*"திருவானைக்கோயில் அகிலாண்டேஸ்வரி - ஜம்புகேஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர் சந்நிதியில் பளிங்குக் கற்கள் பதிக்க ஆசைப்பட்ட பக்தருக்கு அனுமதி மறுத்த பெரியவாள், தொடர்ந்து பிரார்த்தனை செய்த பக்தருக்கு அனுமதி கொடுத்த பெரியவா."*
தம் கொள்கைக்கு மாறானதாக இருந்தாலும், தம் மக்களின் மகிழ்ச்சிக்காக அனுமதி கொடுத்த சம்பவம்,
அருள்மிகு அகிலாண்டேஸ்வரி - ஜம்புகேஸ்வரர் திருக்கோயில்.
அடியார் பெருங்கூட்டத்தில் திருச்சி ஆர்.பஞ்சாபகேசனின் குடும்பமும் ஒன்று. அம்பாளையும் சுவாமியையும் தரிசிக்கச் செல்லும் போதெல்லாம், பெரிய பிள்ளையாரையும் தரிசித்து வணங்குவது அவர்கள் வழக்கம். இந்த மண்ணில் அவர்களை நல்ல வண்ணம் வாழவைத்துக் கொண்டிருக்கும் ஆலயத்தில் ஒரு நாள் வலம் வரும்போது, பிள்ளையார் சந்நிதியில் பளிங்குக் கற்கள் பதிக்க வேண்டும் என்ற எண்ணம் திடீரென்று தோன்றியது.
உடனே அதற்குச் செயல் வடிவம் கொடுக்க முனைந்து, கோயில் அலுவலகத்தில் ஒப்புதல் பெற்று, பளிங்குக் கற்களை வரவழைத்து, புதிய கற்கள் பதிக்க வேண்டிய நாளில், ஸ்ரீ மடத்தின் முன் அனுமதி இல்லாமல், புதிய கற்கள் பதிக்கக்கூடாது எனக் கோவில் குருக்கள் தடை சொன்னார்.
விக்னங்கள் தீர்க்கும் விநாயகன் திருப்பணி தடைப்பட்டதே என்று அவர்களுக்கு, மிகுந்த மனத்துயரம். அவர்களின் குடும்ப நண்பரும், ஸ்ரீமடத்துடன் தொடர்பும் கொண்ட, டாக்டர் ராதாகிருஷ்ண சாஸ்திரிகளையும் உடன் அழைத்துக் கொண்டு, காஞ்சி மாமுனிவரிடமே நேரில் சென்று உத்தரவு பெற எண்ணி ஸ்ரீமடம் வந்தார் பஞ்சாபகேசன்.
டாக்டர் ராதாகிருஷ்ண சாஸ்திரிகள், ஒப்புதல் பெற முயன்றபோது, மஹா பெரியவா, தம் கையை வேண்டாம் என்பது போல் அசைத்து மறுத்து விட்டார். அவரிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை. நெஞ்சம் கனத்தது. ஏன் இந்தப் பாராமுகம்? நல்லதுதானே செய்ய நினைத்தோம்? ஏன் அதற்கு மறுப்பு?
பஞ்சாபகேசன் மனம் அதனை ஏற்க மறுத்து அடம்பிடித்தது. பிரார்த்தனையால் எதையும் சாதிக்க முடியும் என்று மனம் ஒரு மார்க்கமும் கண்டது. மஹா பெரியவரின் திருவடித் தாமரைகளில் கருத்தூன்றி, மனம் நெகிழ, தொடர்ந்து பிரார்த்தனை செய்த வண்ணம் நின்றார்.
ராதாகிருஷ்ண சாஸ்திரிகளிடம் பேசிக் கொண்டிருந்த பெரியவர், சட்டென
பஞ்சாபகேசன் பக்கம் திரும்பினார்.
ஒரு சிரிப்பு.
"செய்யறேன் என்று சொல்லி விட்டாயா?"-----பெரியவா.
"ஆம்" என்றார் பஞ்சாபகேசன்.
"சரி செய்!"---பெரியவா.
தம் கொள்கைக்கு மாறானதாக இருந்தாலும், தம் மக்களின் மகிழ்ச்சிக்காகத் தாம் விட்டுக் கொடுப்பது போல் அம்மகான், பிள்ளையார் திருப்பணிக்கு உத்தரவு கொடுத்தார்.
அந்தத் தனிப் பெருந்தெய்வத்தின் கருணையை எண்ணும்போது இன்னும் சிலிர்க்கிறது. 'வேண்டத்தக்கது அறிவோய் நீ, வேண்ட முழுதும் தருவோய் நீ' என அப்பெரியவரின் தாள் பணிந்து, திருப்பணியை நிறைவு செய்தார், பஞ்சாபகேசன்.
'அவனருளால் அவன் தாள் பணிதல்" என்ற அருள்வாக்கின் பொருள் முழுமையாகப் புரிந்தது.
No comments:
Post a Comment