Saturday, May 15, 2021

Story of Bhartruhari

பத்திரகிரியார் புலம்பல்
ராஜா ஏன் துறவியானான் ?- J.K. SIVAN
வடக்கே உஜ்ஜயினியில் பெரிய குப்த ராஜா, ஸமஸ்க்ரித பண்டிதன், வாழ்க்கை வெறுத்து தெற்கே துறவியாக திருவிடை மருதூர் வந்துவிட்டபோது அவன் பெயர் தமிழ் நன்றாக எழுத படிக்க தெரிந்த பத்திரகிரியார். அவனது அடுத்த அவதாரம்! அவன் செய்த பாக்யம் அவன் குரு பட்டினத்தார். அவர் எண்ணங்க ளின் சாயல் குருவின் எளிய தத்துவ வார்த் தைகள் போலவே அவனது புலம்பலில் வெளிப்படுகிறது.
இன்று கொஞ்சம் புலம்பல் பார்ப்போம் :
நமக்கு நல்ல விஷயங்கள் யார் மூலமாக வேனும் வரட்டும். பெயரா முக்கியம். முகம்மது அலி ஜின்னா, லியாகத் அலிகான், எர்னஸ்டோ குவாரா, கெய்சர் வில்லியம், பெனிட்டோ முசோலினி இந்த பெயர்கள் நமக்கு தெரியும். இந்த பெயர்களில் இதற்கு மேல் தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது? பெயர் முக்கி யமில்லை.
ராஜா பர்த்ருஹரி ராஜா கந்தர்வசேனனின் முத்த மகனாம். உஜ்ஜயினி ராஜ்யத்தை ''இந்த நீ தான் இனி அரசன் இதற்கு'' என்று தந்தவன் இந்திரன். தாரா என்ற தேச அரசனும் சேர்ந்து தந்தது தான்.உஜ்ஜயினி ராஜாவாக பர்த்ருஹரி ஆண்டு கொண்டிருந்தபோது ஒருநாள் ஒரு துறவி கையில் ஒரு பழத்தோடு வந்து
''மஹாராஜா இந்தாருங்கள், இது ஒரு தேவ லோக பழம். கற்பக விருக்ஷத்தில் இருந்து கிடை த்தது. கேட்ட தெல்லாம் கொடுக்கும் விருக்ஷம் கற்பக விருக்ஷம் அல்லவா? அதன் இந்த பழத்தை நீங்கள் உண்டால் நீண்டகாலம் மரணமின்றி உயிர் வாழ்வீர்கள்''. பர்த்ருஹரி அநங்கசேனா, என்றும் பிங்கள ராணி என்றும் பெயர் கொண்ட தனது ஆசை மனைவிக்கு ராஜா பர்த்ருஹரி அந்த பழத்தை கொடுத்து '' நீ சாப்பிடு, நீ சாப்பிட்டால் நான் சாப்பிட்ட மாதிரி. நீ மரணமின்றி வாழ்ந்தால் அது எனக்கு சுகம் '' என்கிறான்.
ஆனால் இங்கே கொஞ்சம் இடிக்கிறது. அந்த இளைய ராணிக்கு மஹிபாலன் எனும் ராஜா வின் குதிரை லாய காவலன் மேல் கள்ள காதல். ''என் அன்பே இது உனக்கு சேர வேண் டிய பழம். நீ மரணமின்றி இருந்தால் எனக்கு சுகம் என்று கொடுக்கிறாள். அதோடு முடிந் ததா? இந்த பழக்கதை ஒரு பழங்கதை யாக இருந்தாலும் சுவையாக தொடர்ந்து கை மாறுகிறது. மஹிபாலன் தனது மனதை எப்போதோ லேகா என்கிற அரண்மனை தாதியிடம் இழந்துவிட்டான் . அவள் காதலைப் பெற இந்த பழம் உதவ ''மேலே சொன்ன டயலாக் இங்கே இடம் மாறுகிறது. லேகா என்ற அந்த தாதி தனது எதிர் காலம் தாதியாகவே முடியாமல் ஒருநாள் உஜ்ஜயினிக்கே ராணியாக வேண்டும் என்று ஆசைப்பட்டவள். இந்த பழம் அந்த ஆசை நிறைவேற சந்தர்ப்பம் கொடுத்தது. வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் பர்த்ருஹரியை நெருங்கி சிசுருஷைகள் செய்வாள். எப்படி யாவது ராஜாவின் மனதில் இடம்பிடித்து அவன் சிம்மாசனத்தில் ஒட்டிக் கொள்ள திட்டம். நல்ல சமயத்தை நழுவ விடலாமா?பர்த்ருஹரியிடம் பழத்தோடு சென்றாள் .
''என்ன விஷயம் எதற்கு என்னிடம் வந்தாய்?''
''மஹாராஜா, உங்கள் மேல் எவ்வளவு மதிப்பும் மரியாதையும் ப்ரேமையும் கொண்டவள் என்று நிரூபிக்க இன்று எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது?
''என்ன அது ?''
''இந்தாருங்கள், இது ஒரு தேவலோக பழம், கற்பக விருக்ஷம் தந்தது. நீங்கள் மனதில் நினைத்ததெல்லாம் இதய உண்டால் நிறை வேறும், நீண்ட ஆயுளும் சம்பவிக்கும்''
பழத்தைப் பார்த்ததுமே பர்த்ருஹரி திடுக் கிட்டான். வெளியே காட்டிக் கொள்ளா மல் பேசினான்;
''ஓஹோ. இதை யார் உனக்கு கொடுத்தது?''
''இது எனக்கு தானாகவே பூஜையில் கிடைத்தது?''
பர்த்ருஹரிக்கு புரிந்துவிட்டது. தலை சுற்றி யது. கோபம், அருவருப்பு, வெறுப்பு, ஏமாற்றம் எல்லாமே அவன் மனதை நிரப்பியது. ராணியை கூப்பிட்டு அனுப்பினான்''
அநங்க சேனையை விசாரிக்கும் விதத்தில் விசாரித்ததில், மஹிபாலன், தாதி என்று அனைவரும் உண்மை யைக் கக்கினார்கள். .
அநங்க சேனை, மஹிபாலன் இருவரும் தலையை இழந்தார்கள். மனைவியின் துரோ கத்தை தாங்க முடியாத பர்த்ருஹரி, அரசாங் கம், ஆட்சி, ராஜ்யம் எல்லாவற்றையும் வெறுத் தான். துறவறம் பூண்டான். தனது தம்பி விக்ர மாதித்தியனை ராஜாவாக் கினான். (விக்ர மாதித்தன் வேதாளம் கதை இன்னொருநாள் படிக்கலாம்)
பர்த்ருஹரி துறவியாகி அவன் வாயிலிருந்து நிறைய நீதி வாக்கியங்கள் கவிதையாக வந்தன. அவையே சுபாஷிதம், இதில் நீதி சதகம், சிருங்கார சதகம், வைராக்கிய சதகம் என்று முன்னூறு ஸ்லோகங்கள். அதில் வைராக்ய சதகம் தனியாக தந்து கொண்டிருக்கிறேன்.
பர்த்ருஹரி தெற்கே வருகிறான், தமிழ் பேச எழுத கற்று, பட்டினத்தார் சிஷ்யனாகிறான், திருவிடைமருதூர் ஆலய வாசலில் அமர் கிறான். கையில் ஒரு திருவோடு, அருகே ஒரு நாய். அவன் மனைவி அநங்கசேனா தான் அடுத்த பிறவியில் நாயாக பர்த்ருஹரியின் பின்னே அலைகிறாள்.
ஒரு நாள் ஒரு ஆண்டி பட்டினத்தாரிடம் யாசகம் கேட்க அவர் ''நானே ஒரு ஆண்டி, உனக்கு கொடுக்க என்னிடம் என்ன இருக் கிறது, நேராக அடுத்த வாசலுக்கு போ அங்கே ஒரு செல்வந்த குடும்பஸ்தன் அமர்ந் திருப்பார் அவரிடம் கேள் '' என்று அனுப்ப அவன் பத்ரகிரியாரிடம் வந்து யாசகம் கேட்கிறான்.
''அப்பனே நானும் உன்னைபோல ஒரு பிச்சைக்காரன் தான். இங்கேயே இரு எனக்கு கிடைப்பதை உனக்கு தருகிறேன்''
''இல்லையே சுவாமி, அடுத்த வாசலில் இருக்கும் சாமியார் நீங்கள் ஒரு செல்வந்தர் என்று சொன்னாரே ''
''என்னையா என் குருநாதர் பட்டினத்தார் செல்வந்தன் என்று சொன்னார்.? என்ன காரணம்?
பத்ரகிரி யோசித்தார். ஓஹோ என்னிடம் இந்த உலகத்தில் இணைந்திருப்பது இந்த திருவோடும் என்னைத் தொடர்ந்து வரும் இந்த நாயும் தானே. இப்போதே அந்த செல்வங்களையும் விட்டு விலகுகிறேன்''
பத்திரகிரியார் திருவோட்டை வீசி நாயின் மீது எறிகிறார். அது நாயின் மண்டையில் பட்டு நாயும் இறக்கிறது. திருவோடும் உடைந்து சில்லாகி பத்திரகிரியார் ஒரு வித பந்தமும் இல்லாமல் சுதந்திரமாகிறார்.
இதுவரை பத்திரகிரியார் பற்றி படிக்காத வாசகர்களுக்கு மேலே சொன்னது முன்கதைச் சுருக்கம்: இனி சில பத்திரகிரியார் ரெண்டடி புலம்பல்களை ருசிப்போம் :
வம்படிக்கும் மாதருடன் வாழ்ந்தாலும் மன்னுபுளி
யம்பழமும் ஓடும்போல் ஆவதினி எக்காலம்?
மாதரின்றி உலக வாழ்வேது? இருந்தும் இந்த சேர்க்கை பழுத்த புளியம்பழம் ஒடோடு ஓட் டாமல் தனித்திருப் பது போல் வாழ்வது எப்போதோ?
பற்றற்று நீரில் படர் தாமரை இலைபோல்
சுற்றத்தை நீக்கிமனம் தூர நிற்பது எக்காலம்?
தாமரை இலைத் தண்ணீரைப் போல உற்றார் சுற்றம் எதனுடனும் ஒட்டாமல் தூர விலகி மனம் தெளிந்து உலகில் வாழ்வது எப்போது?
கூடிப் பிரிந்துவிட்ட கொம்பனையைக் காணாமல்
தேடித் தவிப்பவன் போல் சிந்தை வைப்பது எக்காலம்?
பல காலம் கூட இருந்து அனுபவித்து திடீரென்று பிரிந்த துணைவனைத் தேடுவது போல் உன்னைத்தேடுவது, உன் மேல் சிந்தனையை தேக்குவது எப்போது ?
யவ்வனத்தின் மோகம் எப்படி யுண்டப்படிபோல்
கவ்வனத் தியானம் கருத்து வைப்பது எக்காலம்?
யவ்வன மோகம் நிரந்தரம் அல்ல. அப்படியிருந்தும் அதன் மேல் வைக்கும் அன்பு, ஆசை, போல் உன்மேல் இடைவிடாது தியானம் செய்யும் எண்ணம் வருவது எப்போது ?
கண்ணால் அருவி கசிந்து முத்துப் போல் உதிரச்
சொன்ன பரம்பொருளை எண்ணுவது எக்காலம்?
ஆஹா, அந்த ஆனந்த எண்ணத்தை நினைக்கும்போதே கண்களில் ஆறாக நீர் பெருகி கண்ணீர்த்துளிகள் முத்துக்கள் போல் சிதறுமாமே. அந்த ஆனந்தத்தை துய்க்க உன்னை மனம் எண்ணுவது எப்போது?)
அகம் மிகவுருக அன்புருக என்புருகப்
போகஅனுபூதி பொருந்துவதும் எக்காலம்?
உள்ளம் நெகிழ்ந்து, வாடி, வருந்தி, இளகி, உருகி அன்பு ப்ரளயமாகி பெறுகி உன் ஆனந்த அருள் என் மனதில் சேர்வது எக்காலம்?
நீரில் குமிழிபோல் நிலையற்ற வாழ்வை விட்டு நின்
பேரின்பக் கருணை வெள்ளம் பெருக்கெடுப்பது எக்காலம்? கிறுகிறுவென்று சுற்றிக்கொண்டு பல்வேறு வர்ணங்களைக்காட்டும் நீர் மேல் குமிழி கண் மூடி திறந்து பார்ப்பதற்குள் உடைந்து சிதைந்து காணாமல் போகிறதே, அது போல் தான் சாஸ்வதம், நிரந்தரம் என்று நாம் நினைக்கும் இந்த உலக வாழ்க்கையும். இதை மனதில் கொண்டு என்றும் நிரந்தரமான உனது நினைவில் கிடைக்கும் பேரின்பத்தை, உன் கருணையை மனதில் நிறுத்திக்கொண்டு ஆனந்த வாழ்வு வாழ்வது எப்போது?
அன்பை உருக்கி அறிவை அதன் மேல்புகட்டித்
துன்ப வலைப்பாசத் தொடக்கறுப்பது எக்காலம்?
இந்த உலக பந்த பாசத்தை அடியோடு அறுக்க உந்தன் மேல் அன்பை செலுத்தி, மனதை உருக்கி, என் அனைத்தையும் உன் மேல் சமர்ப்பித்து இந்த உலக மாய வலையின் சீக்காளிலிருந்து மீள்வது எப்போது?
கருவின் வழி அறிந்து கருத்தைச் செலுத்தாமல்
அருவி விழிசொரிய அன்பு வைப்பது எக்காலம்?
உடல் மேல் கவனம் வேண்டாமே, எண்ணம் சிதறட்டுமே, கண்களில் பக்தியால் அருவி கொட்டட்டுமே. உன் மேல் தீராத அன்பு என்னை உலக மாய ஈர்ப்பிலிருந்து நீக்கச் செய்வது எப்போது ?
தெள்ளத் தெளிய தெளிந்த சிவானந்தத் தேன்
பொழியப் பொழிய மனம் பூண்டிருப்பது எக்காலம்?
(இது எனக்கே புரிகிறதே, உங்களுக்கு புரியாதா?)
தக்கும்வகைக்கு ஓர்பொருளும் சாராம லேநினைவில்
பக்குவம்வந்துன் அருளைப் பார்த்திருப்பது எக்காலம்?
இந்த உலகில் எது நிரந்தரமாக தங்கும், நிலைத்திருக்கும் என அறிந்து பரமனே உன் நினைவே என் மூச்சாகும் பக்குவம் வந்து உன் அருளை பெறுவது எப்போது?
கள்ளக் கருத்தை எல்லாம் கட்டோடு வேரறுத்து இங்கு
உள்ளக் கருத்தை உணர்ந்திருப்பது எக்காலம்?
எத்தனையோ எண்ணங்கள் என் மனதில் ஓயாத கடல் அலையாக ஒன்றன்பின் ஒன்றாக எழும்புகிறதே, அதை எல்லாம் அறுத்தெறிந்து,உன் நினைவே என் நெஞ்சில் நீங்காமல் இருக்க முடியுமா? அது எப்போது?
அட்டகாசம் செலுத்தும் அவத்தைச் சடலத்துடனே
பட்டபாடு அத்தனையும் பகுத்தறிவது எக்காலம்?
அடடா, இந்த உடம்பு என்னமாய் என்னை அதன் போக்கில் ஆட்டிவைக்கிறது, அலைக்கழிக்கிறது, அவஸ்தை பட வைக்கிறது. இதிலிருந்து விடுபட்டு உன்னை அறிவது எப்போது?

No comments:

Post a Comment