🚩ராமாயணம்
( பாலகாண்டம்)
பகுதி-(1)
(கோசல நாடு)
மானுடத்தின் வெற்றியை உலகுக்கு உணர்த்திய முதல் தெய்வ மகன் இராமன்; அவன் அவதரித்த அழகிய திருநாடு கோசல நாடு. அது பழம் பெருமைமிக்கது; அதைச் சத்திய விரதன் ஆகிய தசரதன், சக்கரவர்த்தி என்ற பெருமையோடு ஆண்டு வந்தான். அவன் உதித்த குலம் சூரிய குலம் என்பர்.
மனு என்பவனும் இக் குலத்தில் பிறந்தவனே. மக்களை நன்னெறிப்படுத்த நீதிநெறிகளை வகுத்துக் கொடுத்தவன் இவன். மழைவளம் குன்றி, மண்வளம் குறைந்த மகிதலத்துக்கு விண்ணுலகினின்று கங்கையை வரவழைத்த பகீரதனும் இக்குலத்தில் தோன்றியவனே. அவனுடைய விடாமுயற்சியை மாநிலம் போற்றுகிறது. அரிதின் முயன்று ஆற்றும் செயலுக்குப் "பகீரதப் பிரயத்தனம்" என்ற தொடர் இன்றும் வழங்குகிறது.
இச்சுவாகு என்ற அரசனின் மெச்சத்தக்க புகழ் இன்றும் பேசப்படுகிறது. அவனால் இக்குலம் "இச்சுவாகு குலம்" என்று நச்சி உலகம் போற்றுகிறது. காகுத்தன் என்பவன் தேவர்களின் ஆகுலங்களைத் தீர்த்தவன்; அவர்கள் குறை கேட்டு அசுரர்களோடு போராடி அவர்கள் வாழ்வை மலரச் செய்தவன். பெருமைமிக்க இக் குலத்தில் பிறந்ததால் இவனைக் "காகுத்தன்" என்றும் அழைத்தனர். ரகு என்ற அரசனும் இக்குலத்திற்குப் பெருமை சேர்த்தவர்களுள் ஒருவன்; அதனால் இராமனை, "இரகுராமன்" என்றும், "இரகுகுல திலகன்" என்றும் அழைத்து வந்தனர். நீதியும் நேர்மையும் வீரமும் பேராற்றலும்மிக்க மன்னர் இராமனின் குல முதல்வர்களாய்த் திகழ்ந்தனர். இராமன் பிறந்ததால் இக்குலமும், உயர்வு பெற்றது; இக்குலத்தின் பெருமையால் இராமனும் உயர்வு பெற்றான்..
நாட்டு வளம் பற்றி
கம்பன்..!
தன் தேன் அமுத கவிதையில் மிக அழகாக வடிவமைத்து எழுதியதை
நாளை பார்ப்போம்..!
ஶ்ரீராம ஜெயம்🙏
No comments:
Post a Comment