அத்யாத்ம ராமாயணம் பாலகாண்டம்
அத்தியாயம் 5
யாக ஸம்ரக்ஷணம் வால்மீகியாலும் கம்பனாலும் விரிவாக சொல்லப்பட்டிருக்கிரது. ஆனால் அத்யாத்ம ராமாயணத்தில் அது சுருக்கமாகவே சொல்லப்பட்டு அடுத்து அஹல்யா சாபவிமோசனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
தாடகை வதத்திற்குப் பிறகு காமாஸ்ரமம் சென்று அங்கு ஓரிரவைக் கழித்தபின் சித்தாஸ்ரமத்தை அடைந்தனர். விஸ்வாமித்திரர் தன் யாகத்தைத் தொடங்க மாரீசனும் ஸுபாஹுவும் அதற்கு இடையூறு விளைவிக்க வந்தனர். ராமனின் பாணத்தால் மாரீசன் 100 யோஜனை தூரம் தள்ளப்பட்டு சமுத்திரத்தில் சென்று விழ ,ஸுபாஹு கொல்லப்பட்டான்.
விஸ்வாமித்திரர் யாகத்தை முடித்துவிட்டு சித்தாஸ்ரமத்தில் மூன்று நாட்கள் தங்கி ராமலக்ஷ்மணர்களுடன் மிதிலைக்குப் புறப்பட்டார் .மிதிலையில் ஜனகர் யாகம் செய்வதாகவும் அதைக் கண்டு அங்குள்ல சிவதனுசையும் காண வேண்டும் என்று கூறினார். அஹலயா சாப விமோசனம் பற்றித் தொடரும் முன் சிறிது வால்மீகியையும் கம்பனையும் சிறிது காண்போம்.
வால்மீகி கூறியது,
யாகம் முடிந்தவுடன் ராமனும் லக்ஷ்மணனும் முனிவரிடம் சென்று ,
அபிவாத்ய முனிஸ்ரேஷ்டம் ஜ்வலந்தம் இவ பாவகம்
ஊசது: மதுரோதாரம் வாக்யம் மதுரபாஷணௌ
நெருப்பைப் போல ஒளிர்ந்த முனிஸ்ரேஷ்டரிடம் சென்று இனிமையான வாக்குவன்மை உடைய ராமனும் லக்ஷ்மணனும் இனிமையானதும் சிறந்ததுமான சொற்களால் கூறினர் .
இமௌ ஸ்ம முனிசார்தூல கிங்கரௌ ஸமுபஸ்திதௌ
ஆக்ஞாபய யதேஷ்டம் வை சாசனம் கரவாம கிம்
" முனிஸ்ரேஷ்டரே நாங்கள் உனமது பணியாட்கள். அடுத்து என்ன செய்யவேண்டும் என்று கட்டளை இடுவீராக."
'பக்திக்ரீதோ ஜனார்தன:', பகவான் பக்தியால் ஆட்கொள்ளப் படுகிறான் என்பதை இது விளக்குகிறது.
இதைக் கம்பன் கூறுவது எவ்வாறு என்றால்,
'குன்றுபோல் குணத்தான் எதிர், கோசலை குரிசில்,
"இன்று யான் செயும் பணி என் கொல்? பணி ! " என இசைத்தான்.'
ராமன் கோசலை மகன் ஆதலால் குன்று போல் குணத்தான் . அவன் முனிவரிடம் இன்று என் பணி யாது? என்று கேட்கிறான் . அதற்கு அவர் பதிலுரைக்கிறார்.
'பெரிய காரியம் உள; அவை முடிப்பது பின்னர்" என்று. அதாவது பெரிய காரியமான ராவணவதம் உள்ளது . அது பிற்காலம் செய்ய வேண்டியது என்று.
ராமாவதாரம் என்பது அனுஷ்டான ப்ரதானம் என்று கூறப்படுகிறது. ராமோ விக்ரஹவான் தர்ம: என்றபடி அவரவர் செய்ய வேண்டிய தர்மத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவன் ராமன். இங்கு பெரியவர்களின் சொல்படி நடக்க வேண்டியதையும் சிஷ்ய தர்மத்தையும் காண்கிறோம். உலக நாயகனான போதிலும் விஸ்வாமித்திரரிடம் இருந்து அஸ்த்ரசஸ்த்ரங்களைக் கற்றான் அல்லவா? ராமன் மானுட தர்மத்தையே அனுஷ்டித்தான். (வால்மீகிராமாயணத்தின்படி) . மற்றவர்க்கும் போதித்தான்.
க்ருஷ்ணாவதாரத்திலும் புத்திரனாகவும், சீடனாகவும், தேரோட்டியாகவும் , தூதனாகவும் அந்தந்த சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி அந்தந்த தர்மத்தை அனுஷ்டித்தான் அல்லவா? அதனால் தான் பீஷ்மர் 'தர்மஸ்ய ப்ரபு: அச்யுத: 'என்றார்.
அடுத்து அஹல்யாசாப விமோசனம் தொடரும்
No comments:
Post a Comment