ஶ்ரீசித்சக்தி மஹிமை:
ஶ்ரீகாமாக்ஷி நாம மஹிமை:
"யாவத்கடாக்ஷ ரஜநீ ஸமயாகமஸ்தே
காமாக்ஷி தாவத் அசிராந்நமதாம் நராணாம் |
ஆவிர்பவத்யம்ருததீதிதி பிம்பமம்ப
ஸம்வின்மயம் ஹிருதய பூர்வ கிரீந்திர ச்ருங்கே ||"
-- ஶ்ரீமூகபஞ்சசதி கடாக்ஷ சதகம்
"எதுவரை அம்பாளின் கடாக்ஷம் என்கிற இரவு வேளை வருகிறதோ, அதுவரை இடைவிடாது நமஸ்காரம் பண்ணிக் கொண்டு இருக்கக் கூடிய அந்த மனிதனுக்கு, அவனுடைய ஹிருதயமாகிய மலைச் சிகரத்தில் ஸம்விதானந்த ஞானம் என்கிற அம்ருதத்தை கொட்டும் ஞானம் என்கிற சந்திரன் உதயமாகிறது".
பாலா, பஞ்சததசீ, ஷோடஸி எனும்படியான மஹாமந்த்ராதிகளை குருமுகமாக ஸத்குருவிடத்தினில் குரூபதேசத்தை வாங்கிக்கொண்டு ஜபிக்கும்படியான ஒரு ஸௌபாக்யம் ஏதோ ஒரு சில மஹாத்மாக்களுக்குத் தான் கிடைக்கிறது.
ஶ்ரீவித்யா மஹாமந்த்ரங்கள் எல்லாமே கேவல ஞானத்தை மட்டும் அனுக்ரஹிக்கக்கூடியவை. லௌகீக ஸமாச்சாரங்களுக்கு அப்பாற்பட்டு விளங்குபவை. பாலை முதற்கொண்ட மஹாவித்யைகள் தேவர்களுக்கும் துர்லபமானவை. அனைவராலும் இத்தகைய மஹாவித்யைகளை உபாஸிக்கக்கூடுமா!? என்றால் ஸாத்யம் இல்லை என்றே கூறலாம்!!
மஹாமந்த்ரங்களை ஸத்குருநாதர் மூலமாகத் தெரிந்துகொண்டு, ப்ரஹ்மவித்யா ப்ரதிபாத்மகமாக எங்ஙனம் அந்த வித்யை விளங்குகின்றது என்பதையும், காமேச்வரியின் ஸ்வரூபத்தை கண்ணாடி போல் எப்படி அந்த அக்ஷரங்கள் காட்டுகின்றது என்பதையும் தெளிவாக விளக்கக்கூடிய குருநாதர் மூலம் வித்யோபாஸனையை க்ரஹித்துக்கொண்டு உபாஸனையில் ஈடுபட்டு பரதேவதா ஸாக்ஷாத்காரத்தை அடையக்கூடிய ஸௌபாக்யம் மிகச்சிலருக்கே கிடைக்கிறது.
"மோக்ஷைக ஹேது வித்யா ஶ்ரீவித்யா ந: ஸம்சய:" எனும்படி முக்தி அடைவதற்கு ஶ்ரீவித்யோபாஸனையே சிறந்த வழி அதில் ஸம்சயமில்லை. எனில், ஸத்குருநாதர் கிடைக்காத காலத்து அன்றி தவறான இடத்தில் சிக்கிக்கொண்டு வித்யையே பாதியில் விட்டு வரும்படியான சூழலில் அனேக மக்களைக் காண்கிறோம்!!
அதுமட்டுமன்றி உபாஸனா விஷயங்கள் தெரியாத பாமரர்கள் உய்வதற்கு என்ன வழி எனும் கேள்வியையும் நாம் செவி மடுக்கிறோம்!!?
லலிதோபாக்யனத்தில் ஹயக்ரீவ மஹாவிஷ்ணு அகஸத்யரிடம் "கும்பஸம்பவ!! பாமரர்களும் உய்யும் வழி சொல்கிறேன் கேள்! பராசக்தியின் பாதகமலங்களை பிடித்துக்கொள்வதே அது!" என்று கூறியபடியால் மந்த்ர தந்த்ராதி உபாஸனைகளற்ற பக்தி ஒன்றினாலேயுமே அடையந்தகுந்தவளே ஶ்ரீராஜராஜேச்வரியான அம்பாள். அதில் ஸம்சயமில்லை.
ஶ்ரீசக்ர நவாவரண பூஜை, மஹாயாகக்கரம், மஹாஷோடஸி மந்த்ர தீக்ஷை, பூர்ணாபிஷேகம் போன்ற மஹநீயமான விஷயங்கள் எல்லோருக்குமானது அன்று. கடும் ஆசார அனுஷ்டானங்களுடன் தன் வாழ்க்கையை பரதேவதைக்காகவே அர்ப்பணித்த ஶ்ரீவித்யோபாஸக ச்ரேஷ்டகளுக்கானதே!!
இவைகள் நமக்குக் கிடைக்கவில்லயே என்ற ஏக்கம் அவசியமில்லை. இவைகள் எல்லோருக்குமானதும் கிடையாது. மந்த்ர தந்த்ர யந்த்ர பூஜைகளற்ற ஸ்தோத்ர பாராயணங்களாலும் பரதேவதையை ப்ரீதி செய்ய இயலும்!!
தந்த்ரராஜம் எனும் மஹாதந்த்ரம் கூற்றின் படி "உபாஸனா விஷயங்களோ குண்டலினி ப்ரயோகங்களோ தெரியாதோரும் ஸங்கீதம், ந்ருத்யம், ச்ரவணம் போன்ற உபாயங்களால் ஶ்ரீலலிதா பரமேச்வரியின் பாதாரவிந்தங்களை அடையமுடியும்" என்றபடியால் பரதேவதா ஸம்பந்தமான மஹான்கள் இயற்றிய மூகபஞ்சசதி, அபிராமி அந்தாதி, அபயாம்பிகை சதகம், ஸௌந்தர்யலஹரி முதலிய க்ரந்த பாராயணங்களை பக்தியுடன் செய்தாலே பராம்பாளின் கடாக்ஷத்தை ஸுலபமாக அடையலாம்!!
இதைத் தவிர்த்து ஆன்லைனில் உபாஸனை, ஶ்ரீவித்யா வகுப்புக்கள், முதலியவற்றால் கேடுகள் விளையுமேயன்றி அம்பாளை உணர முடியாது. வகுப்புக்குப் போய் கற்றுக்கொள்ளக்கூடிய விஷயங்கள் அல்ல ஶ்ரீவித்யை. அம்பாளே குருநாதராக வந்து கற்றுக்கொடுக்கக்கூடிய ராஜமஹாவித்யை. ஆன்லைனில் தீக்ஷையும், ஸ்பெஷல் க்ளாஸ் மூலமாக, கான்பரன்ஸிங் மூலமாகவெல்லாம் கற்றுக்கொடுக்க இது ஒன்றும் லௌகீக ஸமாசாரம் அல்ல!!
மூகபஞ்சசதியும், ஸௌந்தர்யலஹரியுமே கைவல்ய மோக்ஷத்தை கொடுக்கும் வல்லமை உண்டு!! இவையெல்லாவற்றையும் விட மிகச்சுலபமான மார்க்கம் தேவியின் மஹாமந்த்ரபரபான "காமாக்ஷி" எனும் நாமாவை மறுபடி மறுபடி கூறுவதே!!
ஶ்ரீபரமேச்வரன் ஶ்ரீமஹாவிஷ்ணுவிற்கும், ஶ்ரீநாராயணர் ஶ்ரீமஹாலக்ஷ்மிக்கும் உபதேசித்த "காமாக்ஷி" நாம மஹிமைமை ஸௌபாக்யலக்ஷ்மி கல்பத்திலும், "காமாக்ஷி" நாமத்தின் அத்புதமான மஹிமையை ஶ்ரீவித்யா காண்டம் மார்க்கண்டேய புராணத்திலும், "ஶ்ரீகாஞ்சி மஹிமை" ஶ்ரீலலிதோபாக்யானத்தில் காமாக்ஷி நாம ஸ்மரணையினால் ஏற்படக்கூடிய ஸௌபாக்யத்தையும் காணலாம்!!
த்ரிமூர்த்திகளாலும், ஸமஸ்த தேவ ஸமூஹங்களாலும், ஸப்தருஷிகளாலும் உபாஸிக்கப்படும் நாமா "காமாக்ஷி" எனும் ஶ்ரீலலிதேச்வரியின் நாமா.
ஸமயமார்க்கத்தில் மிகவுயர்ந்த மஹோட்யாண பீடத்தினில் "காமாக்ஷி பராபட்டாரிகையாக" வீற்றிருக்கும் அம்பாளை ஸமஸ்த தேவ ஸமூஹங்கள் உபாஸிக்கின்றனர்.
காம், கீம், கூம், கைம், கௌம், க: எனும்படியான அக்ஷரங்களால் ந்யாஸாதிகளைச் செய்து கொண்டு ச்யாமளாதி சக்திக்கூட்டங்கள் "காமாக்ஷி" எனும் மஹாமந்த்ரத்தை ப்ரணவத்துடனும் பீஜாக்ஷரத்துடனும் உபாஸிக்கின்றனர்.
எனில் நாம் "காமாக்ஷி" எனும் பரதேவதையின் ஸர்வோத்க்ருஷ்டமான நாமத்தை பகலும் இரவும் அடிக்கடி ஜபிக்க பரதேவதா ஸாந்நித்யம் ஏற்படும். காமாக்ஷி நாம பாராயணம் ஸர்வ மங்களங்களை உண்டு பண்ணும்!! கைவல்ய மோக்ஷத்தையும் கொடுக்கும்!!
பஞ்சதச்யாதி மஹாவித்யைப் போன்று மஹாமந்த்ரமாக விளங்கக்கூடியது காமாக்ஷி எனும் தேவி நாமம். லலிதோபாக்யனத்தில் இதற்கான ப்ரமாணத்தைக் காணலாம்!!
ஆக, வெண்ணையை கையிலேயே வைத்துக்கொண்டு நெய்க்கு அலையாமல் ஶ்ரீராஜராஜேச்வரியான காமாக்ஷி பராபட்டாரிகையின் நாமாவை ஸதா ஜபிப்போம்!!
ஶ்ரீவித்யோபாஸனையினால் என்ன பலன் ஏற்படக்கூடுமோ அந்த பலன் "காமாக்ஷி" நாம பாராயணத்தினாலேயே ஏற்படும்!! ஆகையால் ஶ்ரீபராம்பிகையான ராஜராஜேச்வரியை "காமாக்ஷி" நாம பாராயணத்தால் உபாஸித்து ச்ரேயஸ்ஸை அடைவோம்!!
ஶ்ரீமாத்ரே நம:
காமாக்ஷி சரணம்
ஸர்வம் லலிதார்ப்பணம்
ப்ரஹ்மார்ப்பணம்
No comments:
Post a Comment