அத்யாத்ம ராமாயணம்
பாலகாண்டம்- – அத்யாயம் 1
ய: ப்ருத்வீபர வாரணாய த்விஜை: ஸம்ப்ரார்த்தித: சின்மய:
ஸஞ்ஜாத: ப்ருத்வீதலே ரவிகுலே மாயாமனுஷ்யோ அவ்யய:
நிஸ்சக்ரம் ஹதராக்ஷஸ: புனரகாத் ப்ரஹ்மத்வம் ஆத்யம் ஸ்திராம்
கீர்த்திம் பாபஹராம் விதாய ஜகதாம் தம் ஜானகீசம் பஜே
எந்த சின்மயமான அழிவற்ற பரப்ரம்மம் உலகில் பாபச்சுமையை குறைக்க தேவர்களால் ப்ரார்த்திக்கப்பட்டு ,மாயாமானுஷ ரூபம் தாங்கி பூமியில் சூர்யவம்சத்தில் அவதரித்ததோ, எவர் ராக்ஷசர்களை முழுதும் அழித்து,உலகில் பாபத்தை அழிக்கும் கீர்த்தியை நிலைநாட்டிப் பிறகு தன் ஸ்வரூபத்தை அடைந்தாரோ அந்த ஜானகி மணாளனை வணங்குகிறேன்.
விச்வோத்பவ ஸ்திதிலயாதிஷு ஹேதும் ஏகம்
மாயாச்ரயம் விகதமாயம் அசிந்த்ய மூர்த்திம்
ஆனந்த ஸாந்தரம் அமலம் நிஜபோதரூபம்
சீதாபதிம் விதிததத்வம் அஹம் நமாமி
எவர் உலக சிருஷ்டி, ரக்ஷணம் , சம்ஹாரம் இவற்றுக்கு ஆதிகாரணமோ, மாயையை கைக்கொண்டாலும் அதன் வசப்படாதவரோ., சிந்தைக்கெட்டாத உருவுடையவரோ, எவர் ஆனந்தத்தின் மொத்த வடிவாகவும் ஞானஸ்வரூபமாகவும் உள்ளாரோ அந்த சீதாபதியை நமஸ்கரிக்கிறேன்.
சகல புராணங்களின் அங்கீகாரம் பெற்றதான இந்த அத்யாத்மராமாயணத்தை யார் முழு மனதுடன் படிக்கவும் கேட்கவும் செய்கிறார்களோ அவர்கள் சகல பாபத்தினின்றும் விடுபட்டு ஹரியின் சரணாரவிந்தத்தை அடைவார்கள்.
முக்தியை விரும்புவோர் இதை கட்டாயமாக படிக்க வேண்டும்.,இதை தினமும் கேட்போர் அனேக கோடி பசுக்களை தானம் செய்த பலனை அடைவார்கள்.
அத்யாத்ம ராமாயணம் என்னும் கங்கை சிவனாகிய மலையில் உற்பத்தியாகி ராமனாகிய சமுத்திரத்தில் சேர்ந்து மூவுலகையும் புனிதப்படுத்துகிறது
ஒரு சமயம் கைலாஸ பர்வதத்தில் ஆயிரம் சூரியனைப்போல் ஜ்வலிக்கும் சிம்ஹாசனத்தில் முக்கண்ணனாகிய சிவன் அமர்ந்திருந்தார். அப்போது அவர் இடது பக்கத்தில் உள்ள பார்வதி தேவியால், உலகமக்களின் க்ஷேமத்தின் பொருட்டு இவ்வாறு வினவப்பட்டார் .
"பரப்ரம்மமாகிய பரமபுருஷனைப் பற்றிய உண்மையை விளக்குவீராக. பக்தி, வைராக்கியம், இவை மூலம் எவ்வாறு ஆத்மஞானம் அடைய முடியும்? பக்தி என்பது முக்திக்கு சுலபமான வழி என்றும், அதற்கு பரப்ரம்மஸ்வரூபமாகிய ராமனை அல்லும் பகலும் வழிபட வேண்டும் என்றும் அறியப்படுகிறது.
ஆயினும் ராமன் மாயைக்குட்பட்டு ஆத்மஞானத்தை வசிஷ்டர் மூலமாகவே அடைந்தான் என்றும் கூறப்படுகிறது. மேலும் அவன் பரபரம்மஸ்வரூபமாக இருந்தால் சீதையைப் பிரிந்து ஒரு சாதாரணமான மனிதன் போல வருந்துவானேன்? இதுதான் என் சந்தேகம்" என்றாள்.
இதைக் கேட்ட மஹாதேவர் மிகவும் மகிழ்ந்தவராக ராமாவதாரத்தைப் பற்றிய உண்மையைக் கூற ஆரம்பித்தார்.
அத்யாத்ம ராமாயணம் - பாலகாண்டம்
மகாதேவர் கூறியது.
ஸ்ரீராமன் ஆதிகாரணனும், ஆதிபுருஷனுமான பரப்ரும்மமே ஆவார். அவர் ஆனந்த ஸ்வரூபி. மாயையைக் கடந்தவர். மாயையால் உலகைப் படைத்து அதைக் கடந்து நிற்பவர்.
ஆகாயத்தைப் போல உலகத்தில் உள்ள எல்லாவற்றிற்கும் உள்ளும் புறமும் வியாபித்து இருப்பவர். இதை அறியாதவர்கள் ராமனை ஒரு மனித உருவாகக் காண்கிறார்கள். அதனால் அவர்கள் சம்சாரச் சுழலில் சிக்கி அவதிப்படுகிறார்கள்.
( இதையே கண்ணன் கீதையில் அவஜானந்தி மாம் மூடா: மானுஷீம் தனும் ஆச்ரிதாம் – எண்ணி மூடர்கள் மனிதஉருக் கொண்டவன் என்று நினைக்கிறார்கள், என்கிறான்)
எவ்வாறு சூரியன் இருக்கையில் இருள் இருக்க முடியாதோ அதே போல ராமன் இருக்கும் இடத்தில் அறியாமை என்பது இல்லை. அவன் எல்லோருடைய இதயத்திலும் உள்ளான்
ஆனாலும் தன் கழுத்தில் உள்ள ஆரத்தையே அறியாதவன் போல மூடர்கள் அவனை அறிவதில்லை. யாராவது அது உன் கழுத்திலேயே இருக்கிறதே என்று கூறுவதைப்போல சாஸ்திரங்களும் குருவும் நமக்கு அதை உணர்த்துகிறார்கள்.
( இது தற்காலத்தில் தன் மூக்குக்கண்ணாடியை கழுத்தில் தொங்கவிட்டுக் கொண்டு அதைத் தேடுவதை ஒக்கும். )
இதக் கூறிவிட்டு மகாதேவர் அதனால் ராமன் மாயைக்குட்பட்டு மனிதனைப் போல் நடந்து கொள்ளவில்லை என்று கூறி சீதையும் ராமனும் ஹனுமனுக்கு உபதேசித்ததை தெரிவிக்கிறார்.
இந்த ஸ்ரீராமஹ்ருதயம் எனப்படும் ஸ்லோகங்களை மூன்று முறை ஹனுமான் முன்பு ஜபித்தால் எல்லா இச்சைகளும் நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது. இதை அடுத்ததாகக் காண்போம்.
No comments:
Post a Comment