கீதாம்ருதம் - அத்தியாயம் 2.- சாங்கிய யோகம்
மகாபாரத யுத்தம் என்பது நமக்குள் என்றும் நிகழ்வது. நல்ல எண்ணங்களுக்கும் தீய எண்ணங்களுக்கும் இடையே நிகழும் போரையே பாரத யுத்தம் சித்தரிக்கிறது. நல்ல எண்ணங்கள் சிறுபான்மையான பாண்டவர்கள். கெட்ட எண்ணங்கள் கௌரவரைப் போல பெரும்பான்மையானவை.
மனம் பகவானை நோக்கித் திரும்பினால் மட்டுமே வெற்றி கிட்டும். பாஞ்சஜன்யத்தின் ஒலி என்பது சத்வ குணத்தைப் பெருக்கி ரஜஸ் தமஸ் இவைகளை அடக்கும் தெய்வீக இசையாகும்.
அர்ஜுனன் என்பது நம் மனமே. குழம்பியுள்ள மனம் பகவானின் உதவியை நாடுகிறது. அவன் அருளால் நம் குழப்பம் தீர்ந்து மனம் தெளிவுறுகிறது.
அது நடக்க வேண்டுமானால் அர்ஜுனனைப் போல் நாமும் நம் மனமாகிய ரதத்தின் சாரதியாக இருக்க பகவானை வேண்ட வேண்டும். பார்த்தசாரதி நாம் பார்த்த சாரதியாக ஆனால் வெற்றி நிச்சயம்.
இப்போது இரண்டாவது அத்தியாயத்தில் இருந்து கீதோபதேசம் ஆரம்பிக்கிறது. அதை அடுத்து பார்ப்போம்.
அத்தியாயம் 2-சாங்க்யயோகம்
ஸஞ்சய உவாச
1.தம் ததா க்ருபயாவிஷ்டம் அச்ருபூர்ணாகுலேக்ஷணம்
விஷீதந்தம் இதம் வாக்யம் உவாச மதுசூதன:
ஸஞ்சயன் கூறினான்
ததா- அவ்வாறு,அச்ருபூர்ணாகுலேக்ஷணம் -கண்ணீர் மல்கும் கண்களுடன் , விஷீதந்தம்- துக்கிக்கும் , தம் –அந்த அர்ஜுனனைப் பார்த்து, ஹ்ருஷீகேச: ஹ்ரிஷீகேசனாகிய கண்ணன இதம் வாக்யம்-இவ்வாறு கூறினான்.
இங்கு முதல் முதலாக பகவான் பேச ஆரம்பிக்கிறார். உண்மையான கீதோபதேசம் 11ஆவது ஸ்லோகத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. .
ஸ்ரீ பகவான் உவாச
2. குதஸ்த்வா கச்மலம் இதம் விஷமே ஸமுபஸ்திதம்
அனார்யஜுஷ்டம் அஸ்வர்க்யம் அகீர்திகரம் அர்ஜுன
பகவான் கூறினார்
அர்ஜுன- அர்ஜுனா, குத: எங்கிருந்து இதம் கச்மலம் –இந்த பொருத்தமில்லாத குழப்பம் , விஷமே – தகாத காலத்தில், த்வா- உன்னை , ஸமுபஸ்திதம்- வந்தடைந்தது? இது அனார்யஜூஷ்டம்- சான்றோர்களால் கடைப்பிடிக்கத் தகாதது, அஸ்வர்க்யம் – சுவர்கத்தைத் தராது. அகீர்திகரம்- புகழையும் தரவல்லதன்று.
அர்ஜுனன் கூறிய உயர்ந்த கொள்கை என்று நினைத்த அத்தனை வாதங்களையும் பகவான் கச்மலம், குப்பை என்று ஒதுக்கி விடுகிறார். ஏனென்றால் அது தகாத காலத்தில் ஏற்பட்டது.
தன் கடமைகளை எல்லாம் முடித்து துறவறம் பெறப்போகும் ஒருவரின் வாதங்களை போர்முனையில் நிற்கும் அர்ஜுனன் கூறியது பொருத்தமற்றது. மேலும் சிறந்த வீரனான அர்ஜுனனின் பெருமைக்கு இந்த மனப்பான்மை இழிவைத் தேடித்தரும். கடமையைச் செய்ய மறுத்துப் பின்வாங்கினால் அதனால் சுவர்க்கம் கிடைக்காது நரகம்தான் கிடைக்கும் என்கிறார்.
ஆர்ய என்றால் சிறந்த குலத்தோன் என்று பொருள். இந்த மனப்பான்மை அநார்யஜூஷ்டம் , உயர்ந்த குலத்தில் பிறந்த வீரனானவன் செய்யத்தகாதது என்று பொருள். இப்படி அவன் வாதங்களை எல்லாம் ஒரே வாக்கியத்தில் தகர்த்து தவிடுபோடியாக்கிவிட்டான் கண்ணன்.
3.க்லைப்யம் மாஸ்மகம: பார்த்த நைதத் த்வயி உபபத்யதே
க்ஷுத்ரம் ஹ்ருதய தௌர்பல்யம் த்யக்த்வா உத்திஷ்ட பரந்தப.
பார்த்த – அர்ஜுனா, க்லைபயம் – பேடித்தனத்தை , மாஸ்ம கம:- அடையாதே. ஏதத்- இது, த்வயி- உனக்கு, உபபத்யதே- உகந்ததல்ல. பரந்தப- எதிரிகளை வாட்டுபவனே , க்ஷுத்ரம் –இழிந்த , ஹ்ருதயதௌர்பல்யம்-தளர்ந்த மனநிலையை , த்யக்த்வா- விட்டுவிட்டு, உத்திஷ்ட – எழுவாயாக.
க்லீப என்றால் அலி. க்லைப்யம் என்பது ஆண்மையற்ற தன்மையைக் குறிக்கும்.
அர்ஜுனனுக்கு ஏற்பட்ட கருணை உண்மையில் துரியோதனாதியரிடம் ஏற்பட்டதன்று. பீஷ்மர் துரோணர் இவர்களை எதிர்க்க மனமில்லாததால்தான் என்பதை அறிந்த பகவான் இது கருணை அன்று, கோழைத்தனம் என்கிறார்.
அடுத்து வரும் அர்ஜுனனின் சொற்கள் இதை மெய்ப்பிக்கின்றன
No comments:
Post a Comment