Wednesday, March 31, 2021

Bhagavad Gita adhyaya 2 sloka 26 to 28 in tamil

Courtesy : Smt.Dr.Saroja Ramnujam
கீதாம்ருதம்- அத்தியாயம் 2- தொடர்ச்சி
26. அத ச ஏனம் நித்ய ஜாதம் வா மன்யஸே ம்ருதம்
ததா அபி த்வம் மஹாபாஹோ ந ஏவம் சோசிதும் அர்ஹஸி
மஹாபாஹோ- வீரனான அர்ஜுனா, அத ச ஏனம் –இந்த தேகத்தை ,நித்யஜாதம் –எப்போதும் பிறந்துகொண்டிருப்பது, ம்ருதம் வா- அல்லது இறப்பது என்று, மன்யஸே- எண்ணுவாயாகில் , ததா அபி- அப்போதும் , ஏவம் சோசிதும்-இவ்வாறு வருந்துவது , ந அர்ஹஸி—தகாது.
ஆத்மா அழிவற்றது என்று கூறிய பின், அதை அறிந்துகொள்ள இயலாவிடினும், பிறப்பு இறப்பு இவை உண்மையே என்று நினைப்பினும் அதற்காக வருந்தலாகாது என்று கூறுகிறார்.
ஏனெனில்,
27.ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யு: த்ருவம் ஜன்ம ம்ருதஸ்ய ச
தஸ்மாத் அபரிஹார்யே அர்த்தே ந த்வம் சோசிதும் அர்ஹஸி
ஜாதஸ்ய –பிறந்தவனுக்கு , ம்ருத்யு: -மரணம், த்ருவ: - நிச்சயம் ஏற்படுவது. ம்ருதஸ்ய – இறந்தால் , ஜன்ம- பிறப்பு , த்ருவம் – நிச்சயம் . தஸ்மாத் – அதனால்
அபரிஹார்யே அர்த்தே- தவிர்க்க முடியாத விஷயத்தில் , த்வம்- நீ , சோசிதும்- வருந்த, ந அர்ஹஸி- வேண்டியதில்லை.
மரணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. அவ்வாறே மரணித்தவர் மறு பிறப்பு எய்துவதும் இயற்கை. இந்த வாழ்க்கை முடிந்ததும் எப்போது எப்படி மரணம் ஏற்படும் என்பது ஏற்கெனவே நிச்சயமான ஒன்று. அந்தக்காலம் வரும் வரையில் யாரையும் யாராலும் அல்லது எதனாலும் கொல்ல முடியாது. அதனால் நம் சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்றை நினைத்து வருந்துவதில் பயனில்லை.
சாதாரணமாக ஒரு விமான விபத்தோ அல்லது வேறு எந்த இயற்கை அல்லது செயற்கைப் பேரழிவுகளோ ஏற்படுகையில் , யாராவது தற்செயலாக தப்பிப் பிழைப்பதைக் காண்கிறோம். அவர்களைப் பொறுத்த வரை முடிவுக் காலம் வரவில்லை என்று பொருள்.
இதன் மூலம் மரணம் என்பது யாராலும் தவிர்க்க முடியாத்து மட்டுமல்ல, இறந்தவ்ர் மறுபடி பிறப்பதால் மரணம் ஒரு முடிவல்ல என்பதும் விளக்கப்படுகிறது.
.
28. அவ்யக்தாதீனி பூதானி வ்யக்தமத்யானி பாரத
அவ்யக்தநிதனானி ஏவ தத்ர கா பரிதேவனா
பாரத- அர்ஜுனா, பூதானி- எல்ல உயிர்களும், அவயக்தாதீனி – இதற்கு முன்னால் எப்படி இருந்தன என்று அறியோம். அவ்யக்த நிதனானி- அவை அழிந்த பின் எங்கே இருக்கும் என்றும் அறியோம். வ்யக்தமத்யானி ஏவ- இடைக்காலத்தில் உள்ளது மட்டுமே தெரிய வருகிறது. தத்ர- அவ்வாறு இருக்கையில் , கா பரிதேவனா- - புலம்பல் ஏன்.
ஸ்ருஷ்டி காலம் தொடங்கி எல்லா உயிர்களும் கணக்கற்ற பிறவி எடுக்கின்றன. அதில் ஒரு ஆயுட்காலம் என்பது சிறு துளி போன்றது. ஓடும் நீரில் விளக்கைக் காட்டினால் தெரியும் சிறு பாகம் இருளில் இருந்து வந்து மறுபடி இருளில் மறைகிறது. நாம் காண்பது அந்தச் சிறுபாகமே. அதனால் ஒரு ஜன்ம்ம் முடிவது என்பது இயற்கையான ஒன்று. அதற்கு வருந்த்த் தேவை இல்லை என்பது இதன் கருத்து

No comments:

Post a Comment