Monday, February 22, 2021

Yogi Ramsurat kumar- Periyavaa

ஸ்ரீ யோகிராம் சுரத்குமார் காஞ்சி மகாபெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை நேரில் சந்தித்துப் பேசிய நிகழ்ச்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.

        காஞ்சி மடத்தில் அப்போது உடன் இருந்து கைங்கர்யம் செய்து வந்த ஸ்ரீ சந்திரமௌலியிடம் மகாபெரியவர் ஒரு பணியை ஒப்படைத்தார்.

        மடத்தில் இருந்து ரூபாய் 500 வாங்கிக் கொண்டு திருவண்ணாமலைக்குச் சென்று யோகி ராம்சுரத்குமாரை சந்திக்கும்படியும், அவரை டாக்ஸியில் கூடவே கோவிந்தாபுரம் அழைத்துச் செல்லும்படியும் கேட்டுக் கொண்டார். 

       கோவிந்தாபுரத்தில் யோகி ராம்சுரத்குமார் சில மணி நேரம் தியானத்தில் அமர்ந்து இருந்த பின்னர், திரும்ப திருவண்ணாமலைக்கு உடன் அழைத்து வரும்படி சொல்லப்பட்டது.

       எனக்குத் தெரிந்ததெல்லாம் ராமனுடைய நாமம்தான். ராமனுடைய நாமம்தான் எல்லாம் ! இருபத்து நாலு மணி நேரமும் ராமனுடைய நாமத்தை ஜபித்துக் கொண்டே இருக்க வேண்டும். என்னுடைய குரு கட்டளையிட்டதை நான் செய்து கொண்டிருக்கிறேன்.
இந்த பிச்சைக்காரனுக்கு இது போதும் என்று யோகி எப்போதும் சொல்வார்.

        கோவிந்தாபுரத்தில் ஸ்ரீ போதேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதியாக இருந்தார். வாழ்நாள் முழுவதும் ராமனின் நாமத்தையே சொல்லிக் கொண்டிருந்தார். 

       மடத்தின் பொறுப்பை இன்னொருவரிடம் ஒப்படைத்த பிறகு, ராமநாமத்தின் மகிமையை பரப்புவதையே முக்கிய பணியாகச் செய்தார். ஜாதி போன்ற எந்த வேறுபாடுகளையும் பார்க்காமல் எல்லோருக்கும் ராமநாமத்தை உபதேசம் செய்தார். 

       கலியுகத்தில் முக்தி பெற ராமனின் நாமமே கதி என்று உபதேசித்தார். ராமநாமத்தையே ஜெபித்து ஜெபித்து சித்த புருஷரானார். காவேரி நதிக்கரையில் கோவிந்தாபுரத்தில் ஜீவசமாதி அடைந்தார்.

     இப்போதும் அவருடைய சமாதியில் ராமனுடைய நாமம் ஒலித்துக் கொண்டிருப்பதை பக்தர்கள் கேட்டு அனுபவித்திருக்கிறார்கள்.

        ராமனுடைய நாமத்திலேயே லயித்திருந்த யோகி ராம்சுரத்குமார் கோவிந்தாபுரத்தில் ஸ்ரீ போதேந்திரர் சமாதியில் தியானம் செய்து ஆனந்த அனுபவத்தைப் பெற வேண்டும் என்று காஞ்சி மகாபெரியவர் விரும்பினார்.

        சந்திரமௌலி சொன்னதைக் கேட்டு யோகி ஆழ்ந்த சிந்தனையில் லயித்தார். 

        அப்போது மாவட்ட ஜட்ஜ் ஒருவரும் அவருடைய மகளும் அங்கே இருந்தனர்.

        1959 ம் ஆண்டுக்கு பிறகு யோகி திருவண்ணாமலையை விட்டு வேறு எந்த ஊருக்குமே செல்லவில்லை.

        ஆழ்ந்த சிந்தனையில் இருந்த யோகி தன் ஞானத் தந்தையிடம் உத்தரவு கேட்டிருப்பார் போலும் !

        கோவிந்தாபுரத்துக்கு அல்ல, காஞ்சிபுரத்திற்கே செல்ல வேண்டும். இரண்டும் வேறு வேறு அல்ல, ஒன்றே என்று யோகி உணர்ந்தார்.

        அங்கே உடன் இருந்தவர்களையும் அழைத்துக் கொண்டு சந்திரமௌலியுடன் யோகி டாக்ஸியில் காஞ்சிபுரத்திற்கு புறப்பட்டார்.

        அவர்கள் காஞ்சிபுரம் சென்றபோது, மகாபெரியவர் தன்னுடைய பணிகளை முடித்து விட்டு ஓய்வு எடுக்கச் சென்று விட்டார். கதவு சாத்தியிருந்தது. சந்திரமௌலி பயந்து கொண்டே கதவைத் தட்டினார். 

       மகாபெரியவர் சொன்னபடி தான் செய்யவில்லையே என்று அவர் பயந்தார். ஆனால் அவர் கதவைத் தட்டிய உடனையே, கதவைத் திறந்து கொண்டு புன்சிரிப்போடு வரவேற்கும் பாவனையோடு மகாபெரியவர் வெளியே வந்தார்.

        இருவரும் ஒருவரை ஒருவர் கண்ணால் பார்த்துக் கொண்டு இருந்தனர். வார்த்தைகளால் பேசவில்லை. சிறிது நேரம் கழித்து மகாபெரியவர், சந்திரமௌலியிடம்-- வந்த பணி முடிந்து விட்டது. திரும்பவும் யோகியை திருவண்ணாமலைக்கு அழைத்துச் செல்லவும -- என்று கூறினார்.

       யோகி காஞ்சிபுரத்திற்கு தன்னைக் காண வருவார் என்பதை முன்கூட்டியே மகாபெரியவர் அறிந்திருப்பார் போலும் !

        புறப்படுவதற்கு முன்பு ஸ்ரீ காமாட்சி அன்னையின் பிரஸாதம், தன்னுடைய பிரஸாதம் நிறைய அளவில் யோகியிடம் கொடுத்து அனுப்பினார்.

        இந்த பிச்சைக்காரன் அந்த பிரஸாதத்தை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு எடுத்துச் சென்று பக்தர்களிடம் அவர்களுடைய நன்மைக்காக விநியோகம் செய்தேன் என்று யோகி பின்னர் தெரிவித்தார்.

        பரமாச்சாரியார் இந்த பிச்சைக்காரன் மீது அன்பும், அக்கறையும் கொண்டவர். அவரை இந்த பிச்சைக்காரன் நமஸ்காரம் செய்தேன். மிகுந்த கருணையோடு அவர் என்னை ஆசீர்வதித்தார்.
நான் சூர்ய கோத்திரத்தைச் சேர்ந்தவனா என்று என்னிடம் விசாரித்தார். நான் எப்போதும் ராமனையே நினைத்துக் கொண்டு இருந்ததால், என்னால் உடனே பதில் சொல்ல முடியவில்லை என்று யோகி பின்னர்  தெரிவித்தார்.

        ஸ்ரீ போதேந்திரர் ஜீவசமாதியில் இருக்கும் கோவிந்தாபுரம் சென்று இருக்கலாமே ! என்று பரமாச்சாரியார் என்னிடம் சொன்னார். ஆனால் இந்த பிச்சைக்காரனுக்கு திருவண்ணாமலையே போதும் ! என்று சொல்லி விட்டேன். பரமாச்சாரியார் சரி எனச் சொல்லி விட்டார். இதுதான் நாங்கள் பேசிக் கொண்டது என்று யோகி சுரத்குமார் பின்னர் தெரிவித்தார்.

        இந்த சந்திப்பு 1986 பிப்ரவரி 26 ஆம் தேதி நடந்ததாகத் தெரிகிறது.

ஹரிஹரசுப்பிரமணியன்
வெங்கடசுப்பிரமணியன்

No comments:

Post a Comment