Tuesday, May 11, 2021

Pasurams on Triplicane

திருவல்லிக்கேணி திவ்யதேசம் பற்றி 2 திருமங்கையார் பாசுரங்கள் கீழே:
விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் * வேழமும் பாகனும் வீழ*
செற்றவன் தன்னை புரமெரி செய்த* சிவனுறு துயர்களை தேவை*
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு* பார்த்தன் தன் தேர்முன் நின்றானை*
சிற்றவை பணியால் முடி துறந்தானைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே
ஒரு நான்கடிகள் கொண்ட பாசுரத்தில் எத்தனைத் தகவல்கள் தருகிறார், பாருங்கள்:
விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் -
வில் விளையாட்டின் போது, தன்னை அழிக்க கம்சன் நடத்திய யாகத்தையும், கம்சனையும், மலையை ஒத்த பலம் வாய்ந்த அவனது மல்யுத்த வீரர்களையும்
வேழமும் பாகனும் வீழ* செற்றவன் தன்னை -
கம்சனினின் அரண்மனையின் வாயிலில், கண்ணனை மிதித்தழிக்கக் காத்திருந்த குவலயாபீடம் என்ற பெருயானையையும் அதன் பாகனையும் வீழ்த்தி அழித்த கண்ணபிரானும்
புரமெரி செய்த* சிவனுறு துயர்களை தேவை* பற்றலர் -
திரிபுர அசுரர்களை தனது புன்னகையால் வீழ்த்திய சிவபெருமான், ஒரு சமயம், கோபத்தில் பிரம்மனின் ஐந்தாவது தலையை கிள்ளி எடுக்க, அத்தலையின் ஓடு சிவனின் உள்ளங்கையில் ஒட்டிக் கொண்டதால், (திருமகளை அவ்வோட்டில் பிட்சை அளிக்க வைத்து) சிவன் அடைந்த துயரங்களிலிருந்து விமோசனம் அளித்த (திருக்கரம்பனூர்) உத்தமனும்
வீயக் கோல் கையில் கொண்டு* பார்த்தன் தன் தேர்முன் நின்றானை -
மகாபாரத யுத்தத்தில் பாண்டவர் பக்கம் இருந்து, தன் திருக்கையில் சாட்டை ஏந்தி, அர்ஜுனனுக்கு தேரோட்டியாக களத்தில் முன் நின்று, தன் மார்பிலும் முகத்திலும் பகைவரின் அம்புகளை ஏற்று அர்ஜுனனைக் காத்த ஸ்ரீகிருஷ்ணனும்
சிற்றவை பணியால் முடி துறந்தானைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே* -
சிற்றன்னை கைகேயி இட்ட கட்டளைக்குப் பணிந்து, ராஜ்ஜியத்தையும், மணிமுடியையும் விருப்பத்துடன் துறந்த ஸ்ரீராமனும் ஆன ஒப்பில்லா எம்பெருமானை திருவல்லிக்கேணியில் நான் கண்டேனே !
மீனமர் பொய்கைநாள் மலர் கொய்வான்* வேட்கையினோடு சென்றிழிந்த*
கானமர் வேழம் கையெடுத்தலறக்* கரா அதன் காலினைக் கதுவ*
ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து* சென்று நின்று ஆழி தொட்டானை,
தேனமர் சோலை மாட மாமயிலைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே*
பெருமாளின் மலர்ச்சேவைக்கு வேண்டி, மீன்கள் துள்ளி விளையாடும் தடாகத்திலிருந்து தினம் தாமரை மலர்களை பறித்து வந்த, காட்டில் உற்சாகமாக சுற்றித் திரியும், கஜேந்திரன் என்ற யானையின் காலை, ஒரு சமயம் முதலையொன்று கவ்வ, கஜேந்திரன் தன் தும்பிக்கையை உயர்த்தி, "ஆதிமூலமே" என்று பெருங்குரலெடுத்து அலற, விரைந்தோடி வந்த எம்பெருமான், தன் சக்ராயுதத்தை வீசி முதலையை அழித்து, யானையை துயரிலிருந்துக் காத்தான்.
அடியவர் துயர் தீர்க்கும் அப்பேர்ப்பட்ட வரதப்பெருமானை, தேன் மலர்கள் பூத்துக் குலுங்கும் சோலைகள் சூழ்ந்த, மாடங்கள் மிகு மாமயிலைக்கு அருகில் உள்ள, திருவல்லிக்கேணியில் நான் கண்டேனே !
'ஆழி தொட்டானை' என்பதற்கு 'யானைக்கு பாதிப்பு இல்லா வண்ணம், முதலை மட்டும் அழியும்படியாக திருச்சக்கரத்தை வீசிய எம்பெருமான்' என்று பொருள்
 முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சாரியார், தனது உபன்யாசத்தின் போது கஜேந்திரனைக் காக்க பெருமாள் கொண்ட அவசரத்தை சுவைபடக் கூறுவார் ! 'ஆதிமூலமே' என்ற அலறலைக் கேட்ட மாத்திரத்தில், வைகுண்டத்தில் பிராட்டியுடன் அளவளாவிக் கொண்டிருந்த பெருமாள் அவசர அவசரமாகக் கிளம்ப யத்தனித்தபோது, அவரது உத்தரீயம் (மேல் துணி) பிராட்டியின் கையில் சிக்கிக் கொள்ள, பெருமாளின் எண்ணம் புரிந்த கருடன் அவரை விட வேகமாக பறந்து வந்து (பெருமாள் கருடன் மேல் ஏறி பயணம் மேற்கொள்ள வேண்டி) அவர் முன் நிற்க, சக்ராயுதமானது, பெருமாள் கருடன் மேலேறி பயணத்தைத் தொடங்கி விட்டபடியால், தானாகவே பறந்து வந்து அவரது வலது திருக்கரத்தில் சரியாக அமர்ந்து கொள்ள, பகவான் அதிவிரைவில் சென்று, கஜேந்திரனுக்கு அபயம் அளித்ததாக, முக்கூரார் அழகாக பாசுர விளக்கம் கூறுவார் !
தன்னை வேண்டி அழைத்த அடியவரைக் காக்க விரைந்த பெருமாளுக்கு, கருடனின் உதவியோ, சக்கரத்தின் தேவையோ தோன்றவே இல்லை ! அபயம் அளிப்பது ஒன்றே குறி ! அப்பேர்ப்பட்ட கருணாமூர்த்தி எம்பெருமான் ஆவான் ! கீழே விழுந்து அடிபட்டு அழும் குழந்தையை, கையில் ஏந்தி ஆசுவாசப்படுத்தி ஆறுதல் சொல்ல எப்படி ஒரு தந்தை அவசரமாக ஓடி வருவானோ, அது போலவே, எம்பெருமான் ஓடோடி வந்து, தன் அடியாரின் துயர் தீர்த்து அபயம் அளிப்பான்.
ஸ்ரீவைஷ்ணவிஸம் முக நூலில் பதிவு செய்தவர் திருமதி நளினி கோபாலன் அவர்கள்.

No comments:

Post a Comment