Thursday, December 31, 2020

Short hand- Periyavaa

*""அரைமணி நேரத்தில் மகாபெரியவா நிகழ்த்திய அதிசயம்!""*

நம் தேசத்தின் ஜனாதிபதியாக திரு ஆர். வெங்கடராமன் அவர்கள் பதவி வகித்த காலகட்டம் அது.

தமது பதவி காலத்தில் ஓர் ஆண்டு, ஆதிசங்கர ஜயந்தியையொட்டி சிறப்புரையாற்றினார், அவர். அந்த உரையினைப் பதிவு செய்து தகுந்த மரியாதைகளுடன் ஸ்ரீகாஞ்சி மடத்துக்கு அனுப்பியிருந்தார்கள்.

அந்த கேசட் வந்த தகவல், மகாபெரியவரிடம் தெரிவிக்கப்பட்டது. அதைக் கேட்டதும் மகான், "இதை மொழிபெயர்ப்பு செய்து, கையேடுகளாக பிரதி எடுத்து பொது மக்களுக்கு விநியோகம் செய்தால் பிரயோஜனமாக இருக்கும்!" என்று தான் கருத்துவதாகச் சொன்னார். 

அவர் சொன்னதை கவனமாகக் கேட்ட ஸ்ரீகார்யம் (ஸ்ரீமடத்தின் நிர்வாகி), "பெரியவா... ஜனாதிபதியின் உரை அடங்கிய கேசட்டைக் கேட்டு, சுருக்கெழுத்தில் எழுதிக் கொண்டு பிறகு மொழி பெயர்ப்பு செய்து அதன் பிறகு அச்சிட வேண்டும்.. அதற்கு சுருக்கெழுத்து தெரிந்தவர்கள், மொழிபெயர்க்க அறிந்தவர்களைத் தேடியாகவேண்டும்...! சொன்னார். 

அவர் சொன்னதைக் கேட்ட மகாபெரியவா, எதோ யோசனையோடு சில நிமிடங்கள் மெளனமாக அமர்ந்திருந்தார். பிறகு, "உனக்கு என்ன, சுருக்கெழுத்து எழுதவும் மொழிபெயர்க்கவும் தெரிந்தவர்கள் வேண்டும்.. அப்படித்தானே, இன்னும் அரைமணி நேரம் கழித்து வா.. நான் சொல்கிறேன்!" சொல்ல, பணிந்து நகர்ந்தார் நிர்வாகி.

சரியாக இருபதாவது நிமிடம் ஒரு கார், ஸ்ரீமடத்தின் வாசலில் நின்றது. காரில் இருந்து இறங்கிய இரு தம்பதியர் கைகால் அலம்பிக் கொண்டு, கனி, பூ என்றெல்லாம் பெரிய தாம்பாளத்தில் நிரப்பி, அதன் நடுவே தங்கள் வீட்டுப் பெண்ணின் கல்யாணப் பத்திரிக்கையை வைத்து எடுத்துக் கொண்டு மகானை தரிசிக்க பக்தர்கள் காத்திருந்த வரிசையில் சென்று நின்றார்கள்.

அவர்கள் உள்ளே நுழைந்த சில நிமிடங்களில், "ஸ்ரீகார்யத்தைக் கூப்பிடு..!" அருகில் இருந்த அணுக்கத் தொண்டரிடம் மகான் சொல்ல, அடுத்த சில நிமிடங்களில், மகாபெரியவா முன் ஆஜராகியிருந்தார் நிர்வாகி.

"சுருக்கெழுத்து தெரிஞ்சவா, மொழிபெயர்க்கத் தெரிஞ்சவா வேணும்னு சொன்னியே, அப்படி இரண்டுபேர் இப்போது இங்கே இருக்கிறார்கள். உடனே அவர்களைக் கூப்பிடு!" மகான் சொல்ல, ஸ்ரீகார்யம் உட்பட எல்லோருக்கும் ஆச்சரியம்.

"இந்தக் கூட்டத்தில் தட்டச்சு, சுருக்கெழுத்து, மொழிபெயர்ப்பு தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா?" ஸ்ரீகார்யம் கொஞ்சம் உரக்க குரல் எழுப்ப, அப்போது தான் கல்யாணப் பத்திரிக்கையோடு வந்து வரிசையில் நின்றவர்களின் காதில் அது விழ,  உடனே ஓடோடி வந்து முன்னால்நின்றார்கள்.

"என்ன, உங்க ரெண்டு பேருக்குமே ஷார்ட் ஹேண்ட் தெரியும் இல்லையா? இதோ இவர் தர்ற கேசட்டைப் போட்டுக் கேட்டு, குறிப்பெடுத்துக் கொண்டு வாங்கோ!" மகாபெரியவா சொல்ல, இரு ஆண்களும் ஸ்ரீகார்யத்துடன் மடத்தின் அலுவலகத்துக்குச் சென்று விட அவர்களின் மனைவியர், மகாபெரியவா இருந்த இடத்தில் இருந்து கொஞ்சம் தள்ளி நின்று கொண்டார்கள். 

ஆயிற்று ஒரு மணி இரண்டு மணி என்று நேரம் கடந்து கிட்டத்தட்ட பகல் ஒரு மணிக்கு மேலாயிற்று.  இரு பெண்களுக்கும்  இடைவிடாத மகாபெரியவர் தரிசனம் கிடைத்துக் கொண்டே இருந்தது.

மதியம் சுமார் இரண்டு மணிக்கு கேசட்டைக் கேட்டு தாங்கள் எழுதிய குறிப்புகளோடு வந்தார்கள் இருவரும்.

"முழுசா கேட்டு எழுதியாச்சா.. சரி நான் படிச்சு வைக்கிறேன்.. நீங்க சாப்டுட்டு வந்துடுங்கோ!" சொன்ன பெரியவா, அவர்களுக்கு மடத்திலேயே உணவளிக்கும்படி சொல்ல, அன்றைய மதியம் அவர்களுக்கு பிரசாதமே சாதமாகக் கிடைத்த சந்தோஷம்!  

சாப்பிட்டு முடித்து வந்தவர்களிடம் பெரியவா சில கரெக்க்ஷன்களைச் சொல்ல, அதையும் சேர்த்து எழுதிக் கொண்டு வந்தார்கள். நகல் எடுத்துக் கொள்ளச் சொன்னார் பெரியவர்.  அப்படியே செய்து முடிக்க மாலை ஆறுமணியானது. 

தன் முன் வந்து நின்றவர்களைப் பார்த்தார் மகாபெரியவா. தன் முன் வைக்கப்பட்ட கல்யாணப் பத்திரிக்கையைக் கையால் தொட்டு ஆசிர்வதித்தார். 

"உங்க வீட்டுப் பெண்ணோடு விவாஹம் ரொம்ப விசேஷமா, நன்னா நடக்கும். நல்லபடியா போயிட்டு வாங்கோ..சென்னையில இருந்து நிறைய காப்பி எடுத்துக் கொடுத்து அனுப்புங்கோ..!"

மகான் கை உயர்த்தி அனுகிரஹம் செய்து ஆசிர்வதிக்க, நமஸ்காரம் செய்துவிட்டுப் புறப்பட்டார்கள் அவர்கள்.

இன்னும் அரை மணி நேரத்தில் தட்டச்சு, சுருக்கெழுத்து, மொழிபெயர்ப்பு எல்லாம் தெரிந்தவர்கள் ஸ்ரீமடத்துக்கு வரப்போகிறார்கள் என்பது மகானுக்குத் தெரிந்தது அதிசயம் என்றால், அப்படி வருகிற அவர்கள் நாள் முழுக்க தரிசனம் கிடைக்க வேண்டும் என்று மனம் முழுக்க ஆசையோடு வந்தது தெரிந்தது எப்படி என்பது மகா(ன்) தேவ ரகசியம்.     

ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர! காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!

மகாபெரியவா சரணம்!! குருவே சரணம்!!

No comments:

Post a Comment