Tuesday, April 20, 2021

Dhanushkodi

படித்ததில் பிடித்தது :
சுவாமி தேசிகன் வடமொழியில் எழுதியுள்ள ஆயிரம் பாடல்கள் மூலம் இறைவன் திருவடியை அலங்கரிக்கும் பாதுகையின் பெருமையை நாம் அறிகிறோம்.
கிருஷ்ணாவதாரத்தின் காலம் முடியும் நேரம் வந்தது. அப்போது உத்தவர் அவரை மும்முறை வலம் வந்து அவர் பாதங்களில் விழுந்து அவர் திருவடிகளை தன் கண்ணீரால் நனைத்தார். அப்போது பகவான் அவருக்குத் தன்னுடைய பாதுகைகளை அளித்தார். அவற்றை தன் தலையில் தாங்கிக் கொண்டு மீண்டும் மீண்டும் வணங்கி புறப்பட்டுச் சென்றார். பிறகு பத்திரிகாசரமம் சென்று கிருஷ்ணனை தன் இதய பீடத்தில் நிலை பெறச் செய்து தியானித்து அவருடைய அறிவுரைகளை கடைப்பிடித்து இறுதியில் பரம பதத்தை அடைந்தார்.
இராமனின் வில்லின் இரு முனைகளிலும் ஸ்ரீராமன் விளங்குகிறான். இந்த இரண்டு முனைகளையும் ஒரு பொதுப் பெயரால் வழங்குவதுண்டு – அதுதான் "தனுஷ்கோடி" – இராம தனுசின் இரு கோடிகள்.
கோதண்டத்தின் மேல்முனையில் இராமபிரானின் திருமுகம் விளங்குகிறது. இம்முனையில்
இராமனின் "முறுவல் எய்திய நன்று ஒளிர் முகத்தை" (கம்பனின் சொல்லாடல்: 1297) தரிசித்துப் பொங்குகிறாள் காவிரி அன்னை. திருவரங்கத்தில் இருபுறமும் அரங்கனை அணைத்தவள் காவிரி. அன்றலர்ந்த செந்தாமரையை வென்ற முகத்தை உடைய இராமனை யோகியர் தியானத்தினால் தரிசித்து பேரின்பத்தினைப் பெறுகிறார்கள். அவர்கள் அடையும் அந்த ஆனந்தமே இராமன் என்னும் பரமன்.
கோதண்டத்தின் கீழ்முனையில் இராம பிரானின் திருப்பாதங்கள் விளங்குகின்றன. இராமனின் பாதங்களின் மகிமையை அகலிகையின் சாப விமோசனத்தில் அறிவோம். அதைக் "கால் வண்ணம்" என்று பாடும் கம்பனின் சொல்நயம் வெளிப்படும்:
கோதண்டத்தின் மேல்முனையில் இராமனின் முகத்தை கடுந்தவம் புரிந்த யோகியர் கண்டு பெற்றனர் பேரின்பம். கீழ்முனையில் ஒன்றுமே செய்யாமல் இராமன் வரவுக்காக காத்திருந்த கல்லும் பெற்றது பிறவிப் பேறு!
இராமன் பெரியோர்களுக்கு மரியாதை அளிப்பதில் சிறந்தவன். அவனுடைய கால் பட்டு அகலிகை உயிர்த்தெழுந்தாள் என்று கம்பரால் சொல்ல இயலவில்லை. ஏனென்றால் பெற்ற
தாய்க்கும் முன்னதாகவே இவள் இராமனை நெஞ்சில் கருக் கொண்டாள். அதனால் கம்பர் இங்கே மூலநூலில் இருந்து சற்றே மாறினார்.
இராமனின் கால் படவில்லை. ஆனால் அவன் நடந்து வந்த போது அவன் கால் பட்டுத் தெரித்த துகள் கல்லென சமைந்திருந்த அகலிகையின் மீது பட்டது என்கிறார். அந்த காலில் இருந்து கழண்ட துகளினாலே அவள் சாப விமோசனம் பெற்றாள் என்று மாற்றுகிறார் கம்பர்.
கண்ட கல்மிசைக் காகுத்தன் கழல்-துகள் கதுவ,-
 உண்ட பேதைமை மயக்கு அற வேறுபட்டு, உருவம்
 கொண்டு, மெய் உணர்பவன் கழல் கூடியது ஒப்ப,-
 பண்டை வண்ணமாய் நின்றனள்; மா முனி பணிப்பான்: 14
தாடகை வதத்தில் இராமனின் கை சரம் எடுத்ததையும், அதைத் தொடுத்ததையும் கண்டிலர். அத்தனை வேகத்தில் சரம் எய்தவன் இராமன். இராமனின் கையால் ஒருத்தி சாப விமோசனம் அடைந்தாள். இன்னுமொரு பெண் இவன் கால் துகள் பட்டு பாப விமோசனம் அடைந்தாள்.
'இவ் வண்ணம் நிகழ்ந்த வண்ணம்: இனி, இந்த உலகுக்கு எல்லாம்
 உய்வண்ணம் அன்றி, மற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ?
 மை வண்ணத்து அரக்கி போரில், மழை வண்ணத்து அண்ணலே! உன்
 கை வண்ணம் அங்குக் கண்டேன்; கால் வண்ணம் இங்குக் கண்டேன்.' 24
இராமனின் திருவடி பெருமைக்கு இது ஒரு சான்றே.
ராதே ராதே 🙏🙏

No comments:

Post a Comment