Tuesday, March 2, 2021

Temple to visit for getting progeny -Spiritual story

நவநீதகிருஷ்ணனைப் போன்ற  அழகான குழந்தை பிறக்க வேண்டுமா?

அப்படியென்றால் நீங்கள் தினமும் விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தின் 46-வது 
திருநாமமான "அப்ரமேயாய நம: என்று  சொல்லி வர வேண்டும்.

அது என்ன "அப்ரமேயாய நம"?

இதன் தொடர்பான ஒரு கதையினை பார்ப்போமா!

ஒரு முறை மைசூர் மகாராஜா கோலார் தங்கச் சுரங்கத்தைப் பார்வையிடச் சென்றார்.

அப்போது கோலாரில் ஒரு சிற்பியிடம் தன் வலக்கையில் வெண்ணெயை ஏந்திக் கொண்டு இடக்கையால்  வெண்ணெய்ப் பானையை அணைத்தபடி எழுந்தருளியிருக்கும் நவநீதகிருஷ்ணனின் விக்கிரகம்  இருப்பதை பார்த்தார்.

அந்த  நவநீத கிருஷ்ணன் மன்னரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டதால் அந்தச் சிற்பிக்கு நிறைய பொற்காசுகளைக் கொடுத்து அந்த விக்கிரகத்தை  வாங்கினார்.

தங்கச் சுரங்கங்களைப் பார்வையிட்டபின் மைசூருக்குச் செல்லும் வழியில் மல்லூர் (இன்றைய தொட்டமல்லுர்) என்னும் ஊரில் ஓர் இரவு  தங்கினார்.

மன்னரை பார்க்க வந்த அவ்வூர் மக்களின் உள்ளங்களையும் மன்னருடன் இருந்த நவநீத கிருஷ்ணன் கவர்ந்து விட்டான். 

அந்தக் கண்ணனைத் தங்கள் ஊரிலேயே பிரதிஷ்டை செய்தால் நன்றாக இருக்கும் என மக்கள் நினைத்தார்கள்.

ஆனால், தன் அரண்மனைக்குக்  கண்ணனைக் கொண்டு செல்ல நினைக்கும் மன்னரிடம் இதை யார் சொல்வது என்று அஞ்சினார்கள்.

அவ்வூரில் இருந்த ஒரு பண்டிதர் ஊர் மக்களிடம்,  "இந்தக் கண்ணனை நம்பாதீர்கள்,இவன் தன்னை நம்புபவர்களை எல்லாம் ஏமாற்றி விடுவான்.

கோபிகைகளின் உள்ளத்தில் காதலை உண்டாக்கிய  அவன், அவர்களை விட்டுவிட்டு ஆயர்பாடியில் இருந்து மதுராவுக்குச் சென்றுவிட்டான். 

அதற்குப்பின் கோபிகைகளை எட்டிக்கூடப் பார்க்கவில்லை.  அதுபோல, விவசாயிகளான நம் உள்ளத்தைக் கவர்ந்து விட்டு, நம்மோடு இல்லாமல் மன்னருடன் அரண்மனைக்குச் சென்றுவிடுவான். 
இவனை நம்பாதீர்கள்!" என்றார்.

அடுத்தநாள் மாலை மன்னர் மைசூருக்குப் புறப்படும்போது, நவநீதகிருஷ்ணனை ஒரு சந்தனப் பெட்டிக்குள் வைத்துப்   பாதுகாப்பாகக் கொண்டு செல்லத் திட்டமிட்டிருந்தார். 

ஆனால், அந்த சந்தனப் பெட்டியை யாராலும் தூக்க முடியவில்லை.

அத்தனைக்  காவலாளிகளோடு மைசூர் மகாராஜாவும் சேர்ந்து தூக்கிப் பார்த்தார். 

ஆனால், எவராலும் அதை நகர்த்தக் கூட முடியவில்லை. அப்போது வானிலிருந்து  ஓர் அசரீரி கேட்டது: "என்மேல் மிகுந்த அன்பு வைத்திருக்கும் இவ்வூர் மக்களுக்கு அருள்புரிவதற்காக நான் இங்கேயே தங்குவதென்று முடிவு செய்து  விட்டேன்!" 

"அப்படியாயின் உன் அருள் எனக்குக் கிடைக்காதா? என் அரண்மனைக்கு நீ வரமாட்டாயா?" என்று புலம்பி அழுதார் மன்னர். 

அப்போது அங்கே ஒரு பிச்சைக்காரர் வந்தார். "மன்னா! கண்ணனுக்கு முன் நீங்களும் ஒரு பிச்சைக்காரர்தான்.

அவனது லீலைகளைச் சாதாரண  மனிதர்களால் புரிந்து கொள்ளவே முடியாது.

மனிதர்கள் மட்டுமல்ல, பிரம்மா, இந்திரன் முதலிய தேவர்களின் புத்திக்கும் அப்பாற்பட்டவை  அவனுடைய செயல்பாடுகள்.

இவ்வாறு தேவர்களின் புரிதலுக்கும் எட்டாத மேன்மைகளை உடையதால்தான் கண்ணன் 'அப்ரமேய:' என்று  அழைக்கப்படுகிறான். 

இவ்வூரில் ஒரு பெருமாள் கோவில் உள்ளது. அந்தப் பெருமாளுக்கும் அப்ரமேயன் என்று தான் திருநாமம்!" என்பதால் அசரீரி வாக்குபடி அந்த பெருமாள் கோவிலிலேயே பிரதிஷ்டை செய்து விடுங்கள் என்றார் அந்தப்  பிச்சைக்காரர். 

கண்ணன் தன்னை நம்பியவர்களை ஏமாற்றுவான் என்று சொன்ன அவ்வூர்ப் பண்டிதரைப் பார்த்து, "கண்ணன் பண்டிதரான உங்களின் புரிதலுக்கும்  அப்பாற்பட்டவன் என்பதை இப்போது புரிந்து கொண்டீர்களா? 

தன்னை நம்பியவர்களைக் கைவிடாதவன் என்பதை உணர்த்தும் விதமாக அரண்மனையே  வேண்டாம் என்று உங்களுடன் தங்கியிருக்க முடிவெடுத்து விட்டான் பாருங்கள்!" என்றார் அந்தப் பிச்சைக்காரர்.

இவ்வாறு சொல்லிவிட்டு அந்தப்  பிச்சைக்காரர் மறைந்துவிட்டார்.

நவநீத கிருஷ்ணனை மல்லூரிலுள்ள அப்ரமேயப்பெருமாள் கோயிலில் மன்னர் பிரதிஷ்டை செய்தார்

அந்த நவநீதகிருஷ்ணனைக் குறித்துதான் புரந்தரதாசர் "ஜகதோத்தாரணா" என்ற புகழ்பெற்ற பாடலைப் பாடினார். 

இன்றும் பெங்களூர் - மைசூர்  சாலையில் அமைந்துள்ள மல்லூர் கோயிலிலுள்ள அந்த நவநீத கிருஷ்ணனை வந்து தரிசிக்கும் தம்பதிகளுக்கு விரைவில் குழந்தை பாக்கியம்  கிட்டுகிறது. 

இவ்வாறு பிரம்மாதி தேவர்களின் புரிதலுக்கும் அப்பாற்பட்டவனாக விளங்கும் எம்பெருமான் கிருஷ்ணன்
அப்ரமேயாய நம: (Aprameyaaya namaha)   என்றழைக்கப்படுகிறான்.

இதுவே  விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தின் 46-வது திருநாமம்.

எனவே "அப்ரமேயாய நம:(Aprameyaaya namaha)   என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நவநீதகிருஷ்ணனைப் போன்ற  அழகான குழந்தை பிறப்பது உறுதி.🙏🌿

No comments:

Post a Comment