பெரியாழ்வார் திருமொழி -2 அரவணையாய் ( 134)
மின்னனைய நுண்ணிடையார்
விரிகுழல் மேல் நுழைந்த வண்டு
இன்னிசைக்கும் வில்லிப்புத்தூர்
இனிதமர்ந்தாய், உன்னைக் கண்டார்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ
இவனைப் பெற்ற வயிறுடையாள்
என்னும் வார்த்தை யெய்துவித்த
இருடீகேசா! முலையுணாயே
மின்னல் போன்ற இடையை உடைய பெண்களின் கூந்தலில் அமர்ந்து தேனை உண்ணும் வண்டுகள் தேன் உண்ட களைப்பில் ரீங்காரமிடும் ஸ்ரீவில்லிப்புத்தூரில் எழுந்தருளியிருப்பவனே !
உன்னைக் கண்டவர்கள் ' இவனைப் பெற்ற தாய் என்ன தவத்தைச் செய்தாளோ என்று புகழும் வார்த்தைகள எனக்கு உண்டாக்கியவனே! பால் உண்பாயாக!
இப்பாசுரத்தில் பெருமானின் நான்கு குணங்கள் – சுவாமித்துவம், செளலப்யம், வாத்ஸல்யம், செளசீல்யம் ஆகியன. புலப்படுகின்றன.
கண்ணனுக்கு எப்போதுமே விளையாட்டு. பின் உறக்கம். பசி என்பதே தெரிவதில்லை. விளையாடிய களைப்பில் உறக்கம். அறியாமையில் உறங்கும் அனைவரையும் தட்டி எழுப்பும் அவனுக்கே உறக்கம்! பிள்ளை பட்டினியாக உறங்கினால் தாய் எப்படித் தரித்திருப்பாள்?
ஆழ்வார் தன்னை யசோதையாக பாவித்து கண்ணனை பால் உண்ண அழைக்கிறார்.
இங்கு ஆண்டாளின் கூந்தலிலே எம்பெருமானாகிய தெய்வ வண்டு ஆசை கொண்டது என்று குறிப்பாக உணர்த்துகிறார் பெரியாழ்வார்.
ஸ்ரீவில்லிப்புத்தூர்
மூலவர் – வடபத்ர சாயி, ரங்க மன்னார், புஜங்க சயனம். கிழக்கே திருமுகமண்டலம்.
தாயார் – கோதை நாச்சியார் , ஆண்டாள்
தீர்த்தம் – திருமுக்குளம்
விமானம் – ஸம்சன விமானம்
ஸ்தல விசேஷம் – பெரியாழ்வார், ஆண்டாள் அவதார ஸ்தலம்.. ஆண்டாள் ரெங்க மன்னாரை மணந்த ஸ்தலம்.
பெருமானுக்கு வலது புறம் ஆண்டாளும், இடது புறம் கருடாழ்வாரும் எழுந்தருளியுள்ளனர்.
நாபிக்கமலத்தில் ப்ரம்மாவும், ஸ்ரீதேவியும் பூதேவியும் வில்லி, புத்தன் எனும் இரு வேடர்களும் உள்ளனர். இவ்விரு வேடர்கள் இத் தலத்தைக் கட்டியதால் வில்லிப்புத்தூர் என்று பெயர் வந்துள்ளதாக ஸ்தல வரலாறு.
இங்கும் அரையர் சேவை உண்டு. ஆண்டாள் கண்டெடுக்கப்பட்ட துளசி வனம் உள்ளது
ஆழ்வார் பெருமானுக்கு சமர்ப்பிக்கும் மாலையை தான் அணிந்து அழகு பார்க்கும் நேரத்தில் ஆழ்வார் கோபிக்க, பெருமானோ ஆண்டாள் சூடி கொடுத்த மாலையே தனக்கு உகந்தது என்று ஆழ்வாரின் கனவில் சொல்ல, அது முதல் ஆண்டாளுக்கு சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் என்று பெயர் உண்டாயிற்று.
No comments:
Post a Comment