தசாவதாரமும் கீதையும்
நரசிம்ஹாவதாரம்
நரசிம்ஹாவதாரம்
ஹிரண்யாக்ஷன் ஹிரண்ய கசிபு இருவரும் சகோதரர்கள். கசிபு என்ற சொல்லுக்கு உணவு உடை என்று பொருள். ஹிரண்யம் கசிபு: யஸ்ய ஸ: ஹிரண்ய கசிபு: இது பொருள் மேல் அல்லது உலக இன்பத்தின் மேல் ஆசையைக் குறிக்கும்.
இதன் உட்பொருள் என்னவென்றால், ஹிரண்ய புத்தி அதாவது உலக சுகம்தான் எல்லாம் என்றிருப்பது. ஹிரண்யாக்ஷனைப் போலவே . ப்ரஹ்லாதன் ஹிரண்யகசிபுவால் துன்புறுத்தப்படுவது என்னவென்றால் பகவத் புத்தியானது பல இடையூறுகளால் கஷ்டம் அடைகிறது. உண்மையான பக்தி உலக வாழ்வில் அகப்பட்டு துன்புறும்போது பகவான் முன்னின்று பக்தனைக் காப்பாற்றுகிறார்.
ப்ரஹ்லாதன் ஹரி எங்கும் இருக்கிறார் என்று கூற ஹிரண்ய கசிபு தன் வாளால் அவனைக் கொல்லும்போது அந்த ஹரி காப்பாற்றுவாரா என்று கேட்கிறான். ப்ரஹ்லாதன் மாட்டார் என்கிறான் , ஏனென்றால் "நீ கத்தியை எடுக்கவே அவர் விட மாட்டாரே," என்று கூற அந்த திட பக்தியினால் , கீதையில் பகவான் 'கௌந்தேய ப்ரதிஜானீஹி நமே பக்த: ப்ரணஸ்யதி, என்பக்தன் ஒருக்காலும் நாசமடைய மாட்டான் அர்ஜுனா ," (கீ. 9.31)என்று கூறியதற்கேற்ப பகவான் தோன்றி ஹிரண்ய கசிபுவைக் கொன்றார்.
பகவான் தூணிலும் உள்ளார் துரும்பிலும் உள்ளார் என்ற ப்ரஹலாதனின் வாக்கை மெய்ப்பிக்க தூணில் தோன்றினார் என்றால் அவர் பாதி சிம்மம் பாதி மனிதனாகத் தோன்றியது இன்னொரு பக்தராகிய ப்ரம்மாவின் வாக்கைக் காப்பாற்ற.
ப்ரம்மா ஹிரண்ய கசிபுவிற்கு மனிதனாலோ மிருகத்தினாலோ , வீட்டின் உள்ளோ வெளியிலோ , பகலிலோ இரவிலோ, ஆயுதத்தாலோ மரணம் ஏற்படக்கூடாது என்ற வர்த்தைக் கொடுத்தார். அதனால் நரஹரியாகத் தோன்றி, பகலும் இரவும் அன்றி சந்தியாகாலத்தில் , உள்ளும் வெளியிலும் இன்றி வாயிற்படியில், ஆயுதங்கள் இன்றி நகத்தால் அவனை அழிக்க வேண்டியதாயிற்று.
தேசிகர் நயம்படக் கூறுகிறார் . ப்ரஹ்லாதன் ஹரி தூணிலும் உள்ளார் துரும்பிலும் உள்ளார் என்று கூறியதும் பகவான் ஹிரண்யன் எந்த இடத்தைக் காட்டி இங்கு இருக்கிறானா என்று கூறப்போகிறான் என்று தெரியாமல் உலகில் எல்லா இடங்களிலும் நரசிம்மனாக நிறைந்திருந்தானாம். ஹிரண்யன் தட்டிய தூணில் இருந்து வெளி வந்ததனால் மற்ற இடங்களில் இன்றும் நரசிம்மனாக நிறைந்துள்ளான் என்கிறார்.
நரசிம்மனை ந ம்ருகம் ந மானுஷம் என்று பாகவதம் வர்ணிக்கிறது. இது எதைக் குறிக்கிறது என்றால் அவன் த்வந்த்வாதீதன் , அதாவது இருமையைக் கடந்தவன் என்பது. ஹிரண்யன் கேட்ட வரம் எதிரெதிரான விஷயங்களைக் குறிக்கிறது.
நரசிம்ஹாவதாரத்தின் உட்பொருள் இந்த இருமையைக் கடந்த பகவத் புத்தியால்தான் ஹிரண்ய புத்தியை வெல்ல முடியும் என்பது.
வாஸுதேவஸ்ஸர்வம் இதி ஸ மஹாத்மா ஸுதுர்லப: , (ப.கீ. 7.19)வாசுதேவனே எல்லாம் என்றெண்ணும் பக்தி மிகவும் துர்லபம் என்று கீதையில் கூறியுள்ளது போன்ற பக்தி ப்ரஹ்லாதனுடையது.
அவனைக் காப்பாற்றியதன் மூலம் பகவான் 'அனன்யாஸ்சிந்தயந்தோ மாம் யே ஜனா: பர்யுபாஸதே தேஷாம் நித்யாபியுக்தானாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம் ,' (ப.கீ.9.22). "என்னை எவன் ஒருவன் வேறு எண்ணமே இல்லாது இடையறாது அனவரதமும் நினைக்கிறானோ அவனுடைய யோகக்ஷேமத்தை நான் பார்த்துக் கொள்கிறேன் " என்ற வாக்கை நிரூபித்தார்.
காமம், க்ரோதம் , லோபம், மோஹம், மதம் , மாத்சர்யம் இவை பகவானுக்கு எதிரானவை . ஹிரண்யாக்ஷன் மதம் அல்லது கர்வம் , ஹிரண்ய கசிபு க்ரோதம் , ராவணன் காமம், கும்பகர்ணன் மோஹம் (மயக்கம் அல்லது தூக்கம்), சிசுபாலன் மாத்சர்யம், பொறாமை, தந்த வக்ரன் லோபம் அல்லது பேராசை இவைகளைக் குறிக்கிறார்கள்.
ராவணன் கும்பகர்ணன்(காமம் , மோஹம்) இவர்களை வதம் செய்ய ஒரு ராமாவதாரம், சிசுபாலன் தந்தவக்ரன் ( லோபம் மாத்சர்யம்) இவர்களுக்கு க்ருஷ்ணாவதாரம் .
ஆனால் மதம் க்ரோதம் இந்த இரண்டுக்கும் தனித்தனி அவதாரம் எடுக்க வேண்டியதாயிற்று. இதன் மூலம் இவை இரண்டும் மற்றவைகளைக் காட்டிலும் வெல்லக் கடினமானவை என்று தெரிய வருகிறது.
No comments:
Post a Comment