Friday, April 30, 2021

Uraiyoor

கோழியும் கூடலும் கோயில் கொண்ட
கோவல ரேயொப்பர் குன்றமன்ன,
பாழியும் தோளுமோர் நான்கு டையர்
பண்டிவர் தம்மையும் கண்டறியோம்,
வாழிய ரோவிலர் வண்ண மெண்னில் 
மாகடல் போன்றுளர் கையில் வெய்ய 
ஆழியொன் றேந்தியோர் சங்கு பற்றி 
அச்சோ ஒருவர் அழகியவா!

திருக்கோழியிலும் – உறையூர் – கூடலழகரிலும் கோவிலில் எழுந்தருளியிருகும் பெருமானப் போன்ற தோற்றமும், மலையை ஒத்த நான்குதோள்களின் வலிமையையும் கொண்டிருக்கும் இவரை முன்னர் கண்டதில்லை. கடலொப்ப நீல நிறமும், கைகளில் சக்கரமும் சங்கும் தரித்து நிற்கும் பெருமானின் அழகை என்னவென்பேன்.

2. உறையூர் – திருப்பாணாழ்வார் அவதார தலம். 
மூலவர் அழகிய மணவாளப் பெருமாள். வடக்கு நோக்கி நின்ற திருக்கோலம். வடக்கே திரு முக மண்டலம்,

தாயார் பெருமாளுக்குப் பக்கத்திலேயே வாசலட்சுமித் தாயார் – கமலவல்லி நாச்சியார். வீற்றிருந்த திருக்கோலம். வடக்கே திரு முக மண்டலம், திருமணத் தருண திருக்கோலம்.

தீர்த்தம் – கல்யாண தீர்த்தம். சூரிய புஷ்கரிணி, குடமுருட்டி நதி.
கல்யாண விமானம்

விசேஷங்கள் – சோழ மன்னின் திருமகளான கமலவல்லி நாச்சியார் ஸ்ரீ ரங்கனாதன் மீது காதல் கொண்டு விரதம் இருக்க, அழகிய மணவாளன் இங்கு வந்து திருமணம் புரிந்து கொண்டதாக ஸ்தல புராணம்.
பங்குனி உத்திரத்திற்கு முதல் நாள் நம்பெருமான் ஸ்ரீரங்கத்திலிருந்து இங்கு எழுந்தருளி கல்யாண உத்சவம் வருடந்தோறும் நடைபெறுகிறது.

மங்களாசாஸனம் - திருமங்கையாழ்வார் – 1762
குலசேகராழ்வார் – 667 - 2 பாசுரங்கள்

101. திருக்கூடல் – கூடலழகர் ஸந்நிதி மதுரை
மூலவர் – கூடலழகர் . வீற்றிருந்த திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம். 
தாயார் – மதுரவல்லி- வீற்றிருந்த திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம். இவருக்கு வகுளவல்லி, வரகுணவல்லி, மரகதவல்லி, என்ற பெயர்களும் உண்டு

தீர்த்தம் – ஹேம புஷ்கரிணி, சக்ர தீர்த்தம், க்ருதமாலா நதி, வைகை நதி.
விமானம் – அஷ்டாங்க விமானம்.

பெரியாழ்வார் பல்லாண்டு பாடிய தலம். மேல் தளத்திலிருந்து அஷ்டாங்க விமானத்தைப் பார்க்கலாம். இங்கு ஒரு தட்டில் பள்ளி கொண்ட பெருமானை சயன திருக்கோலத்திலும், சூரிய நாராயணனை நின்ற திருக்கோலத்திலும் காணலாம். இந்த ஒரு வைணவ ஆலயத்தில் மட்டுமே நவக்ரஹ பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

ஒரு சமயம் அதிகமாக மழை பெய்த போது பக்தர்களின் பிரார்த்தனைக்கு இணங்க பகவான் நான்கு மேகங்களை மாடங்களைப் போல ஒன்றாக்கி மழையைத் தடுத்ததால் இத்தலத்திற்கு திருக்கூடல் என்று பெயர் ஏற்பட்டதாக ஐதீகம்.

மங்களாசாஸனம் - திருமங்கையாழ்வார் – 1762
திருமழிசையாழ்வார் – 2420 - 2 பாசுரங்கள்

19. திரு நாகை - நாகப்பட்டினம்
மூலவர் – நீலமேகப் பெருமாள் – கதாயுதத்துடன் நின்ற திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம். 

உத்ஸவர் – ஸெளந்தர்யராஜன்
தாயார் – ஸெளந்தர்யவல்லி, உத்வசத் தாயார் கஜலக்ஷ்மியாகக் காட்சியளிக்கிறார்.
தீர்த்தம்- ஸாரபுஷ்கரிணி. 
விமானம் – ஸெள்ந்தர்ய விமானம்.

வீற்றிருந்த திருக்கோலத்தில் கோவிந்தராஜப் பெருமானுக்கும், சயனத் திருக்கோலத்தில் ரங்க நாதனுக்கும் தனி ஸந்நிதிகள் உண்டு. இங்கு மிக அபூர்வமான வெண்கலச் சிலை உள்ளது. ஒரு கை ப்ரஹ்லாதனின் தலையைத் தொட்டும், மற்றொறு கை அபய ஹஸ்தமாகவும், மற்ற கரங்கள் ஹிரண்ய வதம் செய்கின்றன. த்ருவனுக்கு ஸேவை செய்த தலம். 
மங்களாசாஸனம் - திருமங்கையாழ்வார் – 1758-67 – 10 பாசுரஙள்.

No comments:

Post a Comment