Friday, February 26, 2021

Mind control- Periyavaa

பெரியவா திருவடியே
           சரணம்.

மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்! 

சாவதற்குள் இந்த மனசை அடக்க ஒருவழி தேடியே ஆகவேண்டும். இல்லாவிட்டால் மறுபடி பிறப்புதான்; மறுபடி மனசின் ஓயாத ஒட்டம்தான். 

எனவே, இந்த ஜன்மாவிலேயே காமமும் குரோதமும் ஏற்படுவதற்கு எவ்வளவோ ஹேதுக்கள் இருக்கும்போதே இவற்றின் நடுவே மனசை அடக்க முழுப் பிரயத்தனமும் பண்ண வேண்டும். அப்படிப் பண்ணி ஜெயித்தவன்தான் 'யுக்தன்' என்கிற யோகி. அவன்தான் 'ஹுகி' உண்மையான ஆனந்த ஆத்மா என்கிறார் கிருஷ்ண பகவான்.

'யோகமெல்லாம் ரிஷிகள் சமாச்சாரம், நமக்கு வருமா?' என்று விட்டு விடலாகாது. 

மருந்து யாருக்கு வேண்டும்? வியாதி உள்ளவனுக்குத்தானே? நமக்குத்தான் மனோவியாதி – அதாவது, மனம் என்ற வியாதி – இருக்கிறது. எனவே நாம்தான் அதை அடங்குகிற மருந்தைச் சாப்பிட வேண்டும்.

மனசை அடக்க இரண்டு சாதனங்கள் உண்டு. ஒன்று பகிரங்க சாதனம், மற்றது அந்தரங்க சாதனம். வெளிமுகமாகச் செய்வது பகிரங்க சாதனம். உள்ளுக்குள்ளேயே செய்து கொள்வது அந்தரங்க சாதனம். இரண்டும் வேண்டும். 

இந்த மடத்தில் வண்டிக்காரன், சமையல்காரன் இவர்கள் வெளியிலும், தீபத்தில் திரிபோட்டுத் தருகிறவன், புஷ்பம் எடுத்துக் கொடுப்பவன் இவர்கள் பூஜைக்குப் பக்கத்திலேயே அந்தரங்கமாகவும் இருக்கிறார்கள். இரண்டு வகையினரும் இருந்தால்தான் மடம் நடக்கும். அப்படியே பகிரங்க சாதனம் அந்தரங்க சாதனம் இரண்டையும் கொண்டு மனத்தை முதலில் நல்லதில் ஒருமுகப்படுத்தி, பிறகு ஒன்றையுமே நினைக்காத நிலைக்கு வரவேண்டும்.

தான தருமம் செய்து, சந்தியாவந்தனம், யாகம், பூஜை பரோபகாரம் எல்லாம் நல்லதில் மனசைச் செலுத்தும் பகிரங்க சாதனங்கள். தியானம் என்பதே மிகச் சிறந்த அந்தரங்க நிலை. அதற்கு அநுகூலமாக இருக்கிற மற்ற அந்தரங்க சாதனங்கள் ஐந்து. அவை. அஹிம்சை, சத்தியம், அஸ்தேயம், சௌசம், இந்திரிய நிக்ரஹம் என்பவை. 

எவருக்கும், எவற்றுக்கும் கெடுதலே எண்ணாதபடி மனசை அன்புமயமாகச் செய்து கொள்வது அஹிம்சை. 

மனம், வாக்கு, காயம் மூன்றையும் உண்மையிலே ஈடுபடுத்துவது சத்தியம். 

அஸ்தேயம் என்றால் 'திருடாமல் இருப்பது' என்று அர்த்தம். அதாவது, பிறர் பொருட்களில் ஆசையே எழாதபடி வைராக்கியமாக இருப்பது. 

சௌசம் என்றால், தூய்மைப்படுத்திக் கொள்வது. ஸ்நானம், மடி, ஆசாரம், ஆகாராதிகளின் சுத்தி எல்லாம் சௌசத்தில் அடங்கும். 

இந்திரிய நிக்ரஹம் என்பது புலன்களை அவற்றின் போக்கில் விடாமல் ஒவ்வோர் இந்திரியத்துக்கும் இவ்வளவுதான் ஆகாரம் கொடுப்பது என்று நிர்ணயமாக வைத்துக் கொள்வது. 'கண் இதைப் பார்க்கக்கூடாது. காது இதைக் கேட்கக்கூடாது. வாய் இதைத் தின்னக்கூடாது. இதைப் பேசக்கூடாது. உடம்பு இந்தப் பாவத்தை செய்யக்கூடாது' என்று தடுத்து நிறுத்துவதே இந்திரிய நிக்ரஹம். 

சாதனை செய்வதற்காக மட்டுமே சரீரம் வேண்டும். சரீரம் உயிர் வாழ்வதற்காக இந்திரியங்களுக்கு எவ்வளவு அதம பட்சம் தீனி கொடுக்க வேண்டுமோ அவ்வளவே கொடுக்க வேண்டும்.

அந்த ஐந்தும் 'சாமானிய தர்மங்கள்' எனப்படும். அதாவது நமது மதத்தைச் சேர்ந்த சகல பிரிவினரும் இவற்றை அநுஷ்டிக்க வேண்டும் என்பது மநுதர்மம்.

ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் 
(தெய்வத்தின் குரல் - முதல் பகுதி)

No comments:

Post a Comment