரைக் கண்களுடன். மார்பில் துலசி மாலை துலங்க, இடையில் பீதாம்பரம் பொன்னொளி வீச , கிரீட குண்டலங்கள் கேயூரஹாரங்கள் முதலிய ஆபரணங்கள் அழகு செய்ய சங்கு சக்கரம் ஏந்தி ஸ்ரீதேவியுடன் காட்சி அளித்தார்.
பகவானின் தரிசனம் வால்மீகியாலும் கம்பனாலும் மிக அழகுடன் வர்ணித்திருப்பதையும் இங்கு காண்போம்.
வால்மீகியின் ஸ்லோகம் பின் வருமாறு.
ஏதஸ்மின் அந்தரே விஷ்ணு: உபயாதோ மஹாத்யுதி:
சங்க சக்ர கதா பாணி: பீதவாஸ ஜகத்பதி:
வைனதேய ஸமாருஹ்ய பாஸ்கர: தோயதம் யதா
இந்த சமயத்தில் ஜகத்பதியான விஷ்ணு கருடன்மேல் மிகுந்த ஒளியுடன் சங்கு சக்கர கதாபாணியாக பீதாம்பரம் தரித்து கருமேகத்தின் மேல் காணப்படும் சூரியனைப்போல தோன்றினார்.
இதை கோவிந்த ராஜர் மிக அழகாக வ்யாக்யானம் செய்கிறார்.
ஏதஸ்மின் அந்தரே –இந்த சமயம் என்பதற்கு என்ன பொருள் என்றால் பகவான் அவருடைய விரதமான துஷ்ட நிக்ரஹம் சிஷ்ட பரிபாலனம் என்பதற்கிணங்க ராவணனைக் கொல்வதற்கும் பிள்ளை வரம் வேண்டி நிற்கும் தசரதருக்கு அருள் புரியவும் தக்க சமயத்தை எதிர்பார்த்திருந்தாராம். தேவர்களின் பிரார்த்தனையை ஒரு வ்யாஜமாகக் கொண்டு ராமனாக அவதரித்தார்.
மஹாத்யுதி: - ஆயிரம் சூரியர் உதித்தாற் போல் . ஆயினும் அவருடைய ஒளி சூரியனின் வெப்பம் கொடுக்கும் ஒளியல்ல. பாஸ்கர: தோயதம் யதா என்பது கருமேகத்தின் மேல் தோன்றும் உதய சூரியனை ஒத்தது.
இங்கு கம்பனின் வர்ணனையையும் காண்போமா?
கருமுகில் தாமரைக்காடு பூத்து, நீடு
இருசுடர் இருபுறத்து ஏந்தி,ஏந்து அலர்த்
திருவொடும் பொலிய , ஓர் செம்பொன் குன்றின்மேல்
வருவ போல் ,கலுழன் மேல் வந்து தோன்றினான்
கருமுகில்போல் வண்ணம் கொண்டு, தாமரைக்காடு,-அதாவது அவனுடைய கைகள் பாதங்கள், கண்கள் முகம் எல்லாம் தாமரை அல்லவா? அதனால் கருமுகில் மேல் தாமரைக் காடு பூத்தது போல இருந்ததாம். இரு சுடர் இரு புரத்து- சங்கு சக்கரம் தீயென ஒளிர, அலர்த்திருவொடும் – மஹாலக்ஷ்மியுடன், சொம்பொன் குன்று- பொன் மயனமான குன்றைப் போன்ற கலுழன்- கருடன்.
ஒரு செம்பொன் குன்றின் மேல் ஒரு கருமுகில போல் தோன்றினான்.
பகவானைக் கண்ட பிரம்மாஅவரைத் துதித்தார் .
பகவான் அவர்கள் வந்த காரணத்தைக் கேட்க பிரம்மா அவரிடம் ராவணனின் செயல்கலைக் கூறி தான் அளித்த வரத்தால் அவனை மனிதரைத் தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாது என்று கூறி பகவானை மனிதனாக அவதாரம் எடுக்கும்படி வேண்டினார்.
அதற்கு நாராயணன் தன்னையே புதல்வனாக அடைய விரும்பிய கச்யபரே தசரதர் என்றும் அவர் கோரிக்கையை நிறைவேற்ற ,தான் அவருடைய மூன்று மனைவிகளிடமும் தன் சக்தியைப் பிரித்துக் கொண்டு அவதரித்து ராவண வதம் செய்வதாகக் கூறி மறைந்தார் .
பிரம்மாவும் தேவர்களிடம் பகவானுக்கு அவதார காரியத்தில் உதவ வானரர்களாகப் பிறக்கும்படி கூறி தன் இருப்பிடம் சென்றார்
No comments:
Post a Comment