Tuesday, June 15, 2021

Adhyatma Ramayanam - balakandam adhyaya3 in tamil

courtesy: Smt.Dr.Saroja Ramanujam

அத்யாத்ம ராமாயணம்- பாலகாண்டம் - அத்தியாயம் 3

மஹாதேவன் கூறினார்.
அயோத்தியில் தசரதர் என்ற அரசர் தர்மபரிபாலனம் செய்து ஆட்சி செய்பவராக இருந்தார் , அவருக்கு புத்திரபாக்கியம் இல்லாததால் குலகுரு வசிடஷ்டரின் ஆலோச்னையின்படி ரிச்யருங்கரை வரவழைத்து புத்ரகாமெஷ்டி யாகம் செய்தார்.

அப்போது அக்னிதேவன் தங்கப் பாத்திரத்தில் பாயசத்துடன் தோன்றி அதை அவருக்குக் கொடுத்து மஹாவிஷ்ணுவே அவருக்கு மகனாகத் தோன்றுவார் என்று கூறி மறைந்தார், அதை தசரதர் கௌசல்யைக்கும் கைகேயிக்கும் சரிபாதி அளிக்க அவர்கள் சந்ததியை வேண்டி அங்கு வந்த சுமித்திரைக்கு தங்கள் பாகத்திலிருந்து பாதியை அளித்தனர்.

அதன் பயனாக கௌசல்யையிடம் , நீலோத்பலம் போன்ற நிறத்தில், , பீதாம்பரம் உடுத்து, நான்கு கைகளிலும் சங்கு ,சக்கரம், கதை , பத்மம் இவை தாங்கி, தாமரைக் கண்களுடன், மகர குண்டலம் அணிந்து, சுருண்ட குழலில் மகுடம் தாங்கி, நூறு சூரியன் உதித்தாற்போல் , நிலவு போன்ற குளிர்ந்த முகத்துடன், வனமாலை, ஸ்ரீவத்சம் , மற்றும் பல ஆபரணங்களுடன் அத்புதமான குழந்தை தோன்றியது.

அதைக் கண்டு ஆச்சரியமுற்ற அவள் பகவானே வந்து பிறந்ததை உணர்ந்து அவரைத் துதித்தாள்.

தேவ தேவ நமஸ்தே அஸ்து சங்கசக்ரகதாதர
பரமாத்மா அச்யுதோ அனந்த: பூர்ணஸ்த்வம் புருஷோத்தம:
தேவதேவனே, சங்குசக்ரம் கதை தாங்கியவனே பரமாத்மாவும், பூரணனாகவும் உள்ள புருஷோத்த்மனே , அச்யுதா அனந்தா உனக்கு நமஸ்காரம்.

வதந்தி அகோசரம் வாசாம் புத்த்யாதீனாம் அதீந்த்ரியம்
த்வாம் வேத வாதின: ஸத்தாமாத்ரம் ஞானைக விக்ரஹம்
வேதம் அறிந்தோர் உன்னை வாக்கு, புத்தி, இந்த்ரியம் இவைகளுக்கு அப்பாற்பட்டவனாகவும், ஞானமே உருவாகிய உண்மைப் பொருளாகவும் கூறுகின்றனர்,.

த்வமேவ மாயயா விஶ்வம் ஸ்ருஜஸி அவஸி ஹம்ஸி ச
ஸத்த்வாதிகுண ஸம்யுக்த: துர்ய ஏவ அமல: ஸதா
உந்தன் மாயையால் இவ்வுலகை ஸ்ருஷ்டித்தல், காத்தல், அழித்தல் இவைகளை முக்குணங்களை மேற்கொண்டு செய்கிறாய். ஆயினும் முக்குணங்கள் உன்னை பாதிப்பதில்லை.

கௌசல்யை மேலும் கூறியதாவது,
அவன் எதுவும் செய்வதில்லை என்பதை அறியாமையால் மக்கள் உணர்வதில்லை. ஞானிகளே அதை அறிகிறார்கள் என்றும், மூவுலகமும் எவனிடம் உள்ளதோ அவன் வந்து தன்னிடம் பிறந்துள்ளான் என்பதே ஒரு மாயை எனக்கூறி, அவனுடைய உண்மை உருவத்தை கண்டது அவனுடைய பக்தவாத்சல்யத்தினால்தான் என்றும் அந்த உருவம் தன் மனதில் என்றும் தோன்றவேண்டும் எனப் பிரார்த்தித்தாள்.

பின்னர் , ஒரு தாயாக அவரை அனுபவிக்க அந்த திவ்ய ரூபத்தை மறைத்து சாதாரணக் குழந்தையாகத் தோன்ற வேண்டும் எனக் கூறினாள்.
பகவானும் அவ்வாறே செய்வதாகக் கூறி அவளும் தசரதரும் பூர்வ ஜன்மத்தில் தன்னையே ம்கனாகப் பெற வேண்டியதால் ராவண வதத்தின் பொருட்டு தேவர்களின் பிரார்த்தனைக்கிணங்க இங்கு வந்து தோன்றியதாகக் கூறினார்.,

அடுத்த கணம் பகவான் சிறு குழந்தையாகி அழத் தொடங்கினார். அதைக் கேட்டு வந்த தசரதர் நீல ரத்தினத்தை ஒக்கும் மகனைக் கண்டு உவகை எய்தினார் .பின்னர் கைகேயி ஒரு பிள்ளையையும், ஸுமித்திரை இரட்டைப் பிள்ளைகளையும் பெற்றன்ர். வசிஷ்டர் கௌசல்யையின் புதல்வனுக்கு ராமன் என்று பெயரிட்டார்.

அதற்குக் காரணம்,
யஸ்மின் ரமந்தே முனய: வித்யயா அஞ்ஞானவிப்லவே
தம் குரு: ப்ராஹ ராமேதி ரமணாத் ராம இத்யபி
எவனிடத்து அஞ்ஞானம் அகன்று ஞானம் அடைந்த முனிவர்கள் மகிழ்கிறார்களோ, எவன் எல்லோரையும் மகிழ்வுறச்செய்கிறானோ அவனுக்கு குரு ராமன் எனப் பெயரிட்டார் .

மற்ற குழந்தைகளுக்கும், பின் வருமாறு பெயரளித்தார். கைகேயியின் புத்திரன் பெரும் பாரம் (அவன் தாயினால் ஏற்படப்போகும் வேத்னையின் பாரம், ராஜ்ஜியத்தை மன்மில்லாமல் சுமந்த பாரம்) தாங்கப் போவதால் பரதன் என்றும், (பரணாத் பரத:), சுமித்திரையின் புதல்வன் ஒருவன் மங்கள லக்ஷணங்கள் பொருந்தியவனாதலால் லக்ஷ்மணன் என்றும், சத்ருக்களை வெல்லும் திறமையுடையவன் என்பதால் அடுத்தவனுக்கு சத்ருக்னன் என்றும் பெயரிட்டார்.

அவர்கள் அருந்திய பாயசபாகத்தின்படி . ராமலக்ஷ்மண்ர்களும் , பரதசத்ருக்னர்களும் எப்போதும் சேர்ந்தே காணப்பட்டனர். அவர்களின் குழந்தைப்பருவம் அத்யாத்ம ராமாயணத்திலும் அதை ஒட்டியே உள்ள துலசிராமாயணத்திலும் மட்டுமே காணப்படுகிறது. அதை அடுத்து காண்போம்.

  

No comments:

Post a Comment